சனி, ஜூலை 05, 2014

கவிதைகள்


உயிருக்கு உயிராய் நீயே நேசித்த
என்னை உதறித் தள்ளிவிட்டு இந்த
நகரத்தின் தெருக்களை கால்கள் பின்னலிட
நடந்து கடக்கிறாய்! –ஜன நெரிசலில்
ஒருமுறையேனும் நீ கேட்டிருப்பாய்
உன் பெயர் சொல்லி கத்திய ஒரு குரலை!
000
இன்றிரவு நீ காணப்போகும் கனவு
வர்ணமின்றி இருக்குமா? அல்லது
இரவு வானில் நட்சத்திரங்களை பிடித்து
வந்து உனக்கான வேதனைகளை எழுதுவாயா?
மதுக்குவளையுடனான இந்த இரவு
என்னைப் பார்த்து பரிகசிக்கிறது!
000
இன்றென்னை மகிழ்ச்சிப்படுத்த
உன்னிடமிருந்து சேதிகள் ஏதுமில்லை!
பாழாய்ப்போன இந்த காதலின் துக்கத்தை
மதுக்குவளையினுள் நீந்தித் திரியும்
உன்னோடு சேர்த்து திரவத்தை விழுங்குகிறேன்!

000


ஊருக்கு வந்து விட்டு திரும்பி விடுகிறேன் ஜெனி!
பனிரெண்டு வருடகாலத்திற்குப் பிறகு ஊரின் வாசத்தை
நுகர்ந்து விட்டுச் செல்ல ஆசை தட்டியிருக்கிறது!
பனைகள் நிரம்பிய காடுகளில் வீடுகள் முளைத்திருப்பதாய்
முன்பொரு கடிதம் எழுதியிருந்தாய்!
இடிந்த சுவற்றுக்கருகே பேருந்துக்காய் நாம் காத்திருந்த
இடத்தில் காம்ளெக்ஸ் என்றும் எழுதியிருந்தாய்!
ஊர் பொதுக்கிணறு வற்றிப் போனதால் அங்கு நிரவி
மளிகைக்கடை வைத்திருப்பதாய் கோவிந்தன் எழுதியிருந்தான்!
பார்க்கவர ஊர் ஊராய் இருக்கப்போவதில்லை
என்று தான் இருக்கிறது! –இருந்தும் ஜெனி உன்னிடம் ஒரு கேள்வி!
சுடுகாடு பழைய இடத்தில் பழையபடி இருக்கிறதா?
எனது பெற்றோரை புதைத்த இடத்தில் மின்மயானம்
வந்து விட்டதா? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்!
ஜெனி நான் வந்து விட்டு திரும்பி விடுகிறேன்!

000000000000000000


என்னிடம் நீ எதுவோ சொல்லப் போகிறாயென
உன் முகமே காட்டிக் கொடுத்தது அன்று!
நீ என் கவிதைகளைப் புசித்து புரியாவிடினும்
புன்னகைக்க ஒருநாளும் மறக்கவில்லை!
யாரும் பாராத வேலையொன்றில் அடிக்கடி நான்
தரும் திருட்டு முத்தத்தையும் ஏற்றுக் கொண்டாய்!
உண்பதற்கென்று வருவன எதையும் நீ மறுத்ததில்லை!
தினமும் இரவு வணக்கம் சொல்வதிலும் குறை
இருந்ததில்லை! தேவைகளை கேட்டுப் பெறுவதிலும்
நீ கெட்டிக்காரி! என்னிடம் எதுவோ சொல்லப் போவதற்கு
நீ தொண்டையை செருமிக் கொண்டாய்!
நம் காதல் முற்றுப்பெற்று விட்டதென்பதை சிறந்த
திரைப்பட நாயகியின் பிரயத்தனத்தோடு சொல்லி
முடித்தாய்! நிச்சயமாக கவிஞன் என்றறியப்பட்டவனுக்கு
இது தேவை தான்! அப்போதைக்கு என் மூளை
இயங்க மறுத்து உபத்திரவம் செய்தது.- சொல்வதற்கு
மேலும் எதுவுமில்லையென எழுந்து கிளம்பினாய்!
என்ன இருந்தாலும் காகங்களுக்கு கரைவதை தவிர
வேறெதுவும் தெரிவதில்லை!
காரணங்களுக்கா பஞ்சமில்லை உனக்கு?
இந்த நீலவானில் ஒற்றையாய் தனித்தலையும்
சிறு பறவையாய் நான் சிறகசைக்கிறேன்.
இந்தக் காற்று ஒன்றுதான் சிரமம் தருகிறதே
தவிர வேறொன்றும் துன்பமில்லையம்மா!
நடந்து போனவைகளைப்பற்றி சொல்லி
ஆகப்போவது எதுவுமில்லை எனினும் அம்மா
உனைப் போன்றே கனிவான கண்களைப்
பெற்றிருந்த அவள் ஏன் தனித்தென்னை
பறக்கவிட்டாள்? –உன்னில் முழுமை நான்!
என்றே அவள் எப்போதும் சொல்லிய வண்ணமிருந்தாள்!
துயரம் தோய்ந்த இவ்விரவில் மழைச்சாரல்
இந்த மரத்தின் பொந்திலும் அடிக்கிறது அம்மா!
கனிவான மடி தருபவளும், நேசமாய் கோதி
விடுபவளுமான அவளுக்கு உனைப்போன்றே
கண்களம்மா! –இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்திவிட
உறவுகள் என்றும் வேண்டும் தானே!
தனித்தலைவது பற்றி ஏதேனும் கேட்கத் தோன்றினால்
ஏதாவதொரு கடற்பாறை மேட்டில் முடி உலர்த்திக்
கொண்டிருக்கும் கடல்கன்னியிடம் கேள்!
என் கவலைகளுக்கெல்லாம் மொத்தமாக ஒரு
பெயர் சூட்டினால் அது சாந்தாமணி என்றே முடிகிறது!
அவள் விளையாடி வீசியெறிந்து விட்ட றெக்கை
ஒன்றிழந்த பொம்மை நான்! –வருடத்தில் பலமுறை
கீறிக்கொண்டிருக்கிறேன் என் சருமத்தில் அவள்
பெயரை! –அவள் ஏனம்மா காகிதக்கப்பல் செய்து
பரிசளித்து விட்டு பிடுங்கிக் கிழித்தாள்?
சிலுவை ஒன்றில் வைத்து ஆணியடிக்க
நான் தேவகுமாரன் இல்லை!

00000000000

Post Comment

கருத்துகள் இல்லை: