வெள்ளி, அக்டோபர் 03, 2014

கவிதைகள் என்றே வைத்துக் கொள்ளலாம்!


கழுத்து நீண்டவளும் காமாலைக் கண்ணுடையவளுமான
கனகா தன் காதலை முதலில் வீட்டாரிடம்
சொன்ன சமயம் வேடிக்கை செய்தி கேட்டது போல்
குடும்பம் சிரிக்க செல்லமாய் சிணுங்கினாள்!
அம்மா தான் நீ சொல்லு தங்கம்! அவன் என்ன சாதி?
எங்க வேல பாக்கான்? அப்பா சும்மா தமாசுன்னு
சிரிக்காரு! என்றதும் கனகா தன் காதலனைப்பற்றி
புட்டுப் புட்டு வைத்தாள் சபையில்! அவைகளை
கேட்ட மறுநொடியே தந்தை வடிவேலு ஜோக்
பார்த்தது போல கீழே விழுந்து சிரித்தார்! கனகா
மளாரென தன் அறைக்குள் ஓடி கதவை
அறைந்து சாத்திக் கொண்டாள். “கட்டுனா அவனைத்
தான் கட்டுவேன்! இல்லின்னா சாவேன்!” என்று சப்பதமிட்டாள்.
நிதானத்திற்கு வந்திருந்த அப்பா மறுக்காவும்
வீடே அதிரும்படி சிரிக்கத்துவங்க இப்போது

அம்மாவும் சிரிக்க ஆரம்பித்தார்!

00000000000000000

காதல் என்ற காந்தத்தால் ஈர்க்கப்பட்ட கனகா
நடுநிசியில் தன் இல்லத்திலிருந்து
கம்பி நீட்டினாள்! – வர்ணிக்க முடியா அளவு
ஆபரணங்களும் பூ வேலைப்பாடுகள் கொண்ட
வெண்ணிற உடையையும் அவள் அச்சமயம்
அணிந்திருந்தாள் முருகேசா! அதைக் கண்ணுற்ற
நான் கவிஞனாய் இல்லை! அப்படியிருந்திருந்தால்
கண்டமேனிக்கு அவள் அழகை பாட்டாய் படித்திருப்பேன்!
தன் காதலன் கண்டதும் யப்பா! என்று மயங்கிச் சரிய
வேண்டுமெனத்தான் கனகா அப்படி அத்தர் மணம்
கமழ, மை தீட்டிய விழியோடு கிளம்பியிருக்க வேணும்!
கனகா நெலா வெளிச்சத்திற்கு வந்தபோது அங்கு
வீசிக்கொண்டிருந்த இளந்தென்றல் இவளின்
காதல் கதையை செடி கொடிகளிடம் கூறியது எனக்கு
பேருவகையாக இருந்ததடா முருகேசா!
ஒரு மலையருவியின் அருகில் காதலர்கள்
இணைந்திருப்பதைப்பற்றி ஒரு பாட்டு படிக்க முடியுமா
உன்னால் முருகேசா? என்னால் முடியுமென தெரியவில்லை!

0000000000000000

காதலின் குழப்பத்தினால் காதில் கேட்பன
அனைத்தையும் நம்பும் சகஜ நிலைக்கு
கனகாவின் காதலன் வந்தபோது கனகா
தன் தந்தையுடன் ஒரு மலைவாச ஸ்தலம்
சென்று பட்டாம்பூச்சி பிடித்து விளையாடிய
வண்ணமிருந்தாள் முருகேசா! –கூடவே கனகாவின்
தற்போதைய காதலனும் அவ்விடம் இருப்பதாய்
வானொலி சொல்லக்கேட்டு கனகாவின்
உடலுக்குள் உயிரைத் திணித்திருந்த காதலனுக்கு
இரண்டு செ.மீ. தாடி வந்ததை நீ போய் எட்டிப்
பார்த்தாயா முருகேசா? காதல் படுத்தும் பாடால்
இனி அவனுக்கு தலைக்கிறுக்கு பிடிக்கும்!
ஆகவே முருகேசா நம் வாழ்வில் காதல்
என்ற துக்கசமாச்சாரங்கள் என்னாளிலும் வாணாமடா!
வன்னாத்திப்பூச்சிகள் ஏகபோகமாய் சுற்றும் இந்த
வீதியில் இனி நாமிருக்க வேண்டாம்!

00000000000000000

மோகவ்ஸ்கோய் கிராமத்திலிருக்கும் சிற்றாறு
அனேகமாய் கோடைகாலத்தில் வறண்டேதானே
கிடக்கும் சாந்தாமணி? இப்போதென்னவோ அதிசயமாய்
பெருக்கெடுத்து ஓடுகிறது வாட்டர்! –என்ன செய்ய?
நானும் நண்பர்களும் குதிரையிலிருந்து இறங்கி
படகில் தான் சென்றோம். –படகை ட்ரைவ் செய்த
கிழவாடி புனோவ்ஸ்கி மூக்குப்பொடி போடும்
பழக்கம் உள்ளவன் போலும்! போட்டுப் போட்டு
அக்ஸினான்! அக்ஸினான்! அக்ஸினான்!
படகு பழங்கால டேமேஜ் படகு கண்மணி!
உயிரோடு நானும் நண்பர்களும் மறுகரையை
அடைந்தது உன் புண்ணியத்தில் தான்! (ஹே!ஹே!)
என் கையிலிருந்த மூட்டையில் ஒரு கிலோ
உருளைக்கிழங்கும், ஒரு கிலோ தக்கோளிப்பழமும்
போக உன் முக அழகு காட்டும் போட்டோவும்
மட்டும் தான் என்று சொன்னால் நம்பணும்!
கரையின் அப்புறத்தில் சார்லஸ் புஷ்கோவ்ஸ்கி
தன் வத்திப்போன வயிறுடைய குதிரைகளோடு
காத்திருப்பார் அல்லது டீசலில் ஓடும் ஜீப்
கூட இருக்கலாம்! எப்படியாயினும் இந்த சிற்றாற்றை
கடந்ததும் உசுர் பிழைத்த சம்பவத்தை உனக்கு
எழுதி அனுப்பணும்டி! –அழுகிய ஆல்ட்டர் மரங்களின்
அழுகிய வாடை கரை அடையும் முன்னரே
மூக்கில் அடிக்கிறது! இந்தப் பயணம் சும்மா என்றால்
கோபிப்பாய் தானே கண்ணே!

000000000000000000000

Post Comment

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு...

வா.மு.கோமு சொன்னது…

நன்றி நண்பா!