வியாழன், ஜூன் 19, 2014

நாவல் பற்றி இங்கு மட்டும்!
ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி நாவல் வரும் ஆகஸ்டு மாதம் ஈரோடு புத்தகக் கண்காட்சிக்காக மலைகள் பதிப்பகம் நண்பர்  சிபிச்செல்வன் கொண்டு வரும் நாவல். பின் அட்டை சொல்லும் தகவல் மிக முக்கியமானதாக இப்போது எனக்குப் படுகிறது. இந்த நாவலை சயனம் நாவல் எழுதி முடித்த பிற்பாடு நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க சம்மதம் தெரிவித்து மிக எளிதாக இருக்கும் என்று எழுதத் துவங்கி விட்டேன்.

உள்ளே நுழைந்த பிறகுதான், ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டேனோ என்ற மிரட்சி வந்து விட்டது. அது சின்ன மிரட்சிதான். நாவல் எழுதும் அனைவருக்கும் இது ஏற்பட்டதா? ஏற்பட்டிருக்குமா? என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அந்த மிரட்சி என்பது கணநேரம்தான்.

மிகக் கடினமானதாக ஒரு பணியை முடித்து விட்டு எளிதாக ஒரு பணி செய்வது மனதை சந்தோசம் கொள்ளச் செய்யும் விசயம்தான், அப்படித்தான் இந்த நாவலை துவங்குகையில் நான் நினைத்தது. வெளியீட்டாளருக்கு என்ன பயம் என்றால் புத்தகம் சராமாரியாக விற்க வேண்டுமே! அதற்காக பட்டையைக் கிளப்புங்கள் என்று சொல்லிவிட்டார். அவர் பதிப்பகம் துவங்கி இரண்டு புத்தகங்களை சென்ற வருடம் தைரியமாக கொண்டு வந்தவர்.

எனக்கு என் நாவலை வாசகர்களுக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்ற கலை தெரியும். நாவலுக்குள் பயணிக்கையில் அது எழுத்தாளனை கூட்டிச் செல்லும் அழகு எழுதும் ஆட்களுக்கு தெரியும். அதனால் தான் சொல்கிறார்கள் அது பெரிய விசயமாச்சே! என்று. எழுதுபவனுக்கு அது பெரிய விசயமல்ல. அது அவன் தொழில். எல்லோருக்கும் ஒரு தொழில் அமைந்தது போல எழுத்தும் ஒரு தொழில். அதை தேர்ந்தெடுக்க மனதைரியம் நிரம்ப வேண்டும். என் அப்பா தலைமை ஆசிரியராக இருந்து பணிக்காலத்தில் இறந்தவர். பதினைந்து வருட காலங்களுக்கும் மேலாகி விட்டது. என் காலேஜ் வாழ்க்கையோ பட்டம் பெறாத வாழ்க்கை. அரசாங்க உத்தியோகம் கிடைக்குமென்று மாளாத கையெழுத்துகளை மாளாத இடத்திலிருந்தெல்லாம் வாங்கி ஒன்று சேர்த்து மன உளைச்சல் பட்டு அனுப்பிய முக்கிய தொகுப்பு குப்பைக் கூடைக்கு வந்தது தெரிந்த நண்பருடைய அக்கா அந்த ஆபீஸில் இருந்ததால் மீண்டும் தப்பிற்று. பின் ஆட்சி மாற்றம் வந்ததால் மீண்டும் கையெழுத்துகளை சேகரித்து மீண்டும் அனுப்பி, மீண்டும் திரும்பி என்று என் வயதும் நாற்பதை தொட்டு விட்டது. பின் இப்போது மீண்டும் வேலை உறுதி  “வாங்க” என்றஅழைப்பு வந்தது. அங்கு சென்றால் மீண்டும் கத்தையை அனுப்ப வேண்டும். என்ன எழவுடா இது? எனக்கு வேலை வேண்டாங்க! என்றேன். அதையும் எழுதிக்கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பது அந்த ரூல்ஸ். அதையும் செய்து விடைபெற்று இரண்டு வருட காலமாகி விட்டது.

நான் செய்யாத தொழில்கள் இல்லை. நான் செய்ததில் மகிழ்ச்சியான தொழில் திருட்டு விசிடி விற்றது. டிவிடி வந்ததும் நான் இது ஒரு பொழைப்பு என்று ஓடி வந்து விட்டேன். அதற்கும் மேல் அந்த தொழில் நசிந்தது. கேஸ் என்றால் உள்ளே போய் உட்கார்ந்து வந்ததும் நடந்தது. இதை நாயுருவி நாவலில் பதிவு செய்திருப்பேன். எழுத்து என் எல்லா காலத்திலும் நேரத்திலும் கூடவே இருந்து வந்தது. எந்த தொழிலில் நான் இருந்தாலும் வருடம் ஐந்து சிறுகதையாவது எழுதிக்கொண்டிருந்தேன். இன்றைய நிலையில்  என் எழுத்து என்னை, ’நம்புடா’ என்று சொல்கிறது. நான் நம்பி எழுதுகிறேன். கதைகளை வாயால் சொல்வது ஒரு கலை என்றால் எழுத்தால் சொல்வதும் கலைதான். அதை கைவரப்பெற்றவன் குடும்ப சூழல், பணி காரணமாக அதை விட்டொழித்து போய்விடுவதும் நடக்கும். இந்த குரூரமான உலகில் பசி ஒரு பெரும் விசயம்தான். முதலில் பசிக்குத் தீர்வு. அப்புறம்தான் பணி.

ரெண்டாவது டேபிளுக்கு நாவலை நான் அழகாக கொண்டாட்டமான மனநிலையில் எழுதி முடித்து விட்டேன். அவ்வளவுதான். இதன் வெற்றி தோல்வி பற்றி இனி வாசகர்கள் பார்த்துக் கொள்வார்கள். எல்லோருக்கும் எல்லா எழுத்துகளும் பிடிப்பதில்லை. ஒருசிலருக்கு ஒருசில எழுத்துக்கள் தான் பிடிக்கும். ஏனெனில் நான் முதலாக வாசகன். தொடர்ந்து எழுதுவோம் நண்பர்களே! முழு நேர எழுத்தாளனின் ஒரு சின்ன கொண்டாட்டமான நாவல் இது அவ்வளவுதான்.


Post Comment

கருத்துகள் இல்லை: