திங்கள், பிப்ரவரி 22, 2010

பார்வைக்கு வந்த புத்தகங்கள்

தமிழ் இலக்கிய பரப்பில் சிறுகதை புத்தகங்களின் வரவு இடைக்காலத்தில் குறைந்து போய் இருந்தது! உயிர் எழுத்து மாத இதழ் சிறுகதைகளின் களஞ்சியமாய் ஒவ்வொரு மாதமும் இரண்டு ஆண்டுகளாய் வந்து கொண்டிருக்கிறது. முக்கியமாய் புதிய சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்கள் இயங்குவதற்க்கு களனை அமைத்துக் கொடுத்து இருக்கிறது. கவிஞர்கள் சிலர் கதைப்பரப்பில் காலடி வைத்து தோற்றோடிப்போன சம்பவங்களும் நடைபெற்றன. சிறுகதை என்பது இப்படித்தான் என்கிற கட்டமைப்பை கற்றுக்கொள்ளவே எனக்கு 50 சிறுகதைகள் ஆகிவிட்டது. எனது முதல் சிறுகதையை 87ல் எழுதியவன் நான். எனது முதல் 2 தொகுப்புகளும் 2006ல் வெளிவருகிறது. அன்று அப்படி இருந்தது. இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நான் எழுதிய மூன்றாவது சிறுகதை இந்த மாத உயிரெழுத்து இதழில் வந்திருக்கிறது. படித்து கருத்து சொல்லுங்கள் என்கிறார்கள். உயிரெழுத்து ஆரம்பித்த புதிதில் நாஞ்சில் நாடன் என்னிடம் குறிப்பிட்டார்.ஏதோ இந்த கூரியர் அனுப்புற செலவுக்கு , பேப்பர் அனுப்பற செலவுக்குன்னு ஆகுது கோமு,என்று !

தமிழில் எழுதும் பலர் தன்னை நீதி போதகராகவோ , பிரசாரகனாகவே சமயங்களில் பாவ மன்னிப்பு கேட்டு மண்டியிட்டு வாக்குமூலம் தருபவனாகவே தான் தொடர்ந்து கற்பனை செய்து எழுதீட்டு வர்றதாக எஸ்,ராமகிருஷ்னண் சொல்கிறார்.அவரும் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். இவரே போர்ஹே புனைவின் புனைவை எழுதுகிறார் என்கிறார். தாஸ்தாவெஸ்கி ,டால்ஸ்டாய் ,மார்க்வெல் எழுத்துகள் தன்னை வசீகரித்ததாகவும் குறீப்பிடுகிறார். தமிழில் தொடர்ந்து குடும்பக்கதைகள்தான் தமிழ் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதுவும் ஒரே பாணியில். மாற்று வடிவஙகளை சோதனை செய்து பார்த்தவர்களெல்லாம் தோற்றோடிபோனார்கள். எனக்குத்தெரிந்து பிரம்ம ராஜனின் கவிதைத்தொகுப்பை ஆரம்பத்தில் நண்பர்குலாமே கையில் வைத்துக்கொண்டு வரிக்குவரி என்ன இது ? எப்படி?என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்திருக்கிறோம். மண்டைக்குள் ஏறாதனவற்றை ஏற்றிக்கொள்வதற்க்கான பெருமுயற்சிகள் எடுப்பதேயில்லை. அதனால் பாதிப்பு என்று எதுவும் எனக்கு நிகழவுமில்லை.

மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்த்தைகளை பேசுகின்றன சந்திராவின் கதைகள். சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூராக விளங்குகிறது. இவரது கதையுலக பரப்பு வசீகரமானது. பின் அட்டை வாசகங்களை எழுதியவர் நஞ்சுண்டன். சந்திராவின் தொகுப்பை நான் படிக்க நேர்ந்ததுக்கு காரணம் எடிட்டிங். ஆங்கிலத்தில்தான் புத்தகங்கள் எடிட்டிங் செய்யப்பட்டு வருகின்றன. தமிழில் எடிட்டிங் ,கட்டிங்,பெட்டிங் எல்லாமே முடிந்த மட்டும் எழுத்தாளர்களே செய்து கொள்கிறார்கள். என்னுடைய சிறுகதைகள் எல்லாமே நேரடியாக தாளில் எழுதப்பட்ட உடனேயே பத்திரிக்கைகளுக்கு அனுப்பப்படுபவை. திருப்பி ஒருமுறை சரிதானா என்று பார்ப்பதுமில்லை. ஒரு நீண்ட வரியில் திரும்பத் திரும்ப ஒரு சொல் வந்துகொண்டே இருக்கும். கதைப் போக்கில் யாரும் அதை கவனிப்பதுமில்லை. கதையில் வருபவனுக்கு அப்பா பெயர் சின்னசாமி என்று குறிப்பிட்டிருந்தேனென்றால் முடிவில் ராமசாமி ஆகிவிடுவதும் உண்டு. புதுமைப்பித்தனுக்கே இப்படி நடைபெற்றிருக்கிறது. அவரும் ஒரே ஸ்ட்ரோக்தான் எழுதுவாரா ? என்பது தெரியாது எனக்கு.

சந்திராவின் காட்டின் பெருங்கனவு தொகுதியை உயிரெழுத்து பதிப்பகம் எடிட்டிங் செய்து அழகாக வெளியிட்டிருக்கிறது. அதன் காரணமாகவே வாசிக்க எந்த இடைஞ்சலும் இன்றி நேர்கோட்டில் கதைகள் செல்கின்றன. இக்கதைகளை வெளியிட்ட இதழ்கள் ஆனந்தவிகடன் ,கல்கி ,சண்டே இந்தியன்,உயிர் எழுத்து .

இலக்கியம் , இலக்கியம், இலக்கியம் என்றே வாசித்துக் கொண்டு இருந்த எனக்கு திடீரென இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகள் என்னுள் வேறொரு தென்றலை வீசிவிட்டு சென்றன ! மயிலிறகால் வருடியது போல என்று வைத்துக் கொள்ளலாமா ? அப்படிக்கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு மாதம் கழித்து ஞாபகமாக ஏதாவது கதை இருக்கிறதா என்றால் .. ஞாபகமா சொல்ல முடியல ! ஆனா நல்லா இருந்துச்சு என்று சொல்லலாம் . மருதாணி என்கிற சிறுகதை தொகுப்பில் ஆகச்சிறந்த கதையாக இருக்கிறது.(தெரியுமடா நீ எதைச் சொல்வேன்னு) மருதாணி என்கிற பெண்ணின் உடல் வேட்கை தீர்ந்து போவதுடன் மிகச்சரியான இடத்திலும் முடிந்திருக்கிறது. கதைகளில் காதலும் , காதல் சார்ந்த துயரங்களும் மிக எளிதாக பதிவாகியிருக்கின்றன. இதுவே இவரது எழுத்தின் பலமும் கூட . இவற்றை நம் எழுத்தாளர்கள் எல்லாம் முன்பே சொல்லிவிட்டும் போய்விட்டார்கள்.சில கதைகள் இவரை மீட்டெடுத்தாக முன்னுரையில் கூறுகிறார். உள்ளுக்குள் அழுத்திக் கொண்டிருந்தவற்றை எழுத்தில் தீர்த்தவுடன் மனசு லேசாகி காற்றில் பிறக்கும் உணர்வை அடைந்திருக்கிறார்.எழுத்தாளர்கள் அனைவருக்குமான பொதுப்பண்புதான் இது! இனியொரு முறையும் மனசு லேசாக இன்னமும் மனதில் பாரங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!

காட்டின் பெருங்கனவு -சந்திரா.
உயிர் எழுத்து பதிப்பகம்.9 முதல் தளம்,தீபம் வணிக வளாகம் , கருமண்டபம்,திருச்சி‍ 1. விலை : 50.00

விஜய் மகேந்திரனின் முதல் சிறுகதைத்தொகுப்பு பத்துகதைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. எனது மண்பூதம் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்த சமயத்தில் படிக்கிறமாதிரி யார் இப்போ எழுதறாங்க கோமு? திரும்பத் திரும்ப படிச்சாலும் உங்களோட கதைகள் சலிக்கவே இல்லை என்று பேசி நணபரானவர் விஜய் மகேந்திரன். பார்த்து பழகு விஷம் அது என்று பெருசு எச்சரிக்கை செய்தது ! இப்போது பெருசுக்கு நாந்தான் விஷம் என்று புரிந்து இருக்கும் . இலக்கிய சூழலில் யார்தான் விஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எல்லோரிடமும் விஷம் இருக்கிறது! யாரும் இங்கே யோக்கியவான்கள் இல்லை.அடுத்த நாள் உயிருடன் இருப்போமா மாட்டோமா? என்று உறுதியின்மையில் இருக்கவே, இந்த சூழலில் சண்டைகள் சர்ச்சைகள் !

நகரத்திற்க்கு வெளியே தொகுப்பில் இருக்கும் ஊர்நலன் என்ற‌
சிறுகதை இதெ கருத்தைத்தான் முன் வைக்கிறது, நாயக பிம்பம் வில்லனாகி நாட்டாமையாகி அழிவைத் தேடிக்கொள்கிறது. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் சிறுகதையில் கண்களை இழந்த பெரியவர் கருப்பய்யா தன் பேத்தி ஓடிப்போய்விட்டாள் என்றதும் கிளம்பும் வேகம்.. வெற்றி பெறட்டுமே? என்று நம்மை முன்பே யோசிக்க வைக்கிறது! ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தோற்றுப்போகிறார். வாழ்க்கை எந்த நேரங்களிலும் வெற்றியையே தந்து கொண்டிருப்பதுமில்லை. தொகுப்பில் முதல் கதையாக சனிப்பெயர்ச்சி கதை இடம்பெற்றுள்ளது. இது உயிர் எழுத்து இதழில் வந்த சமயமே எல்லோராலும் பாராட்டப்பட்ட கதை! கதைகளை எனது அறையை பார்ப்பதற்க்கு துயரம் கூடுவதாக உள்ளது என்று நேராகவே சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். அந்த கூறல் முறையில் தங்குதடையே ஏற்ப்படுவது இல்லை. தொகுப்பில் நகரத்திற்க்கு வெளியே சிறந்த கதையாக இருக்கிறது! கதை சமகாலத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது, வாசிப்போர் சூரிய பிரகாஷாக இருக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ! ஆசியா மேன்சன் , அடைபடும் காற்று என்கிற கதைகள் இரண்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அது சொல்லப்பட்ட முறையில் கோளாறாகக் கூட இருக்கலாம். மழைபுயல்சின்னம் அகநாழிகை இதழில் வந்தது. இதழில் படிக்கும்போதே சென்னை சூழலையும் காதல் என்ற சொல் நகரங்களில் கற்பழிக்கப்படுவதும் .. இதற்க்கெல்லாம் என்ன அர்த்தம் ? இப்படியேதான் வாழ்ந்து தீரவேண்டுமா ? என்றெல்லாம் தோன்றியது.

வாழப்பழகிக் கொண்டவர்களுக்கு வருத்தங்கள் பெரிய விஷயங்கள் இல்லைதான் என்பதை அழகாகச் சொன்ன படைப்பு. ராமநேசன் என்கிற கதை நண்பனைப்பற்றிய தகவலில் இருக்கிறது, பின் அட்டையில் நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப்பிறழ்வை உருவாக்குபவை. என்கிற வாசகம் பயமுறுத்தினாலும் நகரங்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு இந்த தொகுப்பு அவசியமாகப்படுகிறது!

பாக்கியம் சங்கர் இந்த தொகுப்பு பற்றி என்னிடம் பேசுகையில் சாருவாகன்,ஆதவன், அசோகமித்திரன் ஆகியோர் வாழ்வின் தரிசனங்களை தம் எழுத்தில் பதிய வைத்தது போல் விஜயும் வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார். வசவச கசகசவென மொழியைத் திருகி பிசைந்து கொண்டு இருந்த திருச்செந்தாழை, லஷ்மிசரவணகுமார்,எஸ் செந்தில்குமார் சிறுகதைகளுக்குள் நுழையவே அவ்வளவு சங்கடம் பிறந்துவிடுகிறது! தான் எழுதிய கதைகளை வாசிக்க வைத்த சாமார்த்தியமே இத்தொகுப்பின் வெற்றி என்கிறார். தொடர்ந்து மேலும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்றெ குறிப்பிட்டார்.

இந்த தொகுப்பின் வெற்றியை இங்கேயிருந்தே பாட்டிலை நீட்டி சியர்ஸை சொல்லி தனியாக நாளை கொண்டாட வேணும்.தொடர்ந்து இயங்குவது சிரமமான இந்த சூழலில் மிக முக்கியம் நண்பரே ! உங்கள் நாவல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் !

நகரத்திற்கு வெளியே -விஜய்மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம் விலை 50.00


திருமதியாகிய நான் கவிதைத் தொகுதி கீதாஞ்சலி பிரியதர்சினியுடையது. புத்தக கண்காட்சியை ஒட்டி பதிப்பகங்கள் பறந்துகட்டி டிசம்பரில் புத்தகங்கள் போடும் அவசரத்தில் முகப்பு அட்டை கலை நயம் குன்றியே வெளிவருகின்றன என்று தோன்றுகிறது, ஆனால் இந்த தொகுப்பை கையில் எடுப்பவனிடம் அட்டை பேசுகிறது ! சாமார்த்தியசாலிகள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். மவுஸ் பாய்ண்ட் தன் வேலையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.
கவிதைகளுக்கான நந்தாவின் கோட்டோவியஙகள் வேறு தனியே நம்மிடம் பேசுகின்றன. கீதாஞ்சலியின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு இது ! கவிதைகள் அனைத்துமே இலக்கிய இதழ்களில் வெளிவந்தவைதான், தனித்தனியாக அங்கொன்றும் இங்கொன்றுமாக படிக்கையில் தோன்றாதவைகள் எல்லாம் ஒட்டுமொத்தமாய் படிக்கையில் தோன்றுகின்றன! அவைகள் என்ன ? என்று மட்டும் என்னிடம் கேட்டு விடாதீர்கள் . எனக்கு இவரைப் போலவெல்லாம் கவிதைகள் எழுத வராது ! தெரியாது! ஒட்டிக்கொண்ட கவிதை ஒன்று!

அம்மாவின் கவலைகள்

இன்னமும் தடிதடியா புத்தகம்
வாசிக்கறதும் , சிரிக்கிறதும் திருந்தல.
வீட்ல தலைக்கு மேல உசந்த
பையன் இருக்கான்,இன்னமும்
வேத்து ஆம்பளைகளோட போன்ல‌
சதா பேச்சு, ஒழுங்கா ருசியா
சமைச்சு வைக்கத் தெரியாது, சரி
அதை துடைக்கவும் வணங்காது.
வீட்ல தங்கறது இல்ல ,ஒரு
வேலையிலும் சேர்ந்த மாதிரி இல்ல,
எழுதிக் கிழிச்சது போதும்னு,அவளை
எப்ப நம்ம மருமவன் சொல்றது
பாவம் அவர் சுகப்படறது.

"திருமதி"யாகிய நான்- கீதாஞ்சலி பிரியதர்சினி.
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்.

41,கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,சென்னை -11 . விலை 50.00

மற்ற புத்தகங்கள் பற்றி
மறுபடியும் பேசுவோம்!


...

Post Comment

4 கருத்துகள்:

thamizhini சொன்னது…

குறிப்பிட்டிருந்தது எதுவும் இன்னும்படிக்கவில்லை..
சந்த்ரா தோழியாக இருப்பினும்..., அவருடையது உட்பட..
ஆனா..வாசிக்க வேணும் கண்டிப்பா என்ற
தோணுதலை உண்டு பண்ணியது..
அதுவே ஒரு நல்ல அறிகுறியாகத் தான் இருக்கு..
நன்றி..பகிர்தலுக்கு..

வாய்ப்பாடி குமார் சொன்னது…

இந்த வலைப்பதிவின் கருத்துரைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வாமுகோமுக்கு அளிக்கப்படுவதால் கருத்துரையிடும் அனைத்து நண்பர்களுக்கும்
வலையின் நிர்வாகி நன்றியை தெரிவிக்கிறார்.

vijayaselvan சொன்னது…

he he thamizhini avargale !
nallavaikalai veraival padithuvedungal !
aanal chandra avarkalin toguppai vaasithivittu marandu vida mudiyathu !
athu nammayum virakthiyin ellaiku kondu sendru vidum.
paarthu be careful !!!!!!!!!!

மயில்ராவணன் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க. சந்திராவின் புத்தகங்கள் வெளியீட்டு விழா அன்று வாங்கியது..இன்னும் படிக்கவேயில்லை. சீக்கிரம் படிச்சுபுடுறேன்.நானும்
சிறுகதைகள் எழுத ஆரம்பிக்கோணும் வெரசா....