வியாழன், ஜூன் 10, 2010

வா. மு. கோமுவின் ‘சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்’


-சாகிப்கிரான்விரிவுபடுத்தி எழுதப்பட்ட புனைவு ஒன்றே நாவல். அது பொதுவாக உரைநடை வடிவில் இருக்கும். இதுவே நாவலுக்கான மிக எளிய வரையறையாக இருக்கிறது. இந்த குறைந்த அளவு வரையறைக்குஎந்த அளவு ஒரு எழுத்து உடன்பட்டிருக்கிறது. அப்படி அது ஒரு புனைவின் வழியாகத் தன்னை எப்படிநாவல் என்ற எல்லைக்குக் கொண்டு செல்கிறது முதலிய கவனங்கள் வா. மு. கோமுவின் நாவலைவிமர்சனத்திற்கு உட்படுத்தும்போது நம்முன் எழும் ஒருவகையான சவால்

கவிதையைப் போலல்லாமல் நாவலுக்கு மிகக் குறைந்த வரலாற்றையே நாம் கொண்டுள்ளோம். பிரதாப முதலியார் சரிதம் தொடங்கி வா. மு. கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகள் வரை ஒரு பயணத்தை அடைந்திருக்கின்றோம். இந்தப் பயணம் எத்தகைய முடிவுகளைமுன்வைக்கிறது? நாவலானது தனது வடிவம், உத்தி, உள்ளடக்கம், அழகியல், இயல்புநிலைமுதலியவற்றைத் தாண்டி எப்படி தன்னை ஒரு எழுத்துப் பிரதியிலிருந்து அல்லது ஒரு தகவல்அல்லது கருத்து நிலையிலிருந்து இலக்கியமாமாக்கிக் கொள்கிறது. அந்த புள்ளி எந்த நிலையைஅத்தகைய ஒரு பிரதியில் செயல்படுத்துகிறது? இதுதான் நாவல் தனது பாதையில் கொண்டிருக்கும்படிநிலை உயரமா என்று சந்தேகம் எழுகிறது. எத்தகைய கூறுகள் ஓர் எழுத்தைஇலக்கியமாக்குகின்றன. அது இலக்கியத்தில் பேசப்படும் இசங்களால் நிர்ணயிக்கப்படுகின்றதா என்றகேள்வியும் தொடர்கிறது.

இசங்கள் ஒன்றை ஒன்று கடந்து ஒரு வகையான எளிய நிலைக்குத் திரும்பிவிட்டன. அல்லதுஎளிமையைத் தன்னுள் மிகைப்படுத்தி வருகின்றன. அத்தகைய ஒரு வடிவமாகச் செவ்வியல்தன்மையைச் சொலல்லாம். செவ்வியல் தன்மையானது இயல்புணர்வின் நேரடியாகச் செயல்படும்ஒரு தன்மையைக் கொண்டிருப்பதால் என்றைக்குமான இலக்கிய ஒழுங்கை அது அடைகிறது. இந்தநாவலானது முதல் பாகத்தில் செவ்வியல் ஒழுங்குடைய ஒரு நாவலாகத் தொடங்கி இரண்டாம்பாகத்தில் செவ்வியல் ஒழுங்கை மிக எளிய வடிவில் பின்நவீனத் தன்மையை அடையாளப்படுத்தும்ஒருவகை உத்தியாக்க முயன்றிருக்கிறது. தீவிர உட்சிக்கல்களுக்கு உருக்கொடுத்தல், முரண்பாட்டு இறுக்கம், தெளிவின்மை, இந்த வகையில் இவை தங்களுடன் தொடர்புடைமை ஆகிய இவற்றை முன்னெப்போதும் கையாளாத சொல்லல் முறையில் தன்னைத்தானே எள்ளல் செய்வதை வெளிப்படுத்துவது என்பது ஒரு வகையில் பின்நவீனத்துவத்தைவரையறைப் படுத்துவதாகும். இதில் இரண்டாம் பாகமானது தீவிர உட்சிக்கள்களுக்கோ, முரண்பாட்டு இறுக்கத்திற்கோ இடம் தருவதில்லை. ஆனால், தெளிவின்மையும் அவை எவ்வளவுஎளிய வடிவைக் கொண்டிருந்தாலும் அவற்றிற்கான தொடர்பு குறித்த ஒரு அபத்தமும் தொடர்பற்றதன்மையையும் கொண்டிருக்கின்றன. அதேபோல அந்தத் தொடர்பானது ஒரு வகை பாலியல்தன்மையிலான வெற்று காம செய்கைகளின் ஒரு கூட்டாக அமைவதும் அதன் இயங்கியல்தளமானது அதாவது அது நடப்பதாகக் காண்பிக்கப்படும் அல்லது சொல்லப்படும் சமூக வாழிடம்அது வெகு சாதாரணமாகப் பாவிக்கப்படும் ஒரு சிதைவுற்ற பண்பாட்டு மக்கள் வாழும் நிலப்பரப்பு. அது நகரியமும் அதனால் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே இருக்கும் அறிவியல் தொழில்நுட்பத்தால் உருவாக்கும் தாக்கத்தையும் அதன் சிதைவுகளையும் தொகுப்பதன் மூலம் ஒருதொடர்பின்மையில் தொடர்புடமையை உருவாக்கி, பின்நவீனத் தன்மையை சாயலாக்கமுயலுகிறது.

366 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலை வாசகனால் ஒரே மூச்சில் மிக எளிதில் வாசித்துவிடமுடியும் என்றே நம்புகிறேன். முதல்பாகம் சாந்தாமணி. இரண்டாம் பாகம் இன்னபிற காதல் கதைகள்.

முதல் பாகம் ஒரு கிராமத்துப் பள்ளியில் நடக்கும் மாணவப் பருவ காதலைப் பேசுகிறது. பழனிச்சாமிதான் அந்தக் காதல் கதையின் கதாநாயகன். அவனது காதலிதான் சாந்தாமணி. பழனிச்சாமி பள்ளி மாணவர்த் தேர்த்லில் நின்று ஏழு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனவன். அவனது உயிர் நண்பன் சக்தி. இந்தக் காதல் கதையின் இடையில் வரும் கதாபாத்திரங்கள் பூங்கொடி, ஜான்ஸி, சுகந்தி இன்னும் சிலர். பூங்கொடி சக்தியின் காதலி. வழக்கமான நாம் அன்றாடம்கேள்விப்படும் ஒரு காதல் கதையாக இருந்தாலும் வா. மு. கோமு தனது கை வண்ணத்தால்கதாபாத்திரங்களின் விருப்பங்களை மொழிகிறார். அது நமது இயல்பு வாழ்வில் எத்தகையஅறமுமற்ற சில பிம்பங்களை நினைவுபடுத்துகிறது. என்றாலும் பள்ளியில் படிக்கும் அதாவதுபன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களான அவர்கள் தங்களது இயல்பில் சற்றே மிகைப்படவடிவமாகவே தெரிகின்றனர்.

இரண்டாம் பாகத்தில் தனித்தனி அத்தியாயங்களில், வெவ்வேறு விதமான உரையாடல்களை, கடிதங்களை, கவிதைகளை, விவரிப்புகளை காதல் கதையாக்க மாற்ற முயன்றிருக்கிறார். குறிப்பாகஒவ்வொரு அத்தியாயமும் ஒரு பெண் பெயரைக் கொண்டிருக்கிறது. இப்படி அமைக்கப்பட்டிருக்கும்இரண்டாம் பாகமானது முதல் பாகத்தில் வரும் எந்தக் கதாபாத்திரத்தையும் தன்னுள்கொண்டிருப்பதில்லை. அதாவது கதாநாயகன் பழனிச்சாமியைத் தவிர. அல்லது போர்ஹேகதைகளில் வருவதுபோல இந்த பழனிச்சாமி ஒரு கூட்டுமனத்தின் கால நீட்சியா என்றும் எண்ணவைக்கிறது. இரண்டாம் பாகம் கிட்ட்த்தட்ட உடலுறவு பற்றிய மிகப்பெரிய உரையாடலுடன்நீள்கிறது.

நாவலின் அட்டை குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகமானது, ‘பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு கலாச்சார வெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதன் சாட்சியமே வா.மு. கோமுவின் இந்தப் புதிய நாவல். ஆபாசமென்றும் மிகை என்றும் சொல்லக் கூடாதவை என்றும் சொல்லப்பட்டவற்றை சொல்வதன் மூலம் நம் அசலான இருப்பை மிகவும் நெருங்கி வருகிறார் வா.மு. கோமு. நம்முடைய ஆசாபாசங்களும் இரகசியங்களும் நம்மை எந்த அளவிற்கு இன்பமூட்டுமோ அந்த அளவிற்கு இந்த நாவலும் இன்பமூட்டுகிறது. எந்த அளவிற்கு அது நம்மை பயப்பட வைக்குமோ அதே அளவுக்கு பயப்படவும் வைக்கிறது. நகரங்கள், கிராமங்கள், சமூக, பொருளாதார வித்யாசங்கள் என சகலத்தையும் கடந்து இன்று உருவாகும் ஒரு பொதுப் பண்பாடு எவ்வாறு எல்ல இடங்களிலும் நீக்கமற நிறைகிறது என்பதை மிகத் துல்லியமான மொழியில் இந்த நாவல் சித்தரிக்கிறது.’

முதல் பாகமானது மேலே சொல்லப்பட்ட்து போல பாலின்பத்தின் வேட்கைகளும்வெளிப்பாடுகளும்தான் என்றாலும் ஆசிரியர் காண்பிக்கும் பண்பாட்டு வெளியானது இயல்புநிலையிலிருந்து வெகு அந்நியப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது.

அதாவது அவர் சித்தரிக்கும் பள்ளியானது ஒரு கல்லூரிக்கு இணையாகக் காட்டப்படுகிறது. மாணவர்கள் தங்களது குடும்பம், சூழல், பள்ளியின் கட்டுப்பாடுகள் போன்ற எதையும்எதிர்கொள்வதாகவோ அல்லது அத்தகைய ஒன்று இருப்பதையோ நினைவுபடுத்துவதோ இல்லை. அல்லது அந்தக் கதையானது கதாசிரியனின் மன உலகில் நடக்கும் ஒரு புனைவைப் போல தோற்றம்கொள்கின்றது. கதாபாத்திரங்களின் மனநிலையானது ஒற்றைத் தன்மையுடன் ஒருஇனக்குழுவிலிருந்தோ அல்லது பொதுவான ஒரு மனித சமூகத்திலிருந்தோ தருவித்துக்கொள்ளாமல் இருப்பதால் அது கதாசரியனின் வக்கரமான மனநிலையைப் பிரதிபலிப்பதாவேஅமைவதாக நினைக்கத் தோன்றுகிறது..

பள்ளி என்பது அரசு பள்ளியாக இருந்தாலும் தனியார் பள்ளியாக இருந்தாலும் அது மிகப் பெரியநிறுவனம். அதன் கட்டமைப்புகள் மதிய உணவு வழங்குவது வரை தனக்கான அதிகாரங்களைக்கொண்டிருக்கும்போது அறிவியல் துறையில் படிக்கும் மாணவர்களால் எத்தகைய கட்டுப்பாடும்இல்லாமல் சுதந்தரமாக இயங்க முடிவதும் ஆசிரியரை மன்னிப்பு கேட்க வைப்பதும், வகுப்பறைகளில் சல்லாபம் கொள்வதும், எப்போதும் வகுப்புகளைப் புறக்கணித்துவெளியேருவதும், பள்ளியிலேயே மது அருந்துவதும் கலவியின்பம் காண முயல்வதும்கட்டுப்பாடான பள்ளிகளில் படித்து ஒழுக்கமான குடும்பங்களில் வாழ்ந்த நமக்கு பெரியவியப்பாகவும் சாத்தியமற்ற ஒரு புனைவுமாகவே தெரிகின்றன.

ஆனால் நாவலில் காட்டப்படும் பாத்திரப் படைப்பானது ஒரு தேர்ந்த கதாசிரியரின் ஆளுமையைக்காட்டவே செய்கிறது. சாந்தாமணியின் காதலுக்காக உருகி நிற்கும் பழனிச்சாமி எந்த சிறுஉறுத்தலுமில்லாமல் ஜான்ஸியிடம் சல்லாபம் கொள்கிறான். ஆனால் சாந்தாமணியைத் தொடவும்தயங்கும் அவன் அவளது தங்கையின் விருப்பப்படி அவளை சாந்தாமணி இருக்கும்போதேஅவளுக்குத் தெரியாத்தைப்போல சல்லாபிக்கிறான். அதேபோல தனது காதலியான பூங்கொடியைசினிமா தியேட்டரிலேயே உறவுக்கு அழைக்கும் சக்தி அவனது வீட்டில் குடியிருக்கும் கலைவாணிஅவனை சல்லாபிக்க அனுமதிப்பதில்லை. சுகந்தி
(சாந்தாமணியின் தங்கை) வேட்கையில் அலையும் ஒரு பிஞ்சில் பழுத்த பழம், அந்தப் பிஞ்சைப் பழுக்க வைத்தது சக்திக்கு தியேட்டரில் இணங்க மறுத்த பூங்கொடி. அந்த பூங்கொடிதான் லெஸ்பியனாக சுகந்தியைப் பழக்கப்படுத்தியவள். இத்தகைய மன அமைப்பானது நுணுக்கமாக மனித மனத்தின் மிகப் பிரமாண்டமான சிக்கல் முடிச்சிகளின் வெளிப்பாடுகள். இவை இயல்பான மனோநிலைக்கு புரிபடாத ஒரு மனோதத்துவ ரகசியம். ஆனால் இதை செம்மையாகக் கையாளத் தவறிய ஒரு நாவலாகத்தான் எண்ணத் தோன்றுகிறது.

அன்னா கரினா, மேடம் பொவாரி போல எத்தகைய வலுவான கதையமைப்பையோ, அதற்கானஇயங்குதளத்தையோ கொண்டிருப்பதில்லை. மாற்றாக மிக எளிய கதையானது மிக அதீத பாலியல்வேட்கையை, அல்லது அத்தகைய சிதைவுற்ற மனநிலைகளை எத்தகைய நிர்பந்தமுமற்றநாவலின் சூழலுக்குள் மிகைப்படித்திய வண்ணமே எந்த உணர்வொழுங்கும்தனதியல்பிலில்லாதபடிக்கு நிற்கிறது.

பாத்திரங்களின் மனோபாவமானது விடலைப் பருவத்தைப் பற்றியதாக இருந்தாலும்விவரிக்கப்படும் அந்த மனோபாவமானது அத்தகைய விடலைப் பருவத்தைக்கடந்தவர்களைப்போல தோற்றம் கொள்கிறது. அல்லது போதிய வலுவில்லாமல் அமைக்கப்பட்டதிரைக்கதைபோல ஆளுமைகள் சிதறடிக்கப்பட்டிருக்கின்றன. இது நாவலை இலக்கியமாகும்தன்மையற்ற ஒன்றாக மாற்றிவிடுகிறது. அத்தகைய ஒரு பழுதை உணர்ந்த கதாசிரியர் அதற்கானமாற்றாக பாலியல் வேட்கைகளை முன்னிருத்துவதாக எண்ணத் தோன்றுகிறது. தீவிர இலக்கியவாசகன் முதல் வாசிப்பிலேயே இதை உணர்ந்து கொள்வான்.

பாலின்பத்தின் வேட்கைகளும் வெளிப்பாடுகளும் ஒரு குறிப்பிட்ட நிலம்சார்ந்தபண்பாட்டுவெளியில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதற்கான எந்தத் தடையமும் நாவலில்விவரிக்கப்படுவதே இல்லை. அல்லது அதற்கான வெளியில் நாவல் இயங்குவதே இல்லை என்றுகூறிவிடலாம். ஏனென்றால் நாவலானது நாம் பேசிக்கொண்டிருக்கும் பண்பாட்டிற்கு வெளியில்அதற்கு எதிரான ஒரு கதியில் அதாவது புனைவைப் போன்ற ஒரு திரிசங்கு சொர்க நாவல்போலவோ, சரோஜா தேவி நாவலில் இயங்கும் சாத்தியமில்லாத ஒரு பிரதிமையைக்கொண்டியங்குவதால் அத்தகைய ஒரு பயன்பாடு அல்லது கூற்றானது சாத்தியமில்லாமலும்போய்விடுகிறது.

இரண்டாம் பாகமானது முதல் பாகத்தைப் போல ஒரு தொடர்ந்த கதையமைப்பில் இயங்காமல், தனித்தனி பின்னங்களாக காட்டப்பட்டிருப்பது, அத்தகைய பிம்பங்களின் ஒட்டுமொத்த சாயலானதுமுதல் பாகத்தின் தீவிரத்தன்மையோடு ஒப்பு நோக்கப்பட்டு, அதற்கான ஒரு சுவடில் மீண்டும்மற்றொரு பயணத்தைத் தொடர்வதற்காக செய்யப்பட்டிருக்கிறது. இந்த உத்தியானது முழுவதுமாகவெற்றியடையாமல் போனதற்குக் காரணம் அது எத்தகைய வலுவுமில்லாத பாலியல்செயல்பாடுகளாக அல்லது அத்தகைய உரையாடல்களை வெற்று நீட்சிகளாகக் கொண்டிருப்பதே.

இதை இப்படியும் சொல்லலாம். நடிகர் ராஜேஸும் வடிவுக்கரசியும் நடித்த படம் கன்னிப்பருவத்திலே. பாக்கியராஜ் வில்லனாக அதாவது
anti hero வாக வருவார். படத்தில்படுக்கையறை காட்சியும் உடலுறவு காட்சியும் காட்டப்படும். அதை சென்சார் செய்யவே முடியாதஅளவிற்கு கதைக்கான ஒரு வலுவாக, கதையை தீர்மானிக்கும் முக்கிய கூறாக வைத்திருப்பார்கள். கதை இதுதான். கதாநாயகன் ஒரு ஜல்லிக்கட்டு வீரன். ஊர் பெண்களுக்கெல்லாம் அவன் ஒரு கனவு. கதாநாயகியைக் காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறான். பிரச்சனை வருவதேமுதலிரவில்தான். உடலுறவு ஆரம்பிப்ப்தைக் காண்பிப்பார்கள். ஆனால் தொடரமுடியாமல் அவன்தோற்றூப்போகிறான். சரி. மற்றொரு நாள் பார்க்கல்லாம் என்றால் மீண்டும் தோல்விதான். காரணம்ஜல்லிக்க்ட்டில் ஒருமுறை மாடு முட்டித் தள்ளிவிட அவனது ஆண்மை சீர்படுத்த முடியாதபடிகுறைபட்டுவிடுகிறது. மருத்துவர் சொல்வதை யாரிடமும் சொல்ல முடியாமல் சுகமும்கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும்போதுதான் கதாநாயகனின் தம்பிக்கு இந்த விஷயம்தெரியவர, நாயகியை மிரட்டுகிறான். அவளது கணவணின் ஆண்மையற்ற தன்மையை ஊரில்எல்லோரிடமும் சொல்லிவிடுவேன் என்கிறான். தனது ஆசைக்கு அவளை இணங்கச் சொல்கிறான். கதை இவ்வாறு போகிறது. இங்கே அத்தகைய காட்சி வலுவை நாம் உணருகிறோம். அப்படிப்படவலுவான எந்த அத்தியாயமும் இரண்டாம் பாகத்தில் இருப்பதாகக் காணமுடிவதில்லை.

முதல் பாகத்தின் முடிவில் பழனிச்சாமியும் சக்தியும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி. ‘ரொம்ப தப்பு பண்றோம்டா. யாரோ பெத்து வளர்த்துன ஒரு பெண்ணை காதல்னு சொல்லிட்டு இழுத்துட்டுப் போய் முத்தம் குடுக்கறதும், முலை கசக்கறதும் எனக்குப் பாவமாப்படுது. அதில்லாம எதிர்பார்ட்டிக்கு நம்ம மேல விருப்பம் இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்காமலே, நம்ப ஆசைக்கு எல்லாமே நடந்தே ஆகணும்னு விருப்ப்ப்படறோம். பாவம்டா . . . எல்லாமே பாவம்.’ இது சக்தியின் வார்த்தைகளாக இருக்கின்றன. ஆனால்பழனிச்சாமி இந்தக் கருத்தை ஆதரிப்பதுமில்லை. மறுப்பதுமில்லை. நாவல் உருவாக்கும்கட்டமைப்பிற்கு முற்றிலும் முரணான ஒரு விஷயமாக இருக்கிறது. இத்தகைய ஒருகருத்துநிலையை ஆசிரியர் தனது ஆபாச மனவிகாரங்களை சரிகட்டும் உத்தியாக்க்கமுயன்றிருக்கிறார். இதே போலவே சக்தி மற்றொரு கதையைச் சொல்கிறான். ‘அண்ணன் செத்த உடனே தம்பி, அண்ணிக்காரிக்கு ரூட் விட்டுட்டே இருந்தானாம். அட அண்ணின்னா அம்மா மாதிரிதான கிட்ட்த்தட்ட. டார்ச்சர் குடுத்து குடுத்து அண்ணிக்கு விருப்பமில்லாமயே வம்புல புடிச்சி மாட்டிக்கிட்டு இருந்திருக்கான். இது அவன் சம்சாரத்திற்கும் தெரிந்தேதான் நடந்துட்டு இருந்திருக்கு. முன்னத்த நாள் சாயந்திரம் இப்படி பாம்பு கடிச்சு நுரை தள்ளிட்டு கெடக்கான்னு காட்டுக்கு ஓடி நாலஞ்சு பேரு தூக்கிக்கிட்டு வரவரவே உசுரு போயிடுச்சாம். விரியன் பாம்புதான் கடிச்சிருக்கோணும்னு பேசிக்கிட்டாங்க. கொண்டு வந்தவங்க, பாடிய வாசல்ல வச்சிருக்காங்க. வாசல் படியில உட்கார்ந்திருந்த அண்ணிகாரி தப்புறு குப்புறுன்னு பொணத்துக்கிட்ட ஓடிப்போய் வேட்டியை அவுத்துட்டு விரையோட சேத்து அவன் குஞ்சுமணியை வாயில கடிச்சு வாசல்ல துப்பிபோட்டு போய் மறுபடியும் வாசப்படியில உட்கார்ந்து அழ ஆரம்பிச்சிடுச்சாம்.’ என்ன மாதிரியான மனதின் உணர்வதிர்வை ஆசிரியர் நிறுவவருகிறார்?

நாவலில் விவரிக்கப்படும் உரையாடல்கள் இத்தகைய ஒரு பாலியல் தினவை வெகு சாதாரணமாகஎதிரானிடம் வெளிப்படுத்தும் அளவிற்கு நமது சமூகம் தயாராகிவிட்டதா என்பதே. உள்ளபடியேபார்க்கப்போனால் இத்தகைய நாவல் அதாவது தனது குறிகளை எந்நேரமும் திறப்பதற்குத் தயாராகஇருக்கும் பெண்களை கற்பிக்கும் கதாசிரியன்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இரண்டாம்பாகமான பழனிச்சாமி முதல்பாகத்தில் சாந்தாமணியால் காதலின்மேல் வெறுப்புற்றுவேட்கைகளை முன்மொழிபவனாகவே மாறிவிடுகிறான். இது ஜான்ஸி அவனுக்குத் தந்த ஒருஅறம். ஆனால் நாவலின் இறுதியில் பழனிச்சாமி தன் மனைவி ஜெயாவை அணைத்தபடி தனதுசெல்போன் காதலி மீனாவிற்கு குட்நைட் சொல்கிறான். மீனாக்குட்டி இவனது செல்போன் துணை. ஒரு நண்பனின் தங்கை. அத்தகைய வேட்கைகளின் தினவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒருதுணை. இங்கே இரண்டாவது பாகத்தில் ஒருசில கடிதங்களை, கவிதைகளை வைத்திருந்தாலும்செல்பேசி உரையாடல்கள்தான் அதிக பக்கங்களைப் பிடித்திருக்கின்றன. அது மனிதவாழ்முறையானது தொலைத் தொடர்பு தகவல் பரிமாற்ற முன்னேற்றங்களால் எத்தகையசாதகங்களை, பாதகங்களைக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டி நிற்கவே செய்கின்றது.

மிக மிகச் சொற்பமான நாவல் தன்மைகளையும் மிக அதிக அளவில் பாலியல்இட்டுகட்டல்களையும் வெகு சாதாரணமான புனைவையும் கொண்டிருக்கும் இந்தப் பிரதியைவாசித்தவுடன் எழுந்த சில கேள்விகளே இத்தகைய ஒரு படைப்பிற்கான விமர்சனத்தை முடித்துவைக்கும். அந்தக் கேள்விகள் . . .

  1. பெண்கள் லெஸ்பினாக மாறுவதைக் காட்டும் அதே சமயம், ஒரு ஹோமோவுக்கான எந்தத் தடையத்தையும் நாவல் கொண்டிருப்பதில்லை.
  2. விருப்பங்களை மொழிவதை எடுத்துக் கொண்டால், பெண்களின் விருப்பங்களாகக் காட்டப்படும் பாலியல் வேட்கைகள் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவை ஒரு ஆணிய மனம் வரிந்துகொண்ட பெண் விருப்பங்களாகத்தான் தெரிகின்றன.
  3. நாவலின் மையம் ஆணாதிக்கப் பரப்பிலிருந்து விரிவதாகவே இருக்கிறது. சாந்தாமணியை அவளது பிடிவாத குணத்துடன் மைய கதாநாயகனும் சரி, துணைக் கதாநாயகனும் சரி ஏற்றுக் கொள்ள மறுத்து காதலையே துறந்துவிடுகின்றனர்.
  4. கதாபாத்திரங்கள் வாழ்க்கைத் தேவைகள் எதற்கும் முனைப்பில்லாத வெறும் பாலியல் முனைப்புடனே நிற்கின்றன. இது இலக்கியத் தரத்தில் நாவலை எங்கே கொண்டு செல்கிறது? அல்லது இது எப்படி ஒரு நாவலாகிறது?
  5. சில சிறுகதைகளில் மிகச் சிறப்பாக, குறிப்பாக உலக இலக்கிய அளவில் பாலியல் விஷயங்களையும், மனித மனதின் விசித்திர செயல்பாட்டையும் சாதாரணமாகச் சொல்லிச் சென்ற வா. மு. கோமுவின் சிறுகதைகளுக்கிடையே நாவலின் வடிவம் அல்லது புனைவு ஏன் வெற்றியடையவில்லை?
  6. பாலியல் விஷயங்களை வெறும் பாலியல் நடைமுறையாகப் பார்க்காமல், அதன் பல்வேறுபட்ட சமூகக் சிக்கல்களாகவும் தனிமனித சிதைவுகளாகவும் ஏன் வெளிப்படுத்தக் கூடாது? அதற்கான புனைவுகளும் உத்திகளும் நாவலில் எத்தகைய சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன?
  7. இத்தகைய தமிழ் நாவல்கள் உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கும்போது அதன் கடைக்கோடி நிலையானது ஏன் மேம்படுவதில்லை?
  8. Ingmar Bergman - ன் Persona என்ற படத்தில் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் தங்களது உடலுறவு அணுபவங்களை பேசிக்கொள்வதாக இருக்கும். அந்தப் படத்தில் அது காட்சி வழியாக்க் காண்பிக்கப்படாமல் உரையாடல் வழியாக நிகழ்த்தப்படுவதால் அதன் வலுவானது sexual erection க்குப் பதிலாக mental and social distortion னாக பூடகமான ஒரு மன ஒழுங்கில் விளக்கப்படுகிறது. அத்தகைய சாத்தியங்களை ஏன் நம்மால் பயன்படுத்த முடிவதில்லை. அல்லது அதன் மீள் தன்மையானது நமது பொது புத்திநிலைக்கு தயாரான ஒன்றாக இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.
  9. எப்போது நாம் வணிக நோக்கமற்ற அல்லது அதுவே பிரதானமான ஒரு நிலையிலிருந்து வெளியேறி தீவிர இலக்கியத்தை மக்கள் முன் வைக்கப்போகிறோம்?
  10. இத்தகைய நாவலுக்கான தேவை என்ன என்று புரியவில்லை. ஜி. நாகராஜனையும் சத் ஹசன் மாண்டோவையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம்? அவர்களுக்கான இடம் எதுவாக நம்மிடையே இருக்கிறது? அதாவது இந்த நாவலின் பிரதிகள் யாவும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்ற ஒரு செய்தியானது எதைக் காட்டுகிறது?

பின்குறிப்பு : நல்ல படைப்பொன்றே ஆழமானதும் கவனிக்கத்தக்கதுமான ஒரு விமர்சனத்திற்கு இடம் தருவதாக இருக்கிறது.

(சொற்கப்பலும் தக்கை காலாண்டிதழும் இணைந்து 08-05-2010 அன்று நடத்திய நாவல் விமர்சன அரங்கில் வா. மு. கோமுவின் சந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் என்ற நாவலுக்கு வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்


நன்றி : லும்பினி.காம்... அவர்களது தளத்தில் படிக்க தலைப்பைக் கிளுக்கவும் .Post Comment

9 கருத்துகள்:

வால்பையன் சொன்னது…

பலதரப்பட்ட கண்ணோட்டத்தில் கொண்டு செல்லும் அலசல்!

