திங்கள், மார்ச் 03, 2014

கவிதைகள், ராசுவின் தொகுப்பு விமர்சனம்

  விரக்தி மனநிலையில் கவிதை என்று வரிகள் சமைப்பவர் ராசு. அப்படி வைத்துக் கொண்டோமேயானால் உங்களுக்கும் எனக்கும் விரக்தி மனநிலையின் அலைக்கழிப்புகள் புரிந்தால் மட்டுமே இந்த புத்தகத்தையும் முழுதாக புரிந்து கொள்ள முடியும்.

  சாவைப்பற்றியும், இறுதி ஊர்வலம் பற்றியும், சுடுகாடு பற்றியும் மிக அதிகமாக பேசிய ஒரே தொகுதி இதுவாகத்தான் இருக்க வேண்டும். கவிஞர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நேரில் சந்திக்கையில் கவனித்திருக்கிறேன்! குடி அவர்களை கவிதை எழுத்தூண்டிக்கொண்டே இருக்கிறது! நல்ல பாடல்களை பாடச் சொல்கிறது! கொண்டாட்டமாய் ஆடச் சொல்கிறது! இந்த உலகை அவர்கள் மறக்கவே தலைப்படுகிறார்கள்! இரக்கமற்ற இந்த உலகிலிருந்து விடுபடவே அவர்கள் தவிக்கிறார்கள். அது அவ்வளவு சுலபமில்லை என்பது தெரிந்திருந்த போதும்!

  தன் கோபத்தை கவிதை எழுதி தீர்க்கிறார்கள்! கடவுளை நாயை விட்டு கடிக்க வைக்கிறார்கள்! இத்தொகுதியில் உச்சமாய் சுடுகாட்டில் தனக்கான சாவுக்குழி நீள அகலங்கள் அதிகமாய் விடப்பட்டிருக்க யாசகம் கேட்கிறது! உலகம் குரூரங்களால் நிரம்பியிருப்பதை கண்ட ராசுவின் கடவுள் குகையில் பாதுகாப்பாய் ஒளிந்திருக்கிறார். தவிர அவரையும் தங்கிக் கொள்ள அனுமதி கொடுக்கிறார் கடவுள்!

  மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் ராசுவின் மேய்ப்பாளனுக்கு போதி மரத்தின் மகத்துவங்கள் தேவையில்லை! களைப்பில் ஒரு சுகமான தூக்கம் மட்டுமே போதுமானதாய் இருக்கிறது!
கிணற்றுத் தண்ணீரில் சடலமாக மிதந்த அமுதா அக்காவின் மூடிய விரல்களுக்குள் இறுக்கப்பட்டிருப்பது காலையில் என்னிடம் விளையாட்டாய் பறித்துச் சென்ற கோலிக் குண்டாக இருக்கலாம் நிற்குமிட்த்திலேயே இந்த வரிகள் நிறையப் பேசுகிறது! ராசு மேலும் நீட்டித்திருக்க வேண்டியதில்லை!

அங்கங்கே பளிச்சென மின்னும் வரிகள் என்னை ஆச்சரியப்படவைக்கின்றன! அதுவே கவிதைகளுக்கு உண்டான சிறப்பம்சம் என்பதை தாமதமாகவே உணர்ந்து பின்மண்டையைத் தட்டிக் கொள்கிறேன் நான்! அப்படி இந்த வரிகளை பார்க்கலாம்! “ஒரு சவ ஊர்வலமோ கல்யாண ஊர்வலமோ செல்லக்கூடும் அதிசயமாய் திறந்திருக்கும் என் ஜன்னலைக் கவனித்தபடி மனிதர் இந்த இட்த்திலும் சவம், ஊர்வலம் என்று கூறி என்னை களேபாரப் படுத்துகிறார்!
குடை வாங்கிய கடையில் தான் மழையைத் தொலைத்த ஞாபகம்

  ராசுவின் கவிதை தொகுப்பை வாசிக்காமலே கவிதைகள் பற்றியும், அவற்றின் போக்குகள் பற்றியும் மைக் முன்பாக அரைமணி நேரம் பேச முடியும் என்னால்! எல்லோருக்கும் தெரிந்த விசயங்களை மீண்டும் திரும்பச் சொல்வதிலான சலிப்பில் விட்டு விட்டேன்! ஒரு கவிதை தொகுப்பில் 50 கவிதைகள் உள்ளன என்றால் 10 கவிதைகள் மனதிற்கு அருகாமையில் நின்றாலே அந்த தொகுதி வெற்றி தான்! மற்ற கவிஞர்கள் செய்வது போலவே ராசுவும் தன் புத்தகத்தை சொந்த உழைப்பில்தான் கொண்டு வந்திருக்கிறார். கவிதை வாசிப்பவர்கள் கவிதை புத்தகங்களை மட்டுமே காதலோடு வாங்குகிறார்கள்! அவர்கள் நாவலோ கட்டுரைகளையோ வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை! ராசு புத்தகத்தில் வரும் தொகையை திருப்பூர் தாய் தமிழ் பள்ளிக்கு முழுவதுமாக கொடுக்கிறார். அது தான் அவர் எழுதிய கவிதைகளிலேயே சிறந்த கவிதை! என்று கூறி என் சிற்றுரையை முடித்துக் கொண்டேன்!

  தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு தலைப்பு என்று எவற்றிற்கும் தரவில்லை ராசு! தலைப்புகள் இல்லாத கவிதைகள் வழியே பயணிப்பதும் ஒரு சுகம் தான்! நமக்குள் தலைப்புகளை ஒவ்வொன்றிற்கும் இட்டுக் கொண்டே பயணப்படலாம்! சென்னை புத்தக சந்தையில் இந்த வருடம் 50 கவிதை தொகுதிகள் வெளிவந்தன! காலம் உள்ளவரை கவிதைகள் உயிர்ப்புடனே வாழ்ந்து வரும் என்பதை கவிஞர்கள் உற்சாகமுடன் எழுதுவதை வைத்து நாம் கூறலாம்!

ooooooooooooooooooo

.மலைகள்.காமில் வெளிவந்த கவிதைகள்

சாலையில் அடிபட்டு அரைமணி நேரம்

கழித்து இறக்கும் ஒரு
நாய்க்குட்டிக்கும்ஒரு குழந்தைக்கும்
வேறு வேறாய் வருத்தப்படுபவர்கள்
வாழும் உலகில் நானும் வாழ்கிறேன்!
000

இருவரும் ஒரே நேரத்தில் தான்
முடிவெடுத்திருக்கிறோம்! எல்லாவிதமான
புணர்தலும் முடித்து சலித்த பிறகு
பிரிந்து விடுவதென!
000

அவன் அடியாளத்திலிருந்து உடல்
உப்பி நீருக்கும் மேல் வந்த போது
தன்னை யாரோவென நினைத்தான்!
000
தோட்டத்தில் பூத்திருக்கும் பூச்செடிகள்
பற்றியும்காய்கறிகள் செழித்திருக்கும்
அழகுபற்றியும் அவற்றை பாதுகாக்கும்
திறமைபற்றியும் முகநூலில் ஒரு ஸ்டேட்டஸ்
போட்டாள் அவள்! உள்பொட்டியில் ஒருவன்
உடனே வந்தான். என்னையும் திறமையாய்
கவனித்துக் கொள்வீர்களாஇந்தக் கவிதை
இத்துடன் முடிகிறது!
000

வாத்தியார் திட்டினாரென தற்கொலை
செய்து கொண்டவன் வடக்கே
தலை வைத்துப் படுத்திருந்தான்!
000
சுற்றுலா போய் வந்தவன்
தான் பார்த்து வந்த கடல் பற்றி
கருத்துச் சொன்னான்!
கடல் ஏனோ கடல் மாதிரியே இல்ல! ஒருவேள
செவ்வாக்கெழமெ அதை பார்த்திருக்க
கூடாதோ என்னமோ!
000

இழவு வீட்டில் அழுது முடித்த
பெண்கள் அனைவரும் மூக்கைச் சிந்தி விட்டு
எழுந்து போய் சாப்பாட்டு
இலையில் அமர்ந்தார்கள்!
பருப்பு கொழம்பு ஊற்றியவனிடம் அம்மிணியம்மா
கேட்டாள்.. எங்க ஊட்டுக்காரரு போன
பந்தியிலியே சாப்டுட்டு போயிட்டாரா?
000

அந்த பாப்பா நகர சாலையை
தத்தித் தத்தி கடக்கும் வரையில் எல்லா
வாகனங்களும் ஒலி எழுப்பாமல்
அமைதி காத்தன! பாப்பாவின் அம்மா
என்றறியப்பட்டவள் பதைபதைப்பாய்
சாலையைக் கடந்து குழந்தையை தூக்கி
அறிவு கெட்ட முண்டமே! என்று முதுகில்
சாத்தவும் குழந்தை வாகனங்களைப் பார்த்து
அழத்துவங்கிய மறுகணம் வாகனங்கள்
அழுத வண்ணம் நகரத்துவங்கின!
000

அந்த இரவில் ஒதுக்குப்புறத்தில்
ஆய் போய்க் கொண்டிருந்தவளுக்கு
துணையாய் அவள் கணவன் பீடி
பிடித்தபடி நின்றிருப்பதைக் கண்ட
அவளின் முன்னால் காதலன்
நெஞ்சு வெடித்துச் செத்தான்!
000

யாருமறியாப் பறவை ஒன்று
யாருமறியாமல்
பறந்து கொண்டிருக்கிறது!
மூன்று நாள் பசியில் கிடந்தவன்
சோற்றைக் கண்டதும்
சிரிக்கத் துவங்கினான்!
ஒருமணி நேரத்துக்கு தொகை
கொடுத்து கூட்டி வந்தவன்
அந்த ஒருமணி நேரமும் ஒரே
கேள்வியை கேட்டவண்ணமிருந்தான்!
ஏன் இந்த தொழிலுக்கு வந்தே?
நேரம் ஆனதும் மடிப்பு கலையாமல்
எழுந்து போனவள் கடைசியாய் பதில்
சொல்லிப் போனாள்… உன்னியாட்ட
பேக்குகளை வாழ்க்கையில் சந்திக்கத்தான்!
000

நீலப்படத்தில் நடிக்கவிருந்தவளுக்கு
எதிர்பாராமல் வயிற்றுப்போக்கு
என்றானபின் சூட்டிங் கேன்சல் ஆனது!
000

குஞ்சைத் தூக்கிய பருந்தொன்று
கோழியின் புன்னகையை கண்டு
சந்தேகமாய் குஞ்சைப் பார்த்தது!
குஞ்சும் புன்னகைக்கவே கோழிக்குஞ்சு
தூக்கும் வேலையை அன்றோடு விட்டொழித்தது.
000

யாரு யாருகூடப் படுத்தா உனக்கென்ன?
வாசகர் ஒருவர் அலைபேசியில்
எழுத்தாளனிடம் கேட்டு நாட்டில் எழுத
எவ்வளவோ நல்ல விசயங்கள் உள்ளன என்றும்
உங்க அக்கா தங்கச்சிக்கு படிக்க குடுப்பியா என்றும்
வகுப்பெடுத்துக் கொண்டிருந்தார்.
தெற்கத்த மழை இப்போது கொட்டும் என்று
வானம் இடறிக்கொண்டிருந்த வேளையில்
எழுத்தாளன் சுவற்றை நோண்டிக்கொண்டே
அட்வைஸ் மழையில் அட்வான்ஸாய் நனைந்தான்!
கடைசியாய் வாசகர் நல்ல எழுத்தை எழுத்தாளரிடமிருந்து
எதிர்பார்ப்பதாக சொல்லி முடித்தார்!
அப்ப பள்ளியோடத்துல இருந்து உங்க தங்கச்சி
வீடு வந்து சேரலைன்னா மட்டும் தான்…….
அப்ப உங்கக்கா வேலைக்காட்டுல இருந்து
திரும்பலன்னா மட்டும் தான் லொய்யோ
லொய்யோன்னு தலையில அடிச்சுக்குவீங்ளா நண்பா!
000

பேருந்து நிலையக்காட்சி
அந்த கிறுக்குப்பயல் தனக்கு இடையூறு
செய்த ஈ ஒன்றைப் பிடித்து தன் வாயில்
போட்டுக் கொண்டதைக் கண்ட அம்சவேணி
உவ்வே! என்று பேருந்து நிறுத்தத்தில்
வாந்தி எடுத்தாள்! அவளை பலநாளாய்
ஒருதலைப்பட்சமாக காதலிக்கும் முத்து
தண்ணீர் பாட்டில் ஒன்றை வாங்கிவந்து நீட்டும்
அவசரத்தில் சாலையைக் கடந்து ஓடினான்
பெட்டிக்கடை நோக்கி!
காத்தால உப்புமாவா தின்னுட்டு வந்தேஎன்றான்
பேருந்து நிலைய பிச்சைக்காரன்!
நிறுத்தத்தில் காலியாய் ஒரு பேருந்து
வந்து நின்றது! அதில் நடத்துனரும் இல்லை
ஓட்டுனரும் இல்லை!
அம்சவேணி கண்ணிலும் மூக்கிலும் நீர்வர
பேருந்து ஏறியதும் விசில் சப்தம் கேட்க
உறுமிக்கொண்டு கிளம்பியது!
முத்து சாலையைக் கடந்ததும் எதற்காக
ஓடிக் கொண்டிருக்கிறோம் எனத்
தெரியாமலே ஊரைத்தாண்டி ஓடியபடியிருந்தான்!
****

 இந்த நாவலின் வடிவம் கொஞ்சம் வித்தியாசமானது. பின் நவீனத்துவ நாவலில் காலம் முன்பின்னாக இருந்தாலும், கதை என்று ஒன்று தொடர்ச்சியாக இருக்கும். இதையோ பத்து தொடர்புள்ள சிறுகதைகள் என்றுதான் சொல்ல வேண்டும். கோமு கள்ளி # 1, 2, 3… என்று இந்த சிறுகதைகளை வரிசைப்படுத்துகிறார். அவை காலவரிசைப்படித்தான் நடக்கின்றன. ஒரு கள்ளியில் வரும் பாத்திரங்கள் பிறவற்றிலும் வருகின்றன. ஒரே கிராமத்தில்தான் நடக்கின்றன். ஆனால் இவற்றை எல்லாம் இணைக்கும் கண்ணி என்று ஒன்று இல்லை.
ஆனாலும் புத்தகம் படு சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு கள்ளியும் பாத்திரங்களின் சித்தரிப்புதான். அறுப்பு வேலை செய்பவர்களை கூலியில் ஏமாற்றப் பார்க்கும் முத்தாக் கவுண்டர், அவரிடம் பண்ணையம் பார்க்கும் மல்லி, ஊர் மேயும் மைனர்கள் சுரேந்திரன் மற்றும் பழனிச்சாமி, சுரேந்திரனின் ஓய்வு பெற்ற வாத்தியார் அப்பா சரக்கு அடித்துவிட்டு பண்ணும் அழும்பு, ஊரில் முடிச்சு போட்டுவிடும் வண்ணான் ராமசாமி, முத்தாக் கவுண்டரின் பெண்ணோடு ஓடிவிடும் மல்லியின் மகன் சண்முகம், படுக்கத் தயாராக இருக்கும் சிகாமணி, சுந்தரி, விஜயா என்று பல பெண்கள் என்று பாத்திரங்களின் சித்தரிப்புதான். அது பிரமாதமாக இருக்கிறது. தண்ணி அடிப்பதும், பெண்ணுக்கும் ஆணுக்கும் அலைவதும் நிறைய. பச்சை பச்சையாக பேசுகிறார்கள், திட்டிக் கொள்கிறார்கள். ஆனால் அது வலிந்து புகுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
கதையின் களம் ஒரு வாய்ப்பாடி என்ற ஒரு சின்ன கிராமம். திருப்பூர், சென்னிமலை அருகில். கீழ்சாதியினரான மாதாரிகள் திருப்பூரில் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறார்கள். நாவிதர்கள் வீட்டுக்கு வராமல் சலூன் வைக்கிறார்கள். கவுண்டனை விட்டால் சாப்பாட்டுக்கு வழியில்லை என்ற நிலை இல்லை. மாறாக கவுண்டர்களுக்கு வேலைக்கு ஆள் தேடுவதில் கொஞ்சம் சிரமம். கவுண்டர்களின் பாலியல் மீறல்கள் நிறைய என்றாலும் மாதாரிகளுக்கும் கவுண்டர் பெண்களோடு உறவு இல்லாமல் இல்லை. பழைய ஜாதி சார்ந்த பொருளாதாரம் உடைய ஆரம்பித்திருப்பது நாவலின் பின்புலமாக இருக்கிறது.
கதையின் பலம் பலவீனம் இரண்டுமே அது சித்தரிப்போடு நின்றுவிடுகிறது என்பதுதான். அருமையான சித்தரிப்பு என்றாலும் நாலைந்து கள்ளிக்குப் பிறகு கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறது. கூறியது கூறல்!

 00000000000000000000
Post Comment

கருத்துகள் இல்லை: