செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

சயனம், சகுந்தலா வந்தாள் -பார்வைகள்

ஈரோடு புத்தகக் கண்காட்சியும், அதையொட்டி நடுகல் பதிப்பகம் சார்பில் நடந்த குருத்தோலைவெளியீட்டு நிகழ்வும் அருமையோ அருமை. நாவலைப் பற்றி பெருமாள் முருகன் அருமையாகப் பேசினார். அதைப் பற்றி தனியாக எழுதலாம். நண்பர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். கிடைத்ததும் யூடியூப்பில்  ஏற்றிட வேண்டியதுதான்.

வியாழக் கிழமை ஒரே கொண்டாட்டம், திண்டாட்டம். அப்படியும் ஒரு சில புத்தகங்களை வாங்க முடிந்தது. அதில் ஒன்றுதான் எதிர் வெளியீட்டு அரங்கில் வாங்கிய சயனம் நாவல்.

வெள்ளிக் கிழமை மதியம் கையில் எடுத்தேன். ஆடி மாதக் காற்று. முகிலோடும் வானம். தென்னை மரத்துக்கடியில் கட்டிலைப் போட்டு வழக்கமாக இடையூறுகள், தொலைபேசி அழைப்புகள், ஃபேஸ்புக் ஏதுமின்றி புத்தகம் படிப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். பக்கத்தில் தட்டம் நிறைய முறுக்கு மட்டும் இருந்தால் சரி. அப்படித்தான் சயனத்தில் ஆழ்ந்தேன். சனிக்கிழமை மதியத்துக்குள் வீட்டில் சுட்ட முறுக்கில் பாதியும், சயனமும் தீர்ந்தது.

வழக்கமாக முன்னூறு பக்கத்துக்கு மேலுள்ள நாவல்களை வாசித்தால் சலிப்பு உண்டாகி விடும். ஒரு சில படைப்புகளை வாசித்தால் நாலு நாளுக்கு ஆய் வராது. முடிப்பதற்கு அவ்வளவு முக்க வேண்டியிருக்கும். சயனமும் கொஞ்சம் பெரிய புக். முக்கவெல்லாம் வேண்டியிருக்கவில்லை. உள்ளே தானாக இழுத்துக்கொண்டு போனது.

வா.மு.கோமு நல்ல எழுத்தாளர். இடுப்புக்கு மேலே சிறப்பாக எழுதக் கூடியவர். இடுப்புக்குக் கீழே அடடா இன்னுஞ்சிறப்பு! வழக்கமாக அவரது கதைகளில் மேட்டர் இருக்கும். மேட்டர் – ’ஒருமைகவனிக்க! ஆனால் இதிலே மேட்டர்ஸ்.. மேட்டரோ மேட்டர்.. எல்லாக் கதாபாத்திரத்துக்கும் சீன் வைத்திருக்கிறார். அதிலும் ஸ்கூலில் சத்துணவு ஆக்கும் அம்மாவும், குமரேசன் வாத்தியாரும் செஸ் விளையாடுவார்கள். (செஸ் தான்.. இடையில் க்இல்லை.) அடடா அருமை.. மிஸ் பண்ணாதீக. அப்பறம் வருத்தப்படுவீக..

கோமுவின் நாவல்கள் போகிற போக்கில் நிகழ்வுகளை உரையாடலில் சொல்லிச் செல்லும். நல்லது கெட்டதுகளை போதித்துக் கொண்டிருக்காது. தலித்தியம் பேசாது. அநேகமாக அவரது கள்ளிநாவலுக்குப் பிறகு இதில் தலித்தின் வலிகளைத் தொட்டுச் செல்கிறார். வேலுச்சாமிக் கவுண்டர் கலியனை கரட்டில் தூக்கிக் கட்டிக் கொல்கிறார். உள்ளூர் பள்ளியின் தலைமையாசிரியை இந்திரா மாதாரி வளவுச் சனங்களோடு ஓரமாக நின்று கோவில் விசேசத்தை வேடிக்கை பார்க்கிறார். நாவலில் எல்லாக் கதாபாத்திரத்துக்கும் மேட்டர் மடிந்தாலும் தாழ்த்தப்பட்ட ஜாதி வாத்தியார் மட்டும் ஒரு பெண்ணிடம் நூல் விட்டு கன்னத்தில் அடி வாங்கிக் கொள்கிறார்.

கோமுவில் பிற படைப்புகளைப் போல readability இதன் சிறப்பம்சம். சொல்லாடல் அனாயசமாக அவருக்குக் கைகூடி வருகிறது. அன்றாட வாழ்வில் கிராமங்களில் புழங்கும் மொழிதான். உதாரணத்துக்கு கலியன் பொண்டாட்டி வள்ளி, “சந்தேகப்படறவன் பீயை நாய் கூடத் திங்காதுஎன்று அவனிடம் சொல்வாள். இந்த மாதிரி உரையாடல்கள் கதை முழுக்க இறைந்து கிடக்கின்றன.


என்ன ஒரே விஷயம். சென்னிமலைப் பக்கத்தில் எப்போதும் மக்கள் காம இச்சையோடே திரிகிறார்கள் என வேறு பிராந்தியத்து ஆட்கள் நினைக்கும் அபாயம் ஒன்றுதான். கோமுவைக் கேட்டால், “இதெல்லாம் நெசமா நடந்துது தானுங்கோ. நடக்காதத நாம எழுதற இல்லீல்லோ!” என்பார். -செல்லமுத்து குப்புசாமி

--------------------------


நடுகல் பதிப்பக துவக்க விழாவிற்கும், அதன் புத்தக வெளியீட்டுக்கும் செல்வோம் என்பதை இறுதிவரை முடிவு செய்யவில்லை. நண்பன்Rasu Rasu செல்வதை அறிந்து,நானும் அண்ணன் Seema Senthil அவர்களும் கிளம்பிச் சென்றோம்.

விழா நல்லபடியாக நடந்து முடிந்ததும்.புத்தகங்களை வாங்கிக்கொண்டு அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினோம்.ஈரோட்டிலிருந்து, கோவைக்குச் சரியாக இரண்டு மணிநேர பேருந்துப் பயணம். புத்தகங்கள் இருப்பதால் இரண்டுமணிநேரம் பயணக் களைப்பு தெரியாது என்பதால் முதலில் நான் திரு வா.மு.கோமு அவர்களின் சகுந்தலா வந்தாள், புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.

பேருந்து பெருமாநல்லூர் தாண்டி வந்துகொண்டிருந்தபொழுது புத்தகத்தின் முன்னுரை தாண்டி முதல் அத்தியாயத்திற்குள் நுழைந்தேன். சரியாக 29 வது பக்கம்வரைதான் என்னால் படிக்க முடிந்தது.சற்று இறுக்கமான காற்சட்டை அணிந்து இருந்தேன்,அதனால் மடியில் வைத்து புத்தகம் படிக்க முடிய வில்லை என்பதே பொருத்தமாக இருக்கும். நிலைமையைச் சரிசெய்து கொண்டு வீட்டிற்குச் சென்றே படித்துக் கொள்ளலாம் என்று புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன்.(இரட்டை அர்த்தமாய் இதை எடுத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)

நேற்றைய தினமே புத்தகம் பற்றிய பதிவு போடலாமா? வேண்டாமா? என்ற எண்ண ஊசலாட்டத்தின் மத்தியில், இப்பொழுது ஒருமனதாகவே பதிவு செய்துவிட்டேன்.

நான்கு அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் உங்களைப் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி. தே பரவச நிலையோடே விபச்சாரத்தில் தன் தாயால் தள்ளப்பட்ட கல்பனாவுக்கும்,அவளைக் காதலிக்கும் ஜானுக்கும் இடையிலான ஊடல்,கூடல்களை அவர் பாணியிலேயே அடித்து நொறுக்குகிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில் அறிமுகமாகும் கமலக் கண்ணனைக் கட்டாயம் உங்களுக்குப் பிடித்துப் போகும்.துபோலவே மூன்றாம் அத்தியாயத்தில்தான் சகுந்தலா வருகிறாள்.இரண்டாம் அத்தியாயத்தில் க.கண்ணனை அவன் மனதிற்குள் சகுந்தலாவை எண்ணிப் புலம்பவிட்டு ,மூன்றாம் அத்தியாயத்தில் சகுந்தலாவை அட்டகாசமாக அறிமுகப்படுத்தி, நம் வாழ்க்கையில் எங்கேனும் ஏதேனும் சந்தித்திருந்த பாத்திரத்திற்கு சகுந்தலா எனப் பெயர்சூட்டி மனதில் நுழையவைக்கிறார்.

'
நாணயஸ்தனுக்கு' மொழிபெயர்ப்பு தொறந்தவாயன் என்பதிலிருந்து, கணவன் மனைவிக்கு இடையே கூடல் அரங்கேற கணவன் நடத்தும் பிரம்மப்பிரயத்தனம் உற்பட அனைத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறார்..கண்ணனை மனதிற்குள் இருந்து பேச வைத்ததிலிருந்து, எழுத்தாளர் ஒரு மனிதன் மனதிற்குள் எந்த அளவுக்கு ஊடுருவ முடியுமோ அந்தளவுக்கு உள்சென்று வார்த்தைகளைக் கொண்டு வந்து சம்பவப்படுத்தி இருக்கிறார் என்பதை அறியமுடியும்.

இந்நாவலில் காட்டப்பட்டிருப்பது ஒரு சகுந்தலாவின் வாழ்க்கை மட்டுமே என்று கி..திலீபன் அவர்கள் கூறியதைப் புத்தகத்தின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் ஓராயிரம் கமலக்கண்ணன்களின் புலம்பல்களும் காட்டப்பட்டிருக்கிறது.

முன்னுரையிலயே இது பைசாவிற்காக எழுதப்பட்ட நாவல் என்று எழுத்தாளர் சொல்லி விடுவதால் சிற்சில விசயங்களை சமரசம் செய்துகொண்டாக வேண்டியுள்ளது. இருப்பினும் சமூகத்தின் குரூரத்தை எழுத்தாகப் பதிவு செய்த திரு வா.மு.கோமு அவர்களின் தைரியத்தைப் பாராட்டியாகவே வேண்டும். 

நன்றி.

-----------------------------

Post Comment

கருத்துகள் இல்லை: