புதன், ஜூலை 06, 2011

நாணம் அடைந்த புத்தன்

கள்ளிச் செடிகளும்,வேப்பை மரங்களும்

கொழுஞ்சிச் செடிகளும்,ஊனாங்கொடிகளும்

கிலுவை மரங்களும்,காட்டு முருங்கைகளும்

வேலிமுட்களும்,கருவேல மரங்களும்

பரவிய வனத்தில் ஞானம் என்ற ஒன்றை

கூடிய விரைவேனும் பெறுதல் வேண்டி

சிரமத்தில் பயணப்பட்டு சென்று கொண்டிருந்தேன்.

இந்த உலக வாழ்க்கை மிக சலிப்பானதுதான்

இந்த வாழ்க்கை மிகமிக சலிப்பானதுதான்,

வனத்தின் நருவில் பறவைகளின்

கூச்சல்களுக்கு மத்தியில்

போதிமரத்தினடியில் இளைய தளபதியின்

குருவி முக பனியனிலும்,கட்டம்போட்ட

லுங்கி அணிந்து கண்மூடிய நிலையில்

புன்னகையில் புத்தன் அமர்ந்திருந்தான்

தியானத்தில் இருப்பவனை அழைக்கலாமா?

என்ற தயக்கத்தோடே,புத்தா!புத்தா!

கௌதமசித்தார்த்தா!என்றேன்.

புத்தனா!எவன் அவன்?நான் ராமசாமி.என்றான்

இல்லை நீ ராமசாமியாக இருக்கமுடியாது

பொய் சொல்கிறாய், நீ புத்தன் தான்

ஞானம் பெற்று விட்டாயா சித்தார்த்தா?

ஞானமா?நான் நாணத்தில் உட்கார்ந்திருக்கிறேன்.

அதோ பூவாயி விறகு பொறுக்குகிறாளே..

அவள் இந்த வனத்தில் யாருமில்லை என்ற

தைரியத்தில் என்னை அந்த இடத்தில்

கிள்ளி வைத்து கேலி செய்துவிட்டாள்.

எனக்கு வெட்கத்தில் என்ன செய்வதென

புரியாமல் இங்கு வந்து அமர்ந்திருக்கிறேன்..

என்றவனை புத்தனுக்கும் நாணமோ! என்ற

ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே

நின்றிருந்தேன் யுகம் யுகமாய்!

Post Comment

கருத்துகள் இல்லை: