புதன், ஜூன் 25, 2014

சிறுகதை தொகுப்பு பற்றி இங்கு மட்டும்!
சிறுகதைகளில் எளிமை எல்லோராலும் விரும்பப்படுகிறது. பூடகமான சொற்களுடன் கூடிய சிறுகதைகள் குறிப்பிட்ட வாசகர்கள் மத்தியில் மட்டுமே புழங்கிக் கொண்டு அந்தச் சுற்றோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. குறிப்பிட்ட வாசகர்களை மட்டுமே சென்றடைந்தால் போதுமானது என்று தீவிரமாக சிறுகதை முயற்சியில் இன்றும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எளிய கதைகளை வாசிப்பதேயில்லை. தீவிரமான கதைகள் பல எழுதி அதே குறிப்பிட்ட வாசகர்களிடம் அறிமுகமானவன் தான் நான். ஆனால் அவைகள் விசயங்களை நேரடியாகச் சொல்லாமல் பூடகமாகச் சொல்கின்றன. எனது மண்பூதம் சிறுகதை தொகுப்பு அப்படியான தொகுதி தான். அவைகள் எழுதப்பட்ட காலங்கள் ரொம்ப பின்னால். ஒவ்வொரு கதைக்கும் இடையில் சரியான இடைவெளிகள் இருக்கும். அவைகளை சாதாரண வாசகர்கள் வாசிக்கையில் ஒரே வார்த்தை தான் சொல்வார்கள். ரொம்ப பயங்கரமா எழுதியிருக்காப்ல!

ரொம்ப பயங்கரமான கதைகள் மொழிபெயர்ப்பு வாயிலாக நமக்கு கிடைத்து விடுகின்றன. நம் முயற்சி அதைவிட பயங்கரமாய் இருக்க வேண்டும். இருந்தும் அப்படியொன்றும் கவனத்திற்கு அந்தக் கதை உடனே வந்து விடுவதில்லை. சிறுகதையைப் பற்றி யாரும் இங்கு விவாதிப்பதுமில்லை. ஒருகதை நன்றாக இருந்தால் அந்த எழுத்தாளனின் எல்லாக் கதைகளும் சிறப்பானது என்று எப்படிக் கூற முடியும்? எழுதப்படும் ஒவ்வொரு கதையும் அவனுக்கு சிறப்பான கதைகள் தான்.

என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள் என்கிற இந்த சிறுகதைத் தொகுதியின் கதைகள் முற்றிலும் வேறானவை. என்னை விகடன் மூலமாக பெயரை அறிந்தவர்கள் என் எழுத்தை வாசிக்க புத்தகமாய் எடுக்கிறார்கள். தவிர இலக்கிய பரிச்சயம் கொண்டவர்களும் என் தொகுதியை வாசிக்கிறார்கள். இருவருக்குமான இடைப்பட்ட எழுத்து ஓரளவிற்கு இந்தத் தொகுதியில் பூர்த்தியாகிறது. இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் அனைத்தும் நேரடித்தன்மை கொண்டவைகள் தான். வாசகனை வியப்பில் ஆழ்த்தும் கதைகள் அல்ல இவைகள். நாம் அன்றாடம் காணும் மனிதர்களின் இயல்பை அவ்வளவு அழகாக இந்த தொகுதிகளின் கதைகள் சொல்கின்றன. உங்கள் அருகாமை வீடுகளில் சந்தித்த மனிதர்களின் கதைகள் இவை

என் எழுத்து எந்த தீவிரமான விசயத்தையும் கொஞ்சம் குஜாலாக சொல்வதைத்தான் விரும்பும். அதனால் தீவிரம் குறைந்து விசயம் எளிமையாக்கப்படுகிறது. எளிமையாக்கப்பட்டவைகள் எல்லோராலும் விரும்பப்படும். எந்தக் கதைகளையும் நான்  முன்கூட்டியே திட்டமிட்டு எழுதத் துவங்குவதில்லை. ஒரு காதலைச் சொல்ல கதைக்குள் காதலர்களை நடமாட விடுகிறேன் என்றால் எழுதி முடிக்கையில் தான் எனக்கே அவர்கள் சேர்ந்தார்களா? அல்லது பாதியிலேயே விடைபெற்றுப் போய் விட்டார்களா? என்பது தெரிய வரும். எதுவாக கூட்டிச்செல்கிறதோ அதுதான் அந்த சிறுகதையின் முடிவு. ஒருசில கதைகளையே முன்கூட்டி திட்டமிருகிறேன். அவைகளும் கூட மாறிப்போன சம்பவங்களும் உண்டு.
மனதில் திட்டமிட்ட ஒரு கதையை இரண்டு வருடம் கழித்துக்கூட எழுதி முடித்திருக்கிறேன். திட்டமிட்டவுடனே கூட எழுதி முடித்துமிருக்கிறேன்.

சிறுகதைக்கென்று சில கட்டுக்கோப்புகள் உண்டு. வடிவங்களில் தான் அவைகள் வித்தியாசப்படுகின்றன. நீள்கதை, குறுங்கதை, நிமிடக்கதை என்று பலவடிவங்களில் இங்கு கதைகள் எழுதப்படுகின்றன. எல்லா வடிவங்களையும் எழுதிப்பார்த்து விட்டேன். இவைகள் சவால்களாக என்றுமே எனக்கு இருந்ததில்லை. வடிவ வித்தியாசங்கள் தான்.
சமீபத்தில் நான் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே விசயம் சிறுகதைகளை நான் எழுதுவதை குறைத்துக் கொள்வேன் என்று! அப்படிப்பார்த்தால் இந்தத் தொகுதிக்கு பிற்பாடு என் புதிய சிறுகதை தொகுப்பு வெளிவர இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும்

இலக்கியச் சிறுகதைகள் எழுதுவது என்பது தனிக் கலவையும், சுவை மிகுந்ததும்  தான். அதில் சுதந்திரம் இருக்கிறது. வடிவத்தில் பல சோதனைகளை செய்யலாம். ஆனால் பைசாவுக்கு பெரும் பிரச்சனை இருக்கிறது. அவைகளை வெளியிட இதழ்கள் பல இருந்தாலும் பைசா தேறாது. பைசா தேறாத எழுத்து ஏன் எழுதப்பட வேண்டும்? பைசாவுக்கே பெறாத எழுத்தை நாலுபேர் பாராட்டி பேசுவதால் எழுத்தாளனுக்கு வயிறு நிரம்பி விடுமா? பெயர் பெற்றால் போதுமென பல காலங்களை நான் இழந்து விட்டேன். பெயரை ஓரளவு பெற் சமயத்தில் மீண்டும் மீண்டும் பெயர் பெற்று என்ன செய்வது?

தொட்ட இலக்கிய இதழ்களில் எல்லாம் பெயரைப்பெற்ற எழுத்தாளர்களே எழுதிக் கொண்டிருந்தால் புதியவர்களுக்கு இடமெங்கே? என்னிடம் சிறுகதை கேட்கும் சிற்றிதழ் ஆசிரியர்கள் எனக்கு நண்பர்கள் தான். எழுதுவதேயில்லை என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறேன். நட்பு அடிப்படையில் நான் பலருக்கும் பல கதைகளை வழங்கியிருக்கிறேன். அவைகள் அனைத்துமே மீச்சிற்றிதழ்கள். அப்படியும் ஒரு இதழ்க்காரர் ரொம்ப சிரமப்படுத்தினார். ‘அங்கு தானய்யா இருபது வருடங்களாகக் கிடந்தேன்! ஒரு ஆளையேனும் சந்தோசமாய் தாட்டி விடுங்களய்யா! என்னைப்போல இன்னொரு எழுத்தாளனை கண்டறிந்து தாட்டிவிடுங்கள் மேலேஎன்று சொல்லிவிட்டேன்

சிற்றிதழ்கள் வெளியிடும் கதைகளுக்கு ஒரு தர நிர்ணயம் இருக்கிறது. அந்த தர நிர்ணயத்தை நான் தாண்டி பலதூரம் வந்து விட்டேன். அவைகள் எல்லாமே நான் தாண்டி வந்த படிகள் தான். திரும்ப அதே படிகளில் கால் வைத்து திரும்ப எண்ணம் எதுவும் இல்லை. அங்கு என்ன கற்றுக் கொண்டேனோ அவைகளின் அடுத்த கட்ட வடிவம் தான் இந்த தொகுதியின் கதைகள். அங்கு எழுதாமல் இங்கு இப்படி தனித்துவமாய் வந்து நின்றிருக்க முடியாது.


இந்தத் தொகுதியில் உள்ல அனைத்துமே தனித்துவம் மிக்கவைகள் தான். கூடவே இவைகளின் எளிமை என்னை வசீகரிக்கிறது. எளிமையாக இருப்பதினாலேயே இவைகள் அவ்விதம் மனதை சந்தோசப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. 2014 ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெளிவரும் இந்தத் தொகுதி குறிப்பிடத்தகுந்த கவனம் பெறும் என்று நம்புகிறேன்!

00000000000000

Post Comment

2 கருத்துகள்:

சே. குமார் சொன்னது…

சிறுகதை பற்றி மிகவும் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்... தங்களது சிறுகதைத் தொகுப்பு எல்லோராலும் விரும்பப்படும் புத்தகமாக அமையட்டும்.... வாழ்த்துக்கள்.

shanmugam gopal சொன்னது…

ஆமாம் ஆமாம்