ஞாயிறு, ஜூன் 29, 2014

ஜுன் முகநூல் பதிவுகள்


இருபது வருட கால நட்பு! ஆச்சரியம் தான்! இருவருக்கும் தெரிந்த ஒரே விசயம் சந்திக்கையில் எல்லாம் சியர்ஸ்! 10 ரூவாகூட மிச்சம் இல்லாமல் வீடு செல்வது தான் சியர்ஸுக்கு அழகு என்பது இருவரின் கொள்கையும்! நேற்றைய விழாவில் என் கெப்பாசிட்டி எனக்கு தெரியுமுங்க! போதுமுங்க அப்படின்னுட்டான்! விகடன்ல மூனு வாரத்துக்கு ஒருக்கா தானுங்க நம்ம ஜோக்கு வருதுங்க! கோவை தினமலர்ல ஒரு ஜோக்கு வந்துச்சுங்க சார்! 750 ரூவா ஒரு ஜோக்குங்குங்க! (கையில் விகடனுடன் உள்ளே எழுதப்படாத போஸ்ட் கார்டுகள் ஒரு கத்தை வைத்திருந்தான். ஒரு கார்டில் நுணுக்கி நுணுக்கி நாலஞ்சு ஜோக்கு எழுதிடுவனுங்க சார்! அஞ்சுல ஒன்னு செலக்ட்டாயிடும்)

-ஏப்பா ஜோக்கு மட்டுமே எழுதி காலத்தை ஓட்டீடறதா? வேற கதை முயற்சியெல்லாம் இல்லியா?'

-சார் அதானுங்க சார் எனக்கு வருது! மன்னா அந்தப்புரத்திலிருந்து ஓலை வந்திருக்கு! அப்படின்னு ஆரம்பிச்சா பத்து ஜோக்கு மன்னா ஜோக்கு தான் எழுதுவேன். கட்சிக்கூட்டத்துக்கு தலைவர் யாரையும் தண்ணி போட்டுட்டு வரக்கூடாதுன்னு சொல்லிட்டார்! அப்புறம்? தலைவரே வரலை! உங்களையாட்ட வாயில கதை நல்லா வருதுங்க சார்! ஆனா எழுதுனா வரமாட்டிங்குது!


(பிரபல ஜோக் எழுத்தாளர் சிக்ஸ்முகத்துடன் அடியேன் திருகலான மதியத்தில்!)

0000000

துயில் என்றொரு நாவல் என்னிடம் பலகாலமாக இருந்து வந்தது! இருந்து வருகிறது! நண்பர் ஒருவர் எனக்கு தள்ளி விட்டு விட்ட பிரதி அது! ஆத்திகுளம் ரயில் நிலையத்திற்கு ரயிலானது வருது வருது வந்துண்டே இருக்குது! 59ம் பக்கம் வந்தே சேர்ந்துடுத்து! படிக்கலைன்னு சொன்னா நண்பர் வருத்தப்படுவாரென்று நாவலை வாசித்து முடித்து இப்போது மறந்தும் போய் விட்டேன். நம்ம கையில எந்த நாவலா இருந்தாலும் நண்பர்களுக்கு படிக்க ஈந்து விடுவேன். இதுவரை 9 நபர்கள் இந்த நாவலை வாசித்து திருப்பிக் கொடுத்து விட்டார்கள். கவனிக்க கொடுத்து விட்டார்கள். என்னிடம் திரும்பி வராத புத்தகங்கள் ஏகப்பட்டது! கள்ளம், கரமுண்டார் வீடு , மலரும் சருகும் எல்லாம் போனது போனது தான். கடைசியாக துயில் கரூர் வரை போன நாவல் வராதென நினைத்தேன். அடுத்த வாரமே வந்து சேர்ந்து விட்டது!

குருவிகளும் கூட இழிந்த வாழ்க்கைதான் வாழ்கின்றன போலும். குருவி சட்டென பறந்து அருகாமையில் உள்ள முருங்கை மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டது. அந்த மரத்தில் எவ்வளவு பூக்கள் இருக்கின்றன. அதில் எதையாவது தின்று வாழ வேண்டியது தானே, குருவிகள் பூக்களைச் சாப்பிடுமா? ஏன் பறவைகள் பூக்களை சாப்புடுவதில்லை. தான் விலகிப்போனாலும் அந்தக் க்ருவி மறுபடி அதே குப்பயைக் கிளறத் துவங்கி விடும் என்பது ஆத்திரமாக வந்தது.

000000

கோவை நண்பர் பேரெழில் ஒரு கதா ரசிகன்! அவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது! நடந்து வருடம் ஒன்றாகிவிட்டது! இருந்தும் இப்போது தேவையாகிறது! உன்னதம், தரிசனம் மிக்க எழுத்தாளரின் சிறுகதை பிரபல பத்திரிக்கையில் வந்த சமயம் நண்பர் பேரெழில் அதன் ஆசிரியரை கூப்பிட்டு விட்டார்! சார் உங்க கதை சிறுகதை ஃபார்மேட்ல இல்லாம கட்டுரை படிக்கிற உணர்வை கொடுக்குதுங்களே! 

நீ என் கதையை படிக்காதே!அவ்ளோதான்! போன் கட்!


ப்பா பேரெழில்! உனக்கு ஒரு எழுத்தாளன் போன் நெம்பர் இருக்குதுன்னா மளார்னு கூப்புட்டு உன் கருத்தை சொல்லுவியா? அதுல உனக்கு சங்கட்டம் வேறயா? அவரு யாரு? நாலு பத்திரிக்கைல உலக சினிமா பத்தி, உள்ளூர் சினிமா பத்தி, சாவப்போற செத்த எழுத்தாளன் பத்தி தொடரு எழுதுறாப்ல! போக சினிமாக்கு வசனம் பண்ற வேலையும் தலைக்கு மேல கிடக்குது! போக புத்தவம் வருசகடசீல பத்தாச்சும் போட்டாத்தான் ஆளுமைங்கற பேரு கிடைக்கும்! புரியுதா! புரியிலியா? நீ பாட்டுக்கு என்னை மாதிரி நெனச்சிட்டியா? சாமத்துல கூப்புட்டு நீ கடலை போட்டாலும் பேச? பிச்சுப்போடுவன் ராஸ்கோல்! ஆளுமைன்னா கொக்கா! (சம்பந்தப்பட்ட ஆள் பேசியதும் உண்மை! பேசப்பட்டதும் உண்மை! உண்மையை தவிர இங்கு எதுவுமில்லை)

0000

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் பள்ளி நண்பன் சிவக்குமாரை ஒரு ஓத நோயாளியாக கோவை காந்திபுரத்தில் சந்தித்தேன்.ஆள் டொக்கு விழுந்து பார்க்க பயங்கரமாயிருந்தான். படைப்பாளிகள் யாரும் அவனைப்பற்றியோ அவனது ஓதத்தை பற்றியோ படைப்பெழுத மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன். அப்போது வேனல் வீசிக் கொண்டிருந்தது. மரங்களில் இருந்து காய்ந்த இலைகள் விழுந்து சருகுகளாய் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. வெக்கையாய் இருந்தது. காகம் ஒன்று அவன் தலையில் கொத்திவிட்டு பறந்தது. (காந்திபுரத்தில் ஏது மரம் காய்ந்த சருகு என்று கேட்கவே கூடாது)

பள்ளியில் கக்கூஸ் ரூமில் அவன் எப்போதும் கவலைப்பட்டபடியே அமர்ந்திருப்பான். அவனது தனிமையை அவன் கக்கூஸ் அறையில் மற்றவர்களுக்கில்லாத ஓதத்தை நினைத்து தடவியபடி போக்கிக் கொண்டிருந்தான். சிவக்குமாருக்கு ஓதம் வந்ததற்கு காரணம் ஆரஞ்சி மிட்டாய் சாப்பிட்டதாக இருக்குமென நினைத்திருந்தேன். அவனை காந்திபுரத்தில் பெருத்த ஓதக்காரனாக பார்த்தபோது துக்கம் தொண்டையை அடைத்து விட்டது. சாப்பிடறியா? என்று கேட்டேன். இல்ல ஆரஞ்சி முட்டாயி இருக்குது என்று ஓதத்தை விலக்கி காட்டினான். அவன் காட்டிய ஆரஞ்சி மிட்டாய் என்னை புதைக்கத் தொடங்கியது. 

ஓதத்தை விரும்பி கூடவே வைத்துக்கொண்டு ஓதமாகவே சாவதில் விருப்பமாக இருப்பதாகவே கூறினான். ஓதத்தை பற்றி எழுத சிவக்குமார் தூண்டிவிட்டான். மீண்டும் காற்று வீசுகிறது! ஆக இது சிவக்குமாரின் கதை மட்டுமில்லை. அவனைப்போல ஓதத்தில் சிக்கி சீரழியும் சமூக அவலத்தின் வெளிப்பாடு!

(
ஓதம் -நாவல்-கெட்டி அட்டை பைண்டிங்- தமிழகத்தின் ஆளுமை- விலை-335)

00000000000


Post Comment

1 கருத்து:

Subramaniam Yogarasa சொன்னது…

Hum....................!