மயில்ராவணன் சொன்னது…

இது ஒரு ஆணாதிக்கம் பிடித்த எழுத்தாளரின் படைப்பு. இவர் நாவலில் வரும் பெண்கள் எந்த நாட்டில் இருக்கார்களோ தெரியவில்லை.கடந்த 20 ஆண்டுகளில் நான் படித்த மிக மோசமான நாவல் இதுதான்.

பெயரில்லா சொன்னது…

அய்யய்யோ ? நாட்டுல யாருமே இல்லயா ? வந்து கொஞ்சம் கூவுங்க சார்.

பிம்பிளிக்கி பிப்பா சொன்னது…

அய்யா மயில் ராவனான் 20 ஆண்டுகளில் படித்த மோசமான நாவல் என்று கூறிவிட்டு அந்த புக்கை நண்பர்களுக்கு படிக்க குடுத்தது ஏனோ? நட்புக்கு நீர் செய்யும் மரியாதை இதுதானோ ?

பிம்பிளிக்கி பிப்பா சொன்னது…

மயில்ராவணன் கூறியது...
//இவர் நாவலில் வரும் பெண்கள் எந்த நாட்டில் இருக்கார்களோ தெரியவில்லை//

மயில் உங்கள் எண்ணம் புரிகிறது. இப்படி கூறினால் அந்த பெண்கள் இருக்கும் இடத்தை வாமு கோமு கூறுவார் என்ற நினைப்பா... முதலில் உங்கள் எண்ணத்தை மாற்றி கொண்டு வாமு கோமுவின் புத்தகத்தை விமர்சியுங்கள்

பிம்பிளிக்கி பிப்பா சொன்னது…

// நாட்டுல யாருமே இல்லயா ? வந்து கொஞ்சம் கூவுங்க சார்.//

காசு குடுபீங்களா.. குடுத்தா நாங்க வாங்குன காசுக்கு மேல கூவுவோம்..

பிம்பிளிக்கி பிப்பா சொன்னது…

//பலதரப்பட்ட கண்ணோட்டத்தில் கொண்டு செல்லும் அலசல்!//

வால் அண்ணே நீங்களும் அந்த புத்தகத்துல ஒரு கதாபாத்திரமா வர்றதுனால இப்படி சொல்றீங்க. முதல்ல அந்த புத்தகத்த படிச்சு பாருங்க.எழுத்தாளர் பல்வேறு கோணத்துல படுத்து (யோசிச்சு) எழுத்த வடிசுருக்கார்.

சும்மா ஒரு பேச்சுக்குத்தான் சொன்னது…

//பலதரப்பட்ட கண்ணோட்டத்தில் கொண்டு செல்லும் அலசல்!//

//வால் அண்ணே நீங்களும் அந்த புத்தகத்துல ஒரு கதாபாத்திரமா வர்றதுனால இப்படி சொல்றீங்க. முதல்ல அந்த புத்தகத்த படிச்சு பாருங்க.எழுத்தாளர் பல்வேறு கோணத்துல படுத்து (யோசிச்சு) எழுத்த வடிசுருக்கார்.//


படுத்து எழுதுனாலும், அதுவும் ஒரு நேக்குப்போக்கோட நம்மால‌ எழுத முடியுமா ?

//காசு குடுபீங்களா.. குடுத்தா நாங்க வாங்குன காசுக்கு மேல கூவுவோம்..//

ஓ அப்படின்னா எல்லாரும் கொஞ்ச காலமா நெட்டுல காசு கொடுத்துத்தான் கூவ வைக்கிறாங்களா ?

வால்பையன் சொன்னது…

//
வால் அண்ணே நீங்களும் அந்த புத்தகத்துல ஒரு கதாபாத்திரமா வர்றதுனால இப்படி சொல்றீங்க. முதல்ல அந்த புத்தகத்த படிச்சு பாருங்க.எழுத்தாளர் பல்வேறு கோணத்துல படுத்து (யோசிச்சு) எழுத்த வடிசுருக்கார். //


நானும் இருப்பதால் புத்தகத்தை விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை, அது ஒருதலை பட்சமாக இருக்கும், நான் சொன்னது விமர்சனத்தை பற்றி தான்!