சனி, மே 23, 2020

வைரஸ் கவிதைகள் 2
இரண்டு கிட்னிகள் வைத்திருக்கும் சுண்டெலிகள்
வரும் 15 ஆகஸ்டு 3 திகதிக்குள்
ஒரு கிட்னியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி
புதிய சட்டத்தை மேன்மை மிகு சுண்டெலி ராஜா
ஒவ்வொரு குடிஎலிகளுக்கும் அறிவித்திருக்கிறார்.
சுண்டெலி ராஜா லாபநோக்கில் இப்படியான அறிவிப்பை
கொடுத்திருப்பதாயும், குடியெலிகள் ஒரு கிட்னியோடு வாழ்வது என்பது
எந்த நாளிலும் சாத்தியமாகாதென்பதால் உடனடியாக
இந்தச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமெனவும்
எதிர்க்கட்சி தலை சுண்டெலிகூஜா கூறியிருக்கிறார்.

000
குடிவிரும்பியொருவர் சாலையில்
தலைகீழாக கைகளால் எட்டு வைத்து
நடந்து வந்துகொண்டிருந்தார்.
உற்றுக்கவனித்தபோது தான் தெரிந்தது
தனது மிதியடிகளை கைக்கு மாற்றியிருந்தார்.
எப்போதுமே போதையானது
தலைக்கு ஏறவேண்டும் தம்பிஎன்றவர்
கால்களால் எனை ஆசீர்வதித்தார்.
சற்றுமுன் இயேசுநாதரை ஆசீர்வதித்துவிட்டு
வந்தவர் இவராகத்தானிருக்கவேண்டும்!
போக இன்றிரவு ஒருமணிக்கு சரியாக
சூரியன் உதிக்குமென்றார்!
அக்னி வெய்யிலில் தன் விரைகளுக்கு
பாதுகாப்பு கவசமிடாமல் செல்லுமவர்
நிச்சயமாக மீதமிருக்கும் சரக்கிற்கு
கடித்துக் கொள்ள அப்பம் ஒன்றை வைத்திருக்கணும்!

000


தோழியரோடு தாயக்கட்டைகளை
உருட்டிக் கொண்டிந்தவள் மடியிலிருந்து
500 ரூவாய் தாளை எடுத்துக் கொடுத்து
கடைக்கிப் போனீன்னா எம்சி விஎஸோபி
ஒரு ஃஆப் வாங்கிட்டு வந்து குடு, என்றாள்!
இடைக்கச்சையில் குறுவாளோடும்
வலதுபுறம் வாளோடும் சுட்டெரிக்கும்
சூரியனை சபித்தபடி குதிரை மீதமர்ந்திருந்த
சேரநாட்டு வீரனான நான் முந்தைய போரில்
முகத்தில் பெற்றிருந்த வீரத்தழும்பைத் தடவியபடி
டாஸ்மாக் நோக்கி பிரயாணம் செய்தேன்.

000


முன்பு ஒரு காலத்தில்...

000

அப்போது நான் கேட்ட கதைகளில்
எல்லா தேவதைகளும் ஏழைகளுக்கு
உதவி புரிவதற்காகவே வனங்களிலும்
சமுத்திரங்களிலும் பறந்து கொண்டிருந்தார்கள்!
மரம்வெட்டிக்கு தங்கக்கோடாரி கொடுத்த தேவதை
ஆற்று நீரில் நீந்தி வந்தவள்!
வனத்தினுள் வழிதவறி சுற்றிய சிறுவனுக்கு
உதவி புரிந்தவள் வனதேவதை.
உள்ளூர் பள்ளியோடு உலகம் முடிந்தது என்று
நம்பிய சிறுவன் நான் அப்போது.

இப்போது நான் குழந்தையிடம் சொல்லும்
கதையில் மினுக்காட்டம் பூச்சிபோல
தேவதைகள் பறந்து வருவதில்லை. -
தேவதைகள் பறந்துவரா உலகில்
பதிலாக பூதமொன்று வந்து சேர்ந்திருக்கிறது!
அது வழிதவறிய சிறுவனைப் பார்த்தும்
அவனே அவன் வீடு போகட்டுமென விடுகிறது.
கோடாரியைத் தொலைத்தவனுக்கு
வட்டிக்கி கடன் தர்றேன் வேறு
கோடாரி வாங்கிக்கோ! என்கிறது.
சீக்கிரமே ஆப்பாயிலை
வலதுகையில் பற்றியெடுத்து
தன் அகல வாயினுள் தலையுயர்த்திப்
போடும் உணவு விரும்பிகள் போன்றே
பூதம் இந்த தேசத்தை  விழுங்கிப்
போய்விடுமென கதை சொல்கிறேன்.

000


சீதாவின் கவிதை
000

சீதா பத்தாப்பு முடித்திருந்தாள்.
எந்தக் கடமானைத் தேடியும் அவள்
தன் வீட்டு வாயிலில் அமர மாட்டாள்.
அவளை  கவர்ந்து போக பக்கத்து
மாநிலத்திலிருந்து கூட வரமாட்டான் எவனும்..
அப்படி நடந்தாலும் உள்ளூரிலிருந்து கூட
யாரும் அவளைக் காக்க போக மாட்டார்கள்.
சீதா நூறுநாள் வேலைத்திட்டத்தில்
கடந்த இருவருடங்களாக பணியாற்றி
தன் வயதான தந்தையையும்
தன்னையும் காத்து வந்தாள்.
ஐம்பது நாட்களாக பணியில்லாமல் போனதால்
ரேசனில் இலவச அரிசி பெற்று
கஞ்சி குடித்து மகிழ்கிறாள் சீதா.
கையில் நூறு ரூபாய் கூட இல்லையென்ற
கவலையின்றி வாழும் சீதாவுக்கு
பக்கத்து வீட்டிலிருந்து சமையல் வாசம்
வருகையில் மட்டும் தந்தைக்கு
மாஸ்க்கை அணிவித்து தானும்
அணிந்து கொள்கிறாள் !

000


எத்தனெ நாளைக்கி மாப்ளெ?


000

வேற்றுகிரகத்திலிருந்து ஏலியன் வைரஸ்
வந்து கொண்டிருக்கிறதாம்!

-அட அக்கட்டால ஒந்தி நில்றா
ஆடுகள் மெரண்டு நிக்கிதுக பாரு
ப்பா! கூவே!

000

வெட்டுக்கிளிகள் வந்துட்டு இருக்குதாம்!
ஒரு சதுர அடிக்கி 1500 வெட்டுக்கிளிகளாம்!

-பீடி இருந்தா ஒன்னு குடு ராசு
பீடிக்கட்டை வேற நாப்பது ரூவா பண்ணிட்டானுக
வூட்டுல கேட்டாம் அத ஊதாட்டித்தா என்னோங்கறா!

000

 நான் வழக்கமாய் செல்லும் குறுநகரம்


குறுநகரொன்றின் வீதிக்கு அப்போது தான்
இருசக்கர வாகனத்தில் வந்திருந்தேன்.
ஆறு கிலோ மீட்டருக்கும் முன்பாகவே
அதிகாரிகளால் தடுக்கப்பட்டு விசாரணை
செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருந்தேன்.
-எங்கே பயணம்?
-ரெகுலேட்டர் வாங்க! அப்படியே செருப்பு
பிஞ்சு போனதால் புதியதாக வாங்கி வரலாமென!
-சீக்கிரம் வந்துடனும்!
-வாங்கினதீம் வந்துடறேன்.

குறுநகரில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்கள்
மனித எண்ணீக்கையை விட அதிகம் நின்றிருந்தன.
எல்லாக் கடைகளையும் பத்து மணிக்கே
இழுத்துச் சாத்திக் கொண்டிருந்தார்கள்.
அதிகாரிகள் அமர்ந்திருந்த வாகனம் மெதுவாக
சாலையில் கடைகளை சாத்துங்கள்!’ என்று
ஒலிப்பெருக்கியில் அறிவித்தபடி ஊர்ந்து வந்தது!
எந்த நேரமும் நமக்கு தவறான தகவல்களையே
அள்ளித் தரும் செய்திச் சேனல்களை நம்பி
குறுநகரம் வந்த நான் குழம்பி நின்றிருந்தேன்.

குறுநகரில் மாத்திரை வில்லைகள் மட்டுமே
மாலை வரை வாங்கலாமாம்! மற்றதெதையும் வாங்க
நாளை காலையில் தான் வரவேணுமாம்!
பெட்ரோலுக்கும் கேடாய் குறுநகர் வந்தவன்
மருந்துக் கடை சென்று
ஒரு டீப் போடப்பா!” என்று சொல்லி விட்டு
அவன் கடை வாசலில் அமர்ந்தேன்!

000


Post Comment