செவ்வாய், அக்டோபர் 21, 2014

கவிதை தீபாவளி 2014

உயிர்க்கொள்ளி

உன் பக்க நியாய அநியாயங்களை
பேசி முடித்தபிறகு இனி ஒன்றுமில்லை
என்று கைகட்டி நீ நின்றாய் அம்மு!
மார்பு என்றுமில்லாமல் அன்று
திடுக் திடுக்கென்று இதயம் துடிப்பதை
வெளியே காட்டிற்று!
உன் கண் முன்னால் நிற்க நான்
அருகதையற்றவன் போல எல்லா
துயரங்களையும் என் தலைமேல்
ஏற்றிக்கொண்டு திரும்பி நகர்ந்தேன்!
ஒரு வார்த்தை நீ சொல்லியிருக்கலாம் அம்மு!
பேசிட்டா போயிடுவியா நீ?’ என்று!

0000000000

உன்னைப்பற்றி நினைக்கையில்
எந்த நேரமும் வன்முறை எண்ணங்கள்
தான் மனதில் அலைபாய்கிறது அம்மு!
அம்மு என்ற வார்த்தையை கேட்டதும்
நான் என் துவக்கை தூக்கிக் கொள்கிறேன்.
இரை நோக்கி செல்லும் பாலீஸ் குண்டுகள்
பல திசைகளில் சிதறித் தெறிக்கின்றன
இலக்கை தவற விட்டு விட்டு! கொஞ்சம் சிவப்பாய்
ரத்தம் கண்டால் தான் என் வன்முறை அடங்குமென
என் சுண்டு விரலை சுட்டுக் கொள்கிறேன் அம்மு!
தனக்கான பொம்மையை யார் கையிலும்
கொடுக்க விருப்பப்படாத குழந்தையைப் போல
நீ என்னை கைகளுக்குள் வைத்திருந்தாய் முன்பாக!
மொக்கு விரியாத மல்லிகைப்பூக்களை செடியிலிருந்து
கிள்ளி மடியில் போடும் குழந்தையைப் போல உனக்காக
வார்த்தைகளை கோர்த்து சரமாய்
தொங்கவிட்டுக் கொண்டிருந்தேன் முன்பாக!
அம்மு! ஒரு இலையுதிர் காலத்திலோ அல்லது
பனிவிழும் மார்கழியிலோ உன் கணவனுடன்
கைகோர்த்து ஏதேனுமொரு மலைப்படிக்கடில்
நீ ஏறி வருகையில் கால்களிலும் கைகளிலும்
பத்து விரல்களும் இல்லாத எனைக் காண்பாயடி!

0000000000000


ஏழு கடல் ஏழு மலை தாண்டி
வந்தது இளவரசனை நோயிலிருந்து
காப்பாற்றும் பச்சைப்பூக்கள் பூக்கும்
செடியை கொத்தாகப் பிடிங்கிச் செல்லத்தான்!
வரும் வழியில் எத்தனை இடையூறுகள்?
சொல்லி மாளாது போங்கள்! அதுவும்
சுந்தரா தேசத்தில் ஒரு ஒற்றைக்கண்
அரக்கனை மண்டைப் போடாகப்
போட்டுத்தள்ளுவதற்குள் அம்மா மதிவதியினிடம்
குடித்த பாலில் இரண்டு சொட்டு
பொலேர்ச்சென கக்கி விட்டேன்! –இங்கு
வந்து பார்த்தால் என்னடாவென்றால்
மகினபுரி அரண்மனை வைத்தியர் அந்த செடிக்கருகில்
அமர்ந்து அதை பறித்து தின்று கொண்டிருக்கிறார்.
சார்ட் கட்டில் வந்து விட்டாராம்!
கோல்டு பில்டர் கிங்ஸ் இருக்கா? என்று கேட்டவர்
இளவரசன் இதை தின்று உயிர் பிழைத்து
நாட்டு மக்களை காப்பாற்றாமல் பக்கத்து
நாட்டு இளவரசி செளதாமிணியோடு வாழ
ஓடி விடுவானாம்! நீ கொஞ்சம் சாப்பிடு
ஒரு வருடம் உன் வாழ்நாளில் அதிகரித்துக்
கொள்ளலாம் அவ்வளவுதான்! என்கிறார்!
அட அரண்மனை வைத்தியக் கிழவாடிகளே!

0000000000000

வாழ்வென்பதை வாழ்ந்து முடித்த
பலரும் முழுதாக வாழ்ந்து முடித்து
விட்டு செல்லவில்லை என்பதை
சுகுணா நீ தான் சொன்னாய் இந்த
அக்டோபர் மாத இறுதியில்!
பிறக்கவும் இல்லை இறக்கவும் இல்லை!
கல்லறை வாசகம் பொறிக்கப்பட்ட
கல்லறையில் படுத்து ஓய்வெடுக்க
ஓஷோவுக்குப் பின் வந்தவர் ஒரு
பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்
என்று விருப்பப்பட்டேன் சில காலமாய்!
இருந்தும் சுகுணா கேளான் பிரயாணி
சாப்பிட்டு விட்டு வந்து தெருவோர
பெட்டிக்கடையில் கோல்டு பில்டர் வாங்கி
பற்ற வைத்து ஊதினேனே வளையங்களாய்!
அந்த வளையங்களில் புகை வடிவத்தில்
இருக்கிறது நமக்கான முழுமையான வாழ்க்கை!

000000000000Post Comment

கருத்துகள் இல்லை: