புதன், மார்ச் 26, 2014

விளம்பரம்

பதிப்பகங்கள் கவனத்திற்கு! நாயுருவி சென்னை புக்லேண்டுலயே இல்லீங்கறது விசயம்! முக்கி முக்கி எழுதுனாலும் இந்த விசயங்களுக்கு வாய்ப்பாடில குக்கீட்டு என்னால ஒன்னும் பண்ட முடியாது போல! பாருங்க அடுத்த முக்கலுக்கு போயிட்டேன்! கவலப்பட்டா மட்டும் புத்தகம் பறந்துட்டு கடைக்கு வந்துடாதுங்கறதும் தெரியுமே! நன்றி  Subash Suba

அம்மு இதுவரையான தன் வாழ்நாளில் மொத்தமே மூன்று புத்தகங்கள் தான் படித்திருக்கிறார். அதுவும் கடைசியாக அவர் படித்த ஆறுமுகநயினார் எழுதிய "மனம் என்னும் மகாசக்தி" என்ற புத்தகத்தை கடந்த ஆறு மாதமாக படித்து கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 72 என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. அத்தனை வேகமாக வாசிக்க கூடியவர். கடந்த வாரம் சென்னை சென்றிருந்தபோது வாங்கி படிக்காமல் வைத்திருந்த எழுத்தாளர் வா.மு. கோமு வின் "மரப்பல்லி" நாவலின் பின்னட்டை வாசகத்தை தற்செயலாக பார்த்தவர் அதை படிக்க கேட்டார். அதை தரும்போதே என் உள்மனசில் கொஞ்சம் டரியலாகவே இருந்தது. காரணம் நான் இன்னும் அந்த நாவலை படிக்கவில்லை, நாவலின் கருவான ஒருபால் பெண்களின் காதல், காமம், மற்றும் எழுத்தாளர் வா.மு.கோமுவின் முந்தைய நாவல்களை ஏற்கனவே நான் படித்திருக்கிறேன் என்பதே. இருப்பினும் தமிழ் இலக்கியம் ஒரு புதிய வாசகியை என்னால் இழந்துவிடகூடாது என்ற ஒரே காரணத்தால் அம்முவுக்கு அந்த நாவலை படிக்க தந்தேன். மாலை ஒரு மணிநேரம் கொஞ்சம் வெளியே சென்றுவிட்டு வந்து பார்க்கும்போது அம்மு கிட்டத்தட்ட நாற்பது பக்கங்களை முடித்து விட்டிருந்தார். சரி படிச்ச வரைக்கும் புக்கு எப்படி இருக்குன்னு கேட்டதற்கு., "சுப்பு மொதல்ல உன் ரூமுக்கு வந்து உன் புக்கு எல்லாத்தையும் பார்க்கனும், புக்கு படிக்கிறேன், புக்கு படிக்கிறேன்னு இந்த மாதிரி புத்தகம்தான் படிச்சிட்டு இருக்கியான்னு திட்ட ஆரம்பித்துவிட்டார். அவருக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது, வா.மு.கோமு அவர்கள் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் என்றும், இந்த மாதிரி எழுத்துக்களும் தமிழ் இலக்கியம்தானென்று. சரி திட்டுறாங்களே என்று புத்தகத்தை திருப்பி கேட்டதற்கு முழுசும் படிச்சிட்டு தரேன்னு சொல்றாங்க. ஏதெச்சையாக அவர் பாதி படித்துவிட்டு புக் மார்க் செய்து வைத்திருந்த பக்கத்தை திறந்துபார்த்த போது, ஜெனியின் மார்பை சினிமா தியேட்டரில் பிசைந்ததை பற்றி யாரோ சொல்லி கொண்டிருக்கிறார். ஈஸ்வரா..!

நான் எல்லாம் "கள்ளி" படித்தபோதே வா.மு.கோமு விற்கு வாசகன் ஆகிவிட்டேன். அவரின் அடுத்தடுத்த புத்தகங்களான மங்கலத்து தேவதைகள் நாவலும், பிலோமி டீச்சர் சிறுகதை தொகுப்பும் எனக்கு பிடித்திருந்தன. சாந்தாமணி மட்டும்தான் கொஞ்சம் சைடுவாங்குன மாதிரி ஆகிடுச்சு. மரப்பல்லி மற்றும் நாயுருவி இரண்டும் இன்னும் படிக்கவில்லை. நிச்சயம் கோ.மு.ஏமாத்தமாட்டார் என்றே நம்புகிறேன். புத்தகத்தின் வடிவமைப்பும், அட்டைபடமும், அச்சாக்கமும் அட்டகாசம். 
கோமு அண்ணே., இன்னொரு விசியமுங்க, நம்ம கோயமுத்தூர்ல நாயுருவியும், மரப்பல்லியும் எங்கெயும் கிடைக்கலிங்க. நம்ம விஜயா பதிப்பகத்துல கூட கேட்டு பாத்துட்டேங்க அங்கயும் இல்லீங்க. அடுக்கி வெச்ச உடனே காலியாய்டுதா இல்லை மொத பதிப்பு முடிஞ்சி போச்சான்னு தெரியலீங்க. அப்படியா இருந்துச்சின்னா ரொம்ப சந்தோஷமுங்க. எதுக்கும் ஒரு வார்த்தை நம்ம பொள்ளாச்சி பாய்கிட்டவும், சென்னை பாய்கிட்டவும் கொஞ்சம் கேட்டு பாருங்க. நெம்ப சந்தோஷமுங்க.

0000000000000000000000


உயிர்மை பதிப்பகம் மூலமாக நான் வெளியே அடையாளப்பட்டேன் என்பதை என் காலம் உள்ளவரை சொல்லிக் கொண்டுதான் இருப்பேன். பதிப்பகத்தார்களிடம் கோபித்துக் கொள்வது என்பதை எக்காலமும் நான் செய்ய மாட்டேன். என் இயல்பு அப்படி! உடலுழைப்பு என்ற பணிகள் செய்ய இயலாத நேரத்தில் ஒரே முடிவாக படைப்பை மட்டுமே நம்பி இந்த மூன்று வருடங்களில் களம் இறங்கியிருக்கிறேன். இப்பணி எதை நோக்கி செல்ல என்பது எனக்கு தெரியும். நாயுருவி சில இடங்களில் இல்லை என்பதை பலர் அலைபேசியில் சொல்கிறார்கள். சிலருக்கு பைசா வாங்கிக் கொண்டே புத்தகங்களை நான் கொடுக்கிறேன். அதுவும் எனக்கு வந்த பிரதிகளை! 

நண்பர் மனுஷ்யபுத்திரன் கூறியதுபடி பிரதிகள் தேவை என்பதனை புத்தக்கடை பணியாளர்கள் தான் வெளியீட்டாளர்களிடம் தொடர்பு கொண்டு பிரதிகள் பெற வேண்டும். புத்தகம் தொடர்ந்து எந்த நேரமும் விற்பனையாகிக் கொண்டே இருப்பதில்லை. சிலர் தேவை என்கிறபோது சில புத்தகங்களை அருகிலிருக்கும் புத்தகக் கடையில் கேட்டு பிரதி இல்லை என்கிறபோது அந்த எண்ணம் அத்துடன் நிறைவு பெற்று விடும். தமிழகம் முழுக்க புத்தகக் கண்காட்சிகள் வருடம் முழுக்க நடைபெறுவது வாசிப்பாளர்கள் அறிந்த விசயம் தான். வருடம் ஒருமுறை கணக்கை நிறைவு செய்யும் புத்தக விற்பனையாளர்களுக்கும் சிரமங்கள் இருக்கலாம். அவர்கள் பல பதிப்பகங்களின் புத்தகங்களை வகை வகையாய் விற்பனை செய்கிறார்கள். ஒரு காலத்தில் பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்களின் உதவியோடு தான் இலக்கியத்தை பரவலாக்கினார்கள். இன்று நிலைமை மாறியிருக்கிறது. ஒரு மூலையில் அமர்ந்து எழுதும் படைப்பாளி திடீரென உலகம் முழுதும் அறிமுகமாகிறான் பதிப்பகங்களால்.

காலம் போகிற வேகத்தில் வாய்ப்பாடியில் அமர்ந்து நானே கையால் எழுதும் வழக்கத்தை மறந்து விட்டேன். பாட்டுப்படிக்கும் பொட்டியிலிருந்து மெமரிகார்டு வரை கிராமத்தில் ஆன்லைனில் சிறப்பாக பொருள்களை வாங்குகிறார்கள். வரும் காலங்களில் எனது புத்தகங்கள் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும். அப்படியான முயற்சியில் தான் நடுகல் பதிப்பகம் துவங்கப்படுகிறது.


காரு கொஞ்சம் வெசையாப் போயி புழுதியக் 

கெளப்பீட்டு திரும்புச்சுன்னாவே சண்டைப் படமுன்னு

முடுவு பண்டிடறாங்க மை லார்ட்!

Post Comment

கருத்துகள் இல்லை: