சனி, ஜூலை 13, 2013

என்னைப் பற்றி நண்பர்கள்


நேற்று...

எல்லைகள் தாண்டிய எழுத்துகளை தரும் ஒரு எளிமையான எழுத்தாளனைப் பார்த்தேன். ஒரு இனிய தகப்பனை, தன் மகனைக் கூட தனக்கு சரியாக நடத்தும் ஒரு நண்பனை, அப்பாவை நினைத்து கண்கலங்கிய பாசமிகு மகனை, வரும் போது பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க என கட்டளை பெரும் குடும்பத்தலைவனை... இலக்கிய உலகில் எனக்கு விஞ்சியும் யாருமில்லை, எனக்கு கீழும் யாருமில்லை எனும் சமநிலை கொண்டவனை, தன் திறமைகளை எல்லாம் மறைத்து வைத்துக் கொண்டு 200க்கும் 300க்கும் சிறு கதைகளை எழுதிக் கொண்டிருந்த, பொருளாதார சிக்கல்களில் சிக்கித் தவித்து, எப்படியாவது தன்னை நிலைபடுத்திக் கொள்ள, ஆதிக்க சக்திகளிடமிருந்து போராடும் மனவலிமை மிக்க ஒருவனை பார்த்தேன்...

அவர், எனக்கு மிக அருகிலிருந்தும், இன்னும் முழுமையாக அறியப்படா ஒருவனாய், வாய்பாடி கிராமத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு தமிழ் இலக்கியத்தின் தலையில் கொட்டிக் கொண்டே இருக்கும் அண்ணன் வா. மு கோமு.

மீண்டும் சந்திப்போம் அண்ணா.

மழைக்காதலன்


பின்வாசல் மண்தொட்டியில் கும்பலாக தண்ணீர் குடிக்கும் மயில்கள்..!

வாசலில் நின்று பார்த்தால் எதிரெதிர் திசையில் வி்ரையும் ரயில்கள்..!

புதரும் சிதறிய பாறையும் நிரம்பிய தரிசு நிலங்கள்..!

நாகரீக ராட்சன் வன்புணர்வு கொள்ளாது மிச்சமிருக்கும் கிராமங்களில் அதுவும் ஒன்று..!

குறைவான வீடுகள்.. நிறைவான நிசப்தம்..!

வாய்ப்பாடி..!

இம்மாதிரியான ஒரு ஊரை விட்டு ஒரு எழுத்தாளன் வெளியே போயிருந்தால்தான் நான் ஆச்சரியப்படுவேன்.. ஆனால் அவர் போகவில்லை.... இனியும் போவதாக இல்லை என்கிறார்...!

அவர்.. எழுத்தாளர் வா.மு.கோமு..

யதார்த்தங்களை வார்த்தை சதுரங்களைக் கொண்டு வண்ணமடித்துக் கொண்டிருக்கிற சமகால எழுத்தாளர்களுக்குள் வாக்கியங்களை நிர்வாணப்படுத்தியவர்..!

பாலியலை வலிய உட்புகுத்திய எழுத்தாளர் என்கிற குற்றச்சாட்டுகளெல்லாம் அபத்தமான வாதங்கள்..! வர்ணனை வார்த்தை முகமூடி அணிந்து கொள்வதில் குற்றவுணர்வு கொள்கிறவரிடம் இம்மாதிரி முகத்திலடிக்கும் இயல்பபைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கமுடியாது..!

கொங்கு மண்டலத்தின் மண் வாசனையோடு எந்த அத்தியாத்திலும் நெகிழாதகள்ளியை அவர் எழுதியதற்ககுள் ஆகச்சிறந்தது என்கிறார்கள்.. நானும் அதைத்தான் வழிமொழிய வேண்டியிருக்கிறது.... எனென்றால் நான் அதைமட்டும்தான் முழுதாக படித்திருக்கிறேன்..!

சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் மங்கலத்து தேவதைகள், எட்றா வண்டிய.., அழுவாச்சி வருதுங்க சாமி, இவரது இன்னும் பல படைப்புகளை படித்தபின் பதிவிடுகிறேன்..

தன் எழுத்தைப்போலவே புற அலங்காரங்கள் எதுவுமன்றி இயல்பாகவே இருக்கும் நண்பர் வா.மு.கோமு வுடன்... ஒரு இல்லச்சந்திப்பில்...!


அரங்கன் தமிழ்

வா.மு.கோமு வின் எழுத்தை நான் சந்திக்க நேர்ந்தது சிறுபத்திரிக்கையின் மூலமான வாசிப்புப் பழக்கத்தின் போதுதான். எங்கள் கொங்குப்பகுதியின் விழிம்பு நிலை மனிதர்கள் பற்றிய பதிவாகத்தான் அது என் அகத்தில் செயல்புரியத்துவங்கியது. ஆரம்பம் முதலே அவருடைய எழுத்து என்னை எவ்விதத்திலும் அசூசை கொள்ளச் செய்ய வில்லை. காரணம் எங்கள் பகுதியின் வட்டார வழக்கிலும் வாழ்க்கை நடைமுறையிலும் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ள கதைகளையும் சொல்லாடல்களையும் வாழ்க்கையின் மறுபக்கத்தையும் தான் வா.மு.கோமு வின் எழுத்தில் நான் கண்டடைந்தேன். அவ்வகையான வாழ்க்கைமுறை எனக்கு வாய்க்கவில்லை. ஆனாலும்கூட அதை அருகிருந்து ஆச்சர்யமாகப் பார்த்து வளர்ந்தவன். என்ற முறையில் அந்த வெள்ளந்தியான குசும்பு கொப்பளிக்கும் வாழ்க்கையின் சாரம் வா.மு.கோமுவின் எழுத்தில் மிகத் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பது கண்டு நான் வியப்புக் கொண்டேன்.
.
வா.மு.கோமுவின் எழுத்தின் வீரியம் தீவிரமாக வெளிப்பட்டது அவரின் சிறுபத்திரிக்கை தொடர்பான காலகட்டத்தில் மட்டும் தான். அங்கு புரையோடிக்கிடக்கும் புறக்கணிப்பு அரசியல்காரணமாகவும் லௌகீக நெருக்கடிகள் காரணமாகவும் மெல்ல வெகுஜன எழுத்துக்குத் தன்னைத் தானே மனவிருப்பமின்றி நகர்த்திக்கொண்டு வந்தவர். சிறுபத்திரிக்கை உலகில் அவர் செரிவுகூட்டி எழுதிய அப்பட்டமான பாலியல் எழுத்துக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகப் போகவே அவர்கள் வா.மு.கோமு மீது பல அவதுாறுகளை மிக நாசூக்காக சந்தியில் உலவவிட்டார்கள். கலாச்சாரம் காக்கும் மிக உயர்ந்த ரசனைக்கார வாசகர்களால் வா.மு.கோமு அவதுாறுக்குள்ளாக்கப்பட்டார். அவர்கள் அவர் மீது சுமத்தும் குற்றம் என்னவென்று பார்த்தால் பாலியலைத் தன் எழுத்தில் முன்வைக்கிறார் என்பதே.
பாலியல் தவிர்த்த உன்னத விஷயங்களைப் பற்றி எழுத பேச நம்மில் நிறைய பேர் இருக்கிறார்கள். அது அவர்களின் தேர்வு சார்ந்த விஷயம். அவர்களின் சமூகக் கோபங்களின் மீதோ அறச்சீற்றங்களின் மீதோ நமக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் வா.மு.கோமு போல் பாலியலை ஒரு கலைப் படைப்பாக உருவாக்கமுனையும் படைப்பாளி இனம் தமிழில் குறைவுதானே. மனித சமூக நாகரீக வளர்ச்சியின் சகல காலகட்டத்திலும் பாலியல் பற்றிய சுவையான கதையாடல்களும் காட்சிச் சித்திரங்களும் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துவந்துள்ளன. காஜுரோ சிற்பங்களுக்கும் ஆபாசப்படச் சவரொட்டிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை உணர்ந்து கொண்டால் மட்டுமே வா.மு.கோமுவின் எழுத்துக்குள் விரவிக்கிடக்கும் படிமங்கள் புரிபடும்.
வா.மு.கோமு எனக்கு நெருங்கிய நண்பர் கிடையாது. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் இருந்திருக்கிறேன். அவரை அவதானித்திருக்கிறேன். அவரின் எழுத்து வேலையை அருகிருந்து பார்த்து வியந்திருக்கிறேன். ஒரு பித்து நிலையில் தன் கதைகளை எழுதக்கூடியவர். படைப்புகளை எழுதிவிட்டுச் செப்பனிட்டுத்திருத்தும் அவசியமில்லாது கற்பனையின் பிரவாகத்துக்கு ஒத்திசைந்து தன் எழுத்தை நேரடியாக இயங்க விடுபவர்.
கதை புனையும் மனநிலையின்போது தவிர அவர் தன் நேர்பேச்சி்ல் ஒருநாளும் பாலியல் சம்பந்தமான சம்பவங்களையோ அசிங்கமான வார்த்தைகளையோ குறிப்பிட்டு ஒரு வார்த்தை கூடப் பேசியது கிடையாது. பெண்கள் மேல் மட்டுமல்ல பொதுவாக மனிதர்கள் மேலேயே வா.மு.கோமு மிகுந்த கண்ணியமும் மரியாதையும் கொண்டவர் என்பது அவரை நேரில் அறிந்த யாவருக்கும் தெரியும்.
வா.மு.கோமு வின் பாலியல் தொடர்பான கலை வடிவங்களைப் பற்றிய புரிதலோ அவரை எதிர்கொள்ளத் தேவையான மனவார்ப்போ இல்லாமல் அவரை அணுகுவது அவருக்கும் சரி நமக்கும் சரி இரண்டு தரப்புக்குமான மன அடுக்கைச் சீர்குலைக்கவே செய்யும். அவரை அவர் போக்கில் இயங்க விடுவோம். தமிழ் இலக்கியம் அவருடைய எழுத்து வகைக்கும் இடம் கொடுக்கும் என்று அதன் வரலாறு நெடுகிலும் உதாரணம் வைத்திருக்கிறது. அவருடைய எழுத்தில் உடன்பாடில்லாதவர்கள். சற்று ஒதுங்கிக் கொள்வோம். தயவுசெய்து வா.மு.கோமு வுக்குப் பசுந்தோல் போர்த்த முயற்ச்சிக்க வேண்டாம். அது அசிங்கமாக இருக்கும். ஏற்கனவே நம் சமூகத்தில் புலியினம் குறைந்து வருகிறது.

வீராகுமார்
Post Comment

கருத்துகள் இல்லை: