செவ்வாய், பிப்ரவரி 10, 2009

அப்பாரு ஞாபகம்

அப்பாரு அவரை
மிகக்கவனமாக எடுத்து
தோளில் சாத்திக்கொண்டு
"மங்காங்காடு வரை ஒரு எட்டு
போயிட்டு வ ந்துடலாம் வா" என்றார்
கம்மம் புளுதண்ணி போசியை
தலையில் வைத்தபடி அப்பாரு பின்னால்
நானும் போனேன் சும்மாடு
இல்லாத வெறும் தலையோடு
"செமக்கனம் செமக்கனம் "
அப்பாரு சொல்லிச்சென்றார்.
சோளக்காட்டின் நடுவில்
அப்பாரு தோளில் இருந்தவரை
நட்டுவித்து நிப்பாட்டினார்.
காட்டின் நடுவில் மூங்கக் கோலில்
நின்றவர் எங்கப்பனின் பழைய
சிவப்பு முழுக்கைசட்டை அணிந்திருந்தார்.
அப்பாரு அவர்கையில் ஒரு
கம்பை செருவி விட்டு
"மீசை இன்னம் பெருசா
இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்"
என்றார். சோளக்காட்டின்
நடுவில் நின்றவர் தட்டறுப்பு வரை
காக்கா, குருவி விரட்டியபடி நின்றார்......

Post Comment

கருத்துகள் இல்லை: