வியாழன், மார்ச் 13, 2014

57 ஸ்னேகிதிகள்- ஒரு பார்வை



57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் வா.மு கோமு
 எல்லோருக்கும் குழந்தைப்பருவம் தாண்டி இளமைக்கு வருவதென்பது பல புரியாத புதிர்களைக்கடந்து வரும் விஷயமாகத்தான் இருந்திருக்கும். எல்லோர் வாழ்விலும் பள்ளியை நேசிக்கச்செய்ய ஒரு பெண்ணும், பள்ளியை வெறுக்கச்செய்ய ஒரு டீச்சரும் நிச்சயம் இருப்பர். இருந்தாலும் நம்முடனேயே இருந்து கொண்டு நம்மை விட அதிகம் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களைக் கண்டு அவர்கள் செய்வதை செய்து நம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்வோம். அதே போல எல்லார் வாழ்விலும் சொந்தத்திலோ பக்கத்து வீடுகளிலோ திருமணமாகாத, திருமணம் செய்து கொள்ள விரும்பாத ஒரு சித்தப்பனோ மாமனோ இருக்கலாம். அவர்கள் கதை இன்னும் சுவாரஸ்யமானதாக இருக்கும். என்னடா வாழ்க்கை இதுஎனப் புலம்புவார்கள். நமக்கொன்றும் புரியாதெனினும் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதும். எப்படியும் ஒரு ஐஸ்க்ரீமுக்கோ, சாக்லேட்டுக்கோ துட்டு நிச்சயம்.

 வாமு கோமுவின் கதைகளின் பிரதானம் மொழிநடை. அதுவும் கொங்குப் பகுதிகளில் வாழ்ந்துவிட்டு அல்லது ஓரிருநாள் தங்கிவிட்டு அங்கிருக்கும் பழக்கவழக்கங்களைப் பார்த்துவிட்டு வந்தவர்கள் நிச்சயம் அந்த பூமியை, மக்களின் இன்மையை உணர்வார்கள். இவரின் கதைகளைப் படிக்கும்போது புத்தகத்தின் வாயிலாக ஈரோட்டுக்கோ அவிநாசிக்கோ சென்று தொப்புக்கடீர் என்று விழுந்து விட முடிகிறது. அத்தனை எளிமையான, ஆர்வத்தை தூண்டும் எழுத்து.


 வாய்ப்பாடி சென்னிமலை தொட்டு ஈரோடு மாவட்டத்தை சுற்றி நடக்கும் கதைகள் வாமு கோமுவினுடையவை. அங்கு வாழும் வெகுளித்தனம் நிறைந்த கிராமத்து மக்களின் கதைகள். அந்த மண்ணுக்கே உரித்தான கொங்கு மொழியும் எள்ளளும் நக்கலும் கூடி கை கோர்க்குமிக்கதைகள் வாசிக்கும்போது ஒரு உற்சாகத்தையும் ஒரு ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன.

 இரு நெடுங்கதைகள் சேர்ந்ததுதான் இந்த நாவல். பள்ளி செல்லும் பழனிச்சாமி, பள்ளியில் அடிக்கும் டெய்சி டீச்சர், வீட்டில் அடிக்கும் அப்பன், ஊர்சுற்றும் நண்பர் சகவாசம் என முதலாம் கதையில் கொங்கு மண்ணின் ஒரு சாதாரண சிறுவன் ஒருவனின் குழந்தைப் பருவம் மனக்கண்ணுக்குள் வருகிறது. டீச்சர் அடித்ததால் பள்ளிக்கு போக மறுக்கிறான் அப்பனிடம் அடிவாங்கிக்கொண்டு காட்டுக்குள் பனம்பழம் பொறுக்கப் போகிறான், சரளமாக கெட்டவார்த்தைகள் பேசுகிறான், சாதியைச் சொல்லி திட்டுகிறான், ரயிலேறிப்போய் சினிமா பார்க்கிறான், ஊர் எல்லைத் திரையரங்கின் போஸ்டர் பார்த்து என்னவாக இருக்குமென சந்தேகிக்கிறான் என பழனிச்சாமியின் பாத்திரம் அப்படியே என் பால்யகால நண்பர்கள் ரமேசான், சின்னக்குமாரு, பெரிய குமாரு, செந்திலான் அனைவரையும் நினைவூட்டுகிறது.

 என்னுடன் படித்தவர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு நிறைய கெட்டவார்த்தைகள் தெரிந்திருக்கும். இது பெரிய விஷயமில்லைதான் எனினும் அந்த வயதில் ஒரு கோபத்தை ஆற்றாமையை வெளிப்படுத்த இருக்கும் ஒரே வழி இதுதான். இது மட்டுமல்ல அவர்கள் அந்த வயதில் தெரிந்து வைத்திருக்கக் கூடாதென்று சொல்லப்படும் பல விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தனர். இது போலத்தான் பழனிச்சாமிக்கு செந்தில் இக்கதையில். சிறுவன்தானே என கதையில் அவனைத் திருத்துகிறேன், மாற்றுகிறேன் பேர்வழி என்றில்லாமல் பழனிச்சாமியின் போக்கிலேயெ கதை பயணிக்கிறது. அவன் காண்பவை, உணர்பவை, பேசுபவை இவையெல்லாம் முதல்கதை.

 இரண்டாம் கதை மாரிமுத்துவினுடையது. முப்பத்தைந்து வயதாகியும் திருமணமாகாமல் காட்டை மாமனுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டு எந்நேரமும் போதையிலிருக்கும் ஒரு ஆசாமி. கூட ஒரு நாய் ராஜா. ஊர் பெண்கள் கூட கிண்டலடிக்கும் வகையில் திருமணம் செய்யாமல் தறிக்குப் போய் சம்பாதித்து அந்த வேலை வெறுத்து பல வேலைகளை முயற்சித்து, பின்னர் வேலைக்குப் போகப் பிடிக்காமல் குடியே கதி என்றிருக்கும் வேளையில், சாராயம் காய்ச்சும்போது போலீசில் மாட்டிக் கொள்கிறான். ஜாமீனில் வெளியே எடுக்கிறார் மாமன். மாமனுக்குத் தன்மீது பாசம் என்று நம்பி அவர் மகள் மீது ஆசைப்படுகிறான் மாரிமுத்து. இது எல்லாமே மாரிமுத்துவின் நிலத்திற்காக மாமன் போடும் வேஷம் என்றறிந்த பின்னர் இவர்களை விலகி தனக்கான ஒரு ஜோடியைத் தேடிக்கொள்கிறான். இது இரண்டாம் கதை.

பொதுவாகவே வாமு கோமுவின் கதைகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் அவர்தம் காதல், திருமணம், அவர்களின் கலாச்சாரம் போன்றவையும் கொங்கு பகுதிகளில் நிலவி வரும் சாதி சார்ந்த பிரச்சினைகளையும் பிரதிபலிக்கும். இந்த நாவலில் வரும் இருகதைகளை மட்டும் எடுத்துப் பார்த்தால் பழனிச்சாமி தன் குழந்தைப்பருவம் தாண்டி வெளியே இருக்கும் உலகத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறான். ஒரு இளைஞனாக முயல்கிறான். தனக்கு முன் சென்றவர்கள் செய்ததை, செய்ததாய் சொன்னதை செய்கிறான். கல்வியையெல்லாம் முக்கியமாக கொண்டிராத, எப்படியும் தறி ஓட்டியாவது, உடல் உழைப்பினால் வாழ்ந்து விடலாம் என்று வாழும் மக்களின் வாழ்வு முறையாக இதைச் சொல்லியிருக்கிறார். மாரிமுத்துவின் கதையிலும் இதேதான். முப்பத்தி ஐந்து வயதிலும் எந்த வேலைக்கும் போகாமல் இருக்கும் ஒருவன். இத்தகையவர்களுக்குத் தேவையெல்லாம் அன்றைய தின மகிழ்ச்சி மட்டுமே. கல்வியின் மீது அக்கறையின்றி எதிர்காலம் குறித்த எந்த பிரக்ஞையுமின்றி வாழும் மக்களின் கதை.

 ஒரு பகுதி மக்களின் பிரச்சினைகள் மட்டுமே பேசும் கதைகள் என்றாலும் இவரின் எல்லாப் புத்தகங்களிலும் ஒரே மாதிரியான கதையும் காதலும் விஷயங்களும் தொடர்ந்து வாசிக்கும்போது கொஞ்சம் அயற்சியை ஏற்படுத்துகிறது. மொழி மட்டுமே ஒரே ஆறுதலாய் நீடிக்கிறது.


நாவல் | எதிர் வெளியீடு | பக்கங்கள் 184 | விலை ரூ. 110


Post Comment

1 கருத்து:

சே. குமார் சொன்னது…

நல்ல விமர்சனம்...
மனதில் பட்டதை அப்படியே சொல்லியிருக்கிறார்.