திங்கள், டிசம்பர் 09, 2013

இரண்டு அடேங்கொன்னியா கதைகள்தோழரின் படைப்புகள்

  அந்த நகரத்தின் பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கிய பழனிச்சாமி தனது தோள் பையையும், சூட்கேசையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு இறங்கினான். பேருந்து நிறுத்தம் இறைச்சலாக இருந்தது. எல்லோரும் பரபரப்பாய் தங்களது பேருந்துகளை தேடி ஓடிக் கொண்டிருந்தார்கள். இவன் இறங்கிய பேருந்து மள மளவென ஜனம் நிரம்பி கர்ப்பிணி பெண் போல நின்றிருந்தது. பழனிச்சாமி தன் கடிகாரத்தைப் பார்த்தான். அது இரவு எட்டு மணி என்றது. இனி நடந்தே வீட்டுக்கு போய் விடலாம் என்று முடிவு செய்து கிளம்பினான். தோள்ப்பையை விட சூட்கேஸ் தான் அதிகமாய் கனத்தது.

  மூத்திரம் வேறு அவசரமாய் முட்டிக்கொண்டு நின்றது. பேருந்து நிறுத்த காம்பெளண்டு சுவர் ஓரத்தில் வரிசையாக எல்லோரும் அமர்ந்தும், நின்று கொண்டும் மூத்திரம் பெய்து கொண்டிருதார்கள். இரவு வேளை என்பதால் யாரும் இலவசமாய் சுவரோரம் கட்டி வைத்திருந்த சிறுநீர் கழிக்குமிடத்தை பயன்படுத்தவில்லை. பழனிச்சாமி தலை மீது தன் சூட்கேசை தூக்கி வைத்துக் கொண்டு சுவரோரம் ஒதுங்கினான். அருகில் இவனைப்போலவே அவசரமாய் சுவற்றில் பிஸ் அடித்தவன், மணி எட்டுக்கும் மேல இருக்குமுங்களா? என்றான். எட்டு தான் ஆச்சு! என்றவன் அவன் கையில் வார்ச் இருப்பதையும் பார்த்தான். ஜிப்பை மேலேற்றிவிட்டு திம்பியவன் நிறுத்தத்தை விட்டு வெளியே பிரதான சாலைக்கு வந்தான்.

  பழனிச்சாமி இந்த நகரத்தில் குப்பை கொட்டிக்கொண்டு திரிந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. சுத்தமாக ஊரை விட்டுப் போய் நான்கு வருடமாகி விட்டது. பெரிதாக மாற்றம் எதுவும் அடைந்திருக்கவில்லை. பேருந்து நிலையம் மட்டும் புதிதாக ரயில்வே ஸ்டேசனுக்கு வடக்கே துவங்கியிருக்கிறதாம். பேருந்து ஏறுகையில் நடத்துனர் புதிய பேருந்து நிலையமா? பழையதா? என்று தான் கேட்டார். புதிய பேருந்து நிலையம் எங்கே என்று கூட இவனுக்குத் தெரியாது. பழையது என்று சொல்லி டிக்கெட் வாங்கிக் கொண்டான். இந்தப்பேருந்து புதிய பேர்ந்து நிலையம் செல்லாதாம். அருகில் அமர்ந்திருந்தவர் தான் தகவல்களை சொன்னார்.

  பழனிச்சாமி தன் தாய் தந்தையரை பார்த்து நலம் விசாரித்து விட்டு இரண்டு நாள் தங்கிப்போகத்தான் அத்தனை பணியிலும் பெங்களூரிலிருந்து வந்திருந்தான். பணி மாற்றலாகி முன்பு போனவன் தான். ஊரையும் தாய் தந்தையையும் மறந்தே விட்டான். இதோ வருகிறேன் இதோ வருகிறேன் என்று போனில் சொல்லிச் சொல்லி இவனுக்கே சலித்துப்போய் விட்டது. எந்த நேரமும் வேலை வேலை என்றிருந்து இயந்திரமாகி விட்டான். இந்தமுறை விடுப்பைச் சொல்லி விட்டு கிளம்பிவிட்டான். வேலை எல்லா நாட்களும் தான் இருக்கிறது. வேலை இல்லாத நாள் என்று ஒரு நாளும் இவனுக்கு இல்லை. இவனது உயரதிகாரி இந்த ஐந்து நாள் விடுப்புக்கு காலில் எல்லாம் விழுவான் பழனிச்சாமி என்றெல்லாம் எதிர் பார்த்தார். போக அப்படிச் செய்வான் என்று தன் சூ அணிந்த காலை இவன் பக்கமாக நீட்டிக் கொண்டே இருந்தார். பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்றால் குழந்தைகள் கூட தூக்கி கனம் பார்க்கத்தான் செய்யும். பழனிச்சாமியும் தன் விடுப்பிற்காக எதையும் செய்ய தயாராக இருந்தான்.

  பழனிச்சாமி வீட்டுக்கு ஒரே பிள்ளை. இவனுக்கு மூத்தவன் ஒருவன் பிறந்ததும் இறந்ததாக சின்னவயதில் உறவினர்கள் சொல்லிக் கொள்கையில் தெரியும். அவன் உயிரோடு இருந்திருந்தால் தம்பியுடையான் படைக்கஞ்சான் என்று இவனை சொல்லிக் கொண்டிருந்திருப்பான். ஆனால் இவன் ஒரு நாள் கூட, டேய் அண்ணா கவலைப்படாதடா நான் பாத்துக்கறேன் என்று சொல்லவே போவதில்லை அவனுக்கு. இவன் அம்மாவிடம் அப்படி ஒரு அண்ணன் பிறந்தானா? என்று ஒரு நாளிலும் கேட்டதில்லை. அவர்களின் குடும்பச் செலவுக்கு என்று மாதா மாதம் பணம் அனுப்புவதோடு பெற்ற கடனை தீர்த்துக் கொண்டிருந்தான்.

  ஒன்றே ஒன்று என்று அரசாங்கம் சொன்னது போல் பெற்றுக் கொண்ட தம்பதியர் எல்லோருமே அந்த ஒன்றே ஒன்றை தங்கள் கண்களுக்குள் வைத்திருந்து பார்த்துக் கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இந்த நான்கு வருடங்களாக அவர்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் போய் விட்டது. இப்படி எங்கேயோ சென்று வேலை செய்து சம்பாத்தியத்தை அனுப்புவான் என்றா பெற்று வளர்த்தினார்கள்? அவர்கள் ஆசையெல்லாம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றிருப்பவன் தங்கள் கைக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்று தான் ஆசை வைத்திருப்பார்கள். ஆனால் சிறு வயதிலிருந்தே இவன் தேசாந்திரி. ஊர் சுற்றுவது என்பது இவனுக்கு பிடித்தமான விசயம். நண்பர்களூடன் சேர்ந்து கொண்டானென்றால் டூர் தான். அந்த ஆசை இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்றாலும் குடும்பம் என்று ஒன்று அமைந்து போனதால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாகி விட்டான்.

  இந்த நான்கு வருடங்களில் பழனிச்சாமி தன் மனதளவிலும் கூட நினைத்தேயிராத சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது தான். குறிப்பாக அவனது பணியில் ஒரு மரியாதையான பீடம். அடுத்ததாக ஆபீஸில் இருந்த கன்னடப்பைங்கிளி கார்த்தியாயினியின் காதல். அவள் வீசிய வலையில் இவன் கேள்வியெதுவும் கேட்காமலே போய் விழுந்தான்.. உறவினர்களுக்குக்கூட தெரியப்படுத்தாமல் அவளை மணந்து கொண்டான் இப்படி ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்தேறி விட்டன.

  ஊருக்கு சென்று வருவதாய் கார்த்தியாயினியிடம் இவன் சொல்கையில் அவள் முகம் சுண்டிப்போனது. அவளையும் இங்கு கூட்டி வருவதுதான் இவனது யோசனையும். ஆனால் அவளுக்கு தூரப்பிரயாணம் உடம்புக்கு ஒத்துவருவதில்லை. கார்த்தியாயினி வெறும் ஒரு பூ. இவன் ஊருக்கு கிளம்புவதே தன்னை விட்டு ஓடிப் போகிறான், இப்போது பார்ப்பது தான் கடைசி என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ளும் பூ. அவளை பிறகொரு நாள் கூட்டி வரும் யோசனையில் தனியாக புறப்பட்டு விட்டான். கார்த்தியாயினிக்கு தன் அழுகையால் இவன் திட்டத்தை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கையும் பொய்த்து விட்டது.

  வில்ஸ் பில்ட்டரை ருசித்து இழுத்து புகை ஊதியபடி நடந்தவன் கண்களுக்கு குறுக்கு வழியில் இவன் செல்லக்கூடிய வீதி வெறிச்சோடிக் கிடப்பது ஆச்சரியப் படுத்திற்று. நகரமே சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இரவு வேளையில் இந்த வீதிக்கு மட்டும் என்ன நோக்காடு வந்து விட்டது. சாலையைக் கடந்து போய் மெர்க்குரி விளக்குக்கு அடியில் வைத்திருந்த பெரிய பலகையில் எழுதப்பட்டு இருந்ததை வாசித்தான். “இந்த வீதிக்குள் நடப்பது உசிதமான காரியமல்ல”

  பழனிச்சாமிக்கு ஒன்றும் விளங்கவில்லை.. இந்த வீதியில் இவன் சென்றால்  வீட்டுக்கு உடனடியாக சென்று விட முடியும். மிகச்சுலபமான குறுக்கு வழி இது. இந்தப்பாடையை நம்பித்தான் ஆட்டோ பிடிக்காமல் பேருந்து நிலையத்திலிருந்து நடந்தே வந்தான். ஊர் மாறிவிட்டது என்று இப்போது நம்பினான் இவன். இனி நேர் வடக்கே சென்று முசல்மான் வீதி வழியாக சுற்றித்தான் வீடு சென்று சேர முடியும்.

  எதிர்க்கே சனம் வீடு போகும் அவசரத்தில் இருந்தது. ஒரு பெரியவரை நிறுத்தி வீதி பற்றி விசாரித்தான். அதான் போக வேண்டாமுன்னு போட்டிருக்கான்ல! என்று அழுத்தமாய் சொல்லிப் போனார். இவனிடம் பேசுவதற்கு நேரமில்லை என்பது மாதிரி அவசரத்தில் இருந்தார். நகரங்களில் மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் அல்லது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நகரம் நிர்பந்தப்படுத்தி விடுகிறது.

  இந்த நான்கு வருடங்களில் தன் வாழ்வில் மட்டும் திசைகளின் மாற்றம் நடந்து விடவில்லை. சொந்த ஊரிலும் வீதிகளின் திசைகளும் கூட மாறித்தான் போய் விட்டன என்று பழனிச்சாமி யோசித்தபடியே வீதியின் எதிர்க்கே தென்பட்ட பேக்கரிக்கு நடந்தான். மாஸ்டரிடம் டீ ஒன்று சொன்னான். அவரோ டோக்கன் குடுங்க, என்றார். கல்லாவில் அமர்ந்திருந்த பெண்ணிடம் டோக்கனை காசு கொடுத்து வாங்கி வந்து மாஸ்டரிடம் கொடுத்தான். அந்த வீதி ஏனுங்க அப்படி? உள்ள வெறோச்சுன்னு இருக்கு? என்று பேச்சுக் கொடுத்தான். மாஸ்டர் டீ டம்ளரை இவனிடம் கொடுத்து விட்டு பேச்சை ஆரம்பித்தார். இவன் டீயை சுவைத்துக் கொண்டே கேட்டான்.

  “இந்த ஆறு மாசமாத்தான் யாரும் இந்த வீதியில போறதே இல்லீங்க. முனுசிபாலிட்டில சொல்லி இந்த வீதியையே முழுசா சுவரு வெச்சு அடைச்சுப் போடோணுமுன்னு ஊர்வலம் கூட நடந்துச்சுங்க. நீங்க வெளியூரா?” என்றவனிடம் உள்ளூர் தான் வெளியூரில் வேலை என்றும் சொன்னான். நீங்க முழுசா சொல்லலையே! ஏன் அப்படியாச்சு? என்றான்.

  ”அதுல சொல்றதுக்கு என்னங்க இருக்குது, இப்ப ஒரு நாயோ, பூனையோ இந்த வீதியில் முட்டி உள்ளார போயிடுச்சுன்னு வச்சுக்கோங்க.. திரும்பி அதுக வர்றப்ப பொடிக்குட்டிகளா கொழந்தைக மாதிரி தத்தீட்டு வெளிய வருதுக” என்றான் மாஸ்டர்.

  “அதெப்படிங்க! நீங்க சொல்றது எனக்கு எச்சா கொழப்பமா இருக்கே!”

  “இப்ப நானே இருக்கறன்னு வச்சுக்கங்க ஒரு பேச்சுக்கு.. என்னோட வயசு இப்போ நாற்பத்தி அஞ்சு. ஒரே ஒருவாட்டி இந்த வீதியில நுழைஞ்சு அந்த கடை வரைக்கும் போயிட்டு திரும்பி ரோட்டுக்கு வந்தன்னு வச்சுக்குகுங்க. எனக்கு வயசு கொறஞ்சு போயிடும். இருவத்தி அஞ்சு வயசுப் பையனாட்ட ஆயிடுவேன். அதானுங்க இந்த வீதியில பிரச்சனை. இப்ப தெளிவா புருஞ்சுதுங்களா!” மாஸ்டரிடம் காலி டம்ளரைக் கொடுத்தான் பழனிச்சாமி.

  “இந்த வீதியி நாலஞ்சு ஜவுளிக்கடை, எலக்ட்ரானிக்கடைக அதுஇதுன்னு எல்லாம் இருந்துச்சுங்களே? எல்லாம் போச்சா?” என்றான்.

  ”எல்லாம் காலி” என்றவன் டம்ளரைக் கழுவத்துவங்க, எதற்கு வம்பு என்று பழனிச்சாமி முசல்மான் வீதியில் சென்றுவிட நடையைக் கட்டினான்.

  இவன் வீடு வந்த சமயம் அந்த வீதியே சப்தமில்லாமல் கிடந்தது. எந்த வீட்டின் முன்பாகவும் ஆள் நடமாட்டமே இல்லை. பிள்ளையார் கோவில் திண்டில் சில ஆட்கள் தென்பட்டார்கள். கோவிலில் கொடை ரேடியோ பாடிக் கொண்டிருந்தது. ஏஆர்சி பார்சல் சர்வீஸ் முன்பாக லாரியில் சிலர் லோடு ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இவன் வீடும் இருளில் தான் கிடந்தது. இவன் படியேறிச் சென்று கதவைத் தட்டினான். அம்மா அம்மா என்று குரல் எழுப்பினான். வெளி விளக்கு சுவிட்சைத் தட்டினான். குண்டு பல்பு பிரகாசித்தது. ஜன்னல் அருகில் சென்று தட்டிக் கூப்பிட்டான். உள்ளே எந்த சப்தமுமில்லை. மீண்டும் கதவுக்கே வந்து தட்டினான். அப்போது தான் கவனித்தான் தாழ்ப்பாள் இவன் முட்டிங் காலுக்கு அருகில் இருந்தது.

  கதவு நீக்கி உள்ளேயிருந்து ஒரு சிறுவனும் சிறுமியும் வெளி வந்தார்கள். பழனிச்சாமியை அன்னாந்து பார்த்து சந்தோசம் மிகுதியில் குதித்தார்கள். அம்மா சின்னப்பிள்ளை போல கவுன் அணிந்திருந்தது. அது ஜங்கு ஜங்கென குதித்தது.

  “ஐ! பழனான் வந்துட்டான். டேய் பழனா பெங்களூருல இருந்து எங்களுக்கு என்னடா வாங்கிட்டு வந்திருக்கே? பிஸ்கட்டு வாங்கிட்டு வந்தியா? ரப்பரு வளையலு, கலரு ரிப்பனு எல்லாம் தான வாங்கிட்டு வந்தே? நீங்க தள்ளுங்க அக்கட்டால” என்று அம்மா அப்பாவை பிடித்துத் தள்ள, அப்பா தரையில் சாய்ந்து கண்ணைக் கசக்கினார். “தள்ளி உட்டுட்டா பார்றா குண்டி” என்று பழனிச்சாமியிடம் ரிப்போர்ட் செய்தார்.
  சப்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து சித்தி வந்தது. சித்தியைக் கண்டதும் இருவரும் மிரண்டு வீட்டுக்குள் ஓடினார்கள். சித்தியின் கையில் சாட்டைக்குச்சி இருந்தது.

 “வந்துட்டியாப்பா, உங்கொப்பனையும், உங்கோயாளையும் இங்க என்னால சமாளிக்க முடியலைடா சாமி. போறப்ப இது ரெண்டையும் கையோட கூட்டீட்டு போயிடுப்பா! சொன்ன சொல்லு ரெண்டும் கேக்குதுகளா ஒன்னா? தொட்ட சாமானையெல்லாம் ஒடச்சிப்போடுதுக. நீ இன்னிக்கி வர்றீன்னு காலைல இருந்து ஒரே துன்பம்டா. பையன் வர்றான் பையன் வர்றான்னு என்னமா குதியாளம் போட்டாங்க தெரியுமா! தடி எடுத்தாத்தான் அடங்குதுக!” என்று சித்தி வீட்டினுள் போக இவனும் பின்னால் சென்றான். உள்ளே இவன் அப்பாவும் அம்மாவும் வாயில் ஒரு விரலை வைத்து ஷோபாவில் உட்கார்ந்திருந்தார்கள். பழனிச்சாமி தலையில் கையை வைத்துக் கொண்டு போய் நாற்காலியில் உட்கார்ந்தான்.

  குறிப்பு :
  ( இந்தக் கதைக்கு தோழர் தலைப்பு எதுவும் வைக்கவில்லை. கதை நடைபெறும் ஊரையும் குறிப்பிடவில்லை. ஆனால் திருப்பூர் என்று உறுதியாக தெரிகிறது. அடுத்து வரும் கதை கருவிழி மிதிபடும் நேரம். இது தஞ்சாவூரிலிருந்து வெளிவரும் செளந்தர சுகன் இதழில் வெளிவந்தது. சிறுகதைகள் பல தோழர் எழுதியிருந்தாலும் அதில் வரும் நாயகன் என்கிற பாத்திரத்துக்கு பழனிச்சாமி என்கிற பெயரையே பயன்படுத்தினார். தனக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தால் பழனிச்சாமி என்றே பெயர் வைத்திருப்பேன் என்று நண்பர்களிடம் கூறியிருக்கிறார். )


       
  பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம் உள்ளூர் நண்பர்களாலேயே பழக்கப்படுத்தபட்ட சமயம் இருபதாவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தான். எட்டாவது வரை படிப்பை முடித்திருந்த பழனிச்சாமி சிகரெட் மற்றும் பான்பராக் போடும் பழக்கங்களோடு உள்ளூரில் கணவனை இழந்த பெண்களிடம் ராக்காலங்களில் சென்று வந்து கொண்டிருப்பதை பழக்கப்படுத்தி கொண்டதும் அவனது இருபதாவது வயதில் தான்.

  அந்த விதவைகள் அடிக்கடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார்கள். ஒருத்தியிடம் செல்வது ஒருத்திக்கு தெரியாது என்று தான் பழனிச்சாமி நினைத்திருந்தான். ஆனால் ஒவ்வொருத்தியும் பழனிச்சாமி தன்னிடம் மட்டுமே வந்து போக வேண்டும் என்றும் மற்றவள்கள் ஊசைகள் என்றும் நோவு நொடிகள் வந்து விடும் என்று கூறியும் ஒவ்வொருத்தியும் இவன் உதட்டில் கிறக்கமாய் முத்தம் கொடுத்தார்கள். பழனியை நெஞ்சோடு சேர்த்து இறுக்கமாய் கட்டிக் கொண்டு தன்னை விட்டு விலகிப் போகாதபடிக்கு வித்தைகள் செய்தார்கள். பழனிச்சாமி ஒவ்வொருத்தி தலையிலும் சத்தியமடித்து நீ தானடி எனக்கு தங்கம்! என்றே பேசக் கற்றுக்கொண்டதும் அவனது இருபதாவது வயதில் தான்.

  அவர்கள் எல்லோருமே இவனது குடிப்பழக்கத்திற்காக கடிந்து கடிந்து பேசி பின்னர் சலித்து விட்டு விட்டார்கள். பழனிச்சாமி அவர்களுக்கும் ஒன்னும் பண்ணாது சும்மா குடி என்று குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தான். அவர்கள் இப்போதெல்லாம் பழனிச்சாமியிடம் பாட்டிலோடு வா என்று அழைக்கிறார்கள். சுகம் கூட்டல் சுகம் சமம் சொர்க்கம் என்கிறார்கள். கணவனை இழந்த பெண்கள் மீது கைவைத்தால் வாழ்க்கை வீணாய்ப் போயிடும்டா பையா! என்று அந்தப் பெண்களைப் பார்த்து பெருமூச்சு விடும் சிலர் இவனிடம் சொல்வார்கள். இவன் அவர்களுக்குத் தரும் ஒரே பதில் உன் வீட்டுக்கு சாமத்துல நான் வரலைல்ல!

  ஆரம்பத்தில் பழனிச்சாமி பற்றி ஊருக்குள் குசுகுசுவென பாசிய பெண்களாகட்டும், ஆண்களாகட்டும் போகப்போக அந்தப்பேச்சை விட்டு விட்டார்கள். சுனாமி வந்து போனது என்றால் இன்னமுமா எந்த நேரமும் சுனாமி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்? புதுப்பொண்ணு என்பவள் அடுத்த புதுப்பொண்ணு ஊருக்குள் வரும் வரை தான். அடுத்த பெண் வந்து விட்டால் அவள் தான் புதுப்பொண்ணு.

  பழனிச்சாமி ஊருக்குள் தான் இப்படி என்றில்லை. அவன் தறி ஓட்டச் செல்லும் வெளியூரிலும் தார் நூல் போட வரும் சின்னப் பெண்களையும் தன் வலைக்குள் வீழ்த்தியடிக்கத் துவங்கினான். இப்படியாக பழனிச்சாமி ருசிகண்ட பூனையாக அதுவும் திருட்டுப் பூனையாக உருவெடுத்தான். பழனிச்சாமி ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தபோதே அவன் தாய் மரணமெய்தி விட்டாள். அவன் எட்டாவது படிக்கையில் அவன் அப்பாவும் டிக்கெட் வாங்கிப் போய் விட்டார். பழனிச்சாமி பின் தாத்தா பாட்டியின் அரவணைப்பில் தான் பின்னர் இருந்தான்.  பாட்டி போன பிறகு பொட்டு, பூ வைக்காதவள் ஒருத்தியை தாத்தாவை கவனித்துக் கொள்ள வீட்டில் வைத்திருந்தான் பழனிச்சாமி.

  மருந்து வைத்து விடுவது என்று ஒரு பழக்கம் கிராமங்களில் இன்றும் கூட இருந்து வருகிறது. வழக்கமான பழக்க வழக்கங்களில் இருந்து ஒரு ஆள் அல்லது ஒரு பெண் மாற்றமாக திடீரென தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டால் யாரோ மருந்து வைத்து விட்டார்கள் என்று அர்த்தம். கணவன் வேறு பெண்ணிடம் போய் அனுபவித்து விட்டு வந்தால் மனைவி கணவனுக்கு போடும் சாப்பாட்டிலோ, குழம்பிலோமருந்து வைத்து விடுவாள். அந்த மற்றுப் பெண்ணிடம் கணவன் போய் சுருண்டு கிடக்காமல் இருக்கவும் தன்னிடம் மட்டுமே சிறப்பான உறவை வைத்துக் கொள்ளவும் அப்படி செய்வாள். சில சமயம் எதிர் பார்ட்டியும் மருந்து வைத்து விடுவாள்.

  மருந்தின் அளவு, விகிதம் பொறுத்துத் தான் காரியம் கைகூடும். இந்த கம்ப்யூட்டர் காலத்தில் கூட இப்படியா? என்று கேட்கக் கூடாது. நீங்கள் அறியாமலேயே இவைகளெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பழனிச்சாமி எவள் வைத்த மருந்தையோ சாப்பிட்டு விட்டான். மருந்தின் அளவு அதிகம் என்கிறபடியால் புத்தி மாறாட்டம் ஏற்பட்டு பெண்களை மறந்தான். அவனோடு தொடர்பில் இருந்த பெண்கள் அனைவரையும் யார் என்று கூடத் தெரியவில்லை. என்ன தொழிலில் இருந்தான் என்பதையும் மறந்து போனான். ஆனால் குடிப்பழக்கம் மட்டும் ஞாபகத்தில் இருந்தது. உள்ளூரில் சுனாமி வந்துவிட்டது போல பழனிச்சாமி விசயத்தை பேசினார்கள். எனக்கு அப்பவே தெரியும் என்றாள் ஒருத்தி. ஆடின ஆட்டத்துக்கு இது தான் தண்டனை! என்றாள் அவனுடன் படுக்கையில் கிடந்தவளே ஊருக்குள். தான் ஒன்றுமில்லாமப் போனதை ஒரு புள்ளியில் உணர்ந்தான் பழனிச்சாமி.

  ஆக பழனிச்சாமி தன் தாத்தாவை கொன்று விடுவதாக முடிவு செய்த நாளில் உள்ளூருக்குள் மழை சோவெனப் பெய்து கொண்டிருந்தது. சிலசமயம் ஓய்ந்து போனது போல் தோன்றினாலும் மருபடியும் வேகம் பிடித்துக் கொண்டது. இவன் வீட்டினுள் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி பாக்குப் பொட்டணம் ஒன்றை கிழித்து வாயில் கொட்டிக் கொண்டான்.வெளியி இடி ஒன்று அருகில் டொமீர் என்று விழுந்த ஓசை கேட்டது. தாத்தா அவர் கட்டிலில் அட்டணங்கால் போட்டு படுத்திருந்தார். அவருக்கு இடியோசை கேட்டிருக்காது. காது இரண்டும் முன்பே போய்விட்டது. பழனிச்சாமிக்கு இப்படி ஆனதிலிருந்து அந்த பொட்டு வைக்காத பெண் தன் குழந்தையோடு காலையில் வந்து இவர்களுக்கு சாப்பாடு ஆக்கி வைத்து விட்டு போய் விடுகிறது. முன்பு போல இரவில் தங்குவதில்லை. அவளையே, என் விட்டில் உங்களுக்கு என்ன வேலை? என்று சில சமயம் கேட்பான் பழனிச்சாமி. அந்தப்பெண் பெரிதாய் அதை எடுத்துக் கொள்வதில்லை.
  பழனிச்சாமி சில சமயம் நிதானமாகவும், சில சமயம் நிதானமின்றியும் நடந்து கொண்டான்.தன் அறை ஜன்னலில் இருந்து பார்க்கையில் தாத்தாவின் ஜம்பமான படுக்கையை பார்த்து வெறியானான். தான் எடுத்த முடிவு சரியானது தான் என்று தேதிக்காலண்டரை நோக்கி ஓடினான் எழுந்து. சுபமுகூர்த்தவேளை எப்போது துவங்குகிறது என்று பார்த்தான். இரவு சுபமுகூர்த்தமே இல்லை. தன் கட்டிலில் தூக்குப்போட்டுக் கொள்ள வைத்திருந்த கயிற்றை எடுத்துக் கொண்டு தாத்தாவின் அறைக்குள் வந்தான். தாத்தா சீராக புஸ்புஸ் என மூச்சு விட்டபடி கட்டில் கண்மூடி படுத்திருந்தார். அவரது பொக்கை வாய் யாராவது பழம் திணிப்பார்களா? என்பது மாதிரி திறந்திருந்தது. தாத்தா ஒரு பிரேதம் போலத்தான் நெஞ்சு எலும்புகள் வெளித்தெரிய கட்டிலில் கிடந்தார்.

  பழனிச்சாமி தாத்தா அருகில் கிட்ட நெருங்கி நின்று பார்த்தான். அவன் கை கயிற்றை சுழற்றிக் கொண்டிருந்தது. தாத்தா திடீரென பேராண்டி! என்று புன்னகைப்பது மாதிரி தோன்றியது. அதே மாதிரி புன்னகை ஒன்றை இவனும் அவருக்கு தந்து விட்டு கயிற்றை அவரின் கழுத்தை தூக்கி உள் செருவி வெளியே விட்டெடுத்தான். என்ன காரியமடா பண்றே ராஸ்கோலு! என்று தாத்தா பேசியதாக இவன் காதில் விழுந்தது.. ஆனால் தாத்தா கண் விழிக்கவில்லை. கயிற்றை இறுகப் பற்றி இறுக்க ஆரம்பித்தான். தாத்தா கெக்கென சப்தமிட்டு தலை சாய்ந்தார். இவனுக்கு நிம்மதியாய் இருந்தது. தாத்தாவை கொல்வது எளிதான காரியமில்லை என்று தான் நினைத்திருந்தான்.. ஆனால் சுலபமாகவும், சுபமாகவும் முடிந்து விட்டது. கயிற்றை உறுவி அறையின் மூலைக்கு வீசினான்.

  நிதானமாய் முகத்தைச் சாய்த்து தாத்தாவின் பேரழகை ரசித்தான். பிணமாய் தாத்தா பிரகாசித்தார். சமையல் அறைக்கு வந்தவன் ப்ளாஸ்க்கில் ஒருந்த காபியை டம்ளரில் ஊற்றிக் கொண்டான். வெளியே மழை இன்னமும் கனமாய்த் தான் பெய்து கொண்டிருந்தது. தாத்தாவின் அறைக்குள் காபி டம்ளரோடு வந்தான். பிணத்தின் அருகிலேயே ஸ்டூல் ஒன்று போட்டு அமர்ந்து கொண்டு காபியை ருசித்தான். தன் வலது காலைத்தூக்கி தாத்தாவின் வயிற்றின் மேல் போட்டுக் கொண்டான். இன்னொன்றையும் அதன் அருகில் தூக்கிப்போட்டு நீட்டி அமர்ந்தான். காபியில் சக்கரை கூடுதலாக இருப்பது மாதிரி இருந்தது. வாய் முழுதும் இனித்துக் கிடந்தது. டம்ளர் காலியானதும் கயிறு கிடந்த மூலைக்கு டம்ளரை வீசினான்.

  பழனிச்சாமி தன் வலது காலைத் தூக்கி தாத்தாவின் நாசித் துவாரம் அருகே கொண்டு சென்று பெருவிரலை அவரின் நாசித் துவாரத்தில் நுழைக்க முயற்சித்து தோற்றான். இவனது கால் பெருவிரலின் அளவை விட தாத்தாவின் நாசித்துவாரம் சிறியதாக இருந்தது. சிகரெட் ஒன்றை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து உதட்டில் வைத்துக் கொண்டவன் தீப்பெட்டி பாக்கெட்டில் தட்டுப்படாமல் எரிச்சலடைந்தான். கால்களை இறக்கிக் கொண்டு தாத்தாவின் அண்டர்வேர் பாக்கெட்டில் கைவிட்டு உள்ளே தேடினான். பாதி தீர்ந்த நிலையில் ஒரு சுருட்டும், மணிபர்ஸ் ஒன்றும் கிட்டியது. தாத்தாவிடம் தீப்பெட்டி இல்லை. தாத்தாவின் தலையணைக்கடியில் கை விட்டுத் தேடினான். அங்கு கைக்கு தீப்பெட்டி சிக்கியதும் நிம்மதியானான். சிகரெட்டை பற்ற வைத்து புகை ஊதினான் பழனிச்சாமி. மணிபர்ஸை விரித்தான்.

  உள்ளே தாத்தா பாட்டியுடன் மீசையை முறுக்கியபடி நின்றிருக்கும் பழைய கருப்பு வெள்ளை புகைப்ப்டம் ஒன்றிருந்தது. அதை உருவி எடுத்து பலவாறு பார்த்து பின் வாயில் போட்டு மென்றான். சக்கை போல் மென்று துப்பினான். தாத்தா பர்சினுள் முன்னூற்றி ஐம்பது ரூபாய் வைத்திருந்தார். எல்லாம் ஐம்பது ரூபாய் தாள்களாக இருந்தன.அவைகளை விசிறி மாதிரி விரித்துப் பிடித்து தீப்பெட்டியை உரசினான். தன் அறைக்கு வந்து புத்தம் புதிய பிளைடு ஒன்றை எடுத்துக்கொண்டு தாத்தாவின் அறைக்குள்ளேயே வந்தான். மேல் காகிதத்தை எடுத்து வீசி விட்டு தன் உள்லங்கையில் ஒரு கோடு இழுத்து பதம் பார்த்தான். ரத்தம் கொப்பளித்து வரவும் நிம்மதியானான்.

  அடுத்ததாக தாத்தாவின் முகத்தின் அருகாமை குனிந்து அவரின் வலது காதை தனியே அறுத்து கையில் வைத்து ஆராய்ச்சியாளன் போல பார்த்துவிட்டு தூற எறிந்தான்.. பின் மூக்கு, உதடு என்று அறுத்து அறைக்குள் வீசினான். தன் ஆள்காட்டி விரலை தாத்தாவின் கண்களுக்குள் நுழைத்து பிதுக்கியெடுத்து கட்டிலுக்கு அருகில் போட்டான்.


  அரைமணி நேரத்தில் தாத்தாவின் சதைகள் அறைக்குள் நிரம்பிக் கிடந்தன. பழனிச்சாமி ஸ்டூலில் ஓய்ந்து போய் அமர்ந்தான். தனது மேல் சட்டையையும், பனியனையும் கழற்றி கட்டிலின் மேல் போட்டான். தாத்தாவின் விழிகளில் ஒன்று இவனது காலில் ஈரத்தவளை மிதிபட்டு வழுக்கிச் செல்வது போல் பிதுங்கி வழுக்கியது. கால் பெருவிரலால் நசுக்க முயற்சித்து தோற்றான். அது தூரமாய் பிதுங்கி தெறித்தது. சமையலறைக்குள் போய் சீமெண்ணெய் கேனை எடுத்து வந்து அறை முழுக்க தெளித்தான். தன்மீதும் தலையில் கவிழ்த்திக் கொண்டவன் முன்று மடக்கு குடித்தான். ஞாபகம் அவனுக்கு அப்போது தான் வந்தது. அவனது அறையில் பெட்ரோல் ஐந்து லிட்டர் இருந்தது. ஓடிப்போய் அதையும் எடுத்து வந்து அறைக்குள் ஊற்றினான். நாற்காலியில் அமர்ந்தவன் கவனமாக தீப்பெட்டியை தலையணைக்கு அடியில் இருந்து எடுத்து உரசினான்.

Post Comment

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பழனிச்சாமிக்கு குடிப்பழக்கம்... முடிஞ்சி போச்சி...

தொடர வாழ்த்துக்கள்...