செவ்வாய், பிப்ரவரி 11, 2014

முகநூலில் 2 புத்தக பார்வைகள்


லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்வா.மணிகண்டன்

இந்த புத்தகத்தை என் டேபிளில் பார்த்த ஒரு நண்பர், இதை படிங்க நீங்க.. அப்புறம் பாருங்க! என்றார். என்ன விசயம்? ஏன் இப்படி சொல்றீங்க? என்றேன். நீங்க படிங்க அப்புறம் பாருங்க! என்றார் மீண்டும். பின் அவர் வாயைப் பிடுங்கி அவரிடமிருந்தே கேட்டறிந்து கொண்டு கொஞ்சம் சங்கடப்பட்டேன் அவரிடம்!

நேசனல் புக்ட்ரஸ்ட் போடும் தூங்கு மூஞ்சி புத்தகங்களில் தான் வாழ்க்கை இருக்கிறது.. லேண்ட் இருக்கிறது.. மயிர் மங்காணி இருக்கிறது என்று படிக்கும் நண்பர் அவர். தமிழில் எழுதப்படும் எல்லா புத்தகங்களும் அழுது வடிய வேண்டும் என்று ஆசைப்படுபவர். தலித்திய விடுதலை வேறு கதைகளுக்குள் நொட்ட வேண்டும் அவருக்கு! கதைகளுக்குள் விடுதலை கிடைத்து விட்டால் ஊர் உலகம் மாறிவிட்டது என்று நம்பி விடுவார்! தமிழில் பலவிதமான வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் மறந்து விட்டார்.

அவருக்கு விளக்கினேன். நண்பரே! ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்க ஒவ்வொரு மனநிலைக்கு மாற நீங்கள் தான் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் வாசிப்புத் தன்மைக்கு அடையாளம். நான் தனிமையின் நூறு ஆண்டுகள் வாசிக்கும் போது அதற்குண்டான மனநிலையை தயார் படுத்திக் கொண்டு வாசிப்பேன். எனக்கு அதை முடிக்க ஒன்றரை நாள் ஆயிற்று. காசு கொடுத்து வாங்கி ஒரு அத்தியாயம் படித்து விட்டு வாசிக்க முடியாத நண்பர்களையும் தெரியும். அடுத்த்தாக நான் முத்துலட்சுமி ராகவன் எழுதும் மாத நாவல் வாசிப்பேன். நீங்கள் சிரிக்கிறீர்கள்! உங்களை ஒரு இலக்கியவாதிநீ இனிமே கதையே எழுதாதே!” என்று இரவில் போனில் கூப்பிட்டு சொன்னதால் இரண்டு நாட்கள் தூங்கவே முடியவில்லை என்றீர்கள்! அதற்காக அந்த இலக்கிய ஜாம்பவான் எனக்கு நண்பர் என்றாலும் கதைகள் வழியாக கொந்தளித்து போட்டுத் தாக்கினேன். அவர் என்னை எதிரியாக பாவித்தார். இலக்கியம் மட்டுமே வாசிப்பதால் சிலருக்கு தலயில் கொம்பு முளைத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். அன்று உங்கள் தலையிலும் முளைத்து வரும் கொம்பைக் கண்டேன் நண்பா!

என் கள்ளி நாவலை சூப்பர் என்பவர்கள் சாந்தாமணியை ஏன் எழுதினீர்கள்.. அது மாதிரி இது இல்லியே! என்பார்கள். எதற்காக கள்ளி போல் சாந்தாமணி இருக்க வேண்டும்? உயிர்மையில் ஒருகாலத்தில் நல்ல சிறுகதைகளை பைசா இல்லாமல் இலக்கியத்தை காப்பாற்ற வந்தவன் போல எழுதிக் கொண்டிருந்தேன். பின் இப்போது நிறுத்திக் கொண்டேன். குங்குமத்தில் ஒருபக்க கதை எழுதினேன். குங்குமத்தில் எழுதும் போது நான் குட்டி பிசாசோ, பிலோமி டீச்சரையோ எழுத முடியாது! பறந்துபட்ட வாசகர்களுக்கு எழுதப்படும் எழுத்து மிக நேர்மையாக இருக்க வேண்டும். பம்மாத்துகள் அங்கு எடுபடாது. அவர்கள் கொம்பை உடைத்து விடுவார்கள்!

நான் எழுதுபவைகள் அனைத்தையும் நேராக எழுதி நேராக அச்சுக்கு கொடுப்பவன் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் ஆனந்த விகடனுக்கு நான் எழுதும் கதைகள் அனைத்தும் என்னாலேயே மறுமுறை திரும்ப அழகாக எழுதப்பட்டு அனுப்பப்படுகிறது. அதன் பெயர் எடிட்டிங்! இதை கற்றுக் கொடுத்தவர் நஞ்சுண்டன். எட்றா வண்டியெ நாவலை எடிட்டிங் செய்து எனக்கு மூன்று ஆயிரம் கொடுத்தார். அவர் பெயர் புத்தகத்தில் நன்றி என்று போடச் சொல்லி தனித்தாளிலும், போனிலும் சொல்லி புத்தகம் வருகையில் டொண்ட்டொய்ன் ஆகிவிட்டது. மனிதரிடம் இப்படியாகி விட்டது என்று மண்டையை சொறிந்து கொண்டே போனில் சொல்கையில் விடு கோமு உனக்கும் எனக்கும் தெரிஞ்சால் போதும்! என்றார்! மனிதர்களை சம்பாதிப்பது தான் இந்தக் காலத்தில் பெரிய விசயம் நண்பரே!

வா. மணிகண்டனின் கதைகளை இவரின் ஆரம்ப காலக் கதைகள் என்று எடுத்துக் கொள்ள முடியாது! ஒவ்வொரு புத்தகத்திலும் நுழையும் போது முதல்கதையை ஏனோ தானோ என்று தான் வாசிக்கத் துவங்குவேன். இந்தப் புத்தகத்தில் வரும் முதல்கதை சாவதும் ஒரு கலை. ஸ்கூட்டியில் கறுப்பு நிற சுடிதார், சிவப்புத் தொப்பியுடன் வரும் பெண்ணை நாயகன் சந்திக்க பேருந்தில் பயணிக்கிறான். சந்திப்பிற்கான இடம் தீர்மானிக்கப்பட்டு இடம் நோக்கிச் செல்கையில் பேருந்திலிருந்து சாலையில் நடை பெற்ற ஒரு விபத்தை பார்க்கிறான். அதே ஸ்கூட்டி, கறுப்பு சுடிதார் சிவப்புத்தொப்பி பெண் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள்!

நான் உயிர்மை போட்ட சுஜாதா சிறுகதை தொகுப்புகள் மூன்றையும் கேட்டு வாங்கி நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மூன்று வருடம் முன்பாக மூன்று நாளில் வாசித்தேன். சுஜாதாவை வாசிப்பது எழுத்தின் ஸ்டைலுக்காக! அவரை வாசிக்காமல் நாமெல்லாம் எழுத்தினுள் வரமுடியாது! சாதாரண சம்பவங்களை வாசிப்புத் தன்மையுள்ள சிறுகதைகளாக மாற்றுவது ஒரு கலை!


சரோஜா தேவி என்கிற இரண்டாவது கதையை வாசித்ததும் இந்தப் புத்தகத்தை வெகு விரைவில் முடித்து விடுவேன் என்று மனதில் பட்டுவிட்டது! ஒவ்வொரு கதைகளின் முடிவுகளும் சற்று நிமிர்ந்து உட்காரும் சம்பவ முடிவுகள்! வா.மணிகண்டனுக்கு எழுத்து கைவரப் பெற்றிருக்கிறது. குழப்பமே இல்லாத தொய்வில்லாத கதை சொல்லி தான். வாசகனுக்கு பூடகமாக எதையும் இவர் சொல்வதில்லை

கதைகளின் நேரடித்தன்மைகள் வாசகனுக்கு சிரமங்களைத் தருவதில்லை! மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் சிறுகதைகளை வாசித்து மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள் மணிகண்டன்!


இரவல் காதலிசெல்லமுத்து குப்புசாமியின் நாவலை மூன்றுமணி நேரத்தில் வாசித்து முடித்து விட்டேன். சாப்ட்வேர் கம்பெனியில் பணிசெய்பவர்களுக்கு என்னமாதிரியான வேலைகள் உள்ளன என்று என் சிற்றறிவுக்கு எட்டாமல் முதன்முதலாக வாசித்திருக்கிறேன். நாவலில் ஒரு குடும்பப் பெண்ணோடு நாயகன் உறவு வைத்துக் கொள்கிறான்! அட நல்லா இருக்கே! அங்கியும் அப்புடித்தானா? எல்லாப்பக்கமும் அதே சமாச்சாரம் தான். தொழிலும் கலாச்சாரமுமே மாறுபடுகிறது

நாலுமணி நேரம் கட்டிக்கொள்வதற்கு பத்தாயிரம் ரூவாயில் பட்டுப்புடவை எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள் நகர்ப்புறங்களில். இங்கே சந்தக்கடை புடவை எடுத்துக் கட்டிக் கொள்கிறார்கள்! உன்னை மொதவாட்டி பாத்தப்ப கட்டியிருந்தன்ல மஞ்சக்கலரு ஜிங்குச்சா புடவை! அது கிழிஞ்சிடுச்சு! அதே மாதிரி எடுத்துக் குடு! என்பாள் காதலி அல்லது வைப்பாட்டி இங்கு! பெண் பெண்ணாகவே இருக்கிறாள் எல்லா இடங்களிலும்! நாவலில் காதலும் இருக்கிறது! அது நாசுக்காகவும் இருந்தது! எல்லா நாவல்களைப் போலவும், எல்லா சினிமாப்படங்களைப் போலவும் திருப்தியாய் சுபமாய் நாவல் முடியவில்லை! அதைத்தான் முன்னுரையில் செல்லமுத்து குப்புசாமி குறிப்பிடுகிறார்.

இதில் காமம் இருக்கிறது. தனிமையை காமம் தின்பதும், காமத்தை காதல் வெல்வதும், காதலைக் காமம் வெல்வதும், இறுதியில் இரண்டையும் எதார்த்தம் வெல்வதுமான கதை இது!”

முதல் அத்தியாயம் படிக்கையில் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். போகப்போக நாவல் சூடுபிடித்துக் கொண்டது! வாழ்த்துக்கள் ஆசிரியரே!

Post Comment

கருத்துகள் இல்லை: