செவ்வாய், அக்டோபர் 13, 2009

இனி ஒண்ணையும் மறைச்சு வைக்க முடியாது


என்னதான் சொரப்புரடைய வவுத்துல இறுக்கிக் கட்டீட்டு

கெணத்து உச்சியில இருந்து எட்டிக் குதிச்சாலும் தண்ணிக்கு உள்ளார போயி மேல வர்றதுக்குள்ளார எனக்கு மூக்குல தண்ணி ஏறீடுது. . . டமக் டமக்குனு தண்ணிய குடிச்சிப் போடறேன். . . மாலா, சரஸா, வித்யா, பூங்கா எல்லாருமே இப்பெல்லாம் சொரப்புரடை கட்டாமலே தொவை கல்லுல இருந்து தொபீர் தொபீர்னு கெணத்துக்குள்ளார குதிச்சு கையையும் காலையும் டபக் டபக்குனு அடிச்சுட்டு நீஞ்சுறாளுக! தண்ணிய வேற வாயிக்குள்ளார ரொப்பீட்டு புரீச் புரீச்சுனு எம்பட மூஞ்சிக்கி மூஞ்சா போற மாதிரி பீச்சியுடறாளுக!

ரெண்டு வாரத்துல மளார்னு புரடைய அவுத்து வீசீட்டு நீஞ்சறாளுகளே! கெணத்துக்குள்ளார ராமசாமி அண்ணனும், சின்னச்சாமி அண்ணனும்தான் பாதுகாப்புக்கு! தொவகல்லுல நின்னுட்டு பூங்காதான் "புரடையில்லாம குதிக்கட்டுமா சின்னச்சாமி அண்ணா?" அப்புடின்னு கேட்டதும், தண்ணிப்பைப்பைப் புடிச்சுட்டு கெஸ்கெஸ்சுனு மூச்சு வாங்கீட்டிருந்த சின்னச்சாமி அண்ணன் "குதிடீ பூங்கா"அப்புடின்னதும் குதிச்சுட்டா. . . குதிச்சவ உள்ளார போயி மேல வந்ததும் கையையும், காலையும் அடிச்சுட்டு சின்னச்சாமி அண்ணன் புடிச்சிட்டிருந்த பைப்புக்கே போயிட்டா. அண்ணன் இவ கையைப் புடிச்சு ஒரு இழு இழுத்து பைப்பைப் புடிச்சிக்கச் சொல்லிடுச்சு.

அவ பைப்ப புடிச்சதும் நானும் குதிக்கறேண்ணா! நானும் நானும்னு வரிசையா ஒருத்தி பொறத்தால ஒருத்தியா கீய்கீய்னு கத்தீட்டு கெணத்துக்குள்ளார குதிச்சாளுக. . . யாருமே சாவுல! நானு ஒருத்திதான் கெணத்து மேட்டுல நின்னுட்டு உள்ளார எட்டிப் பார்த்தேன். நீயும் குதிடீ குதிடீன்னு ரெண்டு அண்ணனுகளும் உள்ளார இருந்து கூப்பாடு போடறாங்க! எனக்குன்னா பயமுன்னா பயம். . . எங்கூட்டுக்கு நானு ஒருத்திதான் புள்ள. அடுத்த வாரம் குதிக்கறேன்னு சொன்னதும் இவுளுங்கதான் சிரிக்கறாளுக! அண்ணனுக ரெண்டு பேரும் சேரீன்னு சொல்லிட்டு, புரடையைக் கட்டீட்டே குதின்னு சொல்லிட்டாங்க.

எல்லாரும் ஒட்டுக்காத்தான புரடை கட்டி நீச்சப்பழவினோம். நீயும் தைரியமா குதியேன்டி. . . நாங்க எப்டி அருமையா நீச்சலடிக்கறோம் பாரு. . அப்படின்னு சும்மா ஏரோப்ளேனு ஓட்டக் கத்துக் கிட்டமாதிரி பீத்திக்கறாளுக!

இதுல மாலா நீச்சக்கத்துக்கிட்டது பத்தி ஒண்ணுமில்ல. அவ எதுல பாத்தாலும் பர்ஸ்ட்தான். பன்னண்டாம் வாய்பாடுல இருந்து ஒண்ணாம் வாய்பாடு வரைக்கும் தலைகிழுதா கூடரைச்சா சொல்லுவா! பள்ளிக்கோடத்துல ஓட்டப் பந்தயத்துல இருந்து ஒசரந்தாண்டுற போட்டி வரைக்கும் அவளேதான் பர்ஸ்ட். எல்லாத்திலீமே நல்ல சூட்டிகெ! அதும்மில்லாம அவுளுக்கு ஒரு சிங்கப்பல்லு. ஊட்டுல காத்தாலைக்கிம், பொழுதோடத் திக்கிம் பூஸ்ட்டுதான் குடிப்பாளாம். பூஸ்ட் ஈஸ் சீக்ரெட் ஆப் மை எனர் ஜின்னு ரெண்டு கையையும் ஆம்பளப் பசங்களாட்ட முறுக்கிக் காமிப்பா! எங்கூட்டுல வரக்காப்பிக்கே பெரும்பாடு. காத்தால எப்பாச்சிம் அதிசீமா எங்கம்மா எழுப்பி குடுப்பா! அதும் கரும்புச் சக்கரை காபிதான். அஸ்க்கா காபி ஊட்டுக்கு ஒரம்பரைக வந்தா கெடைக்கும்!

மாலா மத்தியானச் சோறு கொண்டார டிபனுபோசியே அழகா தாமரப் பூமாதிரி இருக்கும். சப்பாத்தி பூரின்னு கொண்டாருவா. நாங்கெல்லாம் ஊட்டுல இருந்தே வட்டல் கொண்டுட்டு போயிடுவோம். மத்தியானச்சோறு எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடத்துலயே போடுவாங்க! மாலா பாலிஸ்டர் சொக்காதான் போட்டுட்டு வருவா! எங்கப்பன் கிட்ட ஒரு வாட்டி எனக்கு பாலிஸ்டர்ல சொக்கா தெச்சுக் குடுன்னு கேட்டதுதான் கோடு. விளாரு ஒடிச்சுட்டு என்னை ஊர் முச்சூடும் தொரத்து தொரத்துனு தொரத்துனாப்ல. அம்மா தான் ராத்திரி, "வாங்கிப் போட்டுக்கலாம் சாமீன்னு" சொல்லி சமாதானம் பண்ணுச்சு.

எல்லாப் புள்ளைங்களுக்குமே மாலா மேல எப்பவும் பொறாமைதான். செவப்பா அழகா வேற இருப்பா. பத்தாதுக்கு அவ அப்பாதான் எங்க பள்ளிக்கோடத்துல தலைமை ஆசிரியர். வெள்ளை வேட்டி வெள்ளை புல்க்கை சட்டை போட்டுட்டு எக்ஸெல் சூப்பர்லதான் வருவாரு. எப்பயும் அவுரு வண்டி வேப்பை மரத்து நெழல்லதான் நிக்கும். இந்த வருசம் நாங்க சேந்தமானிக்கி மூனாவுது பாஸாயி நாலாம் கெளாசுக்கு வந்துட்டோம். நாலாம் கெளாசுல தமிழும், இங்லீசும் சொல்லிக் குடுக்குறது மாலாவோட அப்பாதான். எனக்கும் பக்கத்தாலதான் மாலா உட்கோர்ந்திட்டிருப்பா. . .ஒரு பெனசக்குச்சி ரப்பரு, கலரு ரூல் பென்சிலு கேட்டா தரு வாளுங்றீங்ளா? உங்கொப்பனை வாங்கித் தரச் சொல்லி பள்ளிக்கூடத்துக்கு எடுத்துட்டு வான்னு சொல்லுவா! ஆனா அதிசியம் என்னன்னா அவ அப்பாவை பள்ளிக்கூடத்துல சார் சார்னுதான் கூப்பிடுவா! ஊட்டுக்குப் போறப்ப, வர்றப்ப எக்ஸெல்ல ஓடி ஏறீட்டு போலாம்பான்னு பேசுவா! அதிசீயந்தான் புள்ளைங்களுக்கும் பசங்களுக்கும்!

நீச்சப்பழவுறதுக்கு போறோம்னு நாங்க ரெண்டு வாரத்துக்கும் முன்னெ சொன்னதும் நானும் வர்றேன்னு சொன்னவ கையில சொரப்புரடையோட வர்றா! எப்பிடி கெடைச்சிதுன்னு கேட்டங்காட்டி சும்மா பிலுக்குறா! அவிங்க அப்பா சொன்னாப் போதுமாம் ஒரு புரடைக்கு ஒன்போது புரடை ஊட்டுக்கு வந்து சேர்ந்துடும்னு வேற பீத்திக்கிறா. சரி என்ன பண்றது? அவ பொறந்த வகுறு அப்படி! கடைசீல பார்த்தா உள்ளூரு வண்ணான்தா வாத்தியாரு கேட்டதுனால புரடை கட்டிக் குடுத்தானாம். அப்புடியான்னு வித்யா கேட்டதுக்கு, அவிங்க மாமன் டெல்லியில இருந்து குரியர்ல குடுத்து அனுப்பினான்ங்றா! குரியர்னா என்னன்னே எங்களுக்குத் தெரியில. கேட்டும் போட்டமே. . . குரியர்னா குரியர்தான்னுட்டா! எங்கப்பங்கிட்டபோயி குரியர்னா என்னன்னு கேட்டேன். . . குனிய வெச்சு முதுவுல குத்துறதுதான் கிட்ட வா அப்பிடிங்குது!

நாம்போயி எங்கப்பங்கிட்ட கேட்டம்பாரு. . . அதுவே சவரக்கத்தியும், கத்திரிக்கோலுமா ஊடு ஊடா செரைக்கறதுக்கு பீத்த சைக்கிள வெச்சுட்டு சுத்துது! ஜே கே எல் எம் என் பி க்யூ ஆர் எஸ் டி யூ வி டபள்யூ எக்ஸ் ஒய் ஜட் அப்புடின்னு மொதவாட்டியா ஊட்டுக்குள்ளார மனப்பாடம் பண்டீட்டு இருந்ததுக்கே ஊரு பூராம் ஓடிப்போயி எம்புள்ள இங்லீஸ் பொழந்து கட்டறானு சொல்லிப் போடுச்சு. அந்தன்னைக்கின்னு எங்கம்மா வேற எம்பட வாயைப் பாத்துட்டே உக்காந்துடுச்சு.

நானும் ஒண்ணாம் வகுப்புல இருந்து இதே பள்ளிக்கூடத்துலதான் படிக்கேன். பள்ளிக்கூடத்துக்கு சுவத்துக்கு அந்தப்புரமாரண்டு வேப்பை மரங்க நிக்கிது. அதுக்கடியில நெழல்ல தான் உள்ளூரு ஆயா கட்டலைக் கொண்டாந்து போட்டு அதுமேல மழைக்காயிதம் விரிச்சு உட்டு பாட்டில்ல சுவிங்க முட்டாயில இருந்து கம்மர்கட்டு வரைக்கிம் விக்குது! மூஞ்சா போறதுக்கு பெல்லு அடிச்சாலும், சோத்துக்கு பெல்லு அடிச்சாலும் தப்புறு குப்புறுன்னு பசக புள்ளைக ஓடிப்போயி அந்தாயா கட்டலைச் சுத்தி நின்னுட்டு அது வேணும் இது வேணும்னு காசை நீட்டீட்டு நிப்பாங்க! இப்ப நாலாம் கெளாசு படிக்கேன். . . நாலு வாட்டியோ என்னமோதான் எங்கம்மா எனக்கு ஒரு ரூவா குடுத்து உட்டுச்சு! பூமர் முட்டாயி ஒண்ணு ஒரு ரூவா! மூணு நாள் எடுத்து எடுத்து வெச்சுமென்னுட்டு இருந்துட்டு வாயும், பல்லும் வலிக்குதுன்னு துப்பீட்டேன். கரும்புச் சக்கரை பூமருக்குள்ளார துளி வெச்சுல்ல தின்னேன்.

எங்கூட்டுல எப்பயும் கம்மஞ்சோறும், ராயிக்கூழும், சோளச் சோறும் தான். ஏம்மா இப்படி தெனமும் அப்படின்னு கேட்டதுக்கு இதுலதான் சத்து சாஸ்த்தின்னு சொல்லிடுது! எதா இருந்தா என்ன? வவுத்துப் பசிக்கி துளி அள்ளிப்போட்டா பசி அடங்கீருதுன்னுதான் எங்கப்பன் சொல்லும். ஆனா எங்கம்மா சிந்தாமணியில போயி அரிசி வாங்கிட்டுதான் வருது! அதை மாடு வெச்சிருக்கறவங்களுக்கும், கோழிவெச்சிருக்கறவங்களுக்கும் வித்துப் போடுது! நாமளே ஆக்கித்திங்கலாமேம்மா அப்புடின்னாக்க. . . அந்தக் கருமத்தெ மனுசன் திம்பானா? அப்புடிங்குது!

நானு எங்க ஊரு புள்ளை, பசகளோட காட்டுலயும் மேட்டுலயும் இப்புடி கெணத்துலயும் வெளையாடறதோட சரி. எத்தாச்சோட்டு பிரண்டா இருந்தாலும் அவுங்கள எம்பட ஊட்டுக்கு வா போலாம்னு கூட்டிட்டு போவமாட்டேன். நானும் அவிங்க கூப்பிட்டா கூடப் போறதில்ல. ஒருவாட்டி சரஸாவைக் கூட்டிட்டு வந்து தேங்காத் தொட்டி வெச்சு ஈரமண்ணுல இட்லி சுட்டு வெளியாடிட்டு இருந்தப்ப எங்கப்பன் வந்ததும் என்னைப் போட்டு மொத்து மொத்துனு மொத்திப் போடுச்சு! கவுண்ட ரூட்டு புள்ளைய கூட்டியாந்து மழை ஈரத்துல புட்டுமா சுட்டு வெளையாட்டா காட்டீட்டு இருக்கே.. கவுண்டரு பார்த்தா என் கதி என்னா ஆவுறது? இனிமே கூட்டியாருவியா? கூட்டியாருவியா?ன்னு மொத்துன மொத்துல அன்னைக்கு சாமத்துல எனக்கு கூதக் காச்சலே வந்துடுச்சு! உள்ளூரு நர்ஸ் கிட்ட ஓடிப்போயி சாமத்துல கதவு தட்டி காச்ச மாத்திரை வாங்கியாந்து எங்கம்மாகிட்ட கஞ்சி வெக்கச் சொல்லி மாத்திரை முழுங்க வெச்சுது எங்கப்பன். இனிமே கூட்டியாராதே சாமி.. அதுக்குதான் அப்பன் உன்னிய அடிச்சுப் போட்டேன்.. நீ வேணா என்னை இந்தக் கால்ல ரெண்டு மிதி உடு அப்புடின்னுட்டு என்னோட காலைப் புடிச்சுத் தூக்கி மண்டையக் குனிஞ்சு அடிச்சுக்கிச்சு! அதுல இருந்து நானு யாரையும் ஊட்டுக்குக் கூட்டிட்டுப் போறது இல்ல. ஆனா அவிங்களா வருவாங்க...

"டேய் அப்புக்குட்டி ஆளு இருக்கியாடா.. உன்னையக் கைப்புடியா ஊட்டுல புடிச்சாத்தான்டா உண்டு.. எங்கப்பன் வேற முடிய வெட்டித் தொலையின்னு ஒரே ரச்சடா.. வா வா.. ஒண்டெ வெட்டி உடு.. ரெண்டு மாசமாவுது தாங்கட்டும்" அப்புடின்னு அடே புடேன்னு தான் எங்கப்பனை எம்பட பள்ளிக்கூடத்துல கூடப்படிக்கிற பசங்களே வந்து பேசுவானுக! எங்கப்பனும் அடப்பப்பைய எடுத்துட்டு ஒரு முக்காலியத் தூக்கீட்டு ஊட்டுக்கு பொறக்கடையில இருக்குற வேப்பை மரத்துக்கு ஓடுவாப்ல. "உக்கோருங்க சாமி.." அப்புடின்னு முக்காலியில உக்கார வெச்சு கிரிச்சு கிரிச்சுன்னு வெட்டி உட்டு தொடச்சு உட்டு தாட்டி உடுவாப்ல.

நம்ம ஊட்டுக்கு சரஸாவைக் கூட்டியாந்து வெளையாண்டதுக்கே அப்பன் கவுண்டரு பார்த்தா பேசுவாப்லன்னு சொன்னதால, நானா அவிங்க ஊட்டுக்குப் போயி வெளையாண்டா என்னைய அடிச்சுவெச்சு அனுப்பிடுவாங்ளோன்னு பயத்துல தான் ஒருத்தரு ஊட்டுக்கும் போறதே இல்ல. எங்கப்பனாகட்டும், எங்கம் மாளாகட்டும் அவிங்க ஊட்டு வாசல்ல தான் நின்னுட்டு வேணுங்கறதை வாங் கீட்டு வருவாங்க. அவுங்க ஊட்டுக்கு உள்ளார போறதே இல்ல. மூணு மாசத்திக்கிம் மிந்தி ஊருக்குள்ளார பெரியசாமி அண்ணனுக்கு உள்ளூரு அக்கா பார்வதியவே கட்டி வெச் சாங்க. கலியாணம் உள்ளூர்க் கோயல்ல தான் நடந்துச்சு. ரெண்டு மூணு நாள் கழிச்சி எங்கப்பனும் எங்கம்மாவும் சாக்குப்பை எடுத்துட்டுப் போயி ரெண்டு ஊட்டு வாசல்லியும் நின்னு கம்பு இருபது இருபது படி சாக்குல வாங்கீட்டு பணம் இரநூறு இரநூறு ரெண்டு ஊட்டுலயும் வாங்கினாங்க! நானும் கூடவே தொணைக்கிப் போயிட்டு வந்தேன். ஆனாப் பாருங்க எங்க ஊட்டுக்கு சாக்குப்பையத் தூக்கீட்டு ஆருமே வர்றதில்ல.

இதுல பாருங்க. . கடை கண்ணிக்கி எங்கம்மா திடீர்னு எண்ணெய் அரை லிட்டரோ, கடுகோ, சீரகமோ, மொள வாத்தூளோ வாங்கீட்டு ஓடியா பாப்பான்னு அனுப்பியுடும். நானும் பசங்களாட்டவே டுர்ர்ர்ருன்னு சப்தம் போட்டுட்டு பீபீபீன்னு ஆரன் அடிச்சுட்டு கடைக்கு ஓடுவேன். வாங்கீட்டு அதே ஸ்பீட்டுல ஊடும் வந்துருவேன். கோயில் திண்டுல சாயந்திர நேரம்னா அப்பாருக எல்லாம் உக்கோந்துருப்பாங்க. என்னைய எப்பாச்சிம் நிப்பாட்டி வெச்சுட்டு, கத்திரி புடிச்சு பழவீட்டியா? எனக்கு மண்டை காண வெட்டி உடறியா? சேவிங் பண்டி உடறியா? உங்கொப்பன் தான் பையன் ஒண்ணை பெத்துக்காம உட்டுட்டானே. . இனி நீதான உங்கொப்பனுக்குப் பின்னால ஊர் பாக்கணும். . . அண்டர் சேவிங் மட்டும் சீக்கிரம் கத்துக்கோ. .பேனு அரிப்புதான் எங்குளுக்கு தாங்காதுன்னு சொல்லிட்டு பொக்கை வாயைக் காட்டிட்டு அப்பாருக சிரிக்கும். எங்கம்மாகிட்ட சொன்னா, பண்டி உட்டா போச்சுதுன்னு சொல்லிட்டு வாடின்னுதான் சொல்லும்.

சுத்துப்பட்டு பத்து ஊருக்கும் எங்கப்பன்தான் ஒரே ஆளு. எந்த ஊர்ல எந்த ஊட்டுல யாரு செத்துப் போனாலும் எங்கப்பனைத்தான் தேடீட்டு வருவாங்க. இது போயித்தான் காரியம் பண்டிக் குடுக்கணும். ரெண்டு மூணு நாளைக்கு சோத்துக்கு கூட ஊட்டுப் பக்கம் வராது! சாவு உழுந்துட்டு துன்னா சாராயம் குடிச்சுக்கும். கருப்பு அன்னிக்கி செத்துப்போனவிகளோட பங்காளி, மாமன் மச்சானுக்கெல்லாம் மீசை செரைச்சு, மொட்டை போட்டு உட்டுட்டு நாலு காசு சம்பாரிச்சுட்டு தான் ஊட்டுக்கு வரும். அந்த சமயம் பாத்துதான் எழுதுற நோட்டு, பேனா எல்லாம் எங்கம்மாட்ட கேப்பேன். எங்கம்மாவும் நைச்சியமாப் பேசி காசு வாங்கி என்கிட்ட குடுத்துடும்.

செலபேரு காத்தால நேரத்துல எங்கப்பனைத்தேடீட்டு ஊட்டுக்கே வந்துடுவாங்க. அவிங்களுக்குன்னே தான் முக்காலி வெச்சிருக்குது எங்கப்பன். அதைத் தூக்கிட்டுப் போயி வேப்பை மரத்தடியில போட்டு அதுல வந்தவிகள உக்காத்தி வெச்சு, இது அவிங்கள சுத்திச் சுத்தி குனிஞ்ச வாக்குல நின்னு பண்ணி உட்டுடும். அண்டர் சேவிங்கின்னா எனக்கு என்னன்னே தெரியாது. ஒரு வாட்டி எங்க ஊட்டு சன்னல்ல இருந்து அதைப் பார்த்தேன். மாலாவோட அப்பா அதான் எங்க எச்.எம். அவுரு மெசினு வெச்சிட்டு ஊட்டுலயே பண்டிக்கிறவராம். எங்கப்பனும் சாமி வாங்க. . .எம்புள்ள யுவராணி நல்லா படிக்குதுங்ளா? படிப்பு ஏறலீன்னா மண்டையில ரெண்டு கொட்டுக்கா வெச்சு படிப்பு சொல்லிக் குடுங்க சாமி. . அப்படின்னுட்டு வெறும் சேவிங் கத்தி மட்டும் எடத்துட்டு போச்சு எங்கப்பன். பாத்தா எங்க எச் எம் வேப்பை மரத்துல சாய்ஞ்சு நின்னுட்டு வேட்டிய வெலக்கி உட்டுட்டு நின்னாப்ல. . எங்கப்பன் புது பிளைடு போட்டுட்டு கத்திய கொண்டுட்டு போனாப்ல. . த்துக் கருமம்னு சன்னலைச் சாத்திட்டேன்.

மறுக்காவும் அடுத்த வாரத்துலயே நானும்சொரப்புரடை இல்லாம நீச்சலடிக்கக் கத்துக்கிட்டேன். என்னோட ப்ரெண்டுக எல்லாரும் டைவ் அடிக்கக்கத்துக்கிட்டாங்க. . டைவ்னா சும்மா கத்திக் கப்பலுமாதிரி சொய்னு போறாளுங்க. அப்புறம்கெணத்துக்குள்ளாரவே தொட்டு வெளையாட்டு வேற! குட்டிக்கரணம் போடறாங்க... முக் குளிச்சு பத்துநிமிசம் வரைக்கும் உள்ளார தம் கட்டீட்டு இருக்காங்க. அதும் மாலா இருக்காளே. . பைப்பைப் புடிச்சுட்டுஉள்ளார சரசரன்னு போனாள்னா, காணமேன்னுபாத்தா கெணத்து தெக்கு மூலையில போயிஎந்திரிக்கிறா!

டைவ் அடிக்கறம் பாருன்னு நானும் டைவ் அடிச்சேன். . ஐயோ. . சட்டீர்னு தண்ணியில விழுந்து மேலேறிப் பார்த்தா வயிறே பூராம் செவச் செவன்னு ஆயிப்போச்சு. . எரிச்ச வேற. . தொலையில இருந்து குதிச்சாலும் ஒரு கையில மூக்கை அழுத்திப் புடிச்சுட்டுதான் குதிக்கிறது! சும்மா குதிச்சா தண்ணி மூக்கு வழியா மண்டைக்கி ஏறிக்குது! மண்டைச்சளி மளார்னு புடிச்சு மூக்கை என்னேரமும் சிந்தீட்டே இருக்க வேண்டிதாப் போயிடுது. எப்பிடியோ நீச்சப் பழகியாச்சு. உள்ளூர்ல எஞ்சோட்டுப் பொண்ணுக பசக எல்லாருக்குமே நீச்சல் தெரியும். நீச்சல் தெரியாதவங்களை ஊருக்குள்ள விரல் உட்டு எண்ணிப்போடலாம்.

சனி, ஞாயிறு ரெண்டு நாளும் எங்க பள்ளிக்கோடம் லீவுன்றதால தான் ரெண்டு மூணு வாரத்துலகெணறே கதியின்னு கெடந்து நீச்சல் கத்துக்கிட்டோம். கெணத்தவுட்டு நாங்க ஊட்டுக்கு வர்றப்ப கண்ணுக ரெண்டும் கோவப்பழமாட்ட செவந்து கெடக்கும். உள்ளங்கை, உள்ளாங்காலெல்லாம் வெள்ள வெளேர்னு சுருங்கிக் கெழவி கையாட்டா இருக்கும்.

பொழுதோட நேரத்துல எம்பட சோட்டுப் பசங்கெல்லாம் ஊருக்குள்ளார நொங்குவண்டி ஓட்டீட்டும், பழைய சைக்கிள் டயரை குச்சி வெச்சு அடிச்சுட்டு ஓட்டீட்டும் இருப்பாங்க. ஒருவாட்டி தினேசோட சைக்கிள் டயரை வாங்கீட்டு ஒரு ரவுண்டு உட்டுட்டு ஓடினேன். முன்னப்பின்ன ஓட்டிப் பழக்கமில்லாம இருந்தனா குச்சில வெசையா டயரை அடிச்சுட்டேன். அது சொய்னு ஸ்பீடா ஓடுது! நானும் தொறத்துறேன். . திடீர்னு சாய்ஞ்சமானிக்கி வளைஞ்சு போயி சரஸாவோட அப்பா வேட்டில போயி பூந்து உழுந்துட்டுது. இனி என்ன பண்றது? வந்துச்சு வம்பு.

"ஏண்டி நாசுவத்தி. . வண்டி உடறதுக்கு உனக்கு வேற எடமே கெடைக்கிலியா? வாடி இங்கே"ன்னு கூப்பிட்டு காது ரெண்டையும் போட்டு முறுக்கி திருகீட்டே, "இனிமே வண்டி உடுவியா? உடுவியா?"ன்னு கேட்டாப்ல. எனக்கா காது வலியில அழுகாச்சிமுட்டீடுது. "வாயில என்னடி வெச்சிருக்கே நாசுவத்தி சொல்லு. . வாயத்தொறந்து சொல்லு"ன்னு திருகுனங் காட்டி. . கத்துப்புடிச்சுட்டேன். ஓடுடி ஊட்டுக்குன்னு முடுக்கி உட்டுட்டாப்ல. . அதுல இருந்து சரஸாவோட அப்பாவை எவத்திக்கி கண்டாலும் பயந்துக்குவேன். பசங்கெல்லாம் பள்ளிக்கோடத்துல சரஸாகிட்ட இதைச் சொன்னங்காட்டி, அவளோ, "எத்தன முறுக்குடி எங்கப்பாகிட்ட வாங்கினே?" அப்பிடிங்றா!

பள்ளிக்கூடத்துல ஒவ்வொரு நாளைக்கி மூன்றை மணிக்காட்ட விளையாடச் சொல்லி பெல் அடிச்சுருவாங்க. கபடி, பந்தாட்டம், ஓட்டம், கண்டு புடிக்கிறதுன்னு நாலரை மணி வரைக்கிம் சத்தமாக்கெடக்கும். மாலா, பூங்கா, சரஸா, நானு எல்லோரும் ஐஸ் நெம்பர் வெளையாடிட்டு இருந்தோம். அப்பப் பார்த்து அஞ்சாம் கிளாஸ் படிக்கிற சுந்தருப்பயல் ஓடி வந்து என்னைக் கட்டிப் புடிச்சுட்டான். நெஞ்சுமேல வேற டிமீர்னு மோதிட்டான். கட்டிப் புடிச்சவன் கம்முனு இருக்காம எம்பட ரெண்டு கன்னத்துலயும் முத்தம் குடுத்துட்டான். உடறா நாயி உடறா நாயின்னு தள்ளி உடப் பார்த்தேன். . ஊஹும் இறுக்கிக் கட்டிக்கிட்டு, "யுல்யுவ ரல் ராணி, எல்என்னோட கல்கட்டித்தல் தங்கமே, நில்நீயி எல்எனக்கு ஒல்ஒரு முல்முத்தம் தல்தாடி கல்கப் பெக் கெல்கெழங்கே, இல்இல்லாட்டி உல்உன்னை நல்நானு உல்உடமல்மாட்டேன். . குல்குடுடி முல் முத்தம்" அப்பிடிங்கான்.

புள்ளைங்கெல்லாம் அவனைப் புடிச்சு இழுத்து சத்தம் போடறாங்க. எனக்கு ஒண்ணும் புரியல. அழுகாச்சி முட்டீடுது. நேரா அவனை எச்எம்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. என்னையும் கூட்டிட்டுப் போயி எச்எம்கிட்ட நிப்பாட்டிட்டாங்க. எச்எம் விசயத்தைக் கேட்டுட்டு செவுத்துல தொங்கிட்டிருந்த உலக மேப்ல இருந்த குண்டாந்தடிய உருவி சுந்தரோட சூத்தாம்பட்டையில நாலு இழுப்பு இழுத்தாப்ல. ஏன்டா அப்பிடி பண்ணினேன்னு கண்ணாடியக் கழட்டி டேபிள் மேல வெச்சுட்டு கேட்டாப்ல. . மத்த புள்ளைங்களை எல்லாம் ஓடி விளையாடுங்க போங்க அப்படின்னு போவச் சொல்லிட்டாப்ல. எல்லாரும் ஓடிப்போயிட்டாங்க. நானும் சுந்தரும் மட்டும்தான். சுந்தரு அழுதுட்டு சூத்தைத் தடவிட்டு நின்னான்.

சொல்றா படுவா ராஸ்கோல். . ஏன்டா அப்பிடி பண்ணினே?ன்னு கேட்டதுக்கு, பொழுதோட டீவி பொட்டியில ஊட்டுல படம் பார்த்தானாம். அதுல ஒருத்தன் புள்ளைய கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தானாம். அவளும் திருப்பி அவுனுக்கு முத்தம் கொடுத்தாளாம். அதான் சார் பண்ணிட்டேன் அப்பிடிங்றான். எச்எம் அவன்ட்ட டீவில பார்த்துட்டா பண்ணிடுவியாடா படுவா. . . இனிமே இப்பிடி தப்பு பண்ணினா பள்ளிக்கோடத்தை உட்டு முடுக்கி உட்டுடுவேன். . ஓடு படுவா ராஸ்கோல்னு சொன்னதும் சுந்தரு ஊளை உட்டுட்டே போயிட்டான்.

இங்க கிட்ட வா யுவராணி. . ம் என் சேர் கிட்ட வா. உனக்கு எங்காச்சிம் வலிக்குதான்னு எச்எம் கேக்கங் காட்டி ஆமா சார் நெஞ்சுமேல வந்து படீர்னு மோதிட்டான். . அப்படின்னேன். . சரி சட்டை பட்டனைக் கழட்டு. . இரு இரு நானே கழட்டறேன்னு சட்டை பட்டனை பூராம் கழட்டி உட்டு, டேபிள் டிராவைத் தொறந்து பாட்டல்ல இருந்து கிரீஷ் மாதிரி ரெண்டு விரல்ல எடுத்து நெஞ்சுல பூசி தடவி உட்டாரு. . . நெஞ்சுல எம்பட சின்னப் பாச்சிகளப் போட்டு திருகி உட்டவரு, என்னை இன்னும் கிட்டக்க இழுத்து ஒரு கையால எம்பட சூத்தாம் பட்டைய பெசஞ்சு உட்டுட்டு நெஞ்சை தடவி உட்டுட்டு இங்கிம் வலிக்குதான்னு தொப்புள்கிட்ட நீவி உட்டாரு. எச்எம்க்கு வாயில ரெண்டு பக்கமும் எச்சை எச்சையா ஒழுவுது. அப்புறம் இங்கீமா வலிக்குதுன்னு பாவாடைய தூக்கி எம்பட ஜட்டிக்குள்ளார கையி உட்டுட்டாரு. . "சார் என்னைய உடுங்க சார். . எனக்கு வலியே இல்லை"ன்னு சொன்னாலும் என்னை இறுக்கி சூத்தாம்பட்டையப் புடிச்சு நெஞ்சுல கைய வெச்சு பாச்சியப் புடிச்சு இழுத்து பூரிப் பூரி வெச்சுட்டாரு. . யாராச்சிம்கிட்ட போயிச் சொன்னீன்னா தடியில சூத்தாம் பட்டையில அவுனுக்குப் போட்ட மாதிரி போட்டுருவேன். . நாளைக்கிம் நெஞ்சு வலிக்கும். . ஐயோ டெக்ஸ் போட்டு நீவி உடறேன். . அப்படின்னுட்டு ஜட்டிக்குள்ளார மறுபடிகைய உட்டுட்டாரு. . நானு உடுங்க சார்னு இழுத்துட்டு சட்டையப் போட்டுட்டு எம்பட கிளாஸ்க்குப் போயி பையத் தூக்கீட்டு கௌம்பீட்டேன்.

நாம்பாட்டுக்கு அழுதுட்டு ரோட்டுல நடந்துட்டு இருந்தேன். நெஞ்செல்லாம் நகக்காயம் ஆயிட்டதால ஒரே தீ மாதிரி எரிச்சல். . பாத்தா பின்னாரயே வண்டியில வந்து என்கிட்ட நிப்பாட்டிட்டாரு எச்எம். "ஊட்டுல போயி சொல்லக் கூடாது. . என்ன?" அப்படின்னதும் சரின்னு தலையாட்டினேன். வலிக்குதா கிட்டவான்னாரு. "ஐயோ"ன்னு வெசயா நடக்க ஆரம்பிச்சேன்.

ஊடு வந்தும் எரிச்சல் போகல. . தேங்காய் எண்ணெய் எடுத்து பூரின எடம் பூராம் பூசி உட்டேன். அம்மா எங்காச்சிம் வெறகு பொறுக்கீட்டு வரப் போயிருக்கும். அது வர்றதுக்குள்ளார எண்ணயப் பூசிக்கணும். என்ன ஏதுன்னு கேட்டு தடிஎடுத்து அது வேற அடிச்சுப்போடும். . ஜட்டியக் கழட்டி தூக்குல தொங்குற துணிகளோட போட்டுட்டு எண்ணெய் பூசி உட்டேன். . தீ மாதிரி தான் எரியுது. ஐயோ. . இந்த சுந்தரு பையன் ஏன் தான் பொழுதோட என்னைக் கட்டிப் புடிச்சானோ? ஐயோ எரியுதே யம்மா! இந்த எச்எம் ஏன் தேச்சு உடறேன்னு சொல்லி உட்டுட்டு பூரிப்பூரி வெச்சுட்டாப்ல? நானு மூஞ்சா போறதுல கொண்டி விரலை உட்டு. . அது வேற தனியா வலிக்குதே யம்மா!

ராத்திரி சாப்டுட்டு படுத்துத் தூங்கலாம்னா. . அதே ஞாபகமாவே இருக்குது எனக்கு. நாளைக்கிம் இனி எச்எம் என்னையக் கூப்பிட்டு தடவுறேன்னு சொல்லி பூரி வெச்சதுக்கும் மேல பூரி வெச்சாருனா? ஐயோ. . நல்ல தூக்கத்துல இருந்திருப்பேனாட்ட இருக்கு. "சார் உடுங்க சார் . . வலிக்கலை சார்"னு சத்தம் போட்டு கத்தீட்டேன். அம்மாதான், "ஆடீட்டே திரிஞ்சுட்டு ஊட்டுப்பாடம் எழுதீட்டு போவலீன்னா வாத்தியாரு அடிக்கத் தான் செய்வாரு"ன்னு சொல்லி முதுகுல கைய வெச்சுத் தட்டி உட்டு தூங்கப் பண்ணுச்சு.

காத்தால வேப்பங்குச்சி ஒடச்சு பல்லு வௌக்கீட்டு இருந்தப்பவே அம்மா சத்தம் போட்டு கூப்புட்டுச்சு. . சீக்கிரம் வாடி. . பேயாட்ட காத்தால ஏழுமணிவரைக்கும் தூங்குறது. . உனக்கு தண்ணி வாத்து உட்டுட்டு நானு எட்டு மணி மினி பஸ்சுக்கு போகோணும் அப்பிடிங்காட்டிதான் எனக்கு பயம் புடிச்சுக்கிச்சு. ஐயோ அம்மா தண்ணி வாத்துடறப்ப கண்டு புடிச்சுக்குமே! நெனச்சா மாதிரியே கண்டுபுடிச்சுட்டுது. . எவகூட சண்டைக்கட்டீட்டு வந்தேடி? இந்தப் பூரு பூரியிருக்கா? எவடி அவ? இரு இன்னிக்கி பள்ளிக்கோடத்துக்கு வந்து வாத்தியாருகிட்ட சொல்லிட்டு வர்றேன். . சொல்லுடி எவடி அவ?ன்னு முதுகுல சோப்பைபோட்டு உட்டுட்டே பட்டீர் பட்டீர்னு சாத்தங் காட்டி சுரீர்னு வலிச்சதும் வீல்னு கத்தி அழுக ஆரம்பிச்சுட்டேன். "அவள ஏண்டி போட்டு காத்தால மொத்தீட்டு இருக்கே எருமே?"ன்னு எங்கப்பன் சத்தம் போடங்காட்டி, தண்ணிய மொடேர்ச் மொடேர்ச்சுனு எங்கம்மா ஊத்திஉட்டு வாசலுக்கு என்னை இழுத்துக் கொண்டாந்து எங்கப்பன் முன்னார நிப்பாட்டினா!

இனி ஒண்ணும் இவிங்ககிட்ட மறைச்சு வெக்க முடியாது! சும்மா நாச்சிக்கிம் எதோ ஒரு புள்ளைய பூரி வெச்சுட்டான்னு சொன்னாலும் பள்ளிக் கோடத்துக்கு எங்கம்மா வந்து எச்எம் கிட்ட சொல்லிப்போடும். . பாத்துட்டு, எங்கப்பங்கிட்ட எச்எம்தான் பூரி உட்டுட்டாப்லைப்பா. . எம்பட ஜட்டிக்குள்ளார கைய உட்டு குத்தி வெச்சுட்டாருப்பா. . எம்பட பாச்சியப் போட்டு இழுத்துட்டாருப்பான்னு சொல்லி அழுவ ஆரம்பிச்சுட்டேன். எங்கப்பன் ஐயோன்னு தலைதலையா கையால அடிச்சுட்டு ஓடி செவுத்துல மண்டைய அடிச்சுட்டு திண்ணயில தலையில கையை வெச்சுட்டு உக்கோந்துட்டாப்ல. எங்கம்மா எனக்கு ஜட்டிய மட்டும் போட்டு மேல பாவாடை கட்டி உட்டுட்டு ஊருக்குள்ளார இழுத்துட்டு போச்சு. . நேரா எச்எம் ஊட்டுக்குத்தான் இழுத்துட்டுப்போவுதுன்னு நெனச்சேன். . பாத்தா கவுண்டரு ஊடுக ஒண்ணு பாக்கி உடாம என்னையக் கொண்டிக் காட்டி அழுவாச்சி அழுவாச்சியா அழுவுது. .

"படிப்பு சொல்லிக் குடுக்க புள்ளைங்களத் தாட்டி உட்டா அந்தப் பன்னாடை இந்த வேலையா பண்டிட்டு இருக்கான். . நீ அழுவாத ஆயா. . நாங்கல்லாம் இருக்கம்ல. . இங்க அவனை ஊட்டுல போயி நாம கேக்கப்புடாது. . நீ பள்ளிக்கூடத்துக்கு கூட்டிட்டு வா உம் புள்ளைய. . பாரு ஆயா. . எனக்கே மசுருக்கால்களெல்லாம் எந்திரிச்சுக்கிச்சு. . போலீசுக்கு போனைப் பண்டி வரச்சொல்லி அவனை உள்ளார தூக்கிப் போட்டுடறேன். ." என்று சொல்லி எங்கம்மாவை தாட்டி உட்ட எல்லாருமே பள்ளிக்கூடத்திற்கு வந்தும் விட்டார்கள். எங்கப்பன் வீட்டை உட்டு ஒரு அடி நவுர மாட்டேன்னு சொல்லிடுச்சு.

இன்னிக்கினு பார்த்து மாலா வரலை. எச்எம் மட்டும் டிவீஸ்ல பள்ளிக்கூடத்துக்கு வந்தாரு. ரெண்டு மூணு பேரு ஓடிப்போயி எச்எம்மைப் புடிச்சு அடிச்சு கீழாற தள்ளி மிதி மிதின்னு மிதிச்சாங்க! எச்எம் கையெடுத்துக் கும்பிடக் கும்பிட மிதி உழுந்துட்டே இருந்துச்சு. எச்எம்மோட சட்டை, வேட்டியெல்லாம் கிழிச்சு அவரைத் தூக்கியாந்து கொடிக் கம்பத்துல கவுறு போட்டுக் கட்டிட்டாங்க. "உம் புள்ளையப் போயி இழுத்து நோண்டேடாத் தாயலி. . ஊரான் ஊட்டுப் புள்ளைதான் கெடச்சுதாடா பன்னாடை?"

அப்புறம் கீதா டீச்சரு, பழனிச்சாமி வாத்தியாரு எல்லோரும் ஊருக்காரங்க கிட்ட பேசினாங்க! யாரோ போயி எச்எம்மைக் கட்டி வெச்ச கவுத்தை அவுத்து உட்டங்காட்டி ஊர்க்காரங்க எல்லாரு கால்லயும் உழுந்து உழுந்து மன்னிப்பு கேட்டாரு எச்எம். எங்கம்மா கால்ல உழுந்து அழுதாரு. எம்பட கால்லயும் உழுந்து அழுதாரு.

இதெல்லாம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு. பள்ளிக்கூடத்துலயும் பசங்க, புள்ளைங்க எல்லாரும் இதையெல்லாம் மறந்துட்டாங்க. எங்கப்பன் மட்டும் ஊட்டுல உம்முன்னு எதும் பேசாமயே இருந்தாப்ல. எங்கிட்டயும், எங்கம்மாகிட்டயும்கூட செரியா பேசுல.

ஒரு நாளு காத்தால எச்எம் எங்க ஊட்டுக்கு வந்தாரு. . "வாங்க சாமி"ன்னுட்டு எங்கப்பன் சேவிங் கத்தியத் தூக்கீட்டு ஓடுச்சு. எச்எம் வேப்பை மரத்துல சாய்ஞ்சு நின்னுட்டு வேட்டிய வெலக்கி உட்டுட்டு நின்னாப்ல! அந்தன்னைக்கித்தான் எங்கப்பன் எச்எம் குஞ்சாமணியை அறுத்து வீசிட்டாப்ல!

*

நன்றி :http://www.uyirmmai.com/

Post Comment

14 கருத்துகள்:

மண்குதிரை சொன்னது…

:-(

ஸ்ரீ சொன்னது…

நல்ல நடை. உயிர்மையில் விமர்சனம் செய்யப்பட்டதில் (வாசகர் கடிதம்) இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்.

வாய்ப்பாடி குமார் சொன்னது…

நன்றீ‍ ஸ்ரீ , மண் குதிரை அவர்களே !

வால்பையன் சொன்னது…

இந்த கதையில் விமர்சிக்க என்ன இருக்குன்னு தெரியல!

விளிம்புநிலை மனிதர்களின் அடங்கமுடியா திமிரலில் பயந்த போன உயர்சாதி பண்ணாடைகள் விமர்சித்திருக்கலாம்!

அல்லது இதே போல் குஞ்சாமணியை அறுக்க கொடுத்தவன் விமர்சித்திருக்கலாம்!

சரிதானே ஸ்ரீ மச்சி!

அறிவிலி சொன்னது…

என்ன சொல்றதுன்னு தெரில. மனதை பாதித்தது என்பது மட்டும் உண்மை.

வித்தியாசமான சொற்பிரயோகங்களுடன் விறுவிறுப்பான நடை.

ஸ்ரீ சொன்னது…

இந்தக் காலத்துலே எவன் அண்டர் ஷேவ் பன்றான்னு கேட்டானுக.

வால்பையன் சொன்னது…

// ஸ்ரீ கூறியது...

இந்தக் காலத்துலே எவன் அண்டர் ஷேவ் பன்றான்னு கேட்டானுக.//

இவர் கதையில எங்கேயாவது, இந்த கதை 2009ஆம் வருடம் அக்டோபர் மாதம் நான்காம் தேதி நடந்ததுன்னு எழுதியிருக்காரா?

கூமுட்டைங்க கதையை கதையா பாக்காம என்ன விமர்சனம் வேண்டி கிடக்கு!

பெயரில்லா சொன்னது…

நன்றி திரு வால்பையன் அவர்களே.

ஸ்ரீ அவர்கள் கவனத்திற்க்கு,

இந்த காலத்திலும் அண்டர்ஷேவிங் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

நமக்கு தெரிந்தே ஒரு நாலைந்து பேரைத் தெரியும்.

கார்த்திக் சொன்னது…

நிதர்சனம்

சுரேகா.. சொன்னது…

சூப்பர் சார்!
வால்பையன் வலைப்பூவிலிருந்து வந்தேன்.

last word freak என்று பேச்சில் சொல்வார்கள். எழுத்தில் காட்டியிருக்கிறீர்கள்!

கதையும் அருமை ! கடைசி வரி அருமையிலும் அருமை!

உங்கள் வாசகர் எண்ணிக்கையில் என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

சிவாஜி சொன்னது…

உள்ளதை ஊருக்குச் சொல்வது நல்லது. இருந்தும் ஏனோ உள்ளூர ரசிக்கவும் தோன்றிற்று. மன்னிக்கவும், இது என் பிழை. ஏற்கனவே இதுமாதிரி விசயங்களை கேள்விப்பட்டும், படித்தும் இருக்கிறேன். கதை என்னை பல பரிமாணங்களுக்கு இட்டுச் செல்கிறது. மனித நேயம் நம்மில் நோய்வாய்ப் பட்டிருக்கிறது. மருந்து கொடுப்பதைக் காட்டிலும் நாம் இன்னும் கிண்டி விட்டுக் கொண்டுதான் இருக்கிறோமா என்று எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. நன்று. இது என் கருத்து அல்லது என் பிழை. மருந்து தண்டனையாக அல்லாமல் வாழ்வியல் நெறிக்கு வழிகாட்டுமானால் சிறப்பாக இருக்கும். மருந்து பயத்தை உண்டாக்குவதாக இல்லாமல், பக்தியுணர்வை எற்படுத்துவதாக இருக்குமானால் சிறப்பு. அதற்கு நாம்/நான் இன்னும் நிறைய தூரம் போகவேண்டுமோ!

அன்புடன்,
சிவாஜி

சிவாஜி சொன்னது…

வால்பையன் வாலைப்பிடித்துக் கொண்டு இங்கு வந்தேன்!

அன்புடன்,
சிவாஜி

அ சொ சொன்னது…

உண்மையை எடுத்துரைக்கும் அருமையான கதை...... தொடருட்டும் உங்களது எழுத்துச்சேவை.

பெயரில்லா சொன்னது…

கருத்துரைகளையும்,விமர்சனங்களையும் வழங்கிய அனைவருக்கும் நன்றீ.

இந்த வாமுகோமுவின் வலை பிறிதொருவரால் நிர்வகிக்கப்படுவதால்
வாமுகோமுவின் பதில்கள் பெரும்பகுதி வர இயலாது என்பதை அறிய தருகிறோம்.