வெள்ளி, ஜனவரி 27, 2012

வாழ்க்கையும்,புனைவுகளும்

எழுத்துக் கலை - எழுத்தும் பேச்சும்
Prakash Venkatesan ***@gmail.com 11:36 PM (16 hours ago) to me

11:36 PM Prakash: மச்சி சார்! புனைவுல இரண்டு கதாபத்திரங்களுக்கு நடுவுல நடக்கிற தத்துவார்த்த உரையாடல்கள் இல்லை ஒரே கதாபாத்திரம் உதிர்க்கும் அப்பட்டமான தத்துவ சார்புகள் ( எகா: நவீனத்துவத்தோட ஒரு சரடை உதிர்த்துட்டு போறது) ஒரு வகையான அசவுகரியத்தை குடுக்கக்கூடியதா தோனுது. நாமளா அதை தேடிக்கண்டடையாம மூஞ்சில அடிக்கிற வார்த்தைகள், வர்ணனைகள், நமக்கு பிடிச்சதையே சொன்னாலும் ரிப்பல்சிவா இருக்கு. இந்த நேரங்கெட்ட நேரத்துல இதையெல்லாம் பல மாசம் கழிச்சு உங்கள்ட ஏனோ சொல்லத்தோனுது.

2011/11/27 விமலாதித்த மாமல்லன்
These messages were sent while you were offline.

1:50 AM விமலாதித்த: இது எது குறித்தது என்று தெளிவாகக் குறிப்பிட்டாலோ அல்லது சுட்டி கொடுத்தாலோ படித்துவிட்டு புரிந்துகொள்ளவும் பதில் சொல்லவும் வசதியாக இருக்கும்.

2011/11/27 Prakash Venkatesan
இபாவோட ஹெலிகாப்டர்கள் தரையில் இறங்கிவிட்டன படித்து தோன்றியது. ஆனாலும் அதை ஒன்றை மனதில் வைத்து தான் சொல்கிறேனா என்றால் தெரியாது. பொத்தாம் பொதுவாகவும் இது தோன்றியிருக்க வாய்ப்பில்லை தான்.
***
அன்பான பிரகாஷ்,
தாஸ்தாவெஸ்கியைப் பார்த்துப் போட்டுக்கொள்ளும் சூடு இது. பெரும்பாலான இலக்கியவாதிகள் இதற்கு விதிவிலக்கில்லை.
தற்செயலாய் இப்போது படிக்க நேர்ந்த கதையின் கட்டுமானத்தையே நீங்கள் கேட்டதற்கு எடுத்துக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. ஒரே வித்தியாசம் இங்கே விவாதிக்கப்படுவது தத்துவம் அல்ல. பெண் மனம் பற்றிய முத்துதிர்ப்புகள்.

http://vaamukomu.blogspot.com/2011/09/blog-post_20.html இதில் இருக்கும் வாமு கோமுவின் பிலோமி டீச்சர் கதையைப் படித்துப் பார்க்கவும்.
ஜ்யோவ்ராம் சுந்தர் பாராட்டிக் கொடுத்திருந்த சுட்டியின் மூலமாகவே இதைப் பார்க்க நேர்ந்தது என்றாலும் படிக்கத் தூண்டியது கதையின் தலைப்பில் இருந்த பிலோமிதான்.
வண்ணநிலவனின் கடல்புறத்தில் படித்தவர்களால் பிலோமியை எப்படி மறக்க இயலும்? ஆனால் இங்கோ, பெயரில் பிலோமியும் உடற்கட்டில் வண்ணநிலவனின் எஸ்தரும் நினைவுக்கு வந்தனர். வ வரிசைப் பெயர் என்பதைத் தவிர வாமுகோமுவுக்கும் வண்ணநிலவனுக்கும் எந்த பந்தமும் கிடையாது.
வண்ணநிலவனின் மூளையைக் கழற்றி வீசிய நம்பத்தகுந்த எளிமையும் நெகிழ்ச்சியும் தமிழின் அசாதாரன சாதனை. அவரது சாதாரன கதையான சாரதாவாகட்டும் அல்லது சிகரங்களில் ஒன்றான மிருகம் ஆகட்டும் ’வண்ணநிலவனை’க் காண்பதே அரிது. நீங்கள் எழுப்பிய கேள்வியில் இருந்து இந்த இரண்டு கதைகளும் எப்படி எங்கோ நிற்கின்றன என்று மனம் தோய வாசிப்பவர்களுக்குப் பிடிபடக்கூடும். மைக் பிடிக்காமல் வாசகனை எங்கெல்லாம் எப்படியெல்லாம் அழைத்துச்செல்ல முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மிருகம்.

முதலில் வாமுகோமுவின் பிலோமி டீச்சரை முழுதாகப் படிக்கவும். பிறகு ஒவ்வொரு சம்பவத்திற்கும் பத்திகளுக்கும் பின்னால் தொற்றுநோய்போல் வரும் மனோவியல் பொழிப்புரை உபன்யாசங்களைத் தவிர்த்துவிட்டுப் படிக்கவும். பீட்டர் பேசுவதன் மூலமாக ஜான்சன் தன்னை ’உபயோகிக்கிறான்’ என்பதும் அதைப் பற்றி தன் நண்பர்களிடம் ’விவாதித்திருக்கிறான்’ என்பதும் பிலோமிக்கு எப்போது தெரியவந்ததோ அப்போதே வாசகர்களுக்கும் தெரிந்து போகிறதே. அதை இன்னும் இழுத்து வைத்து விளக்கும்விதமாக கடைசியில் ’வைக்கப்பட்டிருக்கும்’ கதையை சுழித்து முழுமை ’ஆக்கும்’ பீட்ட்ர்-ஜான்சன் சினிமாத்தனமான ஃபோன் சம்பவமும் சிம்கார்டைத் தூக்கி எறியும் டபுள் அர்த்தம் கொடுக்கும் கே.பாலச்சந்தர் டச்சும் தேவையா?
நண்பர்களிடம் தன்னைப் பற்றி தன்னுடைய கணவன் விவாதிப்பது தெரியவரும், காதலித்து மணந்த புதுமணப்பெண்ணின் மன உணர்வை ’கல்யாணம் முடிந்தவுடன்’ (1970) என்கிற கதையில் பிரமாதமாகச் சித்தரித்திருப்பார் அசோகமித்திரன். அவரிடமும் வண்ணநிலவனின் சாரதாவிலும் அந்தந்த கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு இயைந்த எண்ண ஓட்டங்களாகவே அவர்களின் மனம் வெளிப்படுவதைக் காணலாம். தன்னை அழித்து பாத்திரமாவது சாதாரண காரியமல்ல.
ஜெயகாந்தனின் எல்லாப் பாத்திரங்களில் அவர் மட்டுமே இருப்பதனால்தான் தீவிர இலக்கிய வாசகனின் மனதில் அவர் பாலமாக மட்டுமே தங்கிவிடுகிறார். ஏணியாய் இருப்பது இழிவன்று.
பாலகுமாரனிடம் இருக்கும் மைக் மோசமான துருபிடித்தது. அதை வைத்து வாசகனின் தலையில் நங்கு நங்கு என அடித்துக்கொண்டே இருப்பார். சுக்கு பொறாத விஷயத்திற்குக்கூட மகத்தான தரிசனம் போல ஒரே ஆர்ப்பாட்டம். போலித்தனம் புறங்கழுத்தில் புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சுவிட்டுக்கொண்டே இருக்கும்.

வாமுகோமுவிடம் தாபம் சில இடங்களில் மிகையாகவும் பல இடங்களில் வெகு இயல்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் கூடவே தோன்றும் எண்ணம், இவ்வளவு சரளமான எழுத்துத் திறன் வாய்க்கப் பெற்றவருக்கு ‘செய்முறை’ கைகூடவில்லையோ அல்லது தரமான கதை எழுதும் அக்கறை இல்லையோ என்பதுதான்.

கதையின் இன்னொரு குறை, கோண மாற்றம். தொடக்கத்திலிருந்து ஜான்சன், பிலோமியின் உண்மையான அன்பை எண்ணிப்பார்க்கும் இடம் வரை பிலோமியின் பார்வையிலேயே செல்லும் கதை, அவன் மனவோட்டமும் வரவேண்டும் என்பதற்காக தடம் மாறி இடறுவது. இரண்டு மனமும் அவசியம் வரவேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே பறவைக்கோனக்தைத் தேர்ந்திருக்கலாம்.
பீட்டரின் ஃபோன் வர, ’விஷயம்’ அவளுக்குத் தெரியவந்து அவள் கிளம்பிப் போவதாகவும் அவன் தேடுவதாகவும் முடித்திருந்தாலே, வித்தியாசமான முடிவாக இல்லையென்றாலும் இயல்பாக இருந்திருக்கும்.

இலக்கியமாக்கும் அவஸ்தைகள் ஆசிரியருக்கு இல்லை எனில், மன அலசல்களுக்கான மெனக்கெடல்கள் ஏன்? ஆன்மாவை உலுக்கி, ஜெயமோகன் ஏற்படுத்தும் சித்திரவதைகளை இவை போலி செய்கின்றனவோ. சம்பவங்களிலேயே இவரால் அநாயாசமாக மனதைச் சொல்லிச்செல்ல முடிகிறது என்பதற்கு சிறந்த உதாரணம், ஜான்சன், குழந்தை எஸ்தரை முத்தமிட, பிலோமி தனது கன்னத்தைத் துடைத்துக்கொள்ளும் இடம். அநேகமாக எந்த வியாக்கியானமும் இல்லாத ஒரே இடமும் கதையில் இதுதான் என்று படுகிறது.

இதுவே நான் படிக்கும் இவரது முதல் சிறுகதை.

’மேட்டர் கதை’ எழுதுபவரிடம் இருக்கும் சரக்கும் சமர்த்தும், இலக்கியவாதியாவதற்காகத் தீவிரமாக முயற்சிப்பவர்களிடம் இல்லை என்பதைக்காண ஆச்சரியமாக இருக்கிறது.


http://www.maamallan.com/2011/11/blog-post_2560.html

நன்றி : மாமல்லன்.காம்


****************************************************************************

Post Comment

செவ்வாய், ஜனவரி 24, 2012

சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு

கொஞ்ச நாளுக்கு முன்னாடி விஜய் டிவில 16 படம் போட்டாங்க. ரொம்ப ஆவலா அந்த படத்தை பார்த்து கடைசீல த்துதூ துப்பிட்டு போனேன். படம் அவ்வளவு கேவலமா இருந்துச்சு, அதும் அந்த கிராமத்தில் வளர்ந்த காதல் கதை சுத்த கொடுமை. அந்த சின்ன பொண்ணு பேசுற டயலாக் கேட்டு கேட்டு என்னோட மண்டைய நல்லா சொரியவிட்டங்க, ஓவர் காண்பிடன்ஸ் அந்த படத்தோட டைரக்டருக்கு எப்படி படம் எடுத்தாலும் மக்கள் அதை ரசிப்பாங்கன்னு நினைச்சிட்டாரு போல அதான் படம் ஊத்திகிச்சு. இப்படி தான் இருக்கு சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும். கொஞ்சம் விரிவா உள்ள பார்க்கலாம் வாங்க.  

பழனிச்சாமியின் காதல் மற்றும் காமத்தின் நினைவு குறிப்புதான் இந்த நாவல். இதை முழு நீள நாவல் என்று சொல்வதைவிட ஒரு குறுநாவல் மற்றும் சில சிறுகதைகள் என்று சொல்லலாம்.   

பழனிச்சாமி பள்ளி கூடத்தில் படிப்பதில் இருந்து ஆரம்பிகிறது சந்தாமணியுடனான காதல் கதை. விரட்டி விரட்டி சாந்தமணியை காதலிக்கிறான் முதலில் பயந்து ஒதுங்கும் சாந்தா பிறகு அவன் பக்கம் சாய்கிறாள். இருவரும் லவ்வோ லவ்வுன்னு லவ்வுறாங்க அடிகடி காதல் கடிதங்கள் பரிமாறி கொள்கிறார்கள்.  இப்படி இருந்த அவர்களின் தெய்வீக காதல் ஒரு கட்டத்தில்  புட்டுக்குது அது ஏன் எதானால் எப்படி என்று நீட்டி  முழங்கி இருக்கும் கதையே சாந்தாமணியின் அத்தியாயம். பழனிச்சாமியின் நண்பன் சக்தி, அவனுக்கு ஒரு காதலி பெயர் பூங்கொடி. இவர்கள் காதல் ட்ராக் ஒரு பக்கத்தில் சென்றுகொண்டு இருக்கிறது, ஒரு கட்டத்தில் பூங்கொடியின் தொல்லை தாங்காமல் சக்தி அவளிடம் இருந்து பிரிந்துவிடுகிறான். கடைசியாக பூங்கொடியிடம் பேசும் வசங்கள் எல்லாம் நச்சு. ரொம்ப உண்மையான வார்த்தைகளா  இருக்கிறது அதில், எந்த ஒரு காதலியும் தனது காதலன் தன் சொல் கேட்டு நடக்கவேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்காக எது வேண்டுமானாலும் செய்வதற்கு துணிந்து விடுகிறார்கள், பலர் அவனை பயமுறுத்தியே காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். இதை நச்சுன்னு எழுதி இருக்காரு, இந்த அத்தியாயத்தில்  எனக்கு பிடிச்ச பகுதி சக்தி பூங்கொடி கிட்ட பேசுற இடம் தான். 

சாந்தாமணி தங்கை சுகந்தி.. இவ்வளவு அபத்தமான ஒரு கதாபாத்திரத்தை இது வரை பார்த்தது இல்லை. மச்சானுக்காக எதுவேண்டும் என்றாலும் செய்ய காத்துகொண்டு இருக்கிறாள்.  மலை கோவிலுக்கு செல்லும் போது பழனிசாமியை தூக்க வைத்து அவள் செய்யும் அழிச்சாட்டியம் எல்லாம் புத்தகத்தில் தான் படிக்க முடியும். ஸ்கூல் படிக்கும் பெண்ணிற்கு இவ்வளவு அறிவு கூடாது ஆசிரியரே, அந்த சம்பவத்தை படிக்க படிக்க சிரிப்புதான். சுகந்தி கதாபாத்திரத்தை வைத்து காம விளையாட்டு ஆடியிருக்கிறார்  வா.மு.கோமு.  


இந்த முதல் அத்தியாயம் முற்றிலும் கோணல் என்றே சொல்லலாம். பள்ளியில் படிக்கும் காலத்தில் நடந்த காதல் கதை என்று எழுதி இருந்தாலும் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் எல்லாம் ரொம்ப மெச்சுரிட்டியாக இருக்கிறது. இதுவே போதும் புத்தகத்தின் தரத்தை குறைப்பதற்கு. அடுத்து காதல் கடிதங்கள் என்கிற பெயரில் இருக்கும் அறுவை பக்கங்கள். சொன்னதயே திரும்ப திரும்ப சொல்வதை போல வார்த்தைகள் மட்டும் இடம் மாற்றி இருக்கிறது. கொடுமை சுகந்தி கூட பழனிச்சாமிக்கு கடிதம் தந்துவிடுகிறாள். சாந்தாமணி காதல் கதை கல்லூரியில் நடப்பதை போல இருந்தாளாவது அவர்கள் பேசிக்கொள்வதை கொஞ்சம் நம்பலாம். இதற்கு நடுவில் பழனிச்சாமிக்கு ஜான்சி மீது ஒரு கண். அவளும் அதே போல தான் இருக்கிறாள் அதாவது இங்கே இருவரிடமும் தெய்வீக காதல் இல்லை இருப்பது காமம் மட்டுமே எப்போ டைம் கிடைக்கும் மேட்டர் பண்ணலாம் என்கிற நினைப்பிலே இருகிறார்கள். பதின்மவயதில் ஏற்படும் காதல் எவ்வளவு அடிவாங்கும் என்று ரெண்டு பேர் பக்கத்தில் இருந்து சொல்லி இருக்கிறார். சொன்னதையும் சொன்னார் கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்ல முதல் அத்தியாயம் நீண்டு கொண்டே செல்கிறது. அதும் அந்த காதல் கடித பக்கங்கள் எல்லாம் ஓவர் டோஸ் நடுவில் கவிதை வேறு. 

இந்த குறைகளாலே பக்கங்களை அலுப்புடன் நகர்த்தவேண்டி இருக்கிறது. கதையை சாதாரண மொழி நடையில் எழுதி இருந்ததால் வந்த வினையோ என்று நினைக்கிறன். இதுவே கொங்கு தமிழில் எழுதி இருந்தால் சுவாரசியம் கூடி இருக்கும், கள்ளியின் கையாண்டு இருந்த கதைகளம் தான் இதிலும் கையாண்டு இருக்கிறார் அதே போல கொங்கு தமிழிலே கதையை நகர்த்தி கொண்டு சென்றிருந்தால் கண்டிப்பாக கள்ளி இரண்டாம் பாகம் என்று நினைக்கும் அளவுக்கு புத்தகம் வந்து இருக்கும் பச் அது இல்லாமல்  கொஞ்சம் போலவே கொங்கு தமிழை பயன்படுத்தியது மிக பெரிய சறுக்கல். கள்ளியில் கையாண்டு இருந்த அந்த நக்கல் நையாண்டி இதில் மொத்தமாக தொலைத்து போயிருக்கிறது.


அடுத்த அத்தியாயம் இன்ன பிற காதல் கதைகள் 


இந்த பகுதியில் வருவது பழனிச்சாமி கரெக்ட் பண்ண பெண்கள், பெண்மணிகள், அவனை கரெக்ட் பண்ண பெண்கள் பெண்மணிகள் அப்பறம் அவன் நண்பர்கள். 

பழனிச்சாமி மோடா குடிகாரனாய் இருக்கிறான் எப்பொழுதும் தண்ணி போட்டு கொண்டே இருப்பதுதான் வேலை கூடவே பெண்களையும் !!!

கீதா,பெல்லா, சுமதி, ஷாலினி,மீனா, வால்பையன் என்று லிஸ்ட் நீண்டு கொண்டு செல்கிறது. பெண்கள் பெயரில் வரும் அத்தியாங்கள் எல்லாம் முதலிலே தெரிந்து விடுகிறது பழனிச்சாமி மேட்டர் பத்தி தான் இருக்கும் என்று, நமது எண்ணத்தை அவ்வாறே நிறைவேற்றி விடுகிறார். செல்போனில் நடைபெறும் காம உரையாடல்கள் எல்லாம் கிளு கிளுப்பை தருகிறது. இரண்டு முன்று நபர்களிடம் இவ்வாறு போனில் கடலை போடும் விதம் எல்லாம் உண்மைகள் நடந்தவைகளே என்று நம்ப தகுந்த வட்டாரதில் இருந்து வரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. 

கீதா என்கிற பெண்ணிற்கு எழுதி இருக்கும் கடிதத்தில் தன்னை எப்படி எல்லாம் அவர் அலைகழித்தார் என்று சொல்லி இருக்கிறார். இந்த பெண்ணை போல ஒரு சில பெண்களை நான் கோவையில் சந்தித்து இருக்கிறேன். ஒரு நாள் ஒருத்தனுடன் உடலை ஒட்டி கொண்டு வருபவள் அடுத்த நாள் வேறு ஒருவனுடன் அதே போல வருவாள். இப்படி ஆளை மாற்றி மாற்றி வரும் சில பெண்களை கரெக்ட் செய்வதற்கே சில அல்ல கைகள் அங்கு சுற்றி கொண்டு இருக்கும். தூண்டில் போடாமலே மீனை பிடிகிறது எப்படி என்று அவர்களிடம் தான் கேட்கவேண்டும். இரண்டொரு நாளில் அவனுடன் கிராஸ்ரோட்டில் இருவரும் கைகோர்த்து நடப்பதை பார்த்தால் தெய்வீக காதலர்கள் போல தெரிவார்கள். என்னை பார்த்த உடனே ரெண்டும் பம்பிட்டு அப்படியே எஸ் ஆகிடும்.  

வால்பையன் ஒரு அத்தியாயத்தில் வருகிறார், இருவரும் போனிலே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் ஆபாச ஜோக் சொல்லி அடித்து விளையாடுகிறார்கள். அந்த அத்தியாயம் முழுக்க ஜோக்குகள் சாரமாரியாக வந்து சிரிப்பலையை ஏற்படுத்துகிறது.    


செல்போன் வைத்து என்ன விதை எல்லாம் காட்டலாம் என்று பல அத்தியாங்களில் சொல்லி இருக்கிறார். மீனாகுட்டி ஆகட்டும், பத்மப்ரியா ஆகட்டும் எல்லோரிடமும் கடலை போட்டுக்கொண்டே இருக்கிறார். இரண்டாம் பாகத்தில் எல்லா பெண்களிடமும் இப்படியே பண்ணி கொண்டு இருப்பதை படிக்க படிக்க அயர்ச்சியாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் நாம விளக்கு புடிக்கிறது :(.  இதை எல்லாம் தாண்டி வந்தால் கடைசில் இருக்கிறது மிக பெரிய ஆப்பு. இவ்வளவு கேப்மாரிதனத்தை பண்ணிவிட்டு புரசியாளன் கணக்காக ஜெயாவை கல்யாணம் பணிகொள்கிறது எல்லாம் தமிழ் சினிமாவில் கடைசில் சீன்ல போலீஸ் வருவதை போல இருக்கு. 

சாரு புத்தகத்தை வெளியே எங்கு சென்று படித்தாலும் மடியில் வைத்தே படிக்க வேண்டி இருக்கும்.அதே போலதான் வா.மு.கோமு புத்தகங்களையும். கொஞ்சம் ஏமாந்தாலும் பொதுவில் நமது மானம் கப்பல் ஏறிடுமோ என்கிற கவலைவருகிறது. அதற்காகவே இன் பண்ணி இருந்த சட்டையை வெளியே எடுத்து விட்டு படிக்கவேண்டி இருக்கு. 


புத்தகத்தை பற்றிய எனது கருத்து மட்டுமே எழுதி இருக்கிறேன். நீங்கள் புத்தகத்தை படித்து அதை ஆஹா ஓஹோ என்று பாராட்டினால் அதற்கு வா.மு.கோமு  கம்பெனியே பொறுப்பு. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வா.மு.கோமு

உயிர்மை பதிப்பகம் 
11/29 சுப்பிரமணியன் தெரு,
அபிராமபுரம்
சென்னை -600018.
தமிழ்நாடு
இந்திய
Tele/fax: 91-44-24993448
e-mail: sales@uyirmmai. com ஆன்லைனில் வாங்க 
http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=261
  --
With Love
Romeo ;)
******************************************************************

Post Comment

புதன், ஜனவரி 18, 2012

எட்றா வண்டியே - வா.மு.கோ.மு


கொங்கு குறும்பு என்பது வா.மு.கோ.முவின் கதைகளில் தவிர வேறு எங்கும் அதிகமாக பார்க்க முடியாது. எவ்வளவு சீரியஸான சம்பவம் என்றாலும்   ஜஸ்ட் லைக் தட் என்று நம்மை அந்த இடத்தை சிரித்து கொண்டே கடந்துவிடுவது போல செய்துவிடுவார். இவரின் கதைகள் வரும் முக்கியமான கதாபாத்திரம் போலதான் இவரும் பேசுகிறார், நாலு முறை போனிலும் ஒரு முறை நேரிலும் பேசி இருக்கிறேன் அவருடன் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்க வைத்துவிட்டார். வாய்ப்பாடி,விஜயமங்கலம் மற்றும் அதை சுற்றிய  ஊர்கள் எப்படி இருக்கிறது கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நேரில் எப்படி இருப்பார்கள் அவர்களை பார்க்க வேண்டும்  என்கிற ஆவலை துண்டிவிட்டுவிட்டார்.  

இவரது முந்தைய நாவல்களை போல இந்த நாவலையும் தனது ஊரை சுற்றி  வாழ்ந்துகொண்டு இருக்கும் சிலரில் வாழ்கையை மைய்யமாக வைத்து எழுதி இருக்கிறார். நாவலின் தொடக்கம் முடிவு எல்லாம் விஜயமங்கலத்தை சுற்றி தான் இருக்கிறது. என்னை போல கோவையை பிரிந்து வாழும் ஆட்களுக்கு கொங்கு மொழியில் அதன் சாரம் குறையாமல் புத்தகத்தை வாசிக்க வாசிக்க கோவையை ரொம்ப மிஸ் செய்கிறேனோ என்கிற கவலை ஏற்படுகிறது.

சாமிநாதன் ஒரு தலித் இளைஞன். அம்மாவை பிரிந்து வாழும் அப்பாவுடன் மூங்கில் பாளையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறான். தறி ஓட்டுவது தான் பிரதான வேலை என்றாலும் ஒரு சமயம் ட்ரக்டரும் ஒட்டுவான். சாமிநாதன் அப்பா, கவுண்டர் சகோதரர்கள், சைக்கிள் கடை வைத்திருக்கும் முருகன், எதிர் வீடு சரோஜா அக்கா, அவன் வாழ்வில் குறிக்கிட்ட பெண்கள், அவனாக தேடி சென்ற பெண்கள், அவனை விட்டு பிரிந்து சென்ற பெண்கள் என்று அவனது காதல், கல்யாண கதைகளை சொல்லும் நாவல் இது. 


நாவல் உள்ளே பன்னிரண்டு அத்தியாயங்கள் இருக்கிறது, சாமிநாதனை சுற்றியே தான் கதைகள் நகர்கிறது. விசுக்கென்று ஒரு காதல் ஜோடி ஒரு அத்தியாயத்தை ஆக்கிரமித்து கொண்டாலும் அதிலும் சாமிநாதன் சம்பந்தப்படுகிறான். முந்தைய நாவல்கள் போல இந்த நாவலை அவ்வளவு எளிதாக படித்து முடிக்க முடியவில்லை. பாதி புத்தகம் படிக்கும் வரை அரைச்ச மாவையே ஏன் திரும்ப அரைக்கிறார் என்கிற எண்ணம் வருகிறது. அதற்கு பின்னால் சாமிநாதனை நினைத்து கவலைகொள்ளும் விதமாக நாவல் சென்று கொண்டு இருக்கிறது. 


நாவலில் முழுக்க முழுக்க தலித்து மக்களின் வாழ்கையை பற்றி சொல்லி இருக்கிறார். பணம் இல்லாதவனிடம் சிக்கன் குனியா வந்தால் எப்படி சமாளிப்பான்? தறி குடோனில் முதலாளி சாமிநாதனை அடிமையாக வேலை செய்ய வைக்க தந்திரமாக அட்வான்ஸ் பணம் கொடுப்பது. பெண் பார்க்க சென்ற வீட்டில் பெண்ணின் தகப்பனார் ஸ்வீட் சிக்கு வாசம் வருதா என்று கேட்ப்பது. தந்தையே மகனிடம் கவுண்டர் சரக்கு தந்தா வேண்டாம்ன்னு சொல்ல கூடாது அது குத்தம் என்று தண்ணி அடிக்க சொல்லுவது, வீட்டில் நுழைந்த பாம்பை வறுத்து தின்னுவது. இப்படி நாவல் கொஞ்சம் திகைப்போடு தான் செல்கிறது.


வா.மு.கோ.முவிற்கு செல்போன் மீது அப்படி என்ன ஒரு காதலோ அல்லது கோபமோ சாமிநாதன் கதாபாத்திரத்துக்கு இணையாக உடன் பயணிப்பது இந்த செல்போன் தான். யாரவது ஒருத்தர் இந்த செல்போனில் பேசி கொண்டே இருகிறார்கள். அதும் ஏர்செல் தான் எல்லோரிடமும் இருக்கிறது. இந்த நாவல் என்றில்லை முந்தைய நாவல் சாந்தாமணி நாவலிலும் செல்போன் வைத்து பெரிய கதையையே சொல்லி இருப்பார். இன்றைய காலகட்டத்தில் செல்போன் எவ்வளவு அவசியமானது என்று எல்லோருக்கும் தெரியும் அதை நாவலின் உள்ளே புகுத்தி அதையும் ஒரு கதாபாத்திரமாக செய்துவிட்டார்.

கள்ளி, சாந்தாமணியில் இருந்த  பாலியல் வேட்டை(வேட்கை) இதில் இல்லை. எள்ளல், துள்ளல் அதிகமில்லாமல் அடக்கியே வாசித்து இருக்கிறார். மற்ற நாவல்களை விட இந்த நாவல் கொஞ்சம் வித்தியாசம் தான். நாவல் முடிந்ததும் சாமிநாதன் பற்றிய கவலை தான் என்னை தொற்றிகொண்டது.


நாவலை படித்துவிட்டு வா.மு.கோ.முவிடம் பேசினேன். நாவல் எப்படி என்னை கொண்டு சென்றது, சாமிநாதன் என்ன ஆனான் என்று நிறைய கேள்விகள் கேட்டு பதிலையும் பெற்றேன். வா.மு.கோ.மு வருத்தப்பட்ட ஒரு விஷயம் இந்த நாவலை இவ்வளவு நேர்த்தியாக கொண்டு வர பாடுபட்ட நஞ்சுண்டன் பெயரை மனுஷபுத்திரன் மறைத்தது. நாவல் வெளிவருவதற்கு முன்பே அவர் நான்கு ஐந்து தடவை  நஞ்சுண்டன் பெயரை புத்தகத்தில் பதிய சொல்லி இருந்தும் அதை செய்யாதது பற்றி ரொம்ப வருத்தப்பட்டார். 


எட்றா வண்டியே - சங்கடபடாமல்  வாங்கி படிக்கலாம் :) 


நன்றி::

-- 
With Love
அருண் மொழித்தேவன் (Romeo) ;)
Posted by அருண்மொழித்தேவன் 

**********************************************************************


Post Comment