வியாழன், ஜனவரி 30, 2014

இந்த உலகில் அன்பு இன்னமும் மரணிக்கவில்லை!


இந்த உலகில் அன்பு இன்னமும் மரணிக்கவில்லை!

.லெனின் எனக்கு சந்தோசமாய் வாசிக்கக் கொடுத்தஅம்பாரம்தொகுதியை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டபோது ஒருவேளை இது கவிதைத் தொகுதியோ என்ற பயம் இருந்தது. பின் அட்டையில் இவை கட்டுரைத் தொகுதி என்று இருந்தமையால் எனக்கு என் மீதே நம்பிக்கை இருந்தது எப்படியும் வாசித்து விடுவேன் என்று. அது உடனே நடந்து விடும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் முழு பகல்பொழுதும் மின்சாரம் இல்லாமை.

படிக்கத் துவங்குகையில் இவை கட்டுரைத் தொகுதியில் சேர்த்தி அல்ல என்று உள்ளடக்கத்தை பார்த்த போதே தெரிந்துவிட்டது. இவைகள் நினைவோடைக் குறிப்புகள். லெனின் தன் இளமைக்கால நினைவுகளை திரும்ப ஒருமுறை தன் ஞாபக அடுக்கிலிருந்து வெளிக் கொண்டுவந்து நம் கண்முன் காட்டுகிறார். இவைகள் படிப்பவர்களையும் தங்களின் இளமைக்கால அனுபவங்களை நினைத்து அசைபோட வைக்கும் வேலையைச் செய்கின்றன.

கவிஞர்களுக்குத்தான் இப்படியான அன்பு மனது வாய்க்கப்பெற்றிருக்கும். உதாரணமாக கலாப்பிரியா. கலாப்ப்ரியா தன் கவிதைகளில் சசியைப் பற்றி எழுதுகையில் கத்தி கொண்டுபோய் அந்த சசியை சொறுவி விட்டு வந்துவிடலாம் என்று தோன்றும். (அது சசியின் மீதான என் பால்யகால ஆசை..அதேபோல் நகுலனின் சுசீலாவையும்) அப்படியான கலாப்ப்ரியா பத்தி எழுத்துக்கு வந்த  போது அவைகள் மிகச் சிறப்பாக இருந்தன. நன்றாக இருக்கிறது என்று நாலுபேர் சொல்ல அவர் தொடர்ந்து பத்தி எழுத்துகளையே எழுதிக் குவிக்க   இப்போது கலாப்ப்ரியா என்று யாராவது சொன்னால் புன்னகையை வீசிவிட்டு நழுவுகிறேன்.

வாசிப்புக்கே நேரம் வாய்க்கப்பெறாத ஊர் திருப்பூர். இங்கு மக்களின் வாழ்க்கை முறை பணம் நோக்கியே திருப்பப் பட்டிருக்கும். திருப்பூரில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று மனிதர்களின் முகங்களைக் கண்டால் அவைகள் பணம் பணம் என்றே உச்சரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். புத்தகத்தை வாசித்துக்கொண்டிருப்பவனை வேற்றுகிரகவாசியாய் பார்த்துச் செல்வார்கள். பொழைக்கிற பையன் பொஸ்தகத்தை விரிச்சிப் புடிச்சுட்டு உக்கோந்துட்டு இருக்குது பாரு.. ! தவிர திருப்பூரில் புழங்கிக் கொண்டிருக்கும் பணம் திருப்பூருக்குள்ளேயே தான் சுற்றிக் கொண்டிருக்கும். அங்கேயே சம்பாதிக்கப்பட்டும் அங்கேயே செலவீனமும் ஆகிக் கொண்டிருக்கும்.

ரொம்பகாலம் ஆகிவிட்டது அம்பாரம் மாதிரி அன்பையும், பாசத்தையும் சொல்லும் புத்தகம் வாசித்து. இதில் மகளின் மீது  கொண்ட ஒரு  தந்தை  தன் மகளின் விளையாட்டுத்தனங்களில் இருந்து தன்னையே திரும்பப் பார்த்துக் கொள்கிறான். இதில் கவனிக்க வேண்டிய விசயம் பெண்களுக்கு ஆண் குழந்தை என்றால் இஷ்ட்டம் அதிகமாகவும், பெண்குழந்தை என்றால் தந்தைக்கு இஷ்ட்டம் அதிகமாகவும் உள்ளதை எழுதப்படாத பாச வகைகளுள் ஒன்றாக மதிப்பிடலாம். எனக்கு ஒரு பெண் குழந்தை இல்லாமல் போயிற்றே என்று காலம் கழிந்ந்தபிறகு வ... .. வருத்தப்படுகிறேன். என் நிதி நிலைமைகளுக்காக ஒதுக்கி வைத்தது இப்போது வருத்தம் கொள்ள வைக்கிறது!

என் தோழி ஒருவருக்கு இரண்டு பெண்குழந்தைகள். அவர் கணவர் டாஸ்மார்க்கில் பணத்தைக் கொடுத்து அரசாங்கம் பிழைக்க வழி செய்பவர். ஒருநாளும் அவர் அரசாங்கத்தை ஏமாற்ற மாட்டார். அவருக்கு தன் சின்னப்பெண் மீது தான் அதிக பாசம். “எங்க சின்னப் பொடுசு இன்னிக்கி போடா குடிகாரான்னு சொல்லிப்போடுச்சு! குடிச்சுப்போட்டு வந்து அம்மாளை அடிச்சுட்டே இருக்கியா நீயி! நாங்க பாட்டி ஊருக்கு பொட்டியக் கட்டீட்டு போயிடுவோம்! நீ சோத்துக்கு வட்டலைத் தூக்கீட்டு ஊருக்குள்ள போவ பாரு! அப்புடின்னு சொல்லிடுச்சு! எனக்கு ஒரு கோட்டர் மட்டும் போதும்!” என்பார்.

அவர் தன் இரு சக்கர வாகனத்தில் மனைவியுடனும், அவர் பாப்பாக்களோடு நான் எனது இருசக்கர வாகனத்திலும் பெருந்துறை துணிக்கடல் ஒன்றுக்கு சென்றோம். அவரிடம் பணம் கொஞ்சம் அதிகம் விளையாடினால் அதிக பாசத்தையும் குடும்பத்தின் மீது கொட்டி விடுவார். அவர் பாப்பாக்களுக்கு துணிமணிகள் எடுத்து முடித்து பில் போடுகையில் திடீரென போதையில் இருந்தவர் ஜீன்ஸ் பேண்ட், சர்ட் என்று சின்னப்பாப்பாவுக்கு எடுத்து போட்டுப் பாரு சாமி! என்று நீட்டி விட்டார். அதுவும் போட்டு பையனைப்போல வரவே, ஜம்முன்னு இருக்குது சாமி! நேத்துக்கூட இப்புடி இல்ல போ! என்றார். பெரிய பொண்ணின் முகம் உம்மென்று ஆகிவிட்டது! தோழி என்னிடம் அழுதார். ”என்னுங்ணா இப்புடியே பண்ணுது இந்தாளு? பெருசு அப்ப இதுக்கு பொறந்ததில்லியா? அது எங்க போகும் பாவம்? வாங்குனா ரெண்டுக்கும் ஒரே மாதிரி வாங்கோணும்! சின்னதுக்கு மட்டும் மூனு செட்டு எடுத்துட்டு பெருசுக்கு ரெண்டுன்னா இது ஊடுபோயி அழுவுமுல்லண்ணா?” அப்புறம் என்ன? நண்பரிடம் சொல்லி பெரிய பொண்ணுக்கும் ஜீன்ஸ், சர்ட் என்று எடுத்துவிட்டுத் தான் வண்டி கிளம்பிற்று! பாசத்தில் சூப்பர் பாசம், அரைகுறை பாசம் என்ற வகையறாக்கள் இருப்பதை பல இடங்களில் கண்டு வந்தவனுக்கு இந்தப்புத்தகம் பாச மழையில் நனைத்தெடுத்து விட்டது.

மயிலை, செவலை என்ற இரண்டு வளர்ப்பு மாடுகளைப் பற்றியான குறிப்பும் அவைகள் வயதான ஒரே காரணத்திற்காக கேரளாவுக்கு விற்கப்பட்டதால் அவற்றை பிரிய முடியாத அம்மாவின் அழுகையும் இன்னும் சிலநாள் என் மனதை விட்டு அகலாது! இது ஒரு குறும்படத்திற்கான தாக்கத்தை தன்னகத்தே தக்கவைத்திருந்தது! தொகுப்பில் மிக முக்கியமான பதிவு என்றால் இது தான். வளர்ப்பு மிருகங்கள் குடும்பத்தாரோடு ஒன்றியே வாழ்கின்றன என்று மீண்டும் ஒருமுறை சொல்லும் சோகம் மிகுந்த பதிவு.

எளிமையான மொழியில் நாட்குறிப்புகளை படித்த நிறைவை இதை வாசித்து முடிக்கையில் உணர்ந்தேன். ஒரு சின்னப் புத்தகம் எதை எனக்குத் தரவேண்டுமோ அதை எனக்குத் தந்து விட்டது! இந்த உலகில் அன்பு, பாசம், நேசம் என்பவைகள் இல்லாம் இன்னமும் மரணிக்கவில்லை என்பதை பொட்டில் அடித்த மாதிரி  எனக்கு புரியவைத்த புத்தகம் அம்பாரம்! வாழ்த்துக்கள் நண்பா! தொடர்ந்து எழுதுங்கள்!

அன்போடே என்றும்
வா.மு. கோமு
30 -1 -2014Post Comment

கருத்துகள் இல்லை: