வியாழன், ஜனவரி 01, 2009

ஆனந்த விகடன் 2008 ன் விருதுகள்


வாமுகோமுவின் தவளைகள் குதிக்கும் வயிறு 2008 ன்
சிறந்த சிறுகதை தொகுப்பாக ஆனந்தவிகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது .

இந்த வார ஆனந்த விகடன் 7.1.09 இதழ் போட்டோவுடன் கொடுத்துள்ளது .

ஆனந்த விகடனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .மேலும் sramakrishnan.காம் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .


2008 விருப்ப பட்டியல்


ஒரு ஆண்டு நம்மை கடந்து செல்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு மாயம். இன்றைக்கும் பழக்க தோஷத்தில் 2008 என்று தான் கையெழுத்து இடுகிறேன். மனதிலிருந்து 2008 முழுவதுமாக வெளியேற வில்லை. திட்டு திட்டான நினைவுகளாகவும் சிறு சம்பவங்களாகவும் உடைந்த கண்ணாடி துண்டின் சில்லுகளை போல பழசை நினைவுபடுத்திக் கொண்டு தானிருக்கிறது.

ஒரு வருடத்தின் நினைவாக நமக்குள் மிஞ்சியிருப்பது அதிகபட்சம் பத்து நாட்கள் அல்லது பதினைந்து நாட்கள். அதற்கான காரணமும் கவனமும் ஆளுக்கு ஆள் மாறுபட்டது மற்றவை எளிய அன்றாட தினங்கள். எல்லா நாட்களையும் போல என்று சொல்வோமோ அப்படி தான்.


நண்பர்களை சந்தித்துவிட்டு புது வருசம் பிறந்த இரவின் மெல்லிய பனி விழும் சாலையில் தனியே நின்று கொண்டிருந்தேன். பின்னிரவின் ஆழ்ந்த சுகந்தம் எங்கும் பரவியிருந்தது. கண்முன்னே விரிந்து கிடக்கும் இருளையும் அசைவற்ற தென்னை மரங்களையும் துயில் கொண்டிருந்த வீடுகளையும், நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தையும் பார்த்து கொண்டிருந்தேன்.

வேகமாக பைக்கில் வந்த இருவர் என்னை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தபடியே கடந்து போனார்கள். நானும் கையசைத்தேன். முகம் தெரியாத இந்த சந்தோஷ பரிமாற்றம் இது போன்ற தினங்களில் சில நிமிசங்கள் தோன்றி மறைவதோடு நம்மை விட்டு விலகிவிடுகிறதே அது ஏன் என்று தோணியது.

இயல்பான நாட்களில் யாரும் யாருடனும் புன்னகைப்பதுமில்லை. பரஸ்பரம் வணக்கம் சொல்வதுமில்லை. அதற்கு ஒரு புது வருட தினம் தேவைப்படுகிறது.

கணிணி முன் அமர்ந்தபடியே 2008 ஆண்டில் நான் படித்த புத்தகங்கள், பார்த்த உலக திரைப்படங்கள், தமிழ் ஹிந்தி படங்கள், சென்ற ஊர்கள், வாசித்த இணையதளங்கள் , நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள் யாவையும் நினைவில் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்.

இந்த வருசத்தின் துவக்க பதிவாக 2008 என் விருப்ப பட்டியலை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோணியது.

இது தரவரிசையில்லை. விருப்பத்தினை வரிசைபடுத்தியிருக்கிறேன் அவ்வளவே.
நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்

1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்

2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி

3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி

4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.

5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.

6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.

7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.

8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.

9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.

10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.***இந்த தொகுப்பை உங்களுக்கு அளிப்பது வாய்ப்பாடி குமார்.


Post Comment

கருத்துகள் இல்லை: