சனி, ஜூலை 13, 2013

வாழ்வும் போராட்டமும் - லைப் ஆப் பை


.LIFE OF PI (என் பெயர் பட்டேல் பை)
யான் மார்ட்டெல் (தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்)
==================================================================

முதலாக ஐந்தாம் வகுப்பு படிக்கையில் தான் இந்திர, மாயாஜால கதைகள் படிக்கத்
துவங்கினவன் நான். அதில் வரும் இளவரசர்கள் தங்களுக்கென சில மந்திர வித்தைகளை தெரிந்து வைத்திருப்பார்கள். அதை வைத்துக் கொண்டுதான் அரசனின் உயிரை காப்பாற்ற 7 மலை தாண்டி கடல் தாண்டிப் போய் அரக்கனின் கண்ணில் வேல் பாய்ச்சிக் கொன்று அவன் பாதுகாப்பில் இருந்த மின்னும் தாமரைப் பூவை கைப்பற்றி வந்து அரசனின் உயிரை காப்பாற்றி இளவரசியை மணம் முடிப்பார்கள்.

இப்படியான வாசிப்பு முடிந்ததும் காமிக்ஸ் கதைகள் என்னை ஈர்த்தன. மாண்ட்ரெக், வேதாளம், இரும்புக்கை மாயாவி என்று 10 வது முடிக்கும் வரை வீட்டில் தனிப் பெட்டியில் அடுக்கினேன். ராணி காமிக்ஸ் முதல் இதழ் வந்த சமயம் ஜேம்ஸ்பாண்ட் கதையில் வரும் பெண்கள் மேலாடை இன்றி வரவும் அதிர்ந்தேன். காமிக்ஸில் இப்படியா?? இருந்தும் மூன்று வருட காலம் ராணி காமிக்ஸை சேகரித்தேன்.
 பின்னர் என் வாசிப்பில் ராஜேஷ்குமாரும், பாலகுமாரனும், பிகேபியும், சுபாவும் வந்து விட்டார்கள். சமயத்தில் எம்ஜியார் படங்களின் ரசிகனாய் இருந்த நான் அவர் போய் விட்ட பிறகு ரஜினிகாந்துக்கு மாறி விட்டேன். ஆங்கிலப் படங்களை ஆங்கிலத்தில் பார்க்கும் வாய்ப்பு 89 ல் கோவையில் அமைந்தது. நைட் மேர் இன் எலம் ஸ்ட்ரீட், டிராகுலா, போல்டர்கீஸ்ட், எண்டிட்டி என்று பேய்கள் உலாவும் படங்களாக பார்த்தேன். கூடவே ஏலியன், பிரிடேட்டர் என்ற ஆச்சரியப்படுத்தும் படங்களும்! பிரிடேட்டர் பார்த்து 89ல் அதனைப் போலவே டுர்டுரா என்ற நாவல் ஒன்றை எழுதி பத்திரமாக வைத்துள்ளேன்.

இந்த இலக்கியப் புத்தக வாசிப்பு வந்ததும் கமர்சியல் நாவல்களை வாசிப்பது படிப்படியாக குறைந்து விட்டது. 2005 க்கு பிற்பாடுதான் உலகப்படங்களை பார்க்கும் வாய்ப்பை நண்பர்கள் ஏற்படுத்திக் கொடுத்தர்கள். உலகப் படங்களில் குறிப்பிடத்தகுந்த 50 படங்கள் பார்த்தான பின் மீண்டும் சலிப்பில் விட்டு விட்டேன். இலக்கியத்தில் இருப்பவர்கள் உலகப்படம் பார்க்காவிடில் ஒரு பூச்சியை பார்ப்பது போல பார்க்கும் பார்வைகளும் இடைப்பட்ட காலத்தில் அரங்கேறியது. பார்த்த படங்களைப் பற்றியான பதிவுகளை எழுத்தாளர்கள் புத்தகங்களில் எழுதி வைத்தார்கள். அதைப் படித்த வாசகர்கள் டிவிடி தட்டு தேடி ஓடினார்கள். நான் பார்த்த படங்களில் உணர்ந்த விசயங்களை எங்கும் பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் கிட்டவில்லை. நான் எழுதுபவன் என்பதை நிலைநிறுத்திக் கொள்ளவே எனக்கு பல காலங்கள் ஆகி விட்டது
.
நான் எழுதி வெளிவந்த புத்தகங்கள் எனக்கு நல்ல பெயரையும், கெட்ட பெயரையும் சம்பாதித்துக் கொடுத்து விட்டது. நாவலகள் எழுதத் துவங்கிய பிறகு உலகப் படங்கள் பார்ப்பது குறைந்து விட்டது. 15 வருடம் முன்பு மளையாளப் படங்களின் ரசிகன் நான். மிருகையா, நாயர்சாப், கோட்டயம் குஞ்சச்சன், கார்னிவல்,நெ20 மெட்ராஸ் மெயில் என்று விசில் போட்டு பார்த்தேன். இப்போது அதற்கு வழியில்லை. இப்பவும் அங்கு நல்ல படங்கள் வந்து கொண்டு இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். இவைகளின் கலெக்சனை பார்க்க வேண்டும்
.
உயிர்மையில் என் புத்தகங்கள் வெளிவர வருடங்கள் ஆகிறது என்பதால்..(நான் பெரிய எழுத்தாளன் என்றால் எழுத எழுதவே வந்து விடும்) எதிர் வெளியீட்டில் என் நாவலை 9 நாளில் எழுதி கொண்டு வந்தேன். சமயத்தில் அவர்கள் கொண்டுவந்த புத்தகம் தான் என் பெயர் பட்டேல் பை. புக்கர் பரிசு பெற்ற நாவல் வேறு. அதன் ஒரு பிரதியை கேட்டு வாங்குவது என்பது எனக்குள் உள்ள கூச்ச சுபாவத்தால் முடியாத காரியம். உயிர்மையில் என் புத்தகங்களை மனுஷ்யபுத்திரனிடம் கேட்கவே வெளிவந்து இரண்டு மாதகாலம் ஆகிவிடும். எதோ கொலை ஒன்றை செய்வதைப் போல என்பிரதிகளை கேட்பேன். பின்ன உள்ளார தூக்கி போட்டுட்டாங்கன்னா என் பொண்டாட்டியும் பையனும் தெருவில் நிற்பார்கள் அல்லவா!

பெரிய எழுத்தாளர் என்றால் நாலு சினிமா படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்க வேண்டும். நாலு எழுத்தாளர்களை சந்தித்து (செத்துப் போன) நினைவோடை குறிப்பு பத்திரிக்கையில் எழுதி இருக்க வேண்டும். உலக எழுத்தாளர்களை பற்றி கூடவே கிடந்து அவரின் மூன்று மனைவிகளை அவர் எப்படி ஜமாளித்து எழுதுகிறார்.. என்ன வகை மது குடிக்கிறார்? எழுதும் போது வைன் சாப்பிடுகிறாரா..இப்படி பலவகை கட்டுரைகள் எழுத வேண்டும். நமக்கு கதை எழுதவே நேரம் போதாமையால் இதற்கெல்லாம் வழியில்லாமல் போய் விட்டது. தவிர எனக்கு ஒரு வலைதளம் வேண்டும் என்பதற்காக தம்பி குமார் திருப்பூரில் இருந்து இயக்கி செயல் பட்டதால் ஓரளவு நானும் இருக்கேன் என்று நிம்மதியாக இருக்க முடிந்தது.

இன்று நான் கணினிக்கு வருகையில் வலைதளத்திற்கு மதிப்பு குறைவு என்றே பேசுகிறார்கள். கணினி அறிமுகமாகி சிற்றிதழ்கள் கணினி அச்சில் வருகையில் இறக்கை என்ற சிற்றிதழை கையில் எழுதி ஜெராக்ஸ் போட்டு கொண்டு வந்தவன் நான். என்னால் எது இயலுமோ அதை அவ்வப்போது செய்வது என் பணி. இதை யார் விரும்புகிறார்கள் என்பதே சரிவர எனக்கு காலம் மாறிய கடைசியிலும் தெரிவதில்லை. முகநூலுக்கு வந்து மூன்று மாதம் ஆகி விட்ட நிலையில் இதை எல்லாம் செய்ய நேரத்தை ஒதுக்குகிறேன்.

பிரெஞ்ச் ஆதிக்கத்துக்கு உட்பட்டு காலணி ஆதிக்க நாடாக இருந்து வந்த பாண்டிச்சேரியில் வாழ்ந்த தமிழர் ஒருவர் அங்கு மிருக காட்சி சாலையை பராமரித்து வருகிறார். அவரது மகன் பிசீன் மோலிடர் படேல். 1954 நவம்பர் முதல் பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைக்கப் பட்டதான வரலாற்றுத் தகவலுடன் நாவல் துவங்குகிறது.அது ஒரு பூலோக சொர்க்கமாக படேலுக்கு தோன்றுகிறது. எந்த மகாராஜாவின் மகனுக்கும் அப்படி ஒரு பரந்து விரிந்த விளையாடுமிடம் கிடைக்கவில்லை என்பதையும், காலையில் கடிகாரத்திற்கு பதில் சிங்கத்தின் கர்ஜனயில் தான் துயில் எழும்பி தொடர்ந்து மைனாக்களின் ஒலியையும், குரங்குகளின் கூச்சலையும் கேட்டு தயாராகி பள்ளிக்கு கிளம்புகையில் டாட்டா காட்ட காட்டு எருதுகள், மனிதக் குரங்குகள் என்று படேல் சொல்லிச் செல்லும் விதமே நம்மை நாவலுக்குள் இழுத்துப் போகிறது
.
தமிழில் மொழிபெயர்க்கிறேன் பேர்வழி என்று 10 பக்கத்திலேயே தூக்கி வீசும் படியான மொழிபெயர்ப்பை நான் கால காலமாக பார்த்து வந்திருக்கிறேன். என் நெருங்கிய நண்பர்களுக்கு அப்படியான புத்தகங்கள் என்ன என்பதும் எத்தனை வருடங்களாக கிடப்பில் உள்ளன என்பதும் தெரியும். இந்நாவலை மொழி பெயர்த்தவர் பொன்.சின்னத்தம்பி முருகேசன். திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமத்தில் பிறந்தவர். இந்நாவலை மொழிபெயர்க்க அவரை எந்த சக்தி தூண்டியதோ! அருமை என்று சொல்லி விட்டு தாவுகிறேன்.

எனக்கு படுவதெல்லாம் காட்டுயிர்களின் அழிவு பற்றி பரவலாக எல்லோரும் நகரத்தில் இருந்து கொண்டு பக்கம் பக்கமாய் பேசுகிறார்கள். போராட்டங்களும் கூட நடை பெறுகின்றன. அவைகளின் மிச்சம் மீதிகளையும் காக்க என்ன விதமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்பதும் நமக்கு தெரிவதில்லை. காரியாம் சீக்கிரம் நடைபெறும் போய் வாருங்கள் என்று அதிகாரிகள் அப்போதைக்கு தாட்டி விடுகிறார்கள். அதை மறந்தும் போய்விடுகிறார்கள்.

என் கிராமத்தில் இரண்டு மலைகள் சூழ்ந்துள்ளன. பத்து வருடம் முன்பு ஒன்றிரண்டு மயில்கள் வந்து சேர்ந்தன. அவைகள் பெறுகின சமயம் மாலை நேரத்தில் குஞ்சுகளுடன் அடிவாரங்களில் தீனி பொறுக்கும் தாய் மயில்களை காண ஊர் மக்கள் ஒளிந்து ஒளிந்து குசுகுசுவென பேசிப் போய் மயில்கூட்டம் பார்த்து சந்தோசப் பட்டார்கள். அது வருடம் ஆக ஆக கூட்டம் அதிகமாகி இன்று காலுக்குள்ளும் கைக்குள்ளும் ஓடுகின்றன. ஊருக்கு மயில் அதிசயமில்லை என்று ஆனபின் வந்து சேர்ந்தன மான்கள் இப்போது. வந்து சேர்ந்து ஐந்தாறு வருடங்கள் இருக்கலாம். இரவு வேட்டைக்கு (எலிடா சாமி) காட்டுக்குள் சென்றவர்கள் நான்கைந்து பார்த்து ஊருக்குள் சொன்னார்கள். அடுத்ததாக ஃபாரெஸ்ட் ஆபிஸர்கள் கரட்டுக்குள் ஆடு மேய்க்கவோ, விறகு பொறுக்கவோ, காதல் செய்யவோ போகக் கூடாதென அறிவித்ததும் ஊரே ஆடுகளை விற்று விட்டு திருப்பூர் வேலைக்கு கிளம்பி விட்டது. ஒன்றிரண்டு பேர் வைத்திருக்கும் ஆடுகளும் தார் ரோட்டில் மேய்த்து வீடு போகிறார்கள்.

ஐந்து வருடங்களில் கரட்டில் மனித நடமாட்டமே கிடையாது. மான்கள் பெறுகி விட்டன. மழை பொய்த்துப் போனதால் அவைகள் தண்ணீருக்கு தோட்டம் தொறவுக்குள் முட்ட ஆரம்பித்து விட்டன. காலையில் ஐந்து மணிக்கும், மாலையில் ஏழு மணிக்கும் டூ வீலரில் செல்பவர்களுக்கு கவனம் சாலையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஏற்கனவே கடமான் துள்ளி ரோட்டைக் கடந்து இருவர் டிவிஎஸ் மீது விழுந்து ஓடி, இவர்களுக்கு பல்லு பகடு முட்டி கழண்டு போனது மிச்சம். தோட்டங்காடுகளில் எதுவும் பயிரிட முடியாது. பட்டாஸ் வைத்து தினமும் இரவு முடுக்குகிறார்கள். தவிர தண்ணீர் தொட்டிகளில் விழுந்து வெளிவர இயலாமல் குட்டிகள் சில இறந்தும் போய் விடுகின்றன. அதிகாரிகள் பார்த்து அப்புறப்படுத்துகிறார்கள். கரட்டினுள் பாறைக்குழிகள் உள்ளன. அவைகளை அரசாங்கம் லாரி வைத்து நிரப்பலாம். ஒருவாரம் தாங்கும். ஆனால் இவைகளெல்லாம் நடக்காது. வாழ்வன வாழட்டும்! பின்னொரு நாளில் மான்கள் என்றொரு இனவகை ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்ற குக்கிராமத்தில் 2020ல் வாழ்ந்து வந்தன என்று பாடம் படிக்கலாம் குழந்தைகள் ஆங்கிலத்தில்! நல்லவேளை கலைஞர் டிவி பொட்டி குடுத்ததால்..ஈரோட்டிலிருந்து இப்போது கேபிள் வருவதால்..செல்போன்களயும் பயன்படுத்த தெரிவதால்..நியூசில் அந்த இந்தி சினிமா நடிகன் மான் வேட்டையாடி படாத தும்பம் பட்டதை அறிந்ததால் இறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மயில் நம் தேசியப்பறவை என்பதை மயில் பார்த்த அன்றே சிறுவார்கள் சொல்லி தெரிந்து கொண்டவர்கள்!


விலங்கியல் பூங்காக்கள் நமக்கும் விலங்குகளுக்குமிடையே நல்லுறவை துவக்கி வைக்கும் இடமாக உள்ளது. நீ நீபாட்டுக்கு இரு. நான் நாம்பாட்டுக்கு இருக்கேன் என்ற கணக்கும் தெரிய வருகிறது. விலங்கியல் பூங்காக்கள் மக்களுக்கு ஆர்வமளிப்பதில்லை. அவைகளை இழுத்து மூடுங்கள். அவைகள் காடுகளில் இயற்கையாக வாழ்ந்தாலே போதும் என்கிறான் பட்டேல் நாவலில். ஆனால் இயற்கையையும் நாம் அழித்துக் கொண்டிருக்கிறோம்.  இயற்கையிலாகட்டும், விலங்கியல் பூங்காவிலாகட்டும் எங்கும் பேரழிவை ஏற்படுத்தும் ஒரே விலங்கு மனிதன் தான்.

பூங்காவில் அனுமதிச்சீட்டு வழங்கும் இடத்திற்கு அருகில் பட்டேலின் தந்தை சுவற்றில் கொட்டை எழுத்தில் சிவப்பு வர்ணத்தில் எழுதியிருந்த வாசகம்…… “இந்தப் பூங்காவில் மிகப்பெரிய ஆபத்து விளைவிக்க கூடிய விலங்கினை நீங்கள் அறிவீர்களா?” –அங்கே அம்புக்குறி இட்டு ஒரு திரையை காட்டியது. ஆர்வக்கோளாறு ஆசாமிகள் திரையை விலக்கினால் அங்கு இருந்தது முகம் பார்க்கும் ஆடி!

வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள் தேய்மானம் அடையும்போது மக்கள் புலம் பெயர்கிறார்கள். நமக்கான மகிழ்ச்சியும், வளமும் இங்கில்லை என்கிற வேறு எங்காவது இருக்கும் என்கிற எண்ணம் உந்தும் போதும் மக்கள் புலம் பெயர்கின்றனர். பட்டேலின் தந்தை மனதில் நவ இந்தியா உடைந்து நொறுங்கிவிட புலம் பெயர அவர் தீர்மானிக்கும் ஊர் கனடா! அதுவும் கப்பலில்! பாண்டிச்சேரி விலங்கியல் பூங்கா மூடப்பட்டு விட்டது.

விரைவில் துவங்க இருந்த பூங்காக்கள் விலங்குகளை வாங்கிக் கொள்ள முன் வருகின்றன. சில வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன். கனடா விலங்கியல் பூங்காவிற்கு சில கப்பலில் ஏற்றப்பட்டன. கப்பல் கிளம்புகையில் பட்டேல் பரவசமாகிறான்..இங்கு பாகம் ஒன்று முடிவுக்கு வருகிறது.

கப்பல் மூழ்கியதிலிருந்து பாகம் இரண்டு ஆரம்பமாகிறது. ஒரு லைப் படகில் இருக்கும் பட்டேல் ரிச்சர்ட் பார்க்கர் என்ற தத்தளிக்கும் புலியை ஏற்றிக் கொள்கிறான். அதனிடம் “ரிச்சர்ட் பார்க்கர், நடந்ததை உன்னால் நம்ப முடிகிறதா? இதெல்லாம் கெட்ட கனவாகிப் போகாதா/ உண்மை இல்லைன்னு ஆகக் கூடாதா? இன்னமும் கப்பலில் எனது இடட்தில் இருப்பதாக அமையக் கூடாதா? ஏதோ தூக்கத்தில் புறண்டு அலறி விழித்டுக் கொண்டதாக ஆகக் கூடாதா? ப்பீப்..பீப்..”

பேச்சு ஒன்று தானே மனிதனுக்கான வரம்! தனக்கான துணைகளாக காலொடிந்த வரிக்குதிரை, ஓநாய், மனிதக்குரங்கு இவற்றுடன் பசிபிக் பெருங்கடலில் அவன் பயணம் துவங்குகிறது. கழுதைபுலிக்கு உணவாக காலொடிந்த குதிரை. அது உயிரோடு இருக்கையிலேயே பிய்த்து உண்கிறது. விலங்கினங்களுக்கு பசி என்கிற போது கண்ணில் தென்படும் உயிரை வதைத்து கொல்வதும் உண்பதும் மனிதனிலிருந்து வேறு என்பதையே காட்டும். பட்டேலால் அதை தடுக்க முடிவதில்லை. மனிதக்குரங்கை ஓநாய் கொல்ல வருகையில் ஒரு அப்பு அப்பி விடுகிறது. பட்டேல் குரங்கை பாராட்டுகிறான். ஆனாலும் குரங்கை ஓநாய் கொல்கிறது. உயிருக்கான போராட்டம் நாவல் நெடுக ஆழமாய் விதைக்கப்பட்டு விருட்சமாய் நிற்கிறது. கறுத்த இரவுகள், உப்புக்காற்று, புயல்மழை என்று பட்டேல் படும் துன்பங்கள் ஜீரணிக்க முடியாதவைகளாக வடிவெடுத்து படிபவர்களை துக்கத்தில் ஆழ்த்துகிறது நாவல். ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் படித்த இலக்கிய ஆசான்கள் காலம் கடத்தி மீண்டும் கடல் சார்ந்த ஒரு புதினத்தை படிக்க வேண்டிய நிலையில் முக்கியமான நாவல் இது. நாவலே புலிக்கும் பட்டேலுக்குமான உறவை சொல்வதிலிருந்து தான் ஆரம்பமாகிறது. மொத்தமாக 227 நாட்கள் ரிச்சர்ட் பார்க்கரும், பட்டேலும் கடலில் பயணிக்கிறார்கள்.

ரிச்சர்ட் பார்க்கர் ஓநாயை கொன்று தன் பசியை தீர்த்துக் கொள்கிறது. பட்டேலை கொன்று விட முயற்சிக்கிறது. கையிலிருக்கும் துடுப்பால் தற்காத்துக் கொள்கிறான். படகில் கிடைத்த பொருட்களைக் கொண்டு சின்னதாக தனி தெப்பம் அமைத்துக் கொள்கிறான் பட்டேல். வாழ்வில் மாமிசமே உண்டறியாதவன் பசிக்காக பச்சை மீன்களை உணவாக்கிக் கொள்கிறான். ரிச்சர்ட் பார்க்கருக்கான மீன்களையும் இவன் தூண்டிலால் பிடிக்கிறான்.

நாவலாக இதை படித்து முடித்த பிறகு இன்னும் ஒரு வருடத்திற்கு வேறு நாவலை தொடவேண்டியதில்லை என்ற மனநிலையில் இருந்தேன். என் அய்ந்தாம் வகுப்பு வாலன் துரையரசு அய்ந்து வயதிலிருந்தே உலகப் படங்களை பார்த்து ரசிப்பவன் என்பதை பல இடங்களில் சொல்லிவிட்டேன். அப்படி பழக்கப் படுத்தியவன் ஓழலப்பதி ஷாராஜ். துரையரசுவிற்கு என் பியர் பாட்டில் காலியாகும் வரை படித்த புத்தகத்தின் கதையை சொல்ல ஆரம்பித்தேன். சுவாரஸ்யத்தில் நான் கொறித்துக் கொண்டிருந்த மாங்காய், நெல்லி பீஸ்கள் முழுதையும் தீர்த்து விட்டான். அட இன்னும் ஒரு பாட்டில் இருக்கேடா..அதுக்குள்ள காலி பண்ணிட்டியே! என்றேன்.

 .


“நீ சொல்லச் சொல்ல கேக்க நல்லா இருந்துதுப்பா.. காரமே தெரியில.. காலி பண்ணிட்டேன்.. போயி அந்தப் படத்தை பார்க்கலாம்பா” என்றான். படத்தை முழுதாக பார்த்தவன்..”நீ கதை சொன்னது மாதிரி படம் இல்லப்பா” என்றான்.


நாவல்களை படமாக தருவதில் ஹாலிவுட்காரர்கள் சிங்கங்கள் என்றுமே! லைப் ஆப் பை படம் நான்கு ஆஸ்கார் பரிசுகளை வென்ற படம். இப்பபடத்தை இயக்கிய ஆங் லீக்கு சிறந்த இயக்குனருக்கான விருது கிடைத்தது. மேலும் ஒளிப்பதிவு, இசை,விஷுவல் எபக்ட்ஸ் ஆகிய பிரிவுகளிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தது.


2001 ல் வெளிவந்த நாவல் தான் இது. நாம் மொழியாக்கத்தில் பத்து வருடம் கழித்து படிக்கிறோம். நாவலை படிக்கயில் எந்த அளவு சுவாரஸ்யம் இருந்ததோ அதை துளி அளவும் இலக்காமல் திரையிலும் அனுபவிக்கிறோம் நாம். எப்பிடிடா எடுத்தீங்க? என்ற கேள்வி இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. நாவலை எழுதிய யான் மார்ட்டெலின் சொந்தக்கதையும் அல்ல இது. பிரேசில் எழுத்தாளர் சிக்லியர் எழுதிய “மேக்ஸ் அண்ட் தி கேட்ஸ்” கதையை காப்பியடித்து தன் இந்திய அனுபவத்தை சேர்த்து நாவல் எழுதியுள்ளார்.

திரையில் ரசித்தவர்கள் பலர் கடலில் தத்தளிக்கும் படேலின் இடத்தில் தாங்களே தத்தளிப்பதான உணர்வை பெற்றதாக கூறினர். கடல் பயணம் பற்றியான படங்கள் என்று ஜாஸ், டீப் புளூ சீ,என்று பார்த்து கடைசியாக டைடானிக் வரை பார்த்து விட்டோம். கடல் என் போன்றவர்களுக்கு என்றுமே பிரம்மாண்டமாய்த் தான் இருந்து வருகிறது. சாண்டில்யனின் கடல்புறாவை இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கடல்!

நாட்கள் பலவற்றிற்குப் பின் ஒரு தீவை படகு சென்றடைகிறது. தீவில் உயர்ந்த மரங்கள் நிரம்பவுள்ளன. தீவில் கூட்டமாய் மீர்காட்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. ரிச்சர்ட் பார்க்கர் அவைகளில் சிலவற்றை உணவாக்கிக் கொள்கிறான். அது ஒரு அழிவுத்தீவு என்பதை உணர்ந்த பட்டேல் சீக்கிரமே கிளம்பி விடுகிறான். இறுதியில் மெக்சிகோவின் கரையை அடையும் படகிலிருந்து இருவருமே தரைக்கு வருகிறார்கள். ஒரு நாயாக இருந்திருந்தால் நினைவு தப்பப் போகும் பட்டேலுக்கு அருகில் குரைத்தபடி நின்றிருக்கும். ரிச்சர்ட் பார்க்கர் புலி என்பதால் தரையில் காலடி வைத்ததும் தனக்கு முன்பாக விரிந்து கிடக்கும் வனத்தை நோக்கி ஓடி விடுகிறது. இத்துடன் பயணம் முடிவுக்கு வந்துவிடுகிறது


கடலில் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதற்கான உந்து சக்தியை புலியாலே பெற்றதாக பட்டேல் கூறுகிறான்.எந்நாளிலும் இந்தியாவில் புலி ஒரு வழிபாட்டுக்கான குறியீடு! புலி கடவுளரின் வாகனமாக மதிக்கப் படுகிறது. ஆனால் அது எப்போதுமே ஒரு கொடிய விலங்கு. கடல் எக்காலத்திலுமே புலி சந்தித்திராத ஒரு பகுதி. கடலில் புலி சாதிக்க எதுவும் இல்லை. மனிதனுக்கு கடல் ஏற்படுத்தும் ஒவ்வாமைகள் புலிகளுக்கும் ஏற்படுத்தும். இறக்கப் போகும் தருவாயை அடைந்த ரிச்சர்ட் பார்க்கரை கொட்டும் மழையில் பட்டேல் தன் மடியில் போட்டு கதறும் ஒரு காட்சி போதும் கடலின் துன்பத்தை நாம் உணர்ந்து கொள்ள!

ஜப்பானிய ரிப்போர்ட்டர்கள் இருவர் பட்டேலை சந்தித்து கடைசியில் எப்படி நடந்தது இது? என்கிறார்கள். பட்டேல் சொன்னவற்றை அவர்கள் நம்பத் தயாரில்லை என்ற போது பட்டேல் மாற்றிச் சொல்கிறான். மனிதக்குரங்கை தன் அம்மாவாகவும், புலியை இவனாகவும்,கழுதைப் புலியை சமையல்காரனகவும்! அதை நம்புகிறார்கள் அவர்கள்! நாமும் அப்படியே நம்புவோம்!

நம் இயக்குனர் ராமநாராயணன் இந்தப் படத்தை எடுத்திருந்தால்??!! புலி பட்டேலிடம், “எனக்கு பசிக்குது மீனை பிடிச்சு குடுடா நண்பா” என்று கேட்டிருக்கும். மனிதக்குரங்கு ஓநாயிடம், “என்னை ஏண்டா கொல்ல வர்றே? போடா நாயி” என்று சொல்லியிருக்கும். குழந்தைகள் கூட்டமாய் சிரித்திருப்பார்கள். பள்ளிகளில் ஆசிரியர்கள் காலைக் காட்சிக்கு கியூவில் மிரட்டியபடி தியேட்டருக்கு கூட்டிப் போய் காட்டியிருப்பார்கள். நடக்கவில்லை!

 மேலே காமிக்ஸ் பற்றியும், இந்திரஜால் கதைகள் பற்றியும் ஏன் பேசினேன் என்றால் அவைகளை தாண்டி பலகாலம் வந்து விட்டாலும் அவற்றின் நீட்சியாகவே லைப் ஆப் பை நாவலை நான் பார்க்கிறேன்
.
என் பெயர் பட்டேல் பை
எதிர் வெளியீடு
96,நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002
பேச : 04259-226012, 98650 05084
விலை: ரூ.299
Post Comment

கருத்துகள் இல்லை: