செவ்வாய், மே 14, 2013

தினபலன்


தினபலன்
(சொல்லப்படுவன அனைத்தும் ரசித்து சிரிக்க மட்டுமே! யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.)
7-5-2013 ஸ்ரீ நந்தன வருடம் வைகாசி மாதம் 8ம் நாள் திங்கட்கிழமை பிரதமை திதி காலை 8 மணி வரை, பிறகு கார்த்திகை திதி, பூராட நட்சத்திரம் இரவு 7.30 மணிவரை. மரணயோகம் இரவு 11:12 மணிவரை பிறகு சித்தயோகம். நல்ல நேரம் காலை 9.30-10.30, மாலை 4.30-5.30.ராகு காலம் :7.30-9.00. எமகண்டம்   : 10.30-12.00, குளிகை மதியம் 1.30-3.00. வாரசூலை-கிழக்கு. சூரிய உதயம் ; காலை 5.53. அதிர்ழ்ச்ட எண்கள் : 3, 5, 8.
மேஷம்
ஆட்டாங்கல்லுக்கும் அம்மிக்கல்லுக்கும் உள்ள வித்தியாசத்தை உணரவே தெரியாத மேஷராசி அன்பர்களே! உங்களிடமுள்ள உதவும் குணத்தால் இன்று பலபேரது மனதில் நீங்கா இடம் பிடிப்பீர்கள். உங்களது சோம்பேறித்தனம் இன்று அகலும். புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணி விரைந்து செயல் படுவீர்கள். சில முக்கிய பிரச்சனைகளை நண்பர்கள் உங்களுக்காக முன்வந்து முடித்து வைப்பார்கள் என்றாலும் அவர்களிடம் இருட்டு கட்டும் சமயத்தில் மிதி படுவீர்கள். பணவரவு என்ற பேச்சுக்கே இன்று இடமில்லை.
ரிஷபம்
எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ரிஷபராசி அன்பர்களே! இன்று செய்தொழிலில் சிறப்புகள் ஏற்படும் நாள். அப்படி என்றாலே பணவரவு கூடும் தானே. அந்தப் பணத்தை உங்கள் வருங்கால கனவுகளை நினைவாக்க சேமிப்பில் பத்திரப்படுத்துவீர்கள். அது களவு போகும். பூர்வீக சொத்து பற்றி உங்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு இன்று முடிவுக்கு வரும். ஆனால் அதில் பலன் ஒன்றும் இல்லை. இன்று மாலை நேரத்தில் இழவுச்செய்தி ஒன்று வரும். சுடுகாட்டில் இரவில் காலில் முள் ஏறாமல் கவனமாக இருக்கவும். அது தீங்காய் முடிந்து விடும்.
மிதுனம்
கப்பலில் பொண்ணுப்பிள்ளை வருது என்றால் எனக்கொன்னு எங்கப்பனுக்கு ஒன்னு என்று கேட்டு வரிசையில் நிற்கும் மிதுனராசி அன்பர்களே! உங்களுக்கு இந்த நாள் குழப்பங்கள் அகன்று குதூகலம் கூடும் நாள். பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் செலவழிக்க மனம் இடம் தராது. திடீர் விருந்தினர்கள் இன்று உங்கள் வீட்டைத் துடைப்பார்கள். வாகன பயம் உங்களுக்கு எப்போதும் உண்டு. செல்லும் வழியில் பழனிமலை முருகனை கோவணத்தோடு தரிசிப்பீர்கள். நீண்ட நாட்களாய் மறந்து போயிருந்த விசயத்தை இன்றும் மறப்பீர்கள்.
கடகம்
சாமியே சைக்கிள்ல போவுதாம் பூசாரிக்கி புது புல்லட் வேணுமாம் என்று தொட்டதற்கெல்லாம் பழ்ழமை பேசித்திரியும் கடக ராசி அன்பர்களே! தனவரவில் தடைகள் அகலும் நாள் இந்நாள். நினைத்த காரியம் உடனே நடைபெற வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பீர்கள். பெண் பார்க்கும் படலத்திலேயே பெண்ணிற்கு தாலி கட்ட முயன்று தர்ம அடிபடுவீர்கள். மாலை நேரத்தில் யாரிடம் பேசுகையிலும் கெட்டவார்த்தைகளை தவிர்த்து விட்டு பேசுவது நலம். இடமாற்றம் நடந்தே தீருன்.
சிம்மம்
அடிச்சா மொட்டை வச்சாக் குடுமி என்றிருக்கும் சிம்மராசி அன்பர்களே! உங்களது சங்கடங்கள் அகல சாமி துணை தேவைப்படும் நாள் இந்நாள். இன்று நல்லதே செய்யப்போய் வீண் பொல்லாப்பில் மாட்டிக்கொள்வீர்கள். தங்கள் பெயரில் சாமி என்று ஒட்டவைத்துக் கொண்டிருக்கும் சிம்ம ராசி அன்பர்களுக்கு சிறப்பான நாள். சொந்த பந்தங்களால் வரும்பகை பாதி வழியிலேயே வேறு வீடு முட்டி விடும். உடல் நலத்திற்கென்று காலையில் கிளம்புகையில் 500 பாக்கெட்டில் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் மனைவி 50 வயதில் உங்களிடம் கோபித்துக்கொண்டு தாஅய் வீடு செல்ல துணிமணிகளை மாலையில் பெட்டியில் அடுக்குவார்.
துலாம்
அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் என்பதை நன்கு உணர்ந்த துலாம் ராசி அன்பர்களே! உங்களது நீண்டநாள் வேண்டுதல் இன்று நிறைவேறும். உங்கள் ஃபைலை உள்ளூர் மாரியம்மன் தன் கையில் எடுத்துக் கொண்டார். எச்.. வி உள்ளதா என்று இந்த வாரத்தில் பரிசோதனை செய்ய வேண்டி வரும். பாக்கெட்டில் இருக்கும் பணம் களவாடப்படும்.
கன்னி
கழுவுற மீனில் நழுவுற மீனாய் இருக்கும் கன்னிராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு தண்ணி இல்லாத பாத்ரூமில் அமர்ந்து தவிப்பீர்கள். பக்கத்து வீட்டுப் பெண்ணிடம், “நான் கன்னி ராசிக்காரனாக்கும்”  என்று வீண் ஜம்பம் செய்து, “அதுக்கு என்னை என்னடா பண்ணச் சொல்றே?” என்று அந்தப் பெண்மணி அடிக்க வருவார். விசயம் கேட்டு உங்கள் அன்பு மனைவி தூக்குப்போட முயற்சிப்பார். கன்னிராசிக்காரர்கள் இன்று வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதே உசிதம். தொட்டது துலங்காது.
விருச்சிகம்
எங்கேயோ போற ஆத்தா எம்மேல வந்து ஏறாத்தா! என்றே புலம்பும் விருச்சிக ராசி அன்பர்களே! மிகப்பெரிய வாய்ப்புகள் எல்லாம் உங்களைத்தேடி வந்து கதவு தட்டும் நாள். சமயம் பார்த்து தூங்கிப் போய் விடுவீர்கள். இருந்தும் தெய்வ அனுகூலம் உங்களுக்கு இருப்பதால் மறுபடியும் தூங்கிப் போய் விடுவீர்கள். உங்கள் செல்ல மனைவி இன்று தன் சுயரூபத்தை காட்டுவாள். மாலை நேரத்தில் தலைவலி, மூட்டுவலி மாத்திரைகளுக்காக மருந்துக் கடை தேடி அலைவீர்கள்.
தனுசு
வன்னார் ஆட்டுத்தலைக்காக பறந்தது போல ந்தற்கெடுத்தாலும் பறக்கும் தனுசு ராசி அன்பர்களே! கடன் சுமையை இன்று சாமார்த்தியமாய் சுமந்து ஓட்டமாய் ஓடி ஜமாளிப்பீர்கள். யோகா ச்ந்ய்கிறேன் என்று அமர்ந்து முதுகெலும்பை முறித்துக்கொள்வீர்கள். உங்கள் காரியங்களீல் உதவ உங்களுடன் ஒரு பெண் துணையிருப்பாள். அவளை யார் நீ? என்று மாலையில் கேட்பீர்கள். அவரோ மனைவிடா என்று சொல்லி உங்களுக்கு அடி போடுவார். இன்று லேசாய் கழுத்துவலி இரவு வரை இருக்கும்.
மகரம்
எல்லோரும் சிரிக்கறாங்கன்னு பூனையும் ஓடி பொடக்காலியில உட்கார்ந்து சிரிச்சா மாதிரி எப்போதும் நடந்து கொள்ளும் மகர ராசி அன்பர்களே! இன்று உங்கள் முன்னேற்றத்திற்கு குறுக்கே முட்டுக்கட்டைகள் விழும் நாள். இத்தனை நாட்கள் தொழிலில் போட்டியாக மட்டுமே இருந்தவர்கள் குட்டான் கூடி தெருச் சண்டைக்கே இழுப்பார்கள். பண வரவு இன்றைய மருத்துவ செலவுகளுக்கு உதவும். குடும்ப ஒற்றுமை கூடும். உங்கள் நண்பர்கள் அவரவர் பிரச்சனைகளுக்கு சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
கும்பம்
மூக்கு இருக்கிற வரை சளீ தான் என்றே புலம்பும் கும்பராசி அன்பர்களே! வெயில் காலம் என்று தர்பூசணியோ, வெள்ளரிப்பிஞ்சோ, ஏழு அப்போ மாட்டி விடாதீர்கள். இன்று உங்களுக்கு தும்மல் நாள்.அதை மாலை வரை  எண்ணி கணக்கு சரியா? என்று உங்கள் மனைவியோ, மகளோ கேட்பார்கள். இன்று 18 முறை பாத்ரூம் செல்வீர்கள். உங்கள் அலைபேசிக்கு ஏகப்பட்ட மிஸ்டுகால் தொந்திரவும், கம்பெனிக்காரன் மெசேஜ் தொந்தரவும் இருக்கும்.
மீனம்
மோதிரக்கையால் குட்டுப்பட்டும் முன்னேற வழியின்றித் தவிக்கும் மீனராசி அன்பர்களே! நீங்கள் நீண்ட காலமாய் தொடர்பு வைத்திருந்த பெண் இன்று நாசுக்காய் நழுவி வேறொருவன் யமாஹாவில் போவாள். நீங்கள் நொந்து நூலாவீர்கள். புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றியும் போதாமையால் மதுக்கடை நுழைவீர்கள். “பெண்களை நம்பாதே..கண்களே பெண்களை நம்பாதேஇந்தப்பாடலை உங்கள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்.
பொதுபலன்
எல்லா ராசிக்காரர்களும் இன்று வெள்ளை நிற ஆடை அணிவது நல்லது. இந்த வருசத்திலேயே ஒன்றுக்குமாகாத வெத்து நாள்.
கணித்தவர் : சோதிடக்கலைமாமணீ, கைரேகைப்புலி, வாஸ்து சிங்கம், வலது பக்கம் இதயம் பெற்ற ராசமைந்தன் அவர்கள்.

Post Comment

கருத்துகள் இல்லை: