வியாழன், ஜூலை 17, 2014

சகுந்தலா வந்தாள் -முன்னுரை உங்களோடு!

  இந்த வருடத்தின் மூன்றாவது நாவல் ’சகுந்தலா வந்தாள்’ என்கிற இந்தப்பிரதி. வழக்கம் போல இதுவும் பனிரெண்டு நாட்களில் மிக வேகமாக எழுதி முடிக்கப்பட்ட பிரதி. என்னுடைய நாவல்களுக்கு நான் மிகப் பெரிதாக எப்போதும் திட்டங்களை தீட்டுவதில்லை. திட்டம் தீட்டினாலும் அது எழுதப்படுகையில் எந்தப் புதிய மாற்றங்களையும் கொண்டு வந்து விடுவதில்லை. ஒரு கட்டிட வேலை துவங்கப்படுகையில் அதி அற்புதமாக இருக்கும்.  பூச்சு வேலையில்கூட வந்து நின்றுவிடும். தரையில் மொசைக் போடுவதில் கூட வந்து நின்று விடும். அதை சுத்தமாக முடிக்க காலங்கள் சில ஆகிவிடும்.

  அதாவது திட்டமிட்ட நேரத்தை தாண்டி தாமதமாகும். ஒருமாத கால அளவெல்லாம் நாவலில் வரும் கேரக்டர்களோடு என்னால் போராடிக்கொண்டு இருக்க முடியாது போலிருக்கிறது. பத்து பதினைந்து நாளில் அதன் கேரக்டர்கள் பேச வேண்டிய விசயங்களை பேசி முடித்து விட வேண்டும். அதாவது அவர்களோடு வாழ எனக்கு அதிக விருப்பமில்லை. வேறு மனிதர்களிடம் வாழப்போகும் அவசரம் என்னை இழுக்கிறது. அதாவது நாவலில் இருந்து அடுத்த நாவலுக்கு பயணப்படும் அவசரம் தான்.

  இந்தச் சிக்கல் நான் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதலால் ஏற்படுகிறது. பார்க்கப் போகையில் இது சிக்கலும் அல்ல. கொஞ்சம் நீண்ட புதினத்தை ஆறப்போட்டு ஆறப்போட்டு அவ்வப்போது எட்டிப் பார்த்து மெதுவாக நகர்த்தலாம் என்றால் அதுவும் என்னால் முடியாது. ஆறப்போட்டால் அவ்வளவு தான் அப்புறம் புதிதாக ஒரு நாவலை துவங்கும் வேலையாய் ஒவ்வொரு முறையும் இருக்கும். ஆக என்னைப் பற்றியான தெளிவை அடைந்து கொண்டிருக்கிறேன் என்பது நிச்சயமாகிறது.

  சிறுகதைகளை அதிகம் எழுதிக்கொண்டிருந்தவன் அதை சமீப காலங்களில் நிறுத்தி விட்டேன். நாவல் என்பது ஒரு அட்டகாசமான ஏரியா. அதில் வாசகனாய் நானும் எழுதிக் கொண்டே பயணப்படுகிறேன். போதும் என்கிற போது நிறுத்திக் கொள்கிறேன். முன்பெல்லாம் ஒரு சிறுகதையை ஒரு நாளில் சாதாரணமாக முடித்து விட்டு சாயந்திரம் ஜெராக்ஸ் எடுத்து கொரியரில் அனுப்பும் வேலை எனக்கு சுலபமாக இருந்தது. அதே மாதிரியான சுலபத்தை நாவலிலும் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் தான் மிக முயன்று கொண்டிருக்கிறேன்.

  நாவல் எழுதுவது மிக சாதாரணம் என்று என் வாயிலிருந்து நண்பர்களிடம் பேசுகையில் வரவேண்டும். இன்னமும் இந்த வடிவம் என்னை மிரட்டிக் கொண்டேயிருக்கிறது. அப்படி நான் ’ஜுஜுபி’ என்று கூற இன்னும் பத்து நாவல்கள் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.

  நாவலில் பல வித விசயங்களை பேச வேண்டுமென  மிக ஆர்வமாய் இருக்கிறேன். பல திட்டங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. எதிலும் பாக்கி விழுந்து விடக் கூடாது என்றும் நினைக்கிறேன். நாவலில் புதுப் புது வடிவங்களையும் எழுதிப் பார்க்கவும் ஆவல் இருக்கிறது. இந்த வருடத்தின் கடைசியில் அந்த புது வடிவத்திற்கு மாறி இரண்டு நாவல்களையாவது தர வேண்டும் என நினைக்கிறேன்.

  ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றும் சிலர் சொல்கிறார்கள். திரும்ப திரும்பச் சொல்வதை  நான் விட்டொழிக்கப் போவதில்லை. அவைகளில் அழுத்தத்தை கூட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த நாவல் என் பழைய வடிவங்களின் சாயலில் இருந்தாலும் என்னை தொடர்ந்து வாசிப்பவர் யாரேனும் இதில் உள்ள மாற்றத்தை உணர்வார்கள். அதற்குத்தான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு முதலில் தெரிந்த விசயங்களை. அதாவது என் ஏரியா எதுவோ அதில் மட்டுமே எல்லைக்கோடுகள் போட்டு அதனுள் மட்டுமே ஆட்டம் நடக்கிறது.

  ’சகுந்தலா வந்தாள்’ தமிழ் வாசகப் பறப்பில் முக்கிய நாவலாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டெல்லாம் நான் எழுதவில்லை. விசயத்தின் தீவிரங்களை நான் அதி அற்புதமாகவும் சொல்ல முயற்சிக்கவில்லை. எப்படி நிறுத்தி வார்த்தைகளை அலங்கரித்துச் சொன்னாலும் கதை என்பது ஒன்று தான். இந்த நாவலை மிக மிக அழகான வடிவில் சொல்லவும் எனக்குத் தெரியும். தாமதமாகும் அதற்கு. நாம் வேகமான உலகில் இருக்கிறோம். என் இந்த வேகமே குறைவுதான். ஆனால் எங்க கொஞ்சம் நாளா வா.மு. வைக் காணலியே என்று யாரும் பேசிவிடக் கூடாதில்லையா!

  தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. புதிய வடிவங்களில் முயற்சியெடுப்பதும் எனக்கு சந்தோசமளிக்கும் விசயம் தான். என்னை ஊக்குவிக்கும் நண்பர்களை நான் ஏராளம் பெற்றிருக்கிறேன். அலைபேசியில் அவர்கள் பேசும் முதல் வார்த்தையே ‘என்ன எழுதிகிட்டு இருக்கீங்க?’ எழுதாமல் சும்மா லேப்டாப்பில் பொம்மை பார்த்துட்டு இருக்கேனுங்க! என்று அவர்களிடம் சொல்ல முடியாது.

  ஒவ்வொரு நாவலையும் எழுதி முடிக்கையில் ஒரு விநோதமான நிறைவு மனதில் தோன்றிவிடுகிறது. உடனடியாகவே மண்டையில் இருந்த விசயங்கள் ஓரளவு காலியாகி விடுகின்றன. அந்த காலியான இடத்தை நிரப்ப அடுத்த நாவலுக்கான திட்டங்களையும் அது முடிய வேண்டிய நேரங்களையும் மிக எளிதாக திட்டமிடுகிறேன். அந்தக் காரியங்கள் நடந்து முடிந்து விடுமா? என்ன விசயங்களை எழுதுவது? போன்று எந்தவிதமான தெளிவுகள் இல்லாமலே சென்னை புத்த்க கண்காட்சிக்கு நான்கு புத்தகங்கள் என்னுடையது என்று கூசாமல் செல்போனில் நண்பர்களிடம் பேசுகிறேன். அது ஏனென்றால் என்னைப்பற்றி நான் உணர்ந்து கொண்டதால் தான். நான் அப்படி தைரியமாய் பேசினால் தான் ஒன்று குறைந்தாலும் மூன்று வரும்.

  நான் இப்போதைக்கு முழு நேர எழுத்தாளன். ஒரு முழு நேர எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும்? முன்பெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தான்? என்பதெல்லாம் தெரியாது. இடையில் வாசிப்பு குறைந்து விட்டது என்று பயந்து கொண்டிருந்தேன். அதையும் நான் எழுதிக் கொண்டிருக்கையிலேயே சரிப்படுத்திக் கொண்டேன். தமிழில் தற்போது ஏராளமான மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மொழிபெயர்ப்புகளின் பொற்காலம் என்று கூறிவிடலாம் போல நிலைமை வந்து விட்டது. தமிழில் நேரடி நாவல்களின் வரவை விட அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் வருகின்றன.
  வாசகர்களின் வாசிப்புத் தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது. அவர்களுக்கு தமிழில் எழுதப்படும் எழுத்துக்களில் ஒரு போதாமை வந்திருக்கிறது அதனால். ஏதாவது புத்தகம் வாங்கி அனுப்பி விடவா நண்பரே? என்று யாரேனும் அலைபேசியில் கேட்டால் முன்பாக என்னிடமிருந்த தயக்கம் விலகி மனதில் இருக்கும் ஏதாவது மொழிபெயர்ப்பு புத்தகத்தின் பெயரை உடனே சொல்லி விடுகிறேன். எனக்கு வேறு வழியும் இல்லை. என் வாசிப்பின் தரம் வாசகர்களை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். (அது முடியாது என்றபோதும்)

  வாசகர்கள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் புத்தகமாக ஒரு நாவல் இருக்க வேண்டுமென நினைத்து வாசிக்கிறார்கள். அவர்களின் தேவை ஒரு புத்தகமானது படிக்கையில் அவர்களை சந்தோசமாகவும், கூடிய சீக்கிரம் முடித்து விடவேண்டிய அற்புதத்தையும் அது நிகழ்த்திவிட வேண்டுமென நினைக்கிறார்கள். எனக்கு எந்த அற்புதத்தையும் அது நிகழ்த்த வேண்டியதேயில்லை. என் தேவை என்னை அது ஈர்த்துக் கொள்வது அல்ல.

  ஈர்த்துக் கொண்டால் அது வெற்றியடைந்த நாவலாக இருக்கலாம். அதனால் என் வாசிப்புத்தரம் ஒன்றும் உயர்ந்துவிடப் போவதில்லை. நான் என் எழுத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே நாவல்களை வாசிக்கிறேன். கதை சொல்லும் முறையில் மாற்றங்கள் இருந்தால் அழகாக இருக்கும் என்ற வசிய மருந்தை நோக்கி பயணப்படுகிறேன். அது உடனடியாக என் நாவல்களில் முழுமையாக நடைபெற விட்டாலும் ஆங்காங்கு சிறுசிறு முயற்சிகளை இந்த நாவலில் கூட வாசகர்கள் உணருவார்கள்.
  இந்த வேலைகளின் இடையில் நான் பெட்டிக்கடைகளில் கிளிப் மாட்டி தொங்கிக் கொண்டிருக்கவும் ஆசைப்படுகிறேன். அதன் வாசகர்களின் தரமும் அவர்கள் அலைபேசியில் பேசும் முறைகளும் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. சார் போட்டு பேசினால் எனக்கு அலர்ஜியாகி விடுகிறது. ‘சார் எல்லாம் வேண்டாங்க! நான் ரொம்ப தூரத்துல இருக்கா மாதிரி இருக்குது. தருமபுரியில இருந்து பேசுறேன்னு சொல்றீங்க! சந்தோசம்! ஆனா சார் போட்டு பேசுறதால அமெரிக்கால இருந்து பேசுறாப்ல இருக்குங்க!’ என்று சொன்ன மறுகணம் என் வழிக்கு வந்து விடுகிறார்கள்.

  சென்றவருடம் குங்குமத்தில் ஒருபக்க கதைகளை நான் எழுதிய போது ஒரு நண்பர் அழைத்திருந்தார். என் அலைபேசி எண்ணை அவர் பிடித்த விசயம் மிக அலாதியானது. அது இப்போது முக்கியமல்ல! அவர் சொன்ன விசயம் அருமை. ‘சார், நீங்கெல்லாம் ஒரு பக்க கதை எழுத வந்துட்டா எப்படிங்க சார்? எங்களுக்கெல்லாம் அது ஒன்னு தான் எழுதத் தெரியும். நாங்க ஏதோ உருட்டிக்கிட்டு இருக்கோம் சார்! ஆனா டக்குன்னு முடிச்சீங்க பாருங்க, அருமை சார்!’ ஆஹா! நான் எப்போதும் அப்படி எல்லோரும் செய்கிறர்களே நாமும் செய்து பார்த்தால் என்ன என்று இறங்கி விடுவேன்.

  குங்குமத்தில் எனக்கு ஏழெட்டு ஒருபக்க கதைகள் வந்துள்ளன. ஒருபக்க கதைகள் எழுத ஒரு ப்ராக்டீஸ் என்ற முறையில் தான் அதை முயற்சித்தேன். பைசாவுக்காக எழுதியதாக சிலர் சொன்னார்கள். அப்படிக்கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டேன். ஆனால் பைசாவுக்காக நான் இதுவரை எந்த எழுத்தையும்  எழுதவில்லை. மீண்டும் சொல்கிறேன் நான். இதுவரையிலான என் எழுத்துக்களால் நான் பைசா பார்த்திருக்கிறேன் என்றாலும் பைசாவுக்காக நான் ஒரு எழுத்தையும் இதுவரை அதை மனதில் கொண்டு எழுதவில்லை. என் இதுவரையிலான எழுத்துக்கள் அனைத்துமே ப்ராக்டீஸ் என்ற வகையில் அடங்கும்.

  ‘சகுந்தலா வந்தாள்’ என்கிற இந்த நாவலை நான் பைசாவுக்காகத் தான் எழுதியிருக்கிறேன் என்பதை இப்போது சொல்லிவிட வேண்டும். அந்த வகையில் முதன் முதலாக பைசா நோக்கத்தோடு எழுதப்பட்ட நாவல் இது. அதனால் தான் இந்த நாவல் மனித வாழ்க்கை பற்றி ஒரு ஓரமாய் நின்று பார்வையாளனாய் பேசுகிறது. இந்த சமூகத்தின் குரூரங்களைப் பேசுகிறது.

  வழக்கமாக ‘ஒரே ஒருக்கா’ என்று என் இயல்பின்படி இந்த நாவலைத் துவங்குகையில் பெயர் வைத்திருந்தேன். அது ஆரம்பத்தில் சரியாகவே இருந்தது. கமலக்கண்ணன் நாவலில் நுழைந்து அவன் பார்வையில் நாவலை நகர்த்திய போது அந்த டைட்டில் வேண்டாமென முடிவெடுத்து விட்டேன். சகுந்தலா இன்றைய வேகமான உலகின் பெண்ணல்ல. அவள் வாழ்க்கையை ரசித்து கொண்டாட வந்தவள். ஆக ’சகுந்தலா வந்தாள்’ என்று தலைப்பை போட்டு விட்டேன். ‘அம்மா வந்தாள்’ என்ற புத்தகத்தை ஞாபகமூட்டுகிறதே இந்தத் தலைப்பு? என்று கையில் எடுத்துக் கொண்டவர்களுக்கு என் வாழ்த்து!

  நடுகல் பதிப்பகம். இப்படி ஒரு பதிப்பகத்தை துவங்க வீடு சுரேஸ்குமார் மற்றும் இலக்கியச்செம்மல் வெளங்காதவன் இருவர் திட்டம் தீட்டி பெயருக்கு தடுமாறிக் கொண்டிருந்தார்கள். இதில் என்னையும் உள்ளே நுழைத்துக்கொள்ளும் ஆர்வத்திலும் இருந்தார்கள். நல்ல விசயங்களை தள்ளிப்போடவே கூடாது என்று நினைப்பவன் நான். நான் தொன்னூறுகளின் ஆரம்பத்தில் திருப்பூரில் இருந்து நடத்திய நடுகல் என்ற சிற்றிதழின் பெயரை சொன்னதுமே அது ஏகமனதாய் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

  நடுகல் இதழில் என் ஆசான் தஞ்சை ப்ரகாஷ் கவிதைகள் எழுதினார். ‘உமாவுக்கு தொந்தி அழகு’ மறக்க முடியாத வரிகள் இன்றுமெனக்கு! அவரது கள்ளம் நாவலை முதலில் பதிப்பிற்காகப் பெற்றோம். ஆசான் இப்போது இல்லையென்றாலும் அவரது புத்தகமுடன் இணைந்து என் புத்தகம் வருவதில் அதுவும் நடுகல் வெளியீடாக வருவதில் எனக்கு மகிழ்ச்சி என்பதை விடவும் ஆசான் இருந்திருந்தால் மாபெறும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்!

  எழுத்தை கைவிரல்களில் வரமாகப் பெற்றவர் அவர். இலக்கியத்திற்காக வாழ்ந்த மனிதர்களில் முதன்மையானவர் அவர். ’அசிங்கங்களை எழுதுவதற்கு தைரியம் வேண்டும்! இலக்கியத்தின் பல சுவைகளில் அதுவும் ஒரு சுவைதான்’ என் ஹிப்ராகடீஸ் சீழை நக்க நாயில்லை’ சிறுகதைக்கான அவரின் விமர்சனம் இது. போக செல்லமுத்து குப்புசாமியின் ‘குருத்தோலை’ நாவலும் நடுகல் பதிப்பாக வருகிறது. எங்களின் இந்த முயற்சி வெற்றிபெற உங்கள் அனைவரின் ஆசியும் உண்டு!

  நடுகல் பதிப்பகத்தில் எழுதும் படைப்பாளிகள் தமிழ் ஆர்வமின்றி விளையாட்டு போலவும் படைப்புகளை எழுதலாம். நானும் அப்படி விளையாட்டு போல எழுதுபவன் தான். வெளியீடுகளின் முதல்பிரதி திரு.நஞ்சுண்டன் அவர்களுக்கு அனுப்பப்பட்டு தவறான வரிகளை சிவப்பு மையில் அடித்து அவர் அனுப்பும் புத்தகத்தை படைப்பாளிகளுக்கு நடுகல் அனுப்பும். மேற்கொண்டு அவர்கள் எழுதும் படைப்புகளில் குறைந்தபட்சம் சிறு சிறு தவறுகளையாவது வராமல் எழுத முயற்சிப்பார்கள் என்று நடுகல் எதிர்பார்க்கிறது. என் ’எட்றா வண்டியெ’ நாவல் முழுதும் நஞ்சுண்டன் அவர்களால் எடிட் செய்யப்பட்டது. உயிர்மையில் அது வெளிவருகையில் அவருக்கு நான் சொன்ன நன்றி காணாமல் போய் விட்டது. மிக சங்கடப்பட்டு அவருக்கு தகவலை தெரிவிக்கையில் ‘உடு கோமு, உனக்கும் எனக்கும் தெரிஞ்சால் போதும்’ என்று சொல்லி விட்டார். அதானே! இப்ப எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல!
                                             அன்போடே என்றும்
                                           வா.மு.கோமு 21-6-2014
                                            அலைபேச : 9865442435

Post Comment

கருத்துகள் இல்லை: