வெள்ளி, பிப்ரவரி 14, 2014

வெட்டி ப்ளாக்கர்ஸ் 15 சிறுகதைகள் ஒரு பொதுப்பார்வை


தமிழ் சிறுகதையில் ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை மாற்றங்கள் நடந்தேறிக் கொண்டேயிருக்கும். புதுமைப்பித்தனின் கதைகளை இன்று எழுத வருபவர்கள் வாசித்து விட்டு வருவதில்லை என்றொரு குற்றச்சாட்டையும் சிலர் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனை படித்து விட்டு வந்து தான் சிறுகதைகள் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். இன்று புதிதாய் எழுத வருபவர்களுக்கு எழுதுவதற்கான களங்கள் விரிந்து கிடக்கிறது. புதுமைப்பித்தன் அவைகளை எழுத எந்த விதத்திலும் உபயோகப்பட மாட்டார். தமிழில் அவருக்குப்பின் வந்த பல எழுத்தாளர்களும் குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளை வழங்கியிருக்கிறார்கள். முழுமையாக உள்வாங்கிப் படிப்பது என்பது வேறு, மேலோட்டமான வாசிப்பு என்பது வேறு. எனக்கு நான் எழுதத் துவங்கிய காலங்களில் அசோகமித்திரனையும் அஸ்வகோசையும் மிகவும் பிடித்தது. ஆனால் அதே சமயம் நான் சுஜாதாவையும் வாசித்தேன். இது ஒரு குழப்பமான வாசிப்பு அனுகுமுறை தான். புதிதாய் எழுதுபவர்களுக்கு இவர்களை வாசித்துத் தான் ஆகவேண்டும் என்றெல்லாம் நான் பட்டியல் போட்டுக் கொண்டு இருக்க மாட்டேன். தமிழில் சிறந்த சிறுகதைகள் 100 என்றெல்லாம் தொகுத்துக் கொண்டிருக்கவும் மாட்டேன். அது என் வேலையும் அல்ல! நவீனத்துவ சிறுகதைகளின் ஆதிக்கம் தமிழில் 5 வருடங்கள் இருந்ததென்றால் தலித்தியம் பேசும் சிறுகதைகள் 5 வருடங்கள் எழுதப்பட்டன! இப்படித்தான் இலக்கியத்தில் மாற்றங்கள் சிறுகதைகளுக்குள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.

வெட்டி ப்ளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் ப்ளாக்கில் எழுதும் நண்பர்கள் நூற்றுக்கும் மேலானோர் கலந்து சிறப்பித்தார்கள். 90களில் சிற்றிதழ்கள்  போட்டிகள் நடத்திய போது இருபது, இருபத்தைந்து கதையாசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். ஒரே ஆசிரியர் புனைப்பெயரில் 2 கதைகள் அனுப்பியிருப்பார். இது எதனால் என்றால் பணத்தேவை கருத்தித் தான். வெட்டி ப்ளாக்கர்ஸ் நடத்திய போட்டியில் கலந்து கொண்டவர்கள் தங்களது திறமையை நிரூபிப்பதற்காக கலந்து கொண்டார்கள். பணம் இரண்டாம் பட்சம் தான். சமயம் கிடைத்தால் அனைத்துக் கதைகளையும் வாசிக்க வேண்டும்

என்னிடம் இறுதிச் சுற்றுக்கு வந்த கதைகள் 15. வரிசையில் முதலாக இருந்த மண்ணெண்ணெய் கதையை வாசிக்கத் துவங்கியதும் அதிர்ந்து விட்டேன். கதையின் பாதி வரை ஏற்கனவே எங்கோ வாசித்திருக்கிறேன். மாமனாரை மருமகள் மண்ணெண்ணெயை வரிசையில் காத்திருந்து  வாங்கி வரும்படி  அனுப்புகிறாள். நான் பதினைந்து வருடம் முன்பு படித்த கதையில் பெரியவர் வீடு திரும்பாமல் அப்படியே கிளம்பி விடுவார். இதில் இலங்கையில் பொம்மர் விமானங்கள் சுற்றுவதாகவும் சனம் கலைந்து போக பெரியவர் வைராக்கியமுடன் பூட்டியிருந்த கடை வாசலில் மண்ணெண்ணெய் வாங்கிப்போக நிற்கிறார். ஜேகே என்பவர் எழுதிய சிறுகதை இது. அவர் முதலாக கூட இதை எழுதியிருக்கலாம். தவறை சுட்டிக்காட்ட இங்கே சொல்கிறேன். இந்தக்கதை ஆறுதல் பரிசு பெற்றிருக்கிறது.

எம்.ஜானகிராமன் எழுதிய பேய்களைத் தின்னும் மீன்கள் சிறுவர்களுக்கு மீன்கள் பிடிப்பதற்கான ஆர்வத்தை அவர்களின் மொழியிலேயே சொல்லியிருக்கிறார். பள்ளிக்கு மதியம் செல்ல வேண்டியவர்கள் விரால் மீனைப் பிடிப்பதில் கவனமாகிறார்கள். நினைவோடைக் குறிப்பு என்று வேண்டுமானால் இந்த மீன்பி சம்பவத்தை சொல்லலாம். சம்பவம் கதையாக எங்கும் மாறவே இல்லை என்பது ஒரு குறைதான். மற்றபடி வாசிப்பவர்களுக்கு ஒரு சுக அனுபவத்தை இந்த நினைவோடை கொடுக்கும் என்பது நிச்சயம். இதுவும் ஆறுதல் பரிசு பெற்ற கதை தான்.
விஜயலட்சுமி செந்தில்நம்பி எழுதிய சிறுகதை மங்காயி பெரியவளாயிட்டா! அஜித், விஜய்யை மனதில் விரும்பும் அப்பாவி கிராமத்துப் பெண் தன்னை கட்டிக்கப் போகும் மாமனை வெறுக்கிறாள். பெரியவளான சமயத்தில் சற்று பிந்தி வந்த மாமன் பனியில் தனியாக அமர்ந்திருக்கும் மங்காயிக்கு போர்வை வழங்கி குளிருல பிள்ளை உக்கோந்திருக்கணுமா? என்கிறான். மங்காயிக்கு மாமன் மீது தனி கவனம் வருவது போல் கதை முடிகிறது. அசல் கிராமியக் கதை. ஆறுதல் பரிசையும் பெற்றிருக்கிறது.

.செல்வக்குமார் எழுதிய அவதூறு கதையை ஒரு நாலுகால் பிராணி சொல்லிக் கொண்டு செல்கிறது. அதுவும் நகுலன் வீட்டில் இருந்த நாய். வாசிப்பும் தொடர்ந்து எழுதிக் கொண்டும் இருக்கும் ஒருவரால் தான் இப்படியான முயற்சியை எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்தவும் முடியும். வாழ்த்துக்கள் செல்வக்குமார்.

வைகை எழுதிய காவல் கருத்தான் சிறுகதை குலதெய்வ சாமியின் வாழ்க்கை வரலாறைச் சொல்கிறது. திருமண விசேசம் மற்றும் காது குத்து என்று ஒரு வீட்டில் நடந்தால் தான் மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்குமே தங்கள் குலதெய்வம் எந்த ஊரில் இருக்கிறது என்று தெரிய வரும். அப்படித்தான் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. அப்படியே அந்த கோவிலுக்கு குடும்பத்துடன் பயணப்பட்டாலும் அந்த தெய்வத்தின் வரலாறு பெருசுகளுக்கும் சரிவரத் தெரிவதில்லைதான் உண்மையாக அறிந்து கொண்ட கதையைத்தான் வைகையும் எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். சரளமான எழுத்துஅடுத்து என்னதான் ஆகும் என்று படிப்பவரையும் கதைக்குள் இழுத்துக் கொள்ளும் வலிமையோடு இருக்கிறது!

காதலித்த பெண்ணை கூட்டிக் கொண்டு போய் திருமணம் செய்து சிங்கப்பூரில் 3 வருடம் சந்தோசமாக வாழ்ந்து விபத்தொன்றில் கோமா ஸ்டேஜில் 2 வருடம் இருந்து நார்மலான மனைவிக்கு பழைய ஞாபகங்கள் இல்லை என்பதை உணர்ந்து அவளை அரவணைத்து வாழும் நாயகனின் கதை! மீண்டும் பழைய ஞாபகங்களை  திரும்ப வரவழைக்க ஊருக்கே திரும்புகிறான். அவள் அப்பாவின் இறப்புக்குப்பின் அவள் குடும்பம் சென்னை சென்று விட்டதை அறிந்து நண்பனுடன் சென்னை வருகிறான். ஆரம்பத்தில் இவனை அடையாளம் தெரிந்து கிளம்பச்சொல்லும் அம்மா தன் மகளுக்கு நினைவுகள் இல்லை என்பதை அறிகிறார். நாயகிக்கு அப்பாவின் புகைப்படத்தை பார்த்ததும் மாறும் முகவடிவிலிருந்து அம்மாவின் அணைப்பு வரையான கதை நகர்வு ஒரு குறும்படத்திற்கான பாங்குடன் இருந்தது. தமிழில் மனநலம் குன்றிய கதைகள் பல வந்துள்ளன என்றாலும் இந்தக்கதை படிப்பவர் அனைவரையும் அந்த பெண்ணுக்கு சீக்கிரம் குணமடைந்து விட வேண்டும் என்று நினைக்குமளவு தாக்கத்தை கதையில் கொண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறார் சே.குமார். கதையை துவங்குமிடத்திலிருந்து முடியும் இடம் வரையான தேர்வு மிகச் சிறப்பு. முதல்பரிசை பெற்றிருக்கும் நினைவின் ஆணிவேர் சிறுகதை எழுதிய ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்!

நாடற்றவளின் நாட்குறிப்பு சுப்புராஜ் எழுதிய சிறுகதை இரண்டாம் பரிசை பெற்றிருக்கிறது. இவரின் கதை மலேசியாவில் நடைபெறுகிறது. மலேசிய நாளிதழ்களில்  ஜூன்லா என்கிற பெண்ணின் கொலைச் செய்தியோடு கதை ஆரம்பமாகிறது. இந்தக்கதை எனக்கு மிக பித்தமான கதை
முதல்பரிசை பெற்றுவிடும் என்று நம்பினேன். அவ்வளவு அழகான புதிய கதை. வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட களத்தில் பயணித்தது!

மூன்றாம் பரிசு பெற்ற ஹலால்அரசாங்க அதிகாரியின்  தவறான முடிவுகளால் குண்டு வைத்த வழக்கில் தூக்குக்கு செல்லவிருக்கும் வேல்முருகன் வாயிலாக கதை சிறைக்கூடத்தில் நகருகிறது. அதேபோல் குண்டு வெடிப்பு கேசில் ரஹீம் என்கிறவன் வருகிறான். ரஹீம் சம்பந்தப்பட்ட செய்திகள் பெரிய கேஸ் என்பதால் தினமும் செய்த்தித் தாளில் புதிய புதிய செய்திகள் வருகின்றன. அவன் தூக்கு ஏறுகிறான். இளகிய மனமுள்ளவர்கள் பதைபதைக்கும் கதை. இந்தக்கதை மூலம் ஆசிரியர் சொல்ல வருவது அரசு தன் சட்ட திட்டங்களால் செய்யும் வன்முறை எவ்விதம் ஒரு சாதாரண மனிதனை பாதிக்கிறது? என்பதைப் பற்றித்தான். மிக நிதானமாக சொல்லப்பட வேண்டிய கதை! அவசரமாக போட்டி அறிவித்தவர்களின் வார்த்தைகளின் எண்ணிக்கையை மனதில் கொண்டு முடிந்த மட்டிலும் செப்பனிட்டு கொடுத்திருக்கிறார்.

விஜயன் துரைராஜ் உப்பு என்ற சிறுகதையை போட்டிக்காக செய்திருக்கிறார். சமீபத்திய பிரச்சனைகளை சொல்லும் கதை! இலங்கை கடற்படையினரால் மீன் பிடிப்பவர்கள் தாக்கப்படும் கதை! முடிவு யாரையும் சங்கடப்படுத்தாமல் போய் விட்டபடியால் போட்டியில் தோற்றிருக்கிறது! சமீப காலங்களில் சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுப்பவர்கள் திட்டம் சமீபத்திய பிரச்சனைகளை கையில் எடுத்துக் கொள்வது! அது மிகச் சரியான திட்டம்! பாராட்டுகிறேன்! கதைக்களம் மிக அதிர்ச்சிகரமாகவும் வாசகர் மனதை பாதிப்பதாகவும் அமைய வேண்டும் அக்கதை! இக்கதையில் பிசகு நேர்ந்திருக்கிறது!

பரிசு பெற்ற கதைகள் இத்துடன் முடிகின்றன! கடைசி சுற்றுக்கு வந்த கதைகள் பற்றியும் சிலது பேசுவோம்!

சீலைக்காரி! இந்தக்கதை பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் தமிழ் இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும்! நம்பலாம்! ”டாட்டாவின் அம்மா!” இது சிவகாசியின் இன்றைய சிரம்மான ஒரு தாயின் வாழ்க்கையைச் சொல்கிறது! எக்காலமும் சிவகாசித்தாய்கள் அப்படித்தான் தீப்பெட்டி லேபில் ஒட்டி கஷ்ட ஜீவனம் நட்த்துகிறார்கள். புதுமை என்று எதுவுமில்லை! ”உலகாந்திரிபுதிய முயற்சிதான் என்றாலும் கணவன் மனைவி தேடிப்போன இடமும் துக்கமும் மனதில் படியவே இல்லை! ”பாதைசிறுகதை இரு சக்கர வாகனத்தில் நம்மையெல்லாம் பத்திரமாக பயணிக்கச் சொல்கிறது! போட்டியில் கலந்து கொள்ளும் புதியபரிதி தான் தேர்ந்தெடுக்க வேண்டும் இதைவிட சிறப்பானதை! புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு ஸ்பார்க் உருவாவது சகஜம் தான்! அது சிறுகதை மட்டும் எழுத! போட்டி என்பது வேறு! எல்லா சிங்கங்களும் தன் திறமைகளை நிரூபிக்கும் களம்!

ஆரூடம் பலித்த கதைஆரூடம் பலித்தபின் நிறைவு பெறுகிறது! பிற்போக்கு சிந்தனையுடைய கதை விதவை மறுவாழ்வு என்று எழுந்து நின்று கொள்ள தடுமாறுகிறது! ”கூலிசிறுகதை நாற்று நடும் பெண்ணின் குடும்ப சிக்கல்களை பேசுகிறது. முடிவுவரை அவளுக்கு கணவன் குடிகாரனோ? பையன் பசியில் தவிப்பானோ? என்று நம்மையெல்லாம் கூட்டிப்போய் பையன் அக்கா என்று கூப்பிடுகையில் எந்த பரிதவிப்பையும் சங்கடத்தையும் உருவாக்க தவறி விடுகிறது!

ஒரு சிறுகதை தொகுப்பாக இந்த பதினைந்து பேரின் கதைகளையும் நான் வாசித்ததில்லை என்பதால் அனைவரையும் நல்ல படைப்பாளிகள் என்றே நான் நம்புகிறேன்! தொடர்ந்து இவர்கள் இயங்கும் பட்சத்தில் நல்ல சிறுகதையாசியர்கள்  நிச்சயம் தமிழுக்கு கிடைப்பார்கள்!
இங்கே குறிப்பிட்ட ஆசிரியர்கள் யாரும் சுருக்கமாய் சொன்னதற்காக சங்கடம் கொள்ள வேண்டாம்! எனக்கான பணிகளில் என் விருப்பத்திற்காக மட்டும் சொன்ன சிறிய கருத்துக்கள் இவை! மற்றபடி தமிழின் சிறுகதை வளர்ச்சிக்காக யார் எழுதினாலும் வரவேற்பேன்! ஏனெனில் நான் வா.மு.கோமு!


Post Comment

கருத்துகள் இல்லை: