வியாழன், பிப்ரவரி 13, 2014

முகநூல் பதிவுகள் பிப் 2014


சிஷ்யப்பிள்ள பொத்துவத்துக்கு நாலுவார்த்தெ எழுதிலீன்னா நல்லாவா இருக்கும்! இவந்தான் தென்னகத்தின் மார்க்குவசுன்னு பெருசு முன்னயே சொல்லிப்போடுச்சே!

ரொம்ப வருசமா இதே அழும்பா இருக்குதே, ஊருக்கவண்டமூட்டு கொட்டாயிக்குள்ள டொக்குப் போடறாங்கன்னே இவம் பேனா பச்சக் கலருல எழுதுதே..குசலம் பேசக் கூட ஒரு சனமில்லியா ஊருலே? இப்புடியே போனா குடிநாசுவஞ் செரைக்கிற கதைய சாவுமுட்டுலும் பொத்தவத்துல அச்சுப் போட்டுட்டே இருக்கானே..இவுனுத செரைக்க அந்தூருல சவரக்கத்தி இல்லியா? அட அதாம் போச்சாதுன்னு மேக்கொண்டு பாத்தா சனத்தோட கதையச் சொல்லிப்பிடறேன்னு எங்கப்பாரு சொன்ன அத்தரு பழசு ஜாமாங் காதைய இழுத்துக் கொண்டாந்து பொட்டனேரி பள்ளத்துல குக்கிட்டு கும்மியடிச்சு ஊரே கேளு நாடே கேளுன்னு கொட்டறானே.. இவங் கையக்கொண்டு சந்துல ஈரப்பதத்துல வெக்க!

கருமாந்தரம் புடிச்செழவு இந்த மாடுக வேற ங்கொம்மா.. ங்கொம்மான்னு ன்னு கத்தியே ஊருல எழுவு வுழுந்துடும்போல இருக்கே.. போயிச் சித்த தண்ணி காட்டி தாட்டி உடலாமுன்னா கட்டக்கால புடிச்சி எந்திரிக்க முடியுதா ஒரு எழவா? எருதுக்கு கத்துற மாட்டெ எவண்டா போயி செனையேத்துவான்? ஊருல ஒருபய இல்லியாடா மாட்ட பதம்பாக்க? ஹரிகிருஷ்ணனை கூப்புட்டுக்கோங்க செனக்கி பதனமா மாட்ட நைச்சியம் பண்டி கூத்துப்பாட்டு பாடி கூட்டிட்டு போவாம்!

இந்த மூனுஷா பிள்ளை இருக்காளே அவ தண்ணி வாத்தாலும் வாத்தா அந்த சீனுப்படத்தெ அத்தினி சாமிகளும் குட்டானா கொட்டாயில குந்தி அடிச்சுட்டுட்டே பாத்து ரசிக்குதுகளே! காஞ்சு போன நதியெல்லா வத்தாத நதியப்பாத்து மனசத் தேத்திக்கு! (ஆதாரம் இல்லியம்மா ஆறுதல் சொல்ல!)
ரமேசுபிரேமு, கோணங்கி, எம்.ஜி.சுரேசுன்னு தமிழ்ல சொய்ங் சொய்ங்கின்னு கரணமடிக்கிற எழுத்துகள எழுதுனாங்கள்ல.. அதே மாதெரி இதுவு உங்களப் பத்தி சொல்ற உங்க கதைக தாம்! ஆனா மனுச மக்க பேசுற எச்சுப்பண்ணாட்டு பேச்சாவே பொத்தவம் முழுக்க இருக்கும்! 

ஹரிகிட்ட நேர்ல பேசுங்க பொத்தவத்துல பேசுனாப்பிடி பேசமாண்டான்! மொழிவேற ஆள் வேற! இதுவரிக்கிம் கண்ட இலக்கியம் வேற இது வேற!
தானிக்கிம் தீனிக்கிம் சரியாப் போச்சி! அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் வாசித்து முடித்து விட்டேன். தமிழில் பாலியல் கதைகளுக்கு எப்போதுமே வறட்சி தான். அதை எழுதினாலோ, வாசித்தாலோ தமிழ் குடும்பங்கள் சீர்கெட்டு நாசமாகி விடும் என்று பலர் நம்பி இருளுக்குள் கடமைக்காக கோழிப்புணர்ச்சி புரிந்து கொள்கிறார்கள். மனைவிமார்களும் அந்தக் காரியமே அம்புட்டு நேரம் தானாட்ட இருக்குது என்று நம்பி கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு நெற்றியில் பட்டையடித்து வாழ்கிறார்கள். தங்களுக்கு இயல்பாக வரும் க்கேசைக்கூட பொதுவெளியில் பம்மி அடக்கி நசுக்கி விட்டு விட்டு கூட்டத்தில் கலந்து விடுகிறார்கள்! அராத்துவின் கதைகள் எல்லாமே சாந்தி என்கிற பெண்ணின் காமச் செயல்பாடுகளாக மிக இயல்பாக சொல்லப்படுகின்றன! இவைகள் அனைத்துமே குறுங்கதைகள் வடிவில் அமைக்கப்பட்டிருப்பதற்கு முகநூலில் இவைகள் எழுதப்பட்டவைகள் என்பது காரணமாகப் படுகிறது! தமிழில் இந்த அளவுக்கு காமத்தை பெண் பேசுவது போல் ஒரு புத்தகம் இதுவரை வரவில்லை!

மிக இயல்பான கதைகளுக்கு முன்னுரை என்று சாரு எழுதியிருக்கும் பயங்கரங்கள் தான் ஏன் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை! மார்க்கி தே சாத், டொனால்ட் பார்த்தெல்மே, ஜார்ஜ் பெரக், பின்நவீனம் என்றெல்லாம் சுத்தியடித்து (வழக்கமாக அடிப்பது, சாதாரணமாக படிப்பவனை மிரட்டுவது) மிரட்டும் அளவுக்கு புத்தகம் பிரம்மாண்டமில்லை! அழகான ரசிக்கத்தக்க கதைகள் என்ற அளவில் தான் நிற்கின்றன. அராத்து தன் முன்னுரையில் சொல்வது போல சாருவின் முன்னுரை வாசித்து ஒருவேளை பயங்கரமோ? என்று மிரண்டு மேலும் சில குறுங்கதைகளை சேர்த்ததாக குறிப்பிடுகிறார்.

இந்த புத்தகத்தை வாசிக்கும் முன்பாக கன்னட பிரசாத்தின் இருட்டு உலகம் வாசித்தேன். எல்லா நடிகைகளையும் பிரசாத் புள்ளிகளுக்கு ஏற்பாடு செய்து தருகிறார். அதில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன! டொனால்ட் பார்த்தெல்மே, போர்ஹே என்று இந்த புத்தகத்திற்கு ஜல்லி போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

1989ல் ஒரு புத்தகம் வந்தது. அதன் தலைப்பு .பேன்சி பனியனும். 11-8-89 அன்று பிரேம் முன்னுரை எழுதியிருந்தார். இந்த நாவலில் எவ்வகையான சொல்லாடல்கள் வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும், எவ்வகையான குறிகள் மற்றும் பிம்பங்கள் ஆற்றலழிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் வாசிக்கும் பொழுதே இதை எழுதுபவனாகவும், இதில் எழுதப்படாத மெளனங்களையும் வாசிக்கிறவனாகவும் செயல்படும் ஒரு வாசகன் இதனுள் பின்னப்பட்டிருக்கும் பல செய்திகளை கட்டவிழ்த்து கலகம் என்பது இப்பிரதியாக்கத்தில் எந்த அளவுக்கு செயல்பட்டிருக்கிறது என்பதை அறிவதன் மூலம் பிரதிக்கு வெளியிலும் இந்த ஆய்வை தொடர முடியும்…! என்றெல்லாம் பயங்கர பில்ட்டப் வரிகள் நிரம்பியிருந்தன. உள்ளே நாவலில் அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது தான் உண்மை! இப்போது தற்கொலைக் குறுங்கதைகள் நன்றாகவே இருக்கின்றன! ஆனால் முன்னுரையில் தான் …….பேதியாகும் போல் இருக்கிறது!


வாய்ப்பாடி எப்போதுமே எழில் சார்ந்த கிராமம் அல்லதான். மழை பெய்து கொஞ்சம் மலைப்பகுதிகளில் பச்சை நிற தாவரங்கள் உள்ளன தான். மலைப்பகுதிகளில் உள்ளூர் ஆட்களின் நடமாட்டமும் பல வருடங்களாக குறைந்து விட்டது! மான்களின் கூட்டம் பெருகிவிட்டது! கடமான்கள், புள்ளிமான்கள் கூட்டம் இரவு விழும் நேரத்தில் சாலைகளில் மீண்டும் திரிகின்றன.

என் வீட்டின் தென்புறம் முருங்கை மரத்தில் பூக்களோடு காய்கள் பிஞ்சுகளாய் தொங்குகின்றன! இரவில் நரிகளைப் போல மான்கள் துள்ளி வந்து ஆகாரம் முடித்துச் செல்கின்றன. மனைவியிடம் பழைய சேலைகளை மரத்தைச் சுற்றிலும் கட்டிவிடச் சொன்னேன். மான்களுக்கு ஆள் இருப்பதான தோரணையை அது கொடுத்திருக்கிறது. பக்கத்து காட்டில் புகுந்து விட்டது! அவர்களுக்கும் அறிவுரை சொல்லப்பட்டிருக்கிறது!

மான்கள் மானத்திலிருந்து நேராக அரசனாமலை கரட்டில் வந்து வீழ்ந்து இனவிருத்தி செய்து விட்டதாக உள்ளூர் சனம் நம்புகிறது. அது போல் பெருத்துப்போன மான்களை சாப்பிட சிங்கங்கள் மானத்திலிருந்து விழும் நாளை எதிர் நோக்க வேண்டியது தான். பிறகென்ன? டிஸ்கவரி சேனல்காரர்கள் வாய்ப்பாடி வருவாங்கல்ல! எனக்கு பரவாயில்லை! ஒரு முருங்கை மரம்! தோட்டம் காடு பயிர் செய்பவர்கள் நிலைதான் பாவம்!


என் சமர்ப்பணங்கள் ஒன்றிரண்டு!!! இது முதல் செட்!

எட்றா வண்டியெ!------------
கேரளத்தின் கடைகோட்டில் ஓழலப்பதியில் கள் நுரை கொப்பளிக்க தனக்கென்றொரு தனி சாம்ராஜ்யத்தில் தூரிகையோடும் அவ்வப்போது எழுதுகோலோடும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் என் ஆருயிர் அல்ல என் பேருயிர் நண்பன் ஷாராஜ்-க்கு நோவலெ சமர்ப்பிக்குந்நு!

மண்பூதம்-------------
இவளுக்கென்று இதுவரை ஏதும் செய்ய இயலாதவனாயிருந்தாலும் இப்படி எல்லாம் செய்யக்கூடியவன் தான் என நம்பிய என் தங்கை சசிக்குட்டிக்கு!!

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்-------------
பரவலான கவனத்திற்கு என்னை கூட்டிவந்த கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு!

நாயுருவி-----------
நல்ல படிப்பாளியும் விமர்சகருமான என் நண்பர் புலியூர் முருகேசனுக்கு!

மங்கலத்து தேவதைகள்--------------
மங்கலத்து தேவதைகள் மீது தீராக் காதலாய் என்றும் இருந்த கொழந்தப்புள்ள பேரெழில்குமரனுக்கு!

மரப்பல்லி-----------
ஏனுங்கோவ்வணக்கமுங்கோவ்
இல்லீங்கோவ்அது அப்பிடி இல்லீங்கோவ்….
அது அப்படித்தானுங்கோவ்என்கிற
இலக்கியச்செம்மல் வெளங்காதவனுக்கு!


Post Comment

கருத்துகள் இல்லை: