வியாழன், ஜூன் 26, 2014

சயனம் நாவல் பற்றி இங்கு மட்டும்சயனம் நாவல் எழுதப்படும் முன்பே அந்த நாவல் நடைபெறும் ஊரை என் நண்பர்கள் சிலர் மாலை வேலையில் தெற்கே செல்கையில் கண்டிருந்தார்கள். அது கொளத்துப்பாளையம். பக்கத்தில் காட்டுப்பாளையத்தில் எனக்கொரு நண்பர் இருந்தார். அவர் சினிமா முயற்சிகளில் இறங்கி தோற்றுப்போய் இப்போது நாலணா காசு வைத்து நீரோட்டம் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லும் இடத்தில் போர் போட்டால் தண்ணீர் வருகிறது என்கிறார். அட! நல்ல தொழிலாச்சே! வறண்ட பூமியில் தண்ணீருக்கு மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது சரியான தொழில்.

அவரிடம் தான் கொளத்துப்பாளையத்தில் மட்டுமே கதை நகரும்படி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று முன்பாக சொல்லிக் கொண்டிருந்தேன். அது நடைபெற்று முடிய ஒன்னரை வருட காலம் கழிந்து விட்டது. என் நண்பர்கள் பார்த்தது ஊரின் முழுமையை அல்ல! முகப்பில் பள்ளிக்கூடம், அருகில் மாகாளியம்மன் கோவில் (இதை நல்ல வேளை மாரியம்மன் என்று எழுதியிருப்பேன். நாவலை முடிக்கும் சமயம் அங்கு திருவிழா நடந்தது. 15 நாள் சாட்டாம். வெறொரு நண்பர் தான் அது மாகாளி ஆத்தாடா! என்றார்) தவிர சின்ன ஊர் என்றாலும் ஊரைச்சுற்றிலும் கோவில்கள் தான். ஊரில் உள்ள ஈஸ்வரன் கோவிலை நான் நாவலில் குறிப்பிடவேயில்லை. அந்த ஊரில் பெயருக்கு கூட ஒரு பெட்டிக்கடை கிடையாது. கோவிலின் அருகில் தென்புறமாக சிந்தாமணி! இந்த ஊரை மையமாக வைத்து ஒரு படைப்பை எழுத வேண்டுமென்ற ஆசையை தீர்த்துக் கொண்டேன்.

கள்ளி நாவலுக்குப் பிறகு கொங்கு கிராமிய வாழ்வை நான் என்னுடைய நாவல்களில் பேசவில்லை. 57 ஸ்னேகிதிகள் நாவல் சின்னதாக பேசியது என்றாலும் முழுமையாக பேசவில்லை. கள்ளி நாவல் என் சிறந்த படைப்பு என்கிறார்கள். எழுத்தாளனின் ஒவ்வொரு முதல் படைப்பும் சிறந்தவைகள் தான். கள்ளி வந்த அந்த சமயத்தில் தலித் விடுதலை என்ற சப்தம் இலக்கிய உலகில் பயங்கரமாய் கேட்டுக் கொண்டிருந்தது. சமயத்தில் நாமும் ஒன்று எழுதிப்பார்ப்போமென என் ஏரியாவில் எழுதிய படைப்பு அது. ஆதிக்க சாதியை எதிர்த்து தலித் பல வழிகளில் போராடுவார்கள். விடுதலையை இழவு காரியம் ஒன்றில் சுரேந்திரன் என்ற அவர்களுக்கு மிக சுலபமாக வழங்குவான். அது நல்லதும் கூட! ஏனெனில் வரும் காலத்தில் இழவு காரியத்தில் பல சம்பிரதாயங்களை முன்னின்று செய்ய தலித் ஆட்கள் இல்லை.

சயனம் நாவல் அதிலிருந்து வேறுபட்டு முற்றிலும் வேறாய் நகருகிறது. ஆதிக்க சாதியினர் ஆதிக்க நிலையிலேயே தான் இருக்கின்றனர். தலித் ஆட்கள் எங்கும் கோபப்படுவதும் இல்லை. அவர்கள் இந்த நாவலில் அவர்களாகவே வாழ்கிறார்கள். இனக்குழுக்களில் உள்ள உறவு முறைகளில் வரும் முக்கிய சொல் கொங்கில் உள்ளது! அது - பங்காளி பலியெடுப்பான்! இந்த நாவல் முடிவுக்கு வருகையில் என்னையறியாமலே மீண்டும் இந்த வார்த்தை உண்மையாகியிருக்கிறது. ஆனால் என் இயல்பில் அப்படி ஒன்றை கிடையாதென போட்டுடைத்து எழுதவே வந்தவன் நான்.

இந்த நாவலை எழுதிக் கொண்டிருக்கையிலேயே திட்டமிட்டு திட்டமிட்டு நகர்த்தினேன். என்னிடம் வழக்கமாக இருக்கும் குசும்புகள் இடையில் காணாமலே போய் விட்டது. அது ஞாபகத்திற்கு வந்த போது நாவல் முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருந்தது. அதுவும் நல்லதற்குத் தான். ஒரு வாழ்வியலைச் சொல்லும் கிராமிய நாவலை இப்போது தான் தொட்டிருக்கிறேன். ஊரை விட்டு வெளியூரில் இந்த நாவல் பயணிக்கவே கூடாதென திட்டம் வைத்திருந்தேன். அப்படியே ஆயிற்று.

வெளியூரிலிருந்து உள்ளூர் வரும் ஆட்கள் ஊருக்குள் நுழைந்ததுமே உள்ளூர்க்காரர்கள் ஆகிவிடுவார்கள். வாழும் மக்கள் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் முன்று கிலோ மீட்டர்கள் தூரம் இன்னமும் அந்த கிராமத்தில் பயணிக்கிறார்கள். ஒரே ஒரு பேருந்து தான் ஓடுகிறது. ஐந்தாவது வரையிலான அந்தப்பள்ளி நிரம்பித்தான் இருக்கிறது குழந்தைகளால்! சாலைகளில் தீனி தேடி மயில்கள் அலைந்தபடி தான் உள்ளன. கிராமம் இன்னமும் தன் அடையாளத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை. மழை என்ற ஒன்றில்லாத காரணத்தால் கொளத்துப்பாளையம் குளம் கருவேல மரங்களால் நிரம்பி தன் அடையாளம் இழந்து நிற்கிறது. அங்கிருந்து சுற்றுப்புறமெங்கும் பயணித்த வெள்லரிப்பிஞ்சுகளின் ருசியை நான் மறந்து பல காலமாகி விட்டது!

கள்ளி நாவல் சற்று வேகமான நாவல். அழுத்தமான கோர்வைகளால் சென்ற நாவல் அது! அதாவது முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவை நோக்கி பயணம் செய்த நாவல் அது. இந்த நாவல் துவங்கிய விதம் வெறும் வாய்ப் பேச்சில் தான். பாக்கியராஜ் முந்தானை முடிச்சில் பொட்டி படுக்கையோடு வாத்தியார் என்று நுழைவது மாதிரி ஒரு ஆசிரியரை ஊருக்குள் கூட்டி வருவது மட்டும் தான் வாயில் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை அந்த ஆசிரியர் பாட்டில் குடியிலிருந்து சிகரெட் குடி வரை எதுவுமே அறியாத ஆசிரியர். என் கைகளை நானே கட்டிக் கொண்டேன். அப்படித்தான் அதைச் சொல்ல வேண்டும்! நாவல் கதைக்களத்தில் பயணிக்கையில் ஆசிரியர் இரண்டு மூன்று அத்தியாயங்களில் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. பின்னர் கடைசியாக ஆசிரியர் பணிக்காக வந்த ஆசிரியருக்கு இந்த நாவலில் என்ன பணி என்று நானே கேட்டுக் கொண்டு அவரது பயணத்தை நாவலில் சரிப்படுத்தினேன்.

நாவலில் பழங்கதை என்று சொல்ல வேண்டியவைகளை சொல்லி முடித்தாலும் சமகால கிராமியம் இந்த நிலையில் இப்போது இருக்கிறது என்பதை அழகாக சத்தமில்லாமல் பதிவாக்கி விட்டேன். இந்த நாவல் எனக்கு முற்றிலும் வித்தியாசமான பயணிப்பாய் இருந்தது. மொத்தமாக 23 நாட்கள் இந்த நாவலில் நான் வாழ்ந்தேன். இன்னமும் சொல்ல வேண்டிய சேதிகள் இந்த நாவலில் இருக்கலாம் என்றாலும் நானாகவே முடித்துக் கொண்டேன்! அதாவது மேலே இதை நீட்டித்து அத்தியாயங்களை நகர்த்திச் செல்ல நான் யோசிக்கவே இல்லை! அதுவாக முடிவுக்கு வந்து விட்டது!


இந்த நாவலின் வெற்றி என்பது இதை வாசித்தவர்களின் கருத்துக்களில் இருந்துதான் அறிய முடியும். என்னைப் பொறுத்தவரை  நான் இலக்கியவாதி தான் என்பதை மீண்டும் நிரூபிக்க இந்த நாவலை எழுத வேண்டி வந்தது. சந்தோசம் நண்பர்களே! வாசியுங்கள்!

Post Comment

கருத்துகள் இல்லை: