வியாழன், அக்டோபர் 16, 2014

சிறுகதை -திருப்பம்


திருப்பம் -வா.மு.கோமு

  கடவுளே ! என்று சப்தமிட்டு மயங்கி கீழே விழுந்து விட்ட பெரியவரைச் சுற்றிலும் கணிசமாக பெண்கள் கூட்டம் கூடிவிட்டது. நல்லவேளை அடியொன்றும் கனமாய் அவருக்கு பட்டிருக்கவில்லை. கொஞ்சம் நேம்பாகவே பொத்தென சாய்ந்திருந்தார் பெரியவர். பியூன் முனுசாமி தான் ஸ்டாப்பின் தண்ணீர் கேனைத் தூக்கி ஓடி வந்ததும் பெண்களை விலகச் சொல்லி விட்டு அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தான். கண்விழித்து சுற்றிலும் இருப்பவர்களை ஒருவித மிரட்சியோடு பார்த்த பெரியவர் எழுந்து கொள்ள தடுமாறினார். முனுசாமி அவரின் சிரமத்தை உணர்ந்து கைப்பிடித்து தூக்கி கைத்தாங்கலாய் அவரை நடத்திச் சென்று இருக்கை ஒன்றில் அமர வைத்தான்.

  வெண்ணிலா. சூரியன், நிலா மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் அன்று திங்கள்கிழமை என்பதால் குழுப்பணம் கட்ட வங்கிக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஒரு குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைவது என்றால் வங்கிக்குள் நுழைவது ஒன்று தான். வேறெங்கிலும் அவர்கள் குளிரூட்டப்பட்ட அறையை அறிந்தார்களில்லை. வெய்யிலிலே அலையும் அவர்களுக்கு அந்தக் குளிர்ச்சி மிகவும் பிடித்திருந்தது. அவர்களில் ஒருபெண் தான் கீழே விழுந்த பெரியவரின் அலைபேசியை எடுத்து வந்து சற்று நிதானமான மனதுடன் அமர்ந்திருந்த அவரின் கையில் கொடுத்தாள்.

  வங்கியின் உயரதிகாரி சித்தார்த் தன் கண்ணாடி அறைக்கதவைத் திறந்து வெளிவந்தான். என்ன களேபாரம்? என்று முன்கியபடி வந்தவன் பெண்களிடம் கூட்டம் போட வேண்டாமென கேட்டுக் கொண்டதும் சிலர் ஒதுங்கிச் சென்றனர். டோக்கன் நெபர் பனிரெண்டு என்று ஸ்பீக்கர் ஒலித்தது. பனிரெண்டாவது டோக்கன் வைத்திருந்த ஒரு பெண்மணி தனது நெம்பர் தானா? என்று பார்த்து விட்டு படபடப்பாய் பணம் பெறும் கவுண்ட்டருக்கு சென்றாள்.

  “என்ன பெரியவரே! என்னாச்சு உங்களுக்கு? ஒடம்புக்கு சுகமில்லையா? காலையில சாப்டுட்டு வந்தீங்களா?” என்று பியூன் முனுசாமி அதிகாரியின் முன்பாக பெரியவரிடம் விசாரித்தான்.

  “போனுப் பேசிட்டே வெளிய போக இப்பிடிக்கா நடந்து வந்துட்டே இருந்தாருங்க! திடீருன்னுஐய்யோன்னு சத்தம் போட்டுட்டு கீழாற விழுந்துட்டாருஎன்றொரு பெண் தான் கூறினாள். பெரியவர் அவளை ஒருமுறை தலை உயர்த்திப் பார்த்து விட்டு பேச ஆரம்பித்தார்.

  “என் பொண்ணு விஷத்தை சாப்பிட்டு ஆபிடல்ல இருக்கிறதா மாப்பிள்ளை போன்ல சொன்னாருங்க! காலைல தான் தீபாவளிக்கு மாப்பிள்லை கழுத்துல ரெண்டு பவுன் செயின் போடலைன்னு அடிக்கிறாருப்பான்னு போன்ல அழுதா அவ! அதான் செத்துப்போன என் அம்மாவோட தாலியை பேங்க்ல வச்சு பணம் வாங்கினேன். இதைக் கொண்டுபோய் மாப்பிள்ளை கையில குடுத்து என் பொண்ணை அடிக்காதீங்கன்னு சொல்லிடலாம்னு.... அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாள்னு போனு வரங்காட்டித் தான் கேட்ட ஒடனே இப்படி ஆயிடிச்சு! உங்க எல்லாருக்கும் சிரமத்தை குடுத்துட்டேன்என்றவர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

  “பயப்படாதீங்க பெரியவரே! ஒன்னும் ஆயிடாது. இந்தக் காலத்துல ஆஸ்பத்திரில பணம் செலவானாலும் உசுரக் காப்பாத்திடுவாங்க! உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆயிருக்காதுஎன்று பியூன் முனுசாமி ஆறுதல் சொன்னான். மேனேஜர் சித்தார்த் சொன்னதன் பேரில் முனுசாமியே பெரியவரைக் கூட்டிக்கொண்டு வங்கியை விட்டு வெளியேறினான். அவர்கள் வெளியேறியதும் சித்தார்த் தன் இருக்கைக்கு வந்தமர்ந்தான். அவனது மனம் ஊஞ்சலாட்டம் போடத் துவங்கியது. காலையில் தன் மனைவியுடன் வீட்டில் நடந்த சண்டை திரும்பவும் அவனுள்ளே காட்சியாக ஓடியது.

  காலையில் உணவருந்தும் மேஜை முன்பாக சித்தார்த் அமர்ந்திருந்தான். சமையல் கட்டில் இவனுக்காக மனைவி சித்ரா தோசை வார்த்துக் கொண்டு வந்தாள். எல்.கே.ஜி செல்லும் பப்பிம்மாவை சித்தார்த்தின் தாயார் வேனில் அனுப்பி வைத்து விட்டு அப்போது தான் உள்ளே வந்தார்.

  “ம்ஒரு வருசமாச்சு! பப்பிம்மாவுக்கு முடிவந்து பூவும் வெச்சு ஸ்கூலுக்கு அனுப்பிட்டு இருக்கோம்என்று அம்மா தூபம் போடுவது தெரிந்ததும், இவன் தட்டில் இரண்டு தோசைகளை வைத்து விட்டு மேலும் சுட சமையலறைப் பக்கமாக நகர்ந்தவளைநில்லுடிஎன்றான் சித்தார்த். குரலில் இருந்த கடுமையைக் கண்டு நின்றாள் சித்ரா.

  பப்பிம்மாவுக்கு காது குத்தி மொப்ட்டையடித்து வருடம் ஒன்று போய்விட்ட்து நிஜம் தான். சித்ராவின் அப்பா கையில் அப்போது பணமில்லை என்றும் பின்னால் தந்து விடுவதாகவும் கூறியதால், பத்திரிக்கை அடித்து சொந்த பந்தமெல்லாம் அழைப்பு வைத்து மருதமலையில் பப்பிம்மாவின் காதுகுத்து விழாவை நடத்தினான் சித்தார்த். பப்பிம்மாவுக்கு கழுத்தில் ஒருபவுனும் காதில் ஒருபவுனும் என்று சித்தார்த்தே செய்திருந்தான். அதைத்தான் இப்போது அவனுக்கு திடீரென அவன் அம்மா ஞாபகப்படுத்தினாள். அப்படி அவளுக்கு ஞாபகம் வர இரவில் டிவியில் பார்த்த நாடகமே காரணம் என்று சொல்லமுடியாது தான்.

  சித்ராவின் அப்பா ஆசிரியராக இருந்து பணிக்காலம் முடிந்து மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர். போதாமல் மளிகைக் கடை ஒன்றில் அவர் பணிக்கு சேர்ந்து கூட இப்போது இரண்டு வருடங்களாகி விட்டது. இவளது அண்ணன் இவளை விட ஒருவயது மூத்தவன். அவன் பணிக்கு சென்று கொண்டிருந்த கம்பெனி லாஸ் ஆகி கேட்டை சாத்தி விட்டதிலிருந்து அவன் அவனுக்கான செலவுகளுக்கு மட்டும் எங்காவது எடுபிடி வேலை செய்து கொண்டிருந்தான். இது போக இவள் