வெள்ளி, பிப்ரவரி 12, 2010

வா.மு.கோமுவும் இன்னபிற கவிதைகளும்

நன்றி மயில்ராவணன் (தலைப்பை கிளுக்கினால் அவருடைய வலைக்கு செல்லலாம்)


வா.மு.கோமு தமிழின் ஒரு தவிர்க்கமுடியாத படைப்பாளி. சிறுகதைகளே இவரது பலம், தற்போது நாவலும் கைகூடிவருகிறது. சௌந்தரசுகன் என்ற சிற்றிதழில் மட்டுமே இவரின் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருக்கின்றன.


மேலும் எனக்கு ‘சௌந்தரசுகன்’ இதழாசிரியர் சுகன் மூலமாகத்தான் வா.மு.கோமு அறிமுகம் தஞ்சைப் ப்ரகாஷ் இவருடைய எழுத்துக்களைப் பற்றி என்னிடத்தில் வியந்து சொல்லி யிருக்கிறார்.


இவர் எழுதி சுகனின் ‘சுகன் பைந்தமிழ் தடாகம்’ வெளியீடாக வந்த ‘அழுவாச்சி வருதுங் சாமி’ இவரது ஆகச் சிறந்தக் கதைகளைக் கொண்டது. இவர் தந்தை கவிஞர். முத்துப்பொருணன் நடத்திய ‘நடுகல்’ சிற்றிதழ்
இன்று இலக்கிய உலகில் இருக்கும் பல பெரிய தலைகள் உருவாகிட வித்திட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.


பின் இவரின் பல சிறுகதைத் தொகுப்புகள் ‘உயிர்மை’ வெளியீடாகவும், ‘உயிரெழுத்து’ வெளியீடாகவும் இன்னும் பல பதிப்பகங்களின் வாயிலாகவும் வெளியானது. இவரின் நாவல் முயற்சிகளும் வெற்றியே. பரவலாக வாசிக்கபடும் கோமு நானறிந்த நல்ல கவிஞனும் கூட. அகநாழிகை வெளியீடாக வரும் ’எடுறா வண்டிய’ என்னும் நாவலை எழுதிக் கொண்டிருக்கும் நண்பர் வா.மு.கோமு நமது வலைப்பூவுக்கென இயற்றிய கவிதைகள் உங்களுக்காக.....


பல்லாக்கு குதிரை ஏறி
பவனி வந்த மீனாட்சி
ஒருநாள்-
நடுவீதியில் ஹவாய் இன்றி
என்னெதிரே வந்தால் மட்டும்
கும்பிட போன தெய்வம்
குறுக்கே வந்ததென்று
சொன்னாலும் சொல்வேன்!
------------------------------------------------------------------------------

நல்ல கவிதை
கெட்ட கவிதை
சும்மா படி கவிதைகளை.
------------------------------------------------------------------------------


விழிக்கவா போகிறேன்?
போதும் உலுப்பி எழுப்பாதே விடு.
அப்படி என்னதான்
சொல்லப் போகிறாய்
செத்துப்போன என்னிடம்?
உலுப்பி எழுப்பாதே விடு.
மூன்றாம் நாள் எழுவேன்
அப்புறம் பேசிக் கொள்வோம்.
--------------------------------------------------------------------------------


- யார்ரா அது சிலுவை மேல ?
- நாந்தானுங்க சாமி ஏசப்பன்.
- அர்த்த ராத்திரில அங்கே
என்னடா பண்ணிட்டிருக்கே ?
- அடிச்ச காத்துல கோவணம்
கழண்டு டேராமேல கெடக்குதுங்க
எடுத்து சொருவிட்டு இருக்கேன்.
- அடுத்த காத்துல
கழண்டுக்காத அளவுக்கு
இறுக்கி கட்டு ஏசப்பா !
---------------------------------------------------------------------------------


கிணற்றின் உச்சியிலிருந்து
எனது கால்கள்
அந்தரத்தில் குதித்தது.
இதயமெங்கும் பயப்பிரளயம்
தண்ணீரில் விழும் வரை!
“தொபுக்கடீர்”
கிணற்றிலிருந்து மேலே ஏற
படிகளைக் காணோம்!?
பாம்பேறியின் துவாரங்களில்
பாம்பைப்போல் பூரான்கள்,
பூரானின் நெளியல்
பயப் போர்வையாய் மனமெங்கும்.
குஞ்சிலிருந்து கிளம்பிய நீர்
லுங்கியை நனைத்து,பாயையும்.
அம்மாவின் குரல்
விடிந்தபின் இன்றும் ஒலிக்கும்.
கெடைமல்லா!
------------------------------

Post Comment

கருத்துகள் இல்லை: