வெள்ளி, ஜனவரி 27, 2012

வாழ்க்கையும்,புனைவுகளும்

எழுத்துக் கலை - எழுத்தும் பேச்சும்
Prakash Venkatesan ***@gmail.com 11:36 PM (16 hours ago) to me

11:36 PM Prakash: மச்சி சார்! புனைவுல இரண்டு கதாபத்திரங்களுக்கு நடுவுல நடக்கிற தத்துவார்த்த உரையாடல்கள் இல்லை ஒரே கதாபாத்திரம் உதிர்க்கும் அப்பட்டமான தத்துவ சார்புகள் ( எகா: நவீனத்துவத்தோட ஒரு சரடை உதிர்த்துட்டு போறது) ஒரு வகையான அசவுகரியத்தை குடுக்கக்கூடியதா தோனுது. நாமளா அதை தேடிக்கண்டடையாம மூஞ்சில அடிக்கிற வார்த்தைகள், வர்ணனைகள், நமக்கு பிடிச்சதையே சொன்னாலும் ரிப்பல்சிவா இருக்கு. இந்த நேரங்கெட்ட நேரத்துல இதையெல்லாம் பல மாசம் கழிச்சு உங்கள்ட ஏனோ சொல்லத்தோனுது.

2011/11/27 விமலாதித்த மாமல்லன்
These messages were sent while you were offline.

1:50 AM விமலாதித்த: இது எது குறித்தது என்று தெளிவாகக் குறிப்பிட்டாலோ அல்லது சுட்டி கொடுத்தாலோ படித்துவிட்டு புரிந்துகொள்ளவும் பதில் சொல்லவும் வசதியாக இருக்கும்.

2011/11/27 Prakash Venkatesan
இபாவோட ஹெலிகாப்டர்கள் தரையில் இறங்கிவிட்டன படித்து தோன்றியது. ஆனாலும் அதை ஒன்றை மனதில் வைத்து தான் சொல்கிறேனா என்றால் தெரியாது. பொத்தாம் பொதுவாகவும் இது தோன்றியிருக்க வாய்ப்பில்லை தான்.
***
அன்பான பிரகாஷ்,
தாஸ்தாவெஸ்கியைப் பார்த்துப் போட்டுக்கொள்ளும் சூடு இது. பெரும்பாலான இலக்கியவாதிகள் இதற்கு விதிவிலக்கில்லை.
தற்செயலாய் இப்போது படிக்க நேர்ந்த கதையின் கட்டுமானத்தையே நீங்கள் கேட்டதற்கு எடுத்துக்கொள்ளலாம் போல் தோன்றுகிறது. ஒரே வித்தியாசம் இங்கே விவாதிக்கப்படுவது தத்துவம் அல்ல. பெண் மனம் பற்றிய முத்துதிர்ப்புகள்.

http://vaamukomu.blogspot.com/2011/09/blog-post_20.html இதில் இருக்கும் வாமு கோமுவின் பிலோமி டீச்சர் கதையைப் படித்துப் பார்க்கவும்.
ஜ்யோவ்ராம் சுந்தர் பாராட்டிக் கொடுத்திருந்த சுட்டியின் மூலமாகவே இதைப் பார்க்க நேர்ந்தது என்றாலும் படிக்கத் தூண்டியது கதையின் தலைப்பில் இருந்த பிலோமிதான்.
வண்ணநிலவனின் கடல்புறத்தில் படித்தவர்களால் பிலோமியை எப்படி மறக்க இயலும்? ஆனால் இங்கோ, பெயரில் பிலோமியும் உடற்கட்டில் வண்ணநிலவனின் எஸ்தரும் நினைவுக்கு வந்தனர். வ வரிசைப் பெயர் என்பதைத் தவிர வாமுகோமுவுக்கும் வண்ணநிலவனுக்கும் எந்த பந்தமும் கிடையாது.
வண்ணநிலவனின் மூளையைக் கழற்றி வீசிய நம்பத்தகுந்த எளிமையும் நெகிழ்ச்சியும் தமிழின் அசாதாரன சாதனை. அவரது சாதாரன கதையான சாரதாவாகட்டும் அல்லது சிகரங்களில் ஒன்றான மிருகம் ஆகட்டும் ’வண்ணநிலவனை’க் காண்பதே அரிது. நீங்கள் எழுப்பிய கேள்வியில் இருந்து இந்த இரண்டு கதைகளும் எப்படி எங்கோ நிற்கின்றன என்று மனம் தோய வாசிப்பவர்களுக்குப் பிடிபடக்கூடும். மைக் பிடிக்காமல் வாசகனை எங்கெல்லாம் எப்படியெல்லாம் அழைத்துச்செல்ல முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மிருகம்.

முதலில் வாமுகோமுவின் பிலோமி டீச்சரை முழுதாகப் படிக்கவும். பிறகு ஒவ்வொரு சம்பவத்திற்கும் பத்திகளுக்கும் பின்னால் தொற்றுநோய்போல் வரும் மனோவியல் பொழிப்புரை உபன்யாசங்களைத் தவிர்த்துவிட்டுப் படிக்கவும். பீட்டர் பேசுவதன் மூலமாக ஜான்சன் தன்னை ’உபயோகிக்கிறான்’ என்பதும் அதைப் பற்றி தன் நண்பர்களிடம் ’விவாதித்திருக்கிறான்’ என்பதும் பிலோமிக்கு எப்போது தெரியவந்ததோ அப்போதே வாசகர்களுக்கும் தெரிந்து போகிறதே. அதை இன்னும் இழுத்து வைத்து விளக்கும்விதமாக கடைசியில் ’வைக்கப்பட்டிருக்கும்’ கதையை சுழித்து முழுமை ’ஆக்கும்’ பீட்ட்ர்-ஜான்சன் சினிமாத்தனமான ஃபோன் சம்பவமும் சிம்கார்டைத் தூக்கி எறியும் டபுள் அர்த்தம் கொடுக்கும் கே.பாலச்சந்தர் டச்சும் தேவையா?
நண்பர்களிடம் தன்னைப் பற்றி தன்னுடைய கணவன் விவாதிப்பது தெரியவரும், காதலித்து மணந்த புதுமணப்பெண்ணின் மன உணர்வை ’கல்யாணம் முடிந்தவுடன்’ (1970) என்கிற கதையில் பிரமாதமாகச் சித்தரித்திருப்பார் அசோகமித்திரன். அவரிடமும் வண்ணநிலவனின் சாரதாவிலும் அந்தந்த கதாபாத்திரங்களின் வாழ்வியலுக்கு இயைந்த எண்ண ஓட்டங்களாகவே அவர்களின் மனம் வெளிப்படுவதைக் காணலாம். தன்னை அழித்து பாத்திரமாவது சாதாரண காரியமல்ல.
ஜெயகாந்தனின் எல்லாப் பாத்திரங்களில் அவர் மட்டுமே இருப்பதனால்தான் தீவிர இலக்கிய வாசகனின் மனதில் அவர் பாலமாக மட்டுமே தங்கிவிடுகிறார். ஏணியாய் இருப்பது இழிவன்று.
பாலகுமாரனிடம் இருக்கும் மைக் மோசமான துருபிடித்தது. அதை வைத்து வாசகனின் தலையில் நங்கு நங்கு என அடித்துக்கொண்டே இருப்பார். சுக்கு பொறாத விஷயத்திற்குக்கூட மகத்தான தரிசனம் போல ஒரே ஆர்ப்பாட்டம். போலித்தனம் புறங்கழுத்தில் புஸ்ஸு புஸ்ஸென்று மூச்சுவிட்டுக்கொண்டே இருக்கும்.

வாமுகோமுவிடம் தாபம் சில இடங்களில் மிகையாகவும் பல இடங்களில் வெகு இயல்பாகவும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் கூடவே தோன்றும் எண்ணம், இவ்வளவு சரளமான எழுத்துத் திறன் வாய்க்கப் பெற்றவருக்கு ‘செய்முறை’ கைகூடவில்லையோ அல்லது தரமான கதை எழுதும் அக்கறை இல்லையோ என்பதுதான்.

கதையின் இன்னொரு குறை, கோண மாற்றம். தொடக்கத்திலிருந்து ஜான்சன், பிலோமியின் உண்மையான அன்பை எண்ணிப்பார்க்கும் இடம் வரை பிலோமியின் பார்வையிலேயே செல்லும் கதை, அவன் மனவோட்டமும் வரவேண்டும் என்பதற்காக தடம் மாறி இடறுவது. இரண்டு மனமும் அவசியம் வரவேண்டும் என்றால் ஆரம்பத்திலேயே பறவைக்கோனக்தைத் தேர்ந்திருக்கலாம்.
பீட்டரின் ஃபோன் வர, ’விஷயம்’ அவளுக்குத் தெரியவந்து அவள் கிளம்பிப் போவதாகவும் அவன் தேடுவதாகவும் முடித்திருந்தாலே, வித்தியாசமான முடிவாக இல்லையென்றாலும் இயல்பாக இருந்திருக்கும்.

இலக்கியமாக்கும் அவஸ்தைகள் ஆசிரியருக்கு இல்லை எனில், மன அலசல்களுக்கான மெனக்கெடல்கள் ஏன்? ஆன்மாவை உலுக்கி, ஜெயமோகன் ஏற்படுத்தும் சித்திரவதைகளை இவை போலி செய்கின்றனவோ. சம்பவங்களிலேயே இவரால் அநாயாசமாக மனதைச் சொல்லிச்செல்ல முடிகிறது என்பதற்கு சிறந்த உதாரணம், ஜான்சன், குழந்தை எஸ்தரை முத்தமிட, பிலோமி தனது கன்னத்தைத் துடைத்துக்கொள்ளும் இடம். அநேகமாக எந்த வியாக்கியானமும் இல்லாத ஒரே இடமும் கதையில் இதுதான் என்று படுகிறது.

இதுவே நான் படிக்கும் இவரது முதல் சிறுகதை.

’மேட்டர் கதை’ எழுதுபவரிடம் இருக்கும் சரக்கும் சமர்த்தும், இலக்கியவாதியாவதற்காகத் தீவிரமாக முயற்சிப்பவர்களிடம் இல்லை என்பதைக்காண ஆச்சரியமாக இருக்கிறது.


http://www.maamallan.com/2011/11/blog-post_2560.html

நன்றி : மாமல்லன்.காம்


****************************************************************************

Post Comment

கருத்துகள் இல்லை: