வியாழன், செப்டம்பர் 25, 2014

முகநூல் பதிவுகள்


கோவிலில் அமர்ந்திருந்த அடியேன் எழுந்து வெளிவர தாமதமாகும் என்பது எல்லோரும் அறிந்த விசயம் தான். பக்தி முத்தித் தான் கிளம்புவது குறிக்கோள். ஆடி ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் நிதானமாக அமர்ந்திருப்பது தன்னப்போல நடந்து விடுகிறது.
இருவர் ஒரு தேங்காயுடன் உள்ளே வந்து காலி பாட்டிலை எடுத்து சரியாக அளவு பிரித்து ஒரே தண்ணீர் பாக்கெட் வாங்கி அப்படியே பாட்டிலில் கலந்து பாட்டிலோடு எடுத்து அன்னாந்து உள்ளுக்கு இறக்கினார்கள்! சிறப்பு!

ஒரு நபருக்கு புரை ஏறி பூராவும் வெளி வந்து விட்டது! என் அருகில் இருந்தவர் அவரை உற்றுப் பார்த்ததால தான் புரை ஏறி வெளிவந்து விட்டதாக அவர் கொந்தளித்து பாட்டிலுக்கு காசு கேட்டு கூத்தாடினார். இதெல்லாம் சாக்னா கடையில் சகஜம் தான்! வந்து குடிப்பவர்களிடமும் அவர் நியாயம் சொல்லி கேட்டார். நான் பாட்டிலை காலி செய்து விட்டு அவருக்கு 30 ரூபாய் கொடுத்து விட்டு மிச்சம் 5- வேறு பக்கம் இறந்துக்கோ! இப்ப இவ்ளோதான்! நீ கக்குனதுக்கு அந்த மனுசனை பாவம் குடிக்க விடாம தொந்தரவு பண்ணாதே! என்று சொல்லி வந்தேன்! அவனை அடிக்கடி பார்த்த காரணத்தால்!


இதற்கு ஏதாவது அந்த குறள்ல சொல்லியிருப்பாங்களே!

oooooooooooo

இன்று மின்சாரம் இல்லை என்பது 9 மணிக்கு அது போனதுமே தெரிந்து விட்டது. வாசிக்க நண்பர் மூட்டையாய் கட்டிக்கொடுத்த மாதநாவல்களை பிரித்து பெண்கள் எழுதிய நாவல்களாய் படிக்க ஆரம்பித்து 7 நாவல்களை முடித்து விட்டேன். எல்லா நாவல்களிலும் காலேஜில் நாயகனும் நாயகியும் வாசிக்க சென்று கொண்டிருக்கிறார்கள்! நாயகி நாயகனை கன்னத்தில் கையாலோ, மிதியடியாலோ அடிக்கிறாள். (ரிசல்ட் முன்பே தெரிந்து விடுகிறது) இன்று மீதம் கிடக்கும் புதிய பெண் எழுத்தாளர்களின் புதிய நாவல்களை வாசிக்காமல் விடமாட்டேன். எத்தனை பெண்கள் நாயகனை காலேஜில் போட்டு தாக்கினாலும்!

மறுக்கா ஒரு விசயம்! நானும் இப்படிக்கா காலேஜில் ஒரு கதை நடப்பதாய் எழுத துவங்குவேன். என் நாயகி நாயகனை புத்தகத்தால் அடிப்பாள். (நாயகனுக்கு கை முறிந்து விடுகிறது என்று வைத்துக் கொள்ளலாமா?)
ooooooooo

மாத நாவல்களில் தேவியின் கண்மணி, தரணி, வெண்ணிலா, கொலுசு, மதுமிதா, குடும்ப நாவல் என்று வகை வகையாய் இப்போது வந்து கொண்டு இருக்கின்றன. நான் வாசித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் க்ரைம் நாவலின் முதல்; புத்தகத்தை வடகோவையில் ஒரு பெட்டிக்கடையில் வாங்கினேன். அப்போது தான் எனக்கு ராஜேஷ்குமார் என்றொரு எழுத்தாளர் இருப்பது தெரியும். ஆண்டு 1989. அவர் ஊர் கோவை என்று அந்த வருடம் முழுக்க தெரியாது. பிகேபி, சுபா, அனுராதாரமணன், பிடி சாமி, ராஜேந்திரகுமார் என்று வகை வகையாய் ஆரம்பகாலங்களில் படித்து நானும் டிடெக்டிவ் ஏஜென்சி கதைகளை ஒருகுயர் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். என் அப்போதைய தோழிகள் ஆளுக்கொரு நோட்டுகளை சுட்டு விட்டார்கள். ஆனால் எல்லோரின் ஆசியும் இன்னமும் என் கூடவே இருக்கிறது! ஆனால் அதே சமயத்தில் நான் அசோகமித்தரனையும் அஸ்வகோசையும் வாசித்துக் கொண்டிருந்தேன். அது தான் இப்போது குலாப்ஸ் ஆகி விட்டது.

இப்போதைய எழுத்தாளர்கள் ஆர்.சுமதி,கிரிஜா ஜின்னா,ஸ்ரீஜா வெங்கடேஷ், அகிலா கோவிந்த், ஜி.எம்.இந்திரா, ஸ்ரீ ரமா, சி.வி.இந்திராணி, பரிமளா ராஜேந்திரன், ஜி.ஏ.பிரபா, மகேஷ்வரி, என்று நிரம்ப எழுதுகிறார்கள். இதில் நான் முத்துலட்சுமி ராகவனுக்கு நண்பன் என்பதால் அவரின் எழுத்துகள் எனக்கு அவரே அனுப்பி விடுவார். உஷா தீபனும் என் நண்பர். அவர் புத்தகம் வந்திருப்பதை முகநூலில் போட்டாரென்றால் எப்படியேனும் வெளியில் செல்கையில் கவ்வி வந்து விடுவேன். வரலொட்டி ரங்கசாமி எனக்கு நண்பராக இருந்தார். அவரது நாவல்களையும் கொஞ்சம் காலம் வாசித்தேன். எனக்கு இப்போதைய எழுத்தில் மகேஷ்வரன் எழுத்துகள் கொஞ்சம் பிடித்திருந்தன. இன்றைய வாசிப்பில் அவரை விட சிறந்த வகையில் ஜி.ஆர். சுரேந்திரநாத்தின் பூக்கரையில் ஒரு காதல் காலம் என்ற குடும்ப நாவல் பலே போட வைத்து விட்டது! இப்படி எழுதுபவர் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாரா? என்று தெரியவில்லை!

முன்பாக 80களின் கடைசியில் எஸ். பாலசுப்பிரமணியம் என்பவர் மாலைமதியில் பட்டாஸ் கிளப்பினார். அவரின் புத்தகங்களை எந்த பதிப்பகமும் போடவில்லை என்பது போல் தெரிகிறது. மூன்று வருடம் முன்பு ஈரோடு கண்காட்சியில் தேடி சலித்து விட்டேன்! இன்று வாசித்த புத்தகங்கள் அனைத்தும் மனநிறைவு. இனி எப்போதோ!!!!!!

ooooooooooooo

மாத நாவல்களை நான் வாசிக்கிறேன் என்பதே பலருக்கு இன்று அதிர்ச்சி விசயமாகியிருக்கிறது தெளிவாகிறது! எழுத்தாளர்கள் என்றால் நான் ஆண் பெண் என்ற வித்தியாசம் பார்த்து வாசிப்பவனல்ல! எனக்கு அம்பை என்ற எழுத்தாளரை என் தந்தை அறிமுகப்படுத்திய போது நான் 12ம் வகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன். என் தந்தை எனக்கு எந்த உதவியை செய்தார் எனபது எனக்கு இன்று வரை தெரியாது! அவராக செய்த பணி அது! நான் எல்லா விசயங்களையும் வாசிப்பவன்! எல்லா விசயங்களைப் பற்றியும் எழுத ஆசைப் படுபவன்! வார இதழ்களில் ஜோக் எழுதும் ஆட்களில் பலர் என்னோடு வாழ்க்கையை கொண்டாடுபவர்கள்! இப்படியான ஒரு வாழ்வை எனக்கு அமைத்துக் கொடுத்த, என்னை அம்ம்ம்ம்போவென விட்டு 13 வருடங்களுக்கு முன்பே தனித்து விட்டுச் சென்ற என் தந்தைக்கு நன்றி!

அப்பா! நீ ஏதேதோ கனவு கண்டாய்!\ அதில் உன் மாடியில் குடில் அமைத்து இலக்கியத்துக்காக என்ன என்னவோ படைப்புகள் செய்யப் போவதாய் அறிவித்து பாதியில் கிளம்பி விட்டாய்! அப்பா! உன் கனவில் பாதியேனும் நான் நிறைவேற்றி விட்டு வருவேன் உனைத்தேடி! மிச்சத்தை உன் பேரன் எக்காலத்திலும் செய்ய மாட்டான்!
ooooooooooooo


Post Comment

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிகவும் நல்ல முகநூல் பகிர்வுகள் ஐயா...