புதன், டிசம்பர் 04, 2013

நாட்டு நடப்புகள்நாட்டு நடப்பு
  வகுப்பறைகளை பள்ளியறைகளாக மாற்றிவரும் ஆசிரியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது நம்மைப் போன்றோரை திகைக்க வைக்கிறது. சமீபத்தில் வடுகபட்டி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சத்தியபிரபு மாணவியர்களிடம் சில்மிசம் செய்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆசிரியர்கள் மதுவின் போதையில் பள்ளிக்கு வருவதாகவும் கற்பிக்கும் பாடத்தை நடத்துவதில் உலறுவதாகவும் மாணவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் அலைபேசியில் மாணவிகளை பதிவு செய்தாகவும், வெளியே சொல்லக் கூடாதென மிரட்டுவதாகவும் சொல்கின்றனர்.
  இப்படியான காம ஆசிரியர்களை அந்தந்தத் துறை சார்ந்த அதிகாரிகளே பாதுகாப்பது தான் கேவலமான விசயம். அப்படியான பாதுகாப்பு விசயத்தைக்கூட அவர்கள் சும்மா, நண்பேண்டா என்று சொல்லிக் கொண்டு செய்வதில்லை. கையில் பைசா வாங்கிக் கொண்டு தான் “உடு நண்பா, இது சுஜூபி மேட்டரு.. நான் பாத்துக்கறேன் நாட்டுல நடக்காததையா நீ பண்ணிட்டே! என்று சொல்வதால் சில்மிச ஆசிரியர் தெம்பாக மீண்டும் பள்ளிக்கு ஆன்னா ஆவன்னா இயின்ன ஈயன்னா கற்றுத் தர கிளம்பி வந்து விடுகிறார்கள்.
  தங்கள் பள்ளி தான் மாநிலத்தில் முதல் இடத்தில் வரவேண்டும் என்பதற்காக மாணவர்களை காப்பி அடித்து விடை எழுத வைக்கும் ஆசிரியர்களைப் பெற்ற பள்ளிகளும் உண்டு. இதைச் செய்ய நிர்வாகமே தூண்டி விடுவதால் மாஸ் காப்பி எளிதான விசயமாகி விடுகிறது. நம்ம பொடுசுகள் வீடு வந்து, “மம்மி பரிட்சையில் புத்தகம் பார்த்து எல்லா கொஸ்டியனுக்கும் ஏன்சர் எழுதிட்டேன். நூத்துக்கு தொன்னூறு மார்க் வாங்குவேன் பாரு இந்த எக்ஸாம்ல” என்று சொல்வதுமில்லை.
  நாய்க்குப் பெயர் முத்துமாலை என்பது போல மாணவியிடம் சில்மிசம் செய்த ஆசிரியரின் பெயர் சத்தியப்பிரபு. இப்படி இந்த சத்தியப்பிரபு மட்டுமே நாட்டில் இல்லை. இன்னும் ஏராளமான காம ஆசிரியர்கள் பள்ளிகளில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கிய மாணவியர்களின் வாழ்க்கை சீரழிவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியுமா?
  முன்னோர்கள் கற்ற குருகுல கல்வி முறையில் அரசனின் மகன் என்றாலும் குருகுலத்தில் தங்கித்தான் கற்க வேண்டும். அன்று குருகுலத்தில் குருவானவர் அமர்ந்து பாடம் கற்பிக்க மாணவர்கள் நின்று கொண்டுதான் கல்வி பயின்றார்கள். எந்தக் குருவும் மாணவியிடம் சில்மிசம் செய்ததாக, சிறுநீர் கழிக்க அனுமதி தராமல் பிரம்பால் அடித்தார் என்றோ, தன் சொந்த வேலையை செய்ய கட்டாயப்படுத்தினார் என்றோ வரலாற்றில் நாம் படிக்கவில்லை.
  சமுதாயத்தின் ஆணிவேரையே பிடுங்கிப்போட முயற்சிக்கும் விஷப்பூச்சி தனிமனித ஒழுக்கச் சிதைவுதான். மாணவர்களிடம் விளக்கி நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே விஷ்த்தீயை கக்கினால் இவர்களிடம் பயிலும் மாணவர்கள் சாம்பலாவதை யாரும் தடுக்க முடியுமா என்ன?
  போராடுவோம் வெற்றி பெறுவோம்! என்ற கோஷங்களை நாம் பல போராட்டக் களங்களில் கேட்டிருக்கிறோம். கொஞ்ச காலம் முன்பு ஈங்கூரில் சிறப்பாக செயல்பட்டு வந்த நூல்மில் ஒன்றின் தொழிலாளர்கள் கூலி உயர்விலிருந்து அடிப்படை வசதிகள் வரை கேட்டு போராடினார்கள். கிராமப்புற நிழல்குடைகள் வரை போரடுவோம் வெற்றி பெறுவோம் என்று காவிக்கலரிலும், நீலக்கலரிலும் எழுதி வைத்தார்கள். அவர்கள் போராடினார்கள். ஆனால் வெற்றி பெற வாய்ப்பே இல்லாமல் அதன் எஜமானர் நூல் மில்லையே சாத்தி விட்டுப் போய்விட்டார். அவருக்கு வேறு தொழில்கள் நகர்ப்புறத்தில் இருந்தன. வருடம் பதினைந்துக்கும் மேலாகி விட்டது. அதில் வேலை செய்து மாதா மாதம் நல்ல தொகையை சம்பளமாக பெற்றவர்களுக்கு இன்று தாடி மீசை நரைத்து விட்டது. என்ன மாப்ளே பண்றே இப்போ? என்று கேட்டால் கோழிப்பண்ணையில் பீ வழிச்சுட்டு தீவனம் போட்டுட்டு இருக்கேன் என்றும், 100 நாள் ரோட்டு வேலைக்கு போயிட்டிருக்கேன் என்றும் சொல்கிறார்கள். வாழ்க்கையில் பசுமையாய் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் இன்று கரடு முரடாய் வாழ்க்கை ஓட்டுவது பரிதாபமான விசயம் தான்.
  ஈரோடு பூ மார்கெட் விடிகாலையிலேயே களை கட்டி விடும். நம் ஆசாமி ஒருவருக்கு அவசரமாய் ரெண்டுக்கு வந்து விட்டது. தூரப்போக முடியாத சூழ்நிலையில் இருளில் மளாரென அமர்ந்து விட்டார். பூனை போல் நழுவியும் விட்டார். மார்கெட் களை கட்டும் சமயம் பூ விற்பனையாளர் தன் கடைமுன் ஆய் உள்ளதைக் கண்டு முகம் சுழித்து அதன்மீது மல்லிகைப் பூவை தூவி விட்டு விட்டு ஏவாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.
  விடிந்ததும் வியாபரம் சூடுபிடிக்கத் துவங்கி விட்டது. பேண்ட், சர்ட் அணிந்த வாலிபர் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு இண்டர்வ்யூ செல்ல பூக்கள் வாங்க வந்தார். ”இது என்னங்ணா பூப்போட்டு கீழ கெடக்குது?” என்றார் கடைக்காரரிடம். அதுவா? அது மலச்சாமியப்பா! என்று சொன்னதும் பூவை வாங்கிக் கொண்ட வாலிபர் இன்று எப்படியாவது வேலை கிடைச்சிடணும் மலச்சாமி! என்று மும்பிட்டு விட்டு கிளம்பினார்.
  நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில்களை வாலிபர் சொன்னதால் வேலை கிடைத்து விட்டது. எல்லாம் மலச்ச்சாமி அருள் தான் என்று பூமார்க்ர்ட்டுக்கு ஓடி வந்தவருக்கு அதிர்ச்சி. மலச்சாமி இடம் பெயர்ந்து விட்டாரோ? கடைக்காரரிடம் இங்க மலச்சாமி எழுந்தருளி இருந்தாருங்களே? காணமே? என்றார். “முனிசிபாலிட்டி வண்டி வந்துது. வழிச்செடுத்துட்டு போயிட்டாங்க!” என்றார் அவரும்.
  கடலூர் மாவட்டம் ஆதனூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் படிப்பதற்காகவோ, இல்லை திரைப்படங்களில் வருவது போல பழி வாங்குவதற்காகவோ நல்ல பாம்பு ஒன்று நுழைந்து தான் வந்த வேலையை மறந்து படம் எடுத்து ஆட்டம் போடத் துவங்கி விட்டது. அங்கு பணியில் இருந்த ஆசிரியப் பெருந்தகைகளும், மாணவமணிகளும் அலறியடித்து ஓட்டம் பிடிக்கத் துவங்கி விட்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் பறந்தவுடன் அவர்களும் வந்து சேர்ந்து விட்டார்கள். தீயணைப்புத் துறையினர் தீப்பற்றி எரிகிறது, பட்டாஸ் குடோன் வெடிக்கின்றன என்றால் தான் ஆடத் தெரியாதவன் மேடை கோணை என்று சொன்னது போல் பாதை செரியில்லை கோணை அதனால் தாமதம் என்பார்கள்.
  பாம்பை காட்டில் விட்டுவிடலாம் என்று தீயணைப்பு வீரர்கள் முடிவெடுத்த போது வேடிக்கை பார்த்த உள்ளூர் பெண்கள் சாமியாடத் துவங்கி விட்டனர். “கோவில் பாம்பு இது.. காட்டுல கொண்டு போய் விடக்கூடாது. டோண்ட் டச் மை ஸ்னேக்! என்று உள்ளூர் கடவுளே பெண்கள் உடம்பில் நுழைந்து குறி சொல்லி விட்டதால் தீயணைப்பு வீரர்கள் திகைத்தனர்.
  தகவல் அறிந்து வந்த கம்மாபுரம் போலீசார், ஊராட்சித் தலைவர் சாமியாடிய பெண்களிடம் சமாதானம் பேசியும் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியாக ஊராட்சித் தலைவர், “சரி பாம்பை இங்கியே விட்டு விடுகிறோம். யாரையாவது அது கொத்தினால் அதற்கு முழுப் பொறுப்பும் நீங்கள் தான்” என்றார். இதைக்கேட்டதும் பெணகள் சாமி அடங்கி பெண்கள் நைசாக நழுவினர். சாமி கருவறைக்கு திரும்பி விட்டது. இதுவே நம் ஊர் என்றால் ஆளை விழுங்கும் அனகொண்டா பாம்பு என்றால் மட்டும் தீயணைப்பு துறைக்கு போன் போடுவார்கள். மத்தபடி கட்டுவிரியனாவது எஅல்ல பாம்பாவது! ஒரே போடாக போட்டு கொன்று கொண்டு போய் எறிந்து விடுவார்கள். பாம்பு வந்துச்சாம், அதைக் காப்பத்த சாமி வந்துச்சாம்!
  யானைக்குட்டி ஒன்னை தம்புரான் தன்னோட மரத்துல சங்கிலியால கட்டி வெச்சு வளத்துனாராம். அந்த யானைக்குட்டி அக்கட்டால போறதுக்கு சங்கிலிக் காலை இழுத்து இழுத்து பார்த்துட்டு முடியாதடா சாமின்னு உட்டுடுச்சாம். பல வருசம் போன பின்னால யானை பெரிய சைஸ்ல இருந்துச்சு. இப்பவும் அதே சங்கிலிதான் யானை ஒரு இழு இழுத்தா சங்கிலி காலோட வந்துடும். ஆனா அந்த யானை இழுக்கவே இல்ல. அது கடைசி வரைக்கும் சங்கிலியை அத்துடவே போறதில்ல. இப்போது குழந்தைகளும் நகர்ப்புறங்களில் இப்படித்தான் வளர்க்கப்படுகிறார்கள்.
  நீங்கள் ஜனநாயக நாட்டில் தான் வசிக்கிறீர்கள் என்கிற உண்மை உங்களுக்கு தெரியும். தமிழகத்தில் அங்கன்வாடி சத்துணவு மைய சமையல் கூடங்களை மேம்படுத்த நான்கு கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் சமைத்தார் என்பதற்காக இன்னொரு சமூகத்தினர் அதை ஏற்காமல் தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை தடுத்து அந்த உணவை சாக்கடையில் கொட்டிய சம்பவம் கிரிவில்லிபுத்தூர் கம்மாபட்டியில் நடந்தது.
  இப்படி ஒவ்வொரு கிராமமும் தங்கள் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் நிலைப்படுத்திக் கொள்ள நினைத்தால் இந்த நாடு மொழி வாரியாக மாநிலங்களாக பிரிக்கப்பட்டதைப்போல சாதி வாரியாக கிராமங்களாகத்தான் பிரிக்கப்பட வேண்டும். இன்று மாற்று சமூகத்தை சார்ந்த பெண்மணி சமைத்தார் என்பதற்காக ஏற்க மறுத்த ஊர் நாளை மாற்று சமூக ஆசிரியரையும் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள் என்பது தான் உண்மை.
   ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று அங்கன்வாடி பிள்ளைகள் சப்தம் போட்டு படிக்கும் போது ஊர் முழுக்க கிராமங்களில் கேட்கும். அவர்கள் பிஞ்சு மனதில் கூட ஜாதீய உணர்வுகளை வேர் விடச் செய்யும் செயல் இது தான். சிந்தனைகளை போதிக்கக் கூடிய பள்ளிகளிலேயே இப்படிப்பட்ட சமூக அவலம் என்றால் இந்த நாட்டில் சமூக வன்கொடுமை சட்டங்கள் எந்த அளவு கண்மூடி உறங்குகின்றன?
  ஆசிரமத்துக்குள் எலிகள் நடமாட்டம் அதிகம் என்பதால் சாமியார் ஒரு பூனை கொண்டு வந்து வளர்த்தினார். பூனைக்கு எலிகள் தீனியாயின. பூனைக்கு பால் வேண்டுமென்று சாமியார் பசு ஒன்றையும் அதைப்பராமரிக்க சிலரையும், அவர்களுக்கு புவ்வாவுக்கு வழி பண்ண ஒரு சமையல்காரியையும் பணியில் அமர்த்தினார். சமையல் கட்டில் இருந்த சமையல்காரி சன்னிதானத்துக்குள் நுழைந்தாள். சந்ததிகளை சாமியாருக்கு தந்தாள். இது பழங்கதை என்றாலும் இன்றும் புதிய கதை தான்.
  அரசு அறிவித்த இலவச ஆடுகள் சில பகுதிகளில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த ஆடுகளைப் பார்த்தால் பாவமா இருக்குங்க. மூக்கு, நெத்தி எல்லாம் பெரிய புண்ணுக! ரத்தமும், சீழும் வடியுது, எங்கியோ வெளி மாநிலத்து ஆடுகள் போல இருக்குங்க! என்றார் ஒருவர். வாங்கிச் சென்ற ஒருவரின் ஆடு இறந்து விட்டது. கால்நடை மருத்துவர் அவரிடம் ஆட்டை புதைக்கச் சொல்லி விட்டார். ஒரு வாரம் கழித்து கால்நடை மருத்துவருக்கு ஞானோதயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டின் காதில் இருந்த டோக்கன் நெம்பர் வேண்டும். டோக்கனை அரசிடம் ஒப்படைக்காவிட்டால் வேலை தனக்கு கூவி விடுமோ? என்று அஞ்சி மீண்டும் ஆட்டுக்காரரை வரவழைத்து காதில் இருக்கும் டோக்கனை எடுத்து வரச் சொல்லியிருக்கிறார். அவரோ அது ரொம்ப சிரமம் சார்! ஒரு ஆப் பாட்டில் ஜானக்சாவோ, ஓல்டு மங்கோ வாங்கி கொடுத்தீங்கன்னா போதையில போயி தோண்டி எடுத்துட்டு வந்து தந்துடுவேன்! என்றார். மருத்துவரோ ஆட்டையும் குடுத்து கூடவே இனி ஆப்பையும் கொடுக்கணுமா? என்று புலம்பி அதற்கு பணமும் கொடுத்தாராம்.
  பள்ளிப் பேருந்து ஓட்டை வழியாக சிறுமி ஸ்ருதி விழுந்து பலியான சம்பவத்திற்கு பிறகு பள்ளி வாகனங்களை போலீசார் அதிரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க இன்று சரியாக அவைகள் இயங்குகின்றன. அந்த சம்பவம் நடந்து முடிந்த ஒருவாரத்தில் தாம்பரம் அருகே டிப்பர் லாரி மோதி அட்சயா என்ற மாணவி உயிரிழந்தார். மக்கள் டிப்பர் லாரியை தீ வைத்து எரித்தனர். லாரியை எரித்து விடுவதால் சிறுமியின் உயிர் திரும்ப வந்து விடும் என்றால் இந்தச் செயல் சரிதான். இந்த லாரியையோ இல்லை அதுவழியாக வரும் ஏனைய லாரியையோ எரிப்பதால் உயிரானது திரும்ப வரப்போவதில்லை.
  பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது மாணவன் ஒருவன் தண்ணீரில் மூழ்கி பலியானான். பள்ளிக்கட்டிடத்தை ஏன் பொதுமக்கள் எரிக்காமல் விட்டார்கள்? என்று தெரியவில்லை. சாலை என்றால் ஒரு நியாயம், பள்ளி என்றால் ஒரு நியாயமா? எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடந்தால் தான் அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கும். அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே உயிர்ப்பலிகளும் நடந்துவிடுகிறது. இன்று தனியார் பள்ளிகள் நீச்சல், குதிரையேற்றம் என்று பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்ளையடிப்பதையே லட்சியமாக கொண்டு இயங்குகின்றன.
  நாளை பாடத்திட்டத்தில் ஹெலிக்காப்டர் ஓட்டப்பயிற்சி என்று பள்ளியில் கட்டணம் வசூலிப்பார்கள். பயிற்சியில் பள்ளிச் சுவற்றில் ஹெலிக்காப்டர் மோதி ஐவர் பலி என்றால் பெட்ரோல் டேங்க்கில் நட்டு லூசாகி விபத்து நடந்து விட்டது என்று அறிவிப்பார்கள். கேனையர்கள் நாம் நம் பிள்ளை செத்துப்போக எம்.எல்.ஏ வந்து தன் ஒருமாத சம்பளத்தை கொடுப்பாரு, தமிழக அரசு நிதி எவ்வளவு கொடுக்கும்? மத்திய அரசு எவ்வளவு கொடுக்கும்? என்று பார்த்தபடி இருப்போம்.
  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சகலகலா வல்லவர்களாக வர வேண்டும் என்று பேராசைப்படுவதால் நடக்கும் விபரீதங்கள் இவை. தகுதிக்கு மீறி பிள்ளைகளிடம் திணிக்கும் பள்ளியின் ஆசை, பெற்றோர்களின் ஆசை இவைகள் தான் இது போன்ற கவனக் குறைவான மரணங்களுக்கு காரணம். அசம்பாவிதங்கள் நடந்தபிறகு தான் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை அரசு ஆராயும்.
  கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளை புதைத்து விடுவதைத்தான் பண்ணை உரிமையாளர்கள் ஒரு காலத்தில் செய்து வந்தார்கள். மீன் பண்ணை வைத்திருப்பவர்கள் மீன்களின் உணவுக்காக இறந்த கோழிகளை பயன்படுத்தினார்கள். இப்போது கோழிப்பண்ணைகளில் இறந்த கோழிகளுக்கும் மவுசு வந்து விட்டது.
  திருப்பூரில் மாலை நேர தள்ளுவண்டிக் கடைகளில் இறந்த கோழிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இது திருப்பூரில் மட்டுமல்ல. திருப்பூர் காமராஜ் ரோட்டில் 200 கிலோ கறிப்பையுடன் டிவிஎஸ்சில் சுகாதார ஆய்வாளரின் சோதனையின் போது பிடிபட்டார். செத்த கோழிகளை புதைக்க தூக்கிப் போட்டு விட்ட பிறகு பண்ணை உரிமையாளரே போன் செய்து தாவைப்படுவோருக்கு சொல்லி விடுவாராம். “ஆவுறதை எடுத்துக்க, குழிய மூடப்போறோம்” தேடிவந்தவர்கள் கோழி குப்பையை கலைப்பது மாதிரி களைத்து ஓரளவு சுத்தம் என்றால் எடுத்துக் கொள்வர். புழு நெளிந்தால் குழிக்குள் வீசி விடுவர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு கோழியின் விலை ஐந்து ரூபாய்.
  தள்ளுவண்டிக் கடைகளை நாம் தாண்டுகையில் கோழிச்சில்லியின் வாசனை மூக்கைத் துளைத்து தன்பக்கமாக இழுக்கும். வண்டியை ஓரம் கட்டிவிட்டு ஒரு ப்ளேட் சாப்பிட்டுவிட்டு கிளம்புவோம். பிறகு நோய் நொடி என்று மருத்துவமனை தேடி ஓடுவோம். மருத்துவர் நன் உயிரை காப்பாற்ற பீஸ் கேட்பார். இருபது ரூபாய் சில்லி நம்மை செலவீனம் செய்ய வைத்து விடுகிறது.
  பண்ணைகளில் திடீரென இறக்கும் கோழிகள் ஏதாவது ஒரு பெயர் தெரியாத கிருமியின் தொற்றால் தான் கூட்டமாய் சாகின்றன. அது நிச்சயம் பண்ணை உரிமையாளருக்குத் தெரியும். அவரே ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அதே சிக்கனை அதிக விலை கொடுத்து ஊசி ஸ்பூனால் குத்திச் சாப்பிடுவார். அது தன் பண்ணையிலிருந்து ஐந்து ரூபாய் விலையில் சென்ற கோழியின் சிக்கன் என்பது அவருக்கும் தெரியாது. பின்னே வியாதியானது ஏழை, பணக்காரன் என்று பார்த்துக் கொண்டா வருகிறது?
  செய்தித் தாள்களில் புதுசு புதுசாய் செய்திகளை பார்வையிட நேர்கிறது. பாம்பு கடித்த ஒரு பெண் உள்ளூரில் பச்சிலை வைத்தியம் பார்த்துக் கொண்டாளாம். வீட்டினுள் வந்த பாம்பும் அடித்துக் கொள்ளப்பட்டு விட்டது அக்கம் பக்கத்தினரால். தனது குழந்தைக்கு பின் அவர் தாய்ப்பால் புகட்டினாராம். குழந்தை இறந்து போய் விட்டது.
  அடுத்ததாக வீட்டில் கணவர் நல்ல குடிகாரர். விடுமுறை நாளில் குவாட்டரை குடித்து விட்டு பாட்டிலை தூர எடுத்துப் போய் வீசாமல் மட்டையாகி விட்டார். தவழ்ந்து வந்த குழந்தை பாட்டிலின் மூடியை எடுத்து விழுங்கி விட்டது. அது குழந்தையின் தொண்டையில் சரியாக சிக்கிக் கொண்டது. தூக்கிக் கொண்டு தாய் மருத்துவமனை ஓட போதையில் கணவரும் தள்ளாடி சாமீஈ.. சாமீஈ என்றோடினார். குழந்தை மூச்சுத் திணறி இறக்கும் சமயத்தில் மருத்துவர் மூடியை எடுத்து விட்டார். குழந்தை தகப்பனைப் பார்த்து இப்போது சிரித்தது. வெற்றியைக் கொண்டாட டாஸ்மார்க் ஓடினார் தந்தை.

  விறகு அடுப்புக்கு அரசாங்கம் கேஸ் அடுப்பு தந்ததால் டாட்டா சொல்லி விட்டார்கள் கிராமங்களில். மின்சார அடுப்பு வந்தது. அதையும் வாங்கி உபயோகித்து அதிசயப்பட்டார்கள். கரியடுப்பை கைகழுவினார்கள். அம்மிக்கல்லை நகர்த்திக் கொண்டு போய் ஓரம்பாரமாய் போட்டார்கள். ஒரு காலத்தில் துவையல் அரைக்க அதை அம்மச்சி பயன்படுத்தியதாக குழந்தைகளை கூட்டிப் போய் மியூசியப் பொருளாக காட்டினார்கள். உரல் தேவையில்லை என்று கொண்டு போய் பாங்கிணற்றில் போட்டார்கள். துணி துவைக்கும் கல்லை மறந்து வாஷிங் மெஷின் வாங்கினார்கள். துணி துவைக்கவே என்றிருந்த உள்ளூர் சனக்காரர் வேறு தொழில் பார்க்க போய் விட்டார். ஆட்டாங்கல்லை ஆட்டி நகர்த்திக் கொண்டு போய் ரோட்டோரக் குழியில் தள்ளினார்கள். மழை பெய்யலை என்று அதையும் ஆட்டோ போட்டு தூர ஊரில் சாமத்தில் போட்டார்கள். கிரைண்டர் என்று கொண்டு வந்து வைத்து சுவிட்ச் போட்டு மாவாட்டினார்கள். அது அரைபடும் நேரத்தில் சன் டிவியையும் எட்டிப் பார்த்துக் கொண்டார்கள். காய்கறிகளை கூடையில் வைத்திருந்தவர்கள் ப்ரிட்ஜ் என்ற கூடை வாங்கி அதனுள் திணித்தார்கள். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாய் இன்று மின்சாரம் இல்லாமல் அல்லல்படுகிறார்கள்.

Post Comment

1 கருத்து:

kadhar ali சொன்னது…

ஏதோ உங்களால முடிஞ்சத சொல்லி போட்டிங்க.திருந்தக்கூடியவங்க திருந்துணா சரி!