திங்கள், மார்ச் 10, 2014

தீராநதி நாயுருவி விமர்சனம்-முருகேசபாண்டியன்


  தமிழில் நவீனக் கதைசொல்லல் என்பது பெரிதும் நினைவுகளின் வழியே கடந்துபோன சம்பவங்களைப் பதிவு செய்வதாக உள்ளது.அதிலும் இனவரைவியல் சார்ந்து வட்டார மொழி,வழக்கினை முதன்மைப்படுத்தும் நாவல்கள் , ஒரு குறிப்பிட்ட வெளிக்குள் சுருங்கியுள்ளன. நாவல் என்பது புதிய விஷயங்களுக்கு முன்னுரிமை தரும்போது அல்லது  நாவலின் வழியே அறியப்பட்ட கண்டுபிடிப்புகள் புதுமையாக வெளிப்படும்போது சுவராசியமிக்கதாகின்றது.அவ்வகையில் வா.மு.கோமுவின்நாயுருவிநாவல் கொங்கு பிராந்தியத்தை முன்வைத்துப் புதிய பேச்சுகளை உருவாக்கியுள்ளது. கதையின் வழியே விரிந்திடும் உலகு முடிவற்றதாக நீள்கின்றது. தனது முந்தைய நாவல்களில் பாலியல் விஷயத்திற்கு முன்னுரிமை தந்திருந்த கோமு, இந்த நாவலில் இலக்கியவாதி ஒருவரை முன்வைத்து தன்னைச்சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளைப் பதிவாக்கியுள்ளார்.

    கொங்கு வட்டார நாவல் என்றாலே கிராமம், பண்ணையம், ஆடுகள், கவுண்டர், அருந்ததியர், வறுமை என்ற பழைய சூத்திரத்திலிருந்து விலகி, தொழில்மயமான சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றங்களை நாயுருவி நாவல் சித்திரித்துள்ளது. இப்படியெல்லாம் நடைபெறும்போது என்ன செய்யமுடியும் என்ற கேள்வியை  நாவல் வாசிப்பின் வழியே உருவாக்குகின்றது.பெரியசாமி என்ற எழுத்தாளரை மையமாகக்கொண்டு விரியும் கதையாடலில் கதைசொல்லியான கோமு எல்லாவற்றையும் பகடி செய்துள்ளார். பெரியசாமி மனப்பிறழ்வுள்ளாகிய நிலையில் அலைந்து திரிந்து வன்மம் தோய்ந்த மனதுடன் ஓடும் ரயிலில் சிக்கி இரு துண்டாகிக் கோரமாக இறந்து போகின்றார்.  எழுத்தின்மூலம்  தன்னைக் கண்டறியும் வல்லமையுடைய பெரியசாமியை எது அலைக்கழித்தது? எதிலும் ஒட்ட முடியாமல் விட்டேத்தியாக அலைகின்றவருக்கு மதுவின் போதை ஒரு சாக்கு. அவருக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்த லட்சியவேட்கை எங்கே போனது? சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொண்டதுபோல  சூனிய நிழல்நாவலை அச்சிட்டு வெளிட்டவரின் சிதலமும் நொறுங்கலும் முக்கியமானவை. இன்றைய சமூகம், அரசியல் ஏற்படுத்தும் நெருக்கடிகள் காரணமாகத் தன்னிலிருந்தே அந்நியமானவனின் இருப்பு, ஒருநிலையில் அபத்தமாகின்றது. பொதுப்புத்தியில் இருந்து விலகி யோசிக்கின்றநிலையில், மனப்பிறழ்வு என்பது தானாக நிகழ்கின்றது. எப்போதும் கசப்பும் சலிப்புமாக இயங்குகின்ற பெரியசாமி ஒருவகையில் தன்னைத்தானே வதைக்குள்ளாக்கின்றான். இருப்பின் அபத்தமும் அர்த்தமின்மையும் அவனைத் தொடர்ந்து அலைக்கழிக்கின்றன,

    நாவல் விவரிப்பில்  இருவேறு போக்குகள் உள்ளன. நாவலின் கதைசொல்லியான பழநிச்சாமியின் அனுபவங்கள் சமகாலத்தின் விமர்சனமாக விரிகின்றன. அதேவேளையில் இறந்த பெரியசாமியின் சிறுகதைகள் , கடிதங்கள் ,நேர்காணல், கட்டுரைகள், கவிதைகள் ஆகியனவும் நாவலில் இடம் பெற்றுள்ளன. மரபான கதைசொல்லலில் இருந்து மாறுபட்டு தனது இஷ்டம்போல கோமு விவரிப்பது சுவராசியமாக உள்ளது.
     நாவல் முழுக்க இடம்பெற்றுள்ள கோட்டர்எனக் குறிக்கப்பெறும் மதுக்குப்பிகள் தமிழ்ச் சமூகத்தைப் பிடித்துள்ள பேரவலத்தின் குறியீடுதண்ணீர் அருந்துவது போல மதுவைக் குடித்துத் தீர்ப்பது எதற்காக என்ற கேள்வியை நாவல் சூசகமாக எழுப்புகின்றது. முடிவற்ற போதையில் தன்னையே இழக்கும் ஆண் உடல்கள் காற்றில் மிதக்கின்றன. தறி வேலைக்குப் போவதைவிட நூறு நாள் வேலைத்திட்டம் பெண்களுக்குச் சௌகரியமாக இருக்கிறது. சொந்தக்கதை பேசிக்கொண்டு, பொழுதைப் போக்குகின்றவர்கள் எதிர்காலத்தில் உழைப்பிலிருந்து  முழுக்க விலகும் அபாயமுண்டு வயதான பெண்கள்கூட வங்கியில் ஊதியம் பெறுவதற்காகக் காத்திருக்கின்றனர். அப்புறம் அரசு வழங்கும் இலவசங்கள் வேறு. மனைவியிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு டாஸ்மாக் கடையை நோக்கிப் போகின்ற ஆணின் மனநிலையை எப்படிச் சொல்ல? இப்படியாகக் கிராமத்தினர் அன்றாட வாழ்க்கை சரிந்து கொண்டிருக்கின்றது.

   மனிதவாழ்க்கையில் இயற்கையான பாலுறவு பற்றிய பெரியசாமியின் கட்டுரை அழுத்தமானது. உடலை முன்வைத்துக் காலந்தோறும் மதங்கள் உருவாக்கும் குற்றமனம் வலுவானது. உலகில் எல்லா மதங்களும் பாலியலைக் கண்டு பயப்படுகின்றன. குண்டலினி, யோகா எனப் பேசும் நித்தியா போன்ற சாமியார்களின் பின்னே திரளும் கூட்டத்தினர் ஒருபுறம். ஆசிரமம், மடங்கள் போன்ற இடங்களில் சாமியார்கள், பாதிரியார்கள் போன்றோரின் பாலியல் அத்துமீறல்கள் இன்னொருபுறம். தெருவில் திரியும் மனப்பிறழ்விற்குள்ளான பெண்ணைக்கூட விட்டு வைக்காத ஆணின்  பாலியல் விழைவு கொடூரமானது. ”பாலியல் உணர்வு மனிதர்களிடம் உள்ள அதிதீவிரமான ஆற்றல். இயல்பான உயிரியல் இயக்கம். அதை அழித்துவிட இயலாது. உள்ளுக்குள் அடக்கி ஒடுக்கி வைக்கவும் முடியாது. எப்படியும் அது வெடிக்கத்தான் செய்யும். ஒரு பலூன் போல்.” இணையகத்தில் போர்னோகிராபி,, அலைபேசியில் ஒருமாதிரியான படங்கள் என வதங்கும் உடல்கள் எளிதில் புறக்கணிக்கக்கூடியன அல்ல. பாலியலை ரசியமாக மறைக்கும் தமிழகத்தில் சிறுமிகள் மீதான அத்துமீறல் தொடங்கி வக்கிரங்களும் கோளாறுகளும் தொடர்கின்றன. என்ன செய்வது என்ற கேள்வி தோன்றுகின்றது.

    ஈமுக் கோழி வளர்த்தால் லாபம் கொட்டுமென்று ஆசைப்பட்டு முயன்று  நஷ்டப்பட்டவர்கள் பலர். கோவிலில் ஆடு வெட்டுவதற்குப் பதிலாக ஈமுக் கோழியை வெட்ட முயன்றால் என்ன ஆகும்? பூசாரிக்கு அருள் வந்து ஈமுவை வெட்டக்கூடாது என மறுப்பினைத் தெரிவிக்கின்றார். மதுவைக் குடித்துவிட்டு ஈமு இறைச்சியை விழுங்கக் காத்திருந்தவர்கள் ஏமாந்து போகின்றனர். ஆட்டுக் கிடாய்க்குப் பதிலாக ஈமுக் கோழி என முயலும் மனிதர்கள் பற்றிய சித்தரிப்பு நகைச்சுவையின் உச்சம்.
   எழுத்தாளர் என்றால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். பெரியசாமியே அப்படித்தான் இருக்கின்றார்நடுகல் என்னும் சிற்றிதழ் நடத்தும் பெரியசாமியை தேடி வந்த சுப்ரபாரதி மணியன் எதிர்கொண்ட அனுபவங்கள் வேடிக்கையானவை. தோழர் பெருசு. காம் பதிவு என்ற அத்தியாயம் பகடியின் உச்சம். எழுத்தை முன்வைத்து இலக்கிய உலகில் நடைபெறும் விநோதங்கள் கேலியான தொனியில் பதிவாகியுள்ளன . எல்லாவற்றையும் மிகைப்படுத்திப் புளுகுகின்ற ஒரு எழுத்தாளரின் கோணல் பக்கங்கள் பற்றிய விவரிப்பு கோமுவின் நகைச்சுவைத்திறனை வெளிப்படுத்துகின்றது . எது உண்மை, எது புனைவு என்ற வரம்பினைமீறிக் கதை நகர்கின்றது.

   நாவல் விவரிப்பில் நிறைய தகவல்கள், குட்டிக்கதைகள், சம்பவங்கள், குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெறுவதனால் கதையுடன் ஒன்ற இயலாது.  தொடர்ச்சியறு எழுத்தின் வழியே  எது புனைவு, எது நிஜம் தகர்க்கப்பட்டு, இப்படியாக மனித வாழ்க்கை உள்ளதே என்ன செய்வது என்ற கேள்வி வாசிப்பினில் தோன்றுகின்றது. இலக்கியச் சூழல், சமூகப் பிரச்சினைகள் என இருவேறு தளங்களில்  விரிந்துள்ள கதைகளின் வழியே வாசகர் அவரவருக்கான பிரதியை உருவாக்கிக் கொள்ளலாம். நடப்பு வாழ்க்கையின் வெக்கை எங்கும் வலுவாகப் பரவியிருக்கும் சூழலில், எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியப்பாட்டினைப் பகடி செய்வது, ‘நாயுருவிநாவலின் தனித்துவம்அன்றாட வாழ்க்கையில் பதற்றமும் மன இறுக்கமும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், வாசிப்பின் வழியே நம்மையே பகடி செய்து கொள்ளத் தூண்டுகிறது நாவலாசிரியர் கோமுவின் ஆளுமை .

       நாயுருவி(நாவல்), வா.மு.கோமு. உயிர்மை பதிப்பகம்,சென்னை. பக்கம்:254: விலை; ரூ.190/-.

 
                               

Post Comment

கருத்துகள் இல்லை: