வெள்ளி, ஜூன் 18, 2010

மேரேஜ்க்கு முன் லோடு பண்ணு

ஜே.பி.சாணக்யா இப்போது எங்கே ஓடி ஒளிந்து மறைந்து திரிகிறார் என்று அதையும் காட்டும் என் பூத கண்ணாடிகூட ஆளைக் காட்ட மறுக்கிறது. சரி நமக்கு ஆள் ஒரு பிரச்சனையும் இல்லை. அவரது இரண்டு தொகுதிகள் உள்ளன.

முதல் தொகுதி என் வீட்டின் வரைப்படம்.வாங்கி வைத்து ஐந்து வருடங்களாக அடுக்கில் தூங்கிக் கொண்டிருந்த புத்தகத்தை சமீபத்தில்தான் வாசிக்க முடிந்தது. முழுத்தொகுதியைப் பற்றி ஆஹா ஓஹோ என்று பேசப் போவதில்லை நான்.

மொத்தமே பத்துக் கதைகள் கொண்ட தொகுப்பில் ஒன்பதாவது கதையாக ஆட்டத்தின் விதிமுறைகள் என்ற கதை உள்ளது. தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாகவும் இதுவே உள்ளது. சிறுகதை எழுத வருபவர்கள் முதலில் மனிதனைப் படிக்கத்தெரிந்திருக்க வேண்டும். மக்களோடு மக்களாய் கலந்து புழங்க வேண்டும்.அந்தந்த மனிதர்களின்துக்கங்களின்,சந்தோசங்களையும் அறிந்திருக்க வேண்டும்.

ஜே.பி.சாணக்யா எதையும் இட்டுக்கட்டி எழுதுவதில்லை.அவரின் ஆண்களின் படித்துறையே தூற்றியும்,போற்றியும் . சாணக்யா என்றால் படித்துறை கதைதான் என்ற நிலைக்கு தள்ளிவிட்டார்கள். ஜே.பி. தனக்கு தெரிந்த மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆரவாரமின்றி நிதானமாக தன் கதைகளில் விவரித்துச் சென்றுள்ளார். அவரது பாத்திரங்கள் கற்பனைகளில் பிறந்து வரவில்லை.இவரது ஒவ்வொரு சிறுகதைகளும் நாவலுக்குண்டான விசயங்களை தன்னுள் கொண்டுள்ளன.

ஜோசியன் கலியன் கதையின் துவக்கத்தில் தன் சைக்கிள் அருகில் நிற்க வற்றிய ஏரியின் ஓரத்தில் காலைவெய்யிலில் கிடக்கிறான். ஜோசியனுக்கு நான்கு பிள்ளைகள். மூன்று ஆண்கள் ஜோசிய தொழிலை விட்டு வெளியூர் சென்றுவிட்டதாக கூறுகிறார். மறுபடி கதைக்குள் இந்த மூவரும் வருவதே இல்லை.பெண் கன்னியம்மாள் தான் கணவன்வீட்டிலிருந்து வந்து விட்டதாக கதை ஆரம்பிக்கப்படுகிறது. பின் திருப்புக்காட்சிக்கு செல்கிறது.

ஆசிரியரின் நான்கு பையன்களுக்கு ஜோசியம் பார்த்துவிட்டு அவர் தான் கிளம்புகையில் டவுனில் டெய்லரிங் கடை வைத்திருக்கும் பையனை கன்னியம்மாளுக்கு வயது 30 ஆகிவிட்டது பையனின் ஜாதகம் கிடைத்தால் போட்டு பார்த்து விடுவதாக ஆசிரியரிடம் கூறுகிறார் கலியன்.

படிப்பு ஏறாத கன்னியம்மாள் கறுப்பு அழகி. உள்ளூரில் இவளை அரைப் பொம்பளை அரை ஆம்பளை என்கிறார்கள். நாலும் மூணும் ஏழு என்பாள். மூணும் நாலும் எவ்ளோ? என்றால் அது என்ன கணக்கோ என்பாள்.

அந்த வார வெள்ளிக்கிழமை ஜோசியர் வீட்டில் கள்ளு வாடை! கன்னியம்மாள் நிச்சயம் செய்து போகிறார்கள். கன்னியம்மாளை கட்டிக் கொள்கிறான். இவர்கள் ஊருக்கும் இவள் புகுந்த ஊருக்கும் இடையில் ஐந்து ஊர்களே உள்ளதால் வாரம் ஒருமுறை கலியன் மகளை வந்து பார்த்துப் போகிறார். மாமியாருக்கும் பிடித்த மருமகளாக கன்னியம்மாள் மாறிப் போகிறாள்.

கன்னியம்மாளுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது. குழந்தை பிறக்காததற்கு காரணம் தெய்வக்குற்றம் தான் என்று மாமியார் நம்புகிறார். அய்யனார் சாமிக்கும்,அய்யப்பன் சாமிக்கும் மாரியம்மனுக்கும் மூன்றுவித பிரார்த்தனைகள் நிறைவேற்றுகிறாள் கன்னியம்மாள்.

மணியனோடு டவுனில் சினிமா பார்க்கும் ஆசை கன்னியம்மாளுக்கு உண்டு. தொலைக்காட்சிப் படங்களை துண்டு துண்டாக பார்ப்பவள்.மணியனும் அழைத்துப் போவதாக சொல்லி ஒரு ஞாயிறு அன்று கன்னியம்மாளை அழைத்து கொண்டு புறப்படுகிறான். அம்மா பத்திரமாக சென்று வரும்படி அறிவுறுத்துகிறாள். அவர்கள் பேருந்து நிறுத்தம் வந்தபோது அன்று பஸ் ஓடவில்லை.ஜாதி தலைவரை கைது செய்ததால் பேருந்துகள் இல்லை.வருத்தமாக வீடு திரும்புகிறார்கள்.தெருவில் அவர்கள் திரும்பி வந்ததற்கான காரணத்தை சொல்லியே அலுத்துவிட்டது!

அன்று ஆறு மணிக்கு மேல் பேருந்துகள் ஓடும் என்றும் வானொலி செய்தி கேட்டதாகவும் மணியன் கன்னியம்மாளிடம் கூறுகிறான்.அன்று மாலையே அவளை இழுத்துக் கொண்டு மணியன் புறப்படுகிறான். இவர்கள் தியேட்டருக்கு செல்கையில் ஆறு மணிக்கே படம் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு நாளுமில்லாத திருநாளா திருவிழாவுக்கு போனானாம்..திருநாளும் வெறும் நாளாய் போச்சாம்.. அந்தக் கதையா இருக்கு என்று கூறி சிரிக்கிறாள்.

இருவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுகிறார்கள்.

இரண்டாம் ஆட்டம் பார்த்து கடைசி பஸ்சுக்கு காத்திருக்கிறார்கள்.கூட்டம் இல்லை என்றால் ஒவ்வொரு நாள் பஸ் ஊருக்குச் செல்லாது!நடக்க ஆரம்பிக்கிறார்கள்.அத்தைக்கு நீங்களே பதில் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.பாலம் ஒன்றை கடக்கையில் நான்கு பேர் வருகிறார்கள். கன்னியம்மாளை தூக்கிப் போய் காரியம் பார்க்கிறார்கள். மணியன் வாயில்
துண்டுத்துணி திணித்து கை கால் கட்டப்படுகிறான்.முடிவாக அவளுக்கு நல்ல மார்பகங்கள் என்று பேசிக்கொள்ள அவர்கள் கார் உறுமுகிறது.

இருவரும் விசயத்தை வீட்டில் மறைக்கிறார்கள்.இரவுகளில் அவளை கட்டிக்கொண்டு மணியன் அழுகிறான்.அந்த மாதம் அவளுக்கு நாள் தள்ளிப் போகிறது வீட்டிலும் அனைவர் முகத்திலும் பிரகாசம். கன்னியம்மாள் இயல்பு வாழ்க்கைக்கு மாறிவிட்டாள். மணியனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவள் செத்துப் போவாள் என்றும், தான் அழுவோம் என்றும் நாட்கள் கழித்து தனக்கு வேறு பெண்ணை கட்டி வைப்பார்கள் என்று நினைத்திருந்தான். மெதுவாக தாயிடம் விசயத்தை உடைக்கிறான். தாய் ஊருக்கெல்லாம் உடைக்கிறாள்.வீட்டில் ஆமை புகுந்து விட்டதாகவும் இந்த வீடு உருப்படாமல் போகப் போவதாகவும் .... பேச கன்னியம்மாள் திகைக்கிறாள். மணியனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

மணியன் அம்மாவின் சொல்லிற்கேற்ப கன்னியம்மாளை அவள் ஊருக்கே வந்து விட்டுப் போகிறான்.கன்னியம்மாள் நடந்த விசயங்களை கலியனிடம் சொல்லி அழுகிறாள்.அவர் கடவுளை திட்டுகிறார்.ஆசிரியர் பஞ்சாயத்து பேசுகிறார். மணியன் வருவதில்லை.கன்னியம்மாள் குழந்தை பெற்றெடுக்கிறாள். யாருக்கோ பிறந்த பிள்ளையை என் மகன் ஏன் பார்க்கணும்? என்று மணியன் கூவுகிறார்.

ஆசிரியர் மற்றொருவருடன் மனியனை கடையில் சந்தித்து பேசுகிறார்கள்.அவன் இசைவது தெரிந்ததும் கடைக்கு அருகிலேயே வீடு பிடித்து குடும்பத்தைமாற்றும் எண்ணத்தில் துரிதமாக செயல்படுகிறார்கள். ஆனால் கன்னியம்மாள் அதற்கு ஒத்துவராமல் நானாச்சு என் பிள்ளையாச்சு என்கிறாள். கிராமிய சூழலில் இதில் தோன்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தன்னளவில் குறுங்கிப் போய்த்தான் உள்ளனர்.தனக்குத் தெரிந்த நியாயங்களோடே அவர்கள் வாழவும் பிடிவாதமாய் உள்ளனர்.கன்னியம்மாவும் இந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் பிரமாதமான முடிவாய் ஒன்றும் எடுக்கவில்லை. கிராமிய சூழலில் உள்ள எனக்கு இது சாதாரண அன்றாட
நிகழ்வு போன்று தான் என்றாலும் சொல்லும் முறையில் ஜே.பி. நிமிர்ந்து நிற்கிறார். கன்னியம்மாளுக்கு வாழ்வதற்கான பிடிமானம் கிட்டிவிட்டது!அவள் வாழ்வில் கணவன் தேவையில்லை தான்.

இதேபோன்று கவியோவியத்தமிழனின் சிறுகதை ஒன்றில் கர்ப்பம் தரிக்காத பெண் கோவிலுக்கு செல்வார். துணையாக உள்ளூர் பெண்களும் செல்வார்கள். இராக்காலங்களில் கோவிலின் ஒதுக்குப்புறத்தில் செடிகள் ஆள் உயரம் வளர்ந்திருக்கும் பகுதிக்கு தோழி ஒருத்தி இவளை கூட்டிப் போவாள்.அங்கே ஆண்கள் இருப்பர்.ஒரு கை இருட்டில் இவளைப் பிடித்து தூக்கிப் போகும்.எதுவுமே நடவாதது போல வீடு வந்து விடலாம்.

7.6.10 நக்கீரன் இதழில் வந்த விசயம் அதிர்ச்சிகரமாக உள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுமாப்பிள்ளை சலீம் தற்கொலைசெய்து கொண்டார்.

நிகராபேகம் டிகிரி படித்த பெண்.அப்பா வெளிநாட்டில் இருக்கிறார். அம்மா ரசியாபேகம் தான் பொண்ணை வளர்த்துள்ளார்.ரசியா பேகத்துக்கு ஒரு பையனும் உண்டு.டிசம்பர் 16ல் மங்னா செய்தார்களாம்.மூன்றாவது நாளில் ரசியா பேகம் நிச்சயதார்த்த சிடி பார்க்க சலீமை அழைத்திருக்கிறார். சலீம் அண்ணன் நிஜாமிடம் சொல்ல... அப்படியே இன்னொரு காப்பி வாங்கிட்டு வா என்று தாட்டி விட்டிருக்கிறார். போனவர் மூன்று மாதம் பெண் வீட்டிலேயே தங்கிவிட்டிருக்கிறாராம்.(இந்த இடம்தான் எனக்கே உதைக்கிறது)மார்ச் 25ம் தேதி நிஜாமிற்கு போன் வருகிறதாம். மாப்பிள்ளையை பிடிக்கலை.நிச்சயதார்த்தை கேன்சல் பண்ணனும் என்று!

சலீம் எழுதிய மரணவாக்குமூலம்:
“நிச்சயிக்கப்பட்டதிலிருந்து நிகராவும் நானும் காதலித்தோம்... சுற்றினோம்.. படம் பார்த்தோம்.ரசியா பேகம் என்னை நிகரா ரூமில் தள்ளி கதவை சாத்திக் கொண்டார். நாங்கள் உல்லாசமாக இருந்தோம். ரசியாபேகம் சொன்னது என்ன என்றால் என் மகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக வேண்டும். சொந்தத்தில் நிறையப் பேருக்கு திருமணமாகியும் குழந்தைகள் இல்லை.

என் மகளுக்கும் குழந்தையில்லாமல் போய்விடக் கூடாது! அதனால் குழந்தை முதலில் பிறகு திருமணம் என்றார்.அவர்கள் வீட்டிலேயே நான் இருந்தால் என் சொத்தில் சிலவற்றை விற்றுத்தர சொல்லி பணத்தையும் வாங்கிக் கொண்டார்கள்...

எப்போது ரிட்டன் பண்ணுவீர்கள்? என்று கேட்க என் மகள் உன்னோடு இருந்ததற்கு சரியாய் போய்விட்டது என்றார்கள்.

நிகராவும் எனக்கு குழந்தை உருவாக வேண்டும்..அது இல்லை என்றால் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றாள். இதனால் அடியேன் தற்கொலை செய்து கொள்கிறேன்... என்னை போல யாரும் பாதிப்படக்கூடாது”

ஒவ்வொருவரும் விதம் விதமாய்தான் யோசிக்கிறார்கள். விதவிதமாய் முடிவும் எடுக்கிறார்கள். இந்த விசயத்தில் காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.எல்லாமே கேப்மாரித்தனங்கள் தான். இந்த மாதிரி விசயங்களும் இதைவிட பயங்கரமான விசயங்களும் நம்மை எந்த விதத்திலும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதோ... பாதிக்கச் செய்வதோ இல்லை.

என்னைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று சலீம் எழுதியிருக்கிறார்! உன்னைப் போல யார் தான் இந்த உலகத்தில் பாதிப்படைவார் சலீம்?

குழந்தை இல்லை! குழந்தை இல்லை! என்கிற பிரச்சனை வரும் காலத்தில் இன்னமும் அதிகமாகும்தான்.

அப்போது இதைவிட மேலான ஒழுக்கக் கேடுகள் நிகழவும் செய்யும் தான்! இதற்கெல்லாம் நம்கையில் எந்ததீர்வுகளும் இல்லை! வெறும் பார்வையாளர்கள் தான் நாம்.============================================================================

டைப்பிங் உதவி
மயில்ராவணன்.
..

Post Comment

2 கருத்துகள்:

மயில்ராவணன் சொன்னது…

நல்ல கட்டுரை.நல்ல பகிர்வு.நன்றி கோழிச்சார்.

கார்த்திக் சொன்னது…

ஆண்களின் படித்துறை இன்னும் படிக்க கிடைக்கலங்க.என் வீட்டின் வரைபடம் எனக்கு ரொம்ப புடிச்ச சிறுகதை தொகுப்பு.நல்ல விமர்சனம் :-))