திங்கள், ஜூலை 09, 2012

புள்ளி பிசகிய கோலம்

நன்றி :இனிய உதயம்...நக்கீரன் குழுமம்..


            முருகம்பாளையத்தில் அருணாவின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் பாலகிருஷ்ணனுக்கு சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. கிராமத்தில் மொத்தமே முப்பது வீடுகள்போலதான் இருந்தன. ""ராமசாமி கவுண்டர் வீடு எதுங்க?'' என்று மாரியம்மன் கோவில் வாயிலில் நின்றிருந்த பெரியவரிடம் இவன் விசாரிக்கவும், ""இதென்னப்பா இதான்'' என்று அவரே கூட்டி வந்து விட்டார்.

""ராமசாமி, உன்னியப் பாக்குறதுக்கு ஒரு பையன் வந்திருக்குது பாரு'' என்று புங்கைமர நிழலில் கயிற்றுக்கட்டிலில் படுத்திருந்த பெரியவரிடம் அவர் சொல்லவும், கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த ராமசாமி கண்திறந்து இவனைப் பார்த்தார்.

""யாருன்னு அடையாளம் தெரியலையே அப்புனு! தொரட்டிக் காடு ராசாத்தி பையனாட்ட சாடை தெரியுதே!'' படுத்திருந்தவர் எழுந்து கட்டிலிலேயே காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தார். உருமாலைத் துண்டை அவிழ்த்து விசிறி ஈக்களை விரட்டினார்.

""நீங்க பேசீட்டு இருங்க. ஆடுகள் தெக்கால காட்டுக்குள்ளார போயிடும். ஒரு எட்டு போய் பார்த்துட்டு வர்றேன்'' என்று பால கிருஷ்ணனைக் கூட்டிவந்த பெரிய வர் கவ்வக் கோலை ஊன்றிக் கொண்டே சென்றார்.

""ஐயா, நானு திருப்பூர்ல பனியன் கம்பெனில கட்டிங் மாஸ்டரா இருக்கணுங்க ஐயா. சொந்த ஊரு தஞ்சாவூரு. திருப்பூருக்கு பொழைக்க வந்து வருஷம் மூனு ஆயிப் போச்சுங்க. ஆண்டிகாட்டுல தானுங்க ஒரு சின்ன ரூம்ல தங்கியிருக்கணுங்க. பக்கத் துலயேதானுங்க என்னோட கம்பெனி'' என்றான் பால கிருஷ் ணன் பெரியவரிடம்.


""அதெல்லாஞ் செரி அப்புனு... மகராசனா பொழை... என்கிட்ட என்ன சோலின்னு வந்திருக்கீன்னு தான் நெகா சிக்க மாட்டிங்குது. காமாலையா உனக்கு... வேர் 

அரைச்சுத் தர்றதுன்னா காத்தால நேரத்துல வெறும் வவுத்துல இருக்கத்தான் மருந்து குடிக் கோணுமப்பா... மத்தியானத்துல வந்திருக்கியே அவ்ளோ தூரத்துல இருந்து! இப்பிடி  எம் பக்கத்துல கட்டல்ல உட்காரு'' என்றவர் அருகில் கட்டிலில் ஓரமாய் பாலகிருஷ்ணன் உட்கார்ந்தான்.

""உனக்கு பச்சத் தண்ணி குடுக்கக் கூட ஊட்டுல ஆள் இல்லியப்பா... என் சம்சாரம் ஆடுகள ஓட்டிட்டு காட்டுக்கு போயிட்டா! மருமவ ஸ்கூல் டீச்சராப் போறா! என்னோட பையன் தவுடு புண்ணாக்கு வாங்கிட்டு வர சென்னிமலை போயிட்டான். காலுக்கு 

அவட்டை போனதுல இருந்து ஊட்டுப் படி கூட ஏற முடியறதில்லைப்பா. வந்த சோலிய நீ சொல்லு.''
""உங்க பொண்ணு அருணா என்கூடத்தான் கம்பெனில வேலை செய்யுதுங்க ஐயா.''

""அருணாவா! ஓஹோ! இப்ப திருப்பூர்லயா இருக்குது? எங்கியோ பாம்பேன்னு அன்னிக்கி ஒருக்கா சொன்ன ஞாவகமப்பா... நல்லா இருக்காப் லையா? என்னைய அப்பன்னு எங்கீம் சொல்லாதே!''

""அருணா சொல்லலீங்க ஐயா. கம்பெனில வேலைக்கி சேரும்போது வீட்டு அட்ரஸ், அப்பா- அம்மா பேரு எல்லாம் எழுதிக்குடுக்கணுங்க  ஐயா. அப்போத்தான் வேலைக்கே சேர்த்திக்குவாங்க. இல்லின்னா கம்பெனில சேர்த்திக்க மாட்டாங்க. ஒரு நாலஞ்சி மாசமா வேலைக்கி வந்துட்டு போயிட்டு இருக்குதுங்க... ரொம்ப அமைதியான பொண்ணு. ஜாஸ்தி யாருகிட்டயும்  பேச்சு வச்சுக்கறதே இல்ல.''

""எங்க தங்கி இருக்குதாம்?''

""பாண்டியன் நகர்ல எம்பட மாதிரியே சின்ன ரூம்லதானுங் கய்யா... கொஞ்சம் தூரம்தான். நடந்து போயிட்டு வந்துட்டு இருக்குதுங்க. ஒரு வாட்டி காய்ச்சல் வந்து என்னோட ரூம்ல கெடையில கெடந்தனுங்க ஐயா... போன மாசம்தானுங்க. அப்போ அருணா வந்துதான் எனக்கு கஞ்சி வெச்சு ஊத்திட்டு போச்சுங்க. வெளியூர்ல இருந்து வந்து தனியா அனாதையா நோவுல கெடக்கானேன்னு, கூட வேலை செஞ்ச பழகினவங்ககூட நெனச்சிப் பார்க்கலை பாருங்க!''

""சரி உடுப்பா... இதைச் சொல்றதுக்கா திருப்பூர்ல இருந்து பஸ் ஏறி இந்த பட்டிக்காட்டுக்கு வந்தே நீ? இந்தக் காலத்து புள்ளைங்களை நெனச்சா எனக்கு ஒரு நிதா இருக்குது!''

""இல்லீங்கய்யா... எப்பிடி உங்க கிட்ட இந்த விஷயத்தை ஆரம்பிக் கிறதுன்னுதான் சின்ன தயக்கம்... நான் கூலிக்காரப்பயல்தானுங்க... உங்களைப்போல காடு கரை இல்லாதவன் நானு...''

""சுத்தி வளைக்காமப் பேசுப்பா... என்ன பிரச்சனை உனக்கு?''

""வந்துங்கய்யா... அருணாவை பொண்ணு கேட்கத்தான் நான் வந்தது'' என்று பாலகிருஷ்ணன் இழுவை போட்டுப் பேசினான்- பெரியவரின் முகம் போகும் போக்கைப் பார்த்தபடி!

""ஏப்பா, உனக்கு பைத்தியமா? பைத்தியக்காரனாட்ட என்கிட்ட வந்து பேசிட்டு இருக்கே?''

""இல்லீங்கய்யா... என்னோட அப்பா அம்மாதான் இந்த விஷயத்தை உங்ககிட்ட வந்து பேசி இருக்கணும். நான் தனியா வந்து உங்ககிட்ட பேசுறது தப்புத்தான்.''

""எல்லாமே தப்புதான். இனி பெரியவங்க வேற கூடி உட்கார்ந்து பேசணுங்றியா இந்த விசயத்தை... ஆளும் அவனும்... போப்பா நீ மொதல்ல.''

""இல்லீங்கய்யா...''

""என்ன நொள்ளீங்கய்யா...'' என்றவர் கட்டிலை விட்டிறங்கி தொண்டுப்பட்டி நோக்கிச் செல்லவும் இவ னும் எழுந்தான். பெரியவர் முதுகில் கயிற்றுக் கட்டிலின் கயிற்றுக் கோடுகள் அச்சு மாதிரி பதிந்திருப் பதைப் பார்த்தான். அதே போல் அவர் வாழ்விலும் எதுவோ அருணாமீது அச்சுபோல பதிந்திருக் கிறதோ என்ற நினைப்பில், ""போயிட்டு வர்றேனுங்கய்யா'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

பாலகிருஷ்ணனுக்கு உறக்கம் வந்தபாடில்லை. இன்று நேற்றல்ல. என்று அருணா இவன் அறைக்குத் தேடிவந்து இவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்துவிட்டு அரிசிக் கஞ்சி செய்து கொடுத்துவிட்டுப் போனாளோ அன்றிலிருந்தே அப்படித்தான்.

      
கம்பெனியில் அருணாவிற்கு எல்லாரும் பட்டப்பெயர் வைத்தி ருக்கிறார்கள். ஊமைச்சி! ஒரு பெண் எதுவும் பேசாமல் தன் வேலையில் மட்டுமே கவனமாய் இருந்தால் பட்டப்பெயர் சூட்டி விடுவதா? நண்பர்கள் தான் ஊமைச்சி என்று அவளைக் குறிப்பிட்டுப்  பேசுகிறார்கள் என்றால் பெண்களும்கூட அவளை ஊமைச்சி என்றுதான் பேசுகிறார்கள். இதில் பெயர் சூட்டியதே கூலிபாளையத்திலிருந்து வரும் கோகிலா தானாம்.


கட்டிங் மாஸ்டர் சுந்தரம் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படித்தான். அவன் இரண்டு தினங்களுக்கும் முன் இவனிடம், "ஊமைச்சி என்னை கன்னத்துல அடிச் சிட்டாள் பாலகிருஷ்ணா. சினிமாவுக்கு போகலாம்னு கூப்பிட்டேன். இது ஒரு தப்பா? வரலைன்னா வரலைன்னு சொல்லிட்டுப் போறது! கையை நீட்டுறது என்ன பழக்கம்? ஒரு நாளைக்கு வசமா என்கிட்ட சிக்கீட்டு சீக்கி அடிக்கப் போறா பாரு ஊமைச்சி. அன்னைக்குத் தெரியும் சுந்தரம் யார்னு அவளுக்கு! டெய்லரிங் செக்சன்ல எத்தனை பொண்ணுக இருக்குதுக... சந்தோ ஷமா கலகலப்பா பேசிட்டு சிரிச்சுட்டு... நீயும் பார்க்கிறே தானே! இவ மட்டும் எந்த நேரமும் புருசனை தின்னுட்ட வளாட்டதானே வேலை பார்த்துட்டு இருக்கிறா! சரி, ஒன்னும் மண்ணா கெடந்து வேலை செய்யுறோ மேன்னு எதாச்சும் தமாஸ் பேசினா திருப்பி ஒரு பேச்சு உண்டா? மொறைப்பு வேற ஊமைச்சிக்கி. இப்பத்தான் நேத்திக்கி கல்யாணம் ஆனவளாட்ட குனிஞ்சு தலை நிமிராம ஒரு அன்ன நடை! ஓடி உதைக்கலாம்னுதான் இருக்கு! பத்தினின்னு மனசுல நெனப்பு' என்று பேசியிருந்தான்.

பாலகிருஷ்ணனுக்குத்தான் சங்கடமாக இருந்தது. நேசிக்கும் பெண்ணைப் பற்றி நண்பன் சொன்னால் சங்கடம்தானே! ஆனால் அருணா பாலகிருஷ்ணனிடம் கூட நின்று நாலு வார்த்தை பேசியதில்லையே! ஒருதலை விருப்பம்தானே இவனுடையது! இருந்தும். "சுந்தரம் மோசமான ஆள். அவனை நீ கைநீட்டி அடித்தது தவறு அருணா. எதற்கும் கவனமாய் இரு. அவன் எப்போது என்ன செய்வான் என்று தெரியாது' என்றுதான் சொல்லிவிட வேண்டுமென நினைத் திருந்தான். ஆனால் அதற்குள்தான் இன்று எல்லாமும் நடந்து முடிந்துவிட்டதே!

சுந்தரம் சொன்னதுபோல் செய்துவிட்டான். காலையில் டீ டைமில் அருணாவை சுவரில் சாத்தி அவள் உதட்டை நான்கு பேர் பார்க்க கடித்து விட்டான். 

      
                                     
அருணாவும் சும்மா இருக்கவில்லை. சுந்தரத்தை கையால் கீழே தள்ளி விட்டு காலால் நான்கு எத்து எத்தி விட்டாள். "கோ' என்று வேறு அழு தாளே! அது என்ன அவள் குரல் முரட்டுக் குரலாய் அப்படி மாறி விட்டது?


""அடப் பன்னாடைகளா! 

எங்க போனால்தான்டா என்னை நிம்மதியா வாழவிடுவீங்க? 

நானொரு பொட்டையின்னு காட்டிக்காம வேலை புடிச்சு ஆறு மாசமா வவுத்துப் பாட்டுக்கு வேலை செஞ்சனே! அதுலயும் மண் அள்ளி போட்டுட்டீங்களேடா! அதுகூட பொறுக்கலையாடா உங்களுக்கு? செத்தாத்தான் உடுவீங்களாடா! எங்க தாண்டா எங்களை நிம்மதியா பொழைக்க உடுவீங்க? பஸ் ஏறினாலும் பாதியில இறங்கிடறோம். ரயில் ஏறினா லும் பாதியில இறங்கிடறோம். நிம்மதியா அக்கடான்னு தங்கி வேலை செஞ்ச என்னை துன்பம் பண்ணி பாதி யில போக வச்சுட்டீங்ளேடா! இனி எத்தனை நாளைக்கு ஊர் ஊரா சுத்துவனோ, எத்தன நாளு கொலப்பட்டினி கெடப்பனோ! எப்ப எனக்கு சாவு வருமோ! ஐயா! எங்க ஊடும் ஒத்துக்கல- எங்க ஊரும் ஒத்துக்கல! அப்பன் ஒத்துக்கல பெத்த ஆயாளும் ஒத்துக்கல!'' என்று பாட்டாய் பாடிக்கொண்டு போய் விட்டது அருணா என்கிற அருணாச்சலம் கம்பெனியை விட்டே!

எங்கு தேடி இந்த நகரில் கண்டுபிடிப்பான் பால கிருஷ்ணன் அந்த திருநங்கையை? கண்டுபிடித்தாலும் இவனால் என்ன செய்துவிட முடியும்? அவன் மனசிலிருந்து அருணா என்கிற திருநங்கை வெளிறே சிலகாலம் ஆகும்தான்


.http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13445

நன்றி :இனிய உதயம்...நக்கீரன் குழுமம்..

Post Comment

கருத்துகள் இல்லை: