வெள்ளி, பிப்ரவரி 21, 2014

முகநூல் பதிவுகள் பிப் 2014 இரண்டு

அவிங்க வந்தா கூட்டமா வேப்பை மரங்களுக்கு அடியில் டேரா போட்டு படுத்திருப்பாங்க! பொடுசுக ஒரே சோட்டுல ஓடிட்டு திரியும்கள்! ஊருக்கு ஒறம்பறை வந்தாச்சுன்னு பேசிட்டு இருப்போம். இந்த வாட்டி ஊரு பெருசுக ஒருத்தருகிட்ட கூடி நின்னு பேசிட்டு இருந்தாங்க! ஊசி பாசி எச்சா வேணுமோ என்னுமோன்னு நெனச்சேன். இரவத்தி அஞ்சு வருசம் முன்னால காடு தோட்டமெல்லாம் வேணாமுன்னு அவிங்க கூடவே உள்ளூருல இருந்து போனவராம்! உள்ளுக்குள்ளயே கலியாணங்கட்டி, உள்ளுக்குள்ளயே பொண்ணை கட்டிக்குடுத்து அப்பிடியே குருவி புடிக்கறவரா மாறிட்டாரு மாப்ளெ!

வாழ்க்கை!! வாழ்க்கை! வாழ்க்கை!
oooooooooooooooooo

-தேம்புள்ளே! மாட்ட எங்க இவ்ளோ வெறசா இழுத்துட்டு போறே?
-செனைக்குங்கோ மாமா!
-இந்த வேலையெல்லாம் உங்கொப்பன் செஸ்சா ஆவாதா?
-எங்கப்பன் செய்யக்கூடாதாமா.. காளைமாடுதான் செஸ்சு முடிக்கோணுமாமா மாமா!
oooooooooooooooooo

-என்ன புள்ளே! உன்னையத்தா கட்டிக் கொடுத்து கொளப்பளூர் தாட்டி உட்டுட்டோமுல்லொ! வந்தா ஊடுக்காரனோட சோடி போட்டுட்டு வரோணுமுல்லொ? இப்புடி பையத் தூக்கீட்டு ஒத்தையா வர்றியே என்ன சமாச்சாரம்?
-அங்க தெனமும் தண்ணி வாக்கச் சொல்றாங்க! சுத்தபத்தமா இருக்கணுமாம்! ஆவாதுன்னு போட்டு கெளம்பிட்டேன்!
-இதென்ன அலும்பா இருக்குது? ஆடிக்கொருக்கா அம்மாவாசைக்கொருக்கா தண்ணி வாத்தா பத்தாதாமா? நம்மூருக்கு அது ஆவாதே! ஊருப்பேரே கெட்டுப் போயிடும்!
-அதாண்ணே ஊரு பேரை காப்பாத்த கெளம்பி வந்திட்டேன்!
 oooooooooooooooo

-அண்ணே! பையக்கொண்டி ஊட்டுல போட்டுட்டு நேரா பொன்னம்மாக்கா ஊட்டுக்கு போகோணும்! அவ ஊட்டுக்கு தூரமாயிட்டாளாமாண்ணா! ஊரே போயி பாத்துட்டு வந்துடுச்சாமா! நா மட்டும் தான் பாக்கி!
-ஆமாமா! அதிசியந்தான்.. வருசந்தவறாம பிள்ளையப் பெத்துட்டு இருந்தா பொன்னம்மக்கா! இந்த வருசம் ஒரு மாசம் கேப் உழுந்திடுச்சி! பத்திரமா போயி பாத்துட்டு வாடி என் ராசாத்தி!
போற்றிப் பாட்டி பொன்னேஏ!
ooooooooooooooooooo

-கோமு! உங்கிட்ட துப்பறியும் பொஸ்தவம் இருக்கா? அன்னிக்கி ஊட்டுல லைப்ரேரிமாரி அடுக்கி வெச்சிருந்தியே?
-அதிசீமா இருக்கு உங்குளுக்கு எதுக்கு பொஸ்தகம்?
-உம்பொட பொஸ்தகமெல்லாம் வேண்டாண்ட பையா. எனக்கு ராஜேஷ்குமார், தமிழ்வாணன் எழுதினதா வேணும். எம்பட செருப்பை மூனு நாளா காணம்டா பையா! பொஸ்தகம் படிச்சு அதுல துப்பறிஞ்சு கண்டு புடிக்கிற மாதிரி நான் எம்பட செருப்பை கண்டு புடிக்கோணும்!
ooooooooooooooooooo

என் திருச்சி மேனேஜர் மதியம் பேசியது…………..
என் பக்கத்துல விக்கி பரிசளிப்பு விழாவுல ஒரு பொண்ணு வந்து குந்திச்சி!
-நீ இதே ஊரா? இல்ல திருச்சியா?
-ஆமா!
-காத்தால தோசை தின்னியா?
-ஆமா!
-எப்பய்யும் நீ சுடிதாரு போடுவியா?
-ஆமா!
-மல்லிகை செண்ட்டு போட்டிருக்கியா?
-ஆமா!
-இங்க என் பக்கத்துல போயி உக்காரச் சொன்னானே அவன் உன் காதலனா?
-ஆமா!
-அவனுக்கு நீ குட்டி போடுவியா?
-ஆமா!
-இப்படித்தான் லோமா லோமான்னு மானத்த வாங்குவியா?
-ஆமா!
ooooooooooooooooo

இணையத்தில் அனுமதி பெறாமல் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன! புத்தகங்களை பக்கம் வாரியாக கிளிப் மாட்டி செல்போனில் கூட புகைப்படம் பிடித்தோ, ஸ்கேனிங் செய்தோ வாசகர்களுக்கு படிக்க இணையத்தில் ஏற்றியிருக்கிறார்கள்! இவ்வளவு மெனக்கெட்டு அதை சீரியசாக எதற்காக செய்கிறார்கள் என்பது கேள்விக்குறி தான். வாசகர்கள் அதை டவுன்லோடு செய்து படிப்பதற்கெல்லாம் நேரமில்லை! அதை வாசிக்கவும் முடியாது! பாலகுமாரன், ரமணிச்சந்திரன், சிவசங்கரி, சாண்டில்யன், ஜெய்சக்தி, முத்துலட்சுமிராகவன், இந்திரா செளந்தர்ராஜன் புத்தகங்கள் இவ்விதம் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன! முத்துலட்சுமிராகவன் என் நண்பர் என்பதால் இதுபற்றி பேசுகையில் அவற்றை தடுப்பதற்காக அவர் எடுத்த முயற்சியில் லட்சக்கணக்கில் பணம் கேட்டார்களாம். எழுத்தில் சம்பாதிப்பதே பிரச்சனையாய் இருக்கையில் இனி தனியாக இதை தடுக்க பணம் நீட்ட எழுத்தாளர்களால் முடியுமா? அப்படியே தடுத்தாலும் பலஇடங்களில் விரவிக் கிடப்பனவற்றை மொத்தமாக தடுப்பதற்கான வழிகள் இல்லை!! நாவல் பெட்டிக்கடைகளில் தொங்கிய அடுத்த நாளே மிக சீரியசாய் நடந்துவிடுகிறது கோமு! என்றார்.
இவற்றை தடுப்பதற்கான வழிகளின் பாதை அடைத்துக் கிடக்கிறது!!
oooooooooooooooooooooo

ஆஸ்துமா கம்ப்ளைண்டோடோட வாசுகியம்மா சேந்து கெணத்துல கொடத்த கவுத்துல கட்டி உள்ளார இறக்கி, கொடம் ரொம்பிடுச்சான்னு எட்டி கெணத்துள்லார பாத்துட்டு மூனு விசுக்கா தூக்கித் தூக்கி உட்டு ஃபுல் பண்ணீட்டு மேல கவுத்தை இழுத்துட்டு இருந்தாங்க! அந்த நேரம் பார்த்து வீட்டுக்குள்ளார போயம் எழுதீட்டு இருந்த திருவள்ளுவரு, வாசுகி.. வாசுகி நுவ்வு எக்கட உந்தி? ன்னு குரலு குடுத்தங்காட்டி, அப்புடியே இழுக்குற கவுத்தை உட்டுட்டு வாசுகியம்மா..” பாவா ஏலா பிலிசித்திவி?” -ன்னு அவசரமா ஓடிவர, குடம் பாதி கெணத்துல அப்படியே நின்னுட்டு இருந்துச்சாமா! சமயம் பார்த்து பின்நவீனம்! பின்நவீனம்னு குரலு உட்டது யார்னு தேடுறேன்!! தேடுறேன்!!
oooooooooooooooooooo

Post Comment

கருத்துகள் இல்லை: