வியாழன், பிப்ரவரி 06, 2014

பிலோமி டீச்சர் - ஒரு பார்வை -சதீஷ் சங்கவி


எதுவுமே இங்குத் திட்டமிட்டு நடப்பதில்லை தான். யாருக்கும் யார் மீதும் பிரியம் தோன்றலாம். அதற்காகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தவேண்டியது இல்லை. ஜான்சனின் தூய ஆத்மாவைப் பிலோமி டீச்சர் ஒரு புள்ளியில் உணர்ந்து சிலிர்த்துப்போனாள்.

கணவனை இழந்துத் தன் மகளுக்காக வாழும் ஒரு டீச்சர் தன் மேல் யாரும் அக்கறையற்றவர்களாக இருக்கும் போது, தன் மேலும், தன் குழந்தை மேலும் அக்கறை காட்டும் ஒருவன் மீது காதல்வயப்படுகிறாள். இவளுக்குக் காதல் அவனுக்குக் காமம் என்பதை எதார்த்தமாக வாமு.கோமுவிற்கே உண்டான நடையில் நம்மைக் கட்டிப்போடுகிறார். இந்தக் கதையைப் படித்து அதில் இருந்து நாம் மீள்வதற்கு வெகு நேரம் ஆகும் என்பதில் ஐயமில்லை.

கடலோரக்கவிதைகள் டீச்சரில் ஆரம்பித்த, வருத்தப்படாத வாலிபர் சங்கம் வரை டீச்சராக வருபவர்கள் அவ்வளவு சீக்கிரம் நம் மனதை விட்டு அகலுவதில்லை அது போலத்தான் இந்தப் பிலோமி டீச்சர். டீச்சருக்காக மனதை அலைய விடுகிறோமோ இல்லையோ வாமு.கோமுவின் யதார்த்தமான நடைக்காக மனது அலைகிறது பிலோமி டீச்சரை நினைத்து.
இந்த நாவல் ஈரோடு புத்தகச் சந்தையில் வாமு.கோமுவிடம் இருந்து தான் பெற்றேன், அப்போது முழு வீச்சில் படித்தவன் போகிற போக்கில் படித்தது போல இருந்தது. நேரம் கிடைக்கையில் அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கதையையும் வாசிக்கும் பொழுது அதனுடன் இரண்டு நாள் பயணிக்க வேண்டி இருக்கு.

ஒரு பெண் உண்மையாக ஒருவனை விரும்பினாள் அவளிடம் எந்த ரகசியமும் இருக்காது. எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்துவிடுவாள். அப்போது அவளது இதயம் சுத்தமாக இருக்கும். அவள் உடலும் அவனுக்காகத் தயாராக இருக்கும். அவன் எங்குக் கூப்பிட்டாளும் உடன் செல்ல தயாராக இருப்பாள் - உண்மையாக ஒரு பெண் நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் இது எல்லாம் நடக்கும் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். இந்த வரிகளைப் புரியாத பல ஆண்கள் " இவளுக்கு முன்னாடியே அனுபவம் இருக்குமோ நம்மிடம் இவ்வளவு தாராளமாக நடந்து கொள்கிறளே " எனச் சந்தேகத்தோடு பார்க்கும் பல காதலன்கள் இந்தச் சமூகத்தில் உண்டு.

பஞ்சும் நெருப்பும் என்ற கதையில் இன்றைய திருப்பூரின் காதல் கதைகளைச் களமாக்கி அற்புதமான சிறுகதையாகக் கொடுத்திருக்கிறார். வேலைக்குச் செல்லும் இடத்திலும், பயணிக்கு வழியிலும் ஏற்படும் இயற்கையான பார்வை மோதல்களைக் காதலக்கி இவர் கையாண்டு இருக்கும் விதம் நம்மை மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கிறது இந்தக் கதையோடு பயணிக்கவும் முடிகிறது.


சாதிகள் இல்லையடி பாப்பா என்ற கதையில் காதல் திருணம் செய்து குடும்பத்தை விட்டு ஓடி வருபவர்கள் அறை எடுத்து தங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அது போலீசாரால் எப்படித் தீர்க்கப்படுகிறது என்பதை நம் ரசிக்கும், என்ன நடக்குமோ என்று யோசிக்கும் வகையில் த்ரில்லாக சென்று செண்டிமெண்டாக முடித்து நம்மைக் காதலானாக மாற்றுகிறார்.

அந்த விசயம் தான் பெரிய விசயம் என்ற கதையில் கல்யாணத்துக்குப் பின் தடுமாறுகிறவர் எப்படி மாறுகிறார் என்பதை அவரது நடையில் அசத்தி இருக்கிறார்.

 
ஒவ்வொரு கதையின் ஓட்டமும் என் மனதில் ஓடுகிறது இந்தப் பிலோமி டீச்சர் புத்தகத்தை வாசித்ததில் இருந்து....

எதிர் வெளியீடாக வந்துள்ள இந்தப் புத்தகம் 180 ரூபாய். எல்லாப் பிரபல புத்தகக் கடையிலும் கிடைக்கின்றது.

-நன்றி : சதீஷ் சங்கவி.Post Comment

கருத்துகள் இல்லை: