செவ்வாய், செப்டம்பர் 23, 2014

கவிதைகள்


என் முகநூலை எட்டிப்பார்க்க வந்தவள்
நின்று நிதானித்து பேஸ்ட்டில் உப்பிருக்கிறதா
எனப்பார்த்து நுரைவர ப்ரஸ்சை இழுத்தபடியிருந்தாள்!
பின் ஓரமாய் துப்பிவிட்டு என்னை விமர்சிக்காமல்
போய் விட்டாள்! அவள் எந்த நாடு என நான்
விசாரித்தபடி இருக்கையில் புல்லட் ஒன்று என்
முகப்பு பக்கத்தில் புகை கக்கியபடி நுழைந்தது!
வந்தவளுக்கு கன்னத்தில் மச்சமொன்று இருந்தது!
அதை அவள் துடைத்து புல்லட் சீட்டில் தேய்த்தாள்.
வெறும் பொம்மைகளாயிருந்த என் பக்கத்தை
பார்த்தவள் கியர் போட்டு கிளம்பிவிட்டாள்!
வந்தவள் வளைகுடா நாட்டுக்காரியென
திருப்பூர் சுரேஸ் அங்கிருந்தே கூறினார். – என்
முகநூலில் பெண்கள் வட்டமிடுவது
ஆபத்திற்கு அறிகுறி என கூவியவர் பல்லடத்தில்
நண்பர்களுடன் சியர்ஸ் போட்டபடியிருந்தார்! அடுத்ததாக
ஒரு பெண் கனத்த உடம்புடன் என் பக்கத்தில்
நுழைந்தார். என் பதிவுகளை மறைத்து
நின்றபடி புன்னகைத்தவர் ஒரு விரல் காட்டினார்.
இங்கே அப்படியெதுவும் தவறில்லை மேம்! என்றேன்.
அவரும் சென்றபிறகு தான் கண்மணி வந்து சேர்ந்தது!
எல் ஏண்டா இல் இப்படி பல் படமா பொல் போட்டு
கொல் கொன்னு எல் எடுக்கிறே? நில் நீயி
எல் எப்பத்தான் தில் திருந்தப் பொல் போறே?
உல் உன்னோட்ட நல் நானு டுல் டூவு பொல் போடா!
அவளும் சென்றபின் அடுத்த பதிவை இடுகிறேன்!என் முகநூல் பக்கத்தில்
பறந்து வந்து முட்டையிட்டிருக்கும்
அந்த பச்சை வர்ண பறவைக்கு
சுந்தரராமசாமியையோ
கல்கியையோசாண்டில்யனையோ
தெரிந்திருக்கவில்லை! –இருந்தும் அது
அடைக்காக்க விட்டு வைத்திருக்க
ஒரு காலில் அதற்கு ஆறு விரல்கள்
இருந்ததே காரணமாகிவிட்டது!

நா இனி மூஞ்சி புத்தகம் பக்கம் வரமாட்டேன்!
அந்தப் பெண் குலுங்கி அழுதபடி சப்தமிட்டது!
யாரோ உள்பொட்டியில் வந்து வா போலாம்னு
கூப்பிட்டாங்களாம்! அந்தப் பெண் சொன்ன காரணம்
எனக்கு அட்டகாசமாயிருந்தது!
-அவனை நீ பாத்திருக்கியா?
-லொல்லை!
-யாருன்னே தெரியாதவனுக்கு பயந்து கணக்கை
முடக்கிறியா? பேடிப் புள்ள!
-ரசம் கொதிச்சிருக்கும்னு நினைக்கேன். வேற பேர்ல
நாளையில இருந்து புதுசா ஓப்பீன் பண்ணிக்கிறேன்! ரெக்வஸ்ட்
குடுக்கேன் சேர்த்திக்கோ!
-என்ன பேர்ல குடுப்பே?
-சஸ்பென்ஸ்!!!!
ஙே!

நான் இன்று மாலை உன்னிடம்
ஒரு விசயம் சொல்வேனாம்! –நீ
நாளை மாலைக்குள் அதை மறந்து
விட வேண்டுமாம்! சரியா?- அதே போல்
நாளை மாலை சங்கதி ஒன்னு
சொல்வேனாம்! –நீ மறாநாள் மறந்து விட
வேணுமாம்! எப்படியும் ஒரு வாரத்தில்
பக்கத்து வீட்டு சிட்டு எனைப்பார்த்து
பல் இளிப்பதை நீ பார்க்கத்தானே போகிறாய்!
ooooooooooooooooo

நீ என் கவிதைகளுக்கு உயிரூட்டத்தான்
வந்ததாய் குதூகலித்து சிற்றிதழ்களின்
செல்லக் கவிஞனானேன்!
நீ செல்லமாய் கோபித்துக் கொண்ட
சமயமெல்லாம் என் கவிதைகளில்
தீப்பொறிகள் பறப்பதாய் வாசகர்
கடிதங்கள் சொல்லின! –இறுதியாய்
நம் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி
விழுந்த போது நான் நவீன கவிஞனாய்
மாறிவிட்டதாய் சிற்றிதழ்களை விட்டு
பேரிதழ்களுக்கு போய் விட்டேன்!
ooooooooooooooooo

வீட்டினுள் அவளின் அழுகையும்
விசும்பலும் தொடரவே சலிப்பாய்
அந்த இரவில் வெளியேறினேன்!
நிலவும், நட்சத்திரங்களும் அன்று
அசிங்கமாய் இருந்தன!
oooooooooooooooooo

சுஜாதாதான அவர்?
இவனின் பாதையில் இடைமறித்து நின்றார்!
என் புத்தகங்களில் எது உனக்கு
நிரம்பப் பிடித்தது? என்றொரு கேள்வி வீசினார்!
-படு மொக்கைண்ணாபிரிவோம் சந்திப்போம்!’
-போச்சாது! சரி விடு!
ப்ரகாஷை பார்த்தீங்களா சுஜாதா?
-அவரு ஹோட்டலு வச்சிருக்காரு! லாசாரா, குரும்பூராரு
நகுலனு எல்லாரும் கணக்கு வச்சு சாபிடறாங்க! எனக்கு
காரம் ஆவாது! நான் மெஸ்சுக்கு போயிடறேன்!
-நீங்க தளபதி படத்துல ரசினிக்கி அம்மாவா வர்ற
சுஜாதாவா? இல்ல மீண்டும் ஜீனோ எழுதிய சுஜாதாவா?
-நா நண்பர்கள் படத்துல வஜனம் எழுதிய சுஜாதா!
-இந்த மேட்டரை நான் முடிக்கணுமே!
-கனவுன்னு மட்டும் எழுதிடாதே!
 oooooooooooooooooo

காரணங்களுக்கா பஞ்சமில்லை உனக்கு?
இந்த நீலவானில் ஒற்றையாய் தனித்தலையும்
சிறு பறவையாய் நான் சிறகசைக்கிறேன்.
இந்தக் காற்று ஒன்றுதான் சிரமம் தருகிறதே
தவிர வேறொன்றும் துன்பமில்லையம்மா!
நடந்து போனவைகளைப்பற்றி சொல்லி
ஆகப்போவது எதுவுமில்லை எனினும் அம்மா
உனைப் போன்றே கனிவான கண்களைப்
பெற்றிருந்த அவள் ஏன் தனித்தென்னை
பறக்கவிட்டாள்? –உன்னில் முழுமை நான்!
என்றே அவள் எப்போதும் சொல்லிய வண்ணமிருந்தாள்!
துயரம் தோய்ந்த இவ்விரவில் மழைச்சாரல்
இந்த மரத்தின் பொந்திலும் அடிக்கிறது அம்மா!
கனிவான மடி தருபவளும், நேசமாய் கோதி
விடுபவளுமான அவளுக்கு உனைப்போன்றே
கண்களம்மா! –இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்திவிட
உறவுகள் என்றும் வேண்டும் தானே!
தனித்தலைவது பற்றி ஏதேனும் கேட்கத் தோன்றினால்
ஏதாவதொரு கடற்பாறை மேட்டில் முடி உலர்த்திக்
கொண்டிருக்கும் கடல்கன்னியிடம் கேள்!
என் கவலைகளுக்கெல்லாம் மொத்தமாக ஒரு
பெயர் சூட்டினால் அது சாந்தாமணி என்றே முடிகிறது!
அவள் விளையாடி வீசியெறிந்து விட்ட றெக்கை
ஒன்றிழந்த பொம்மை நான்! –வருடத்தில் பலமுறை
கீறிக்கொண்டிருக்கிறேன் என் சருமத்தில் அவள்
பெயரை! –அவள் ஏனம்மா காகிதக்கப்பல் செய்து
பரிசளித்து விட்டு பிடுங்கிக் கிழித்தாள்?
  1. oooooooooooooooooo

Post Comment

கருத்துகள் இல்லை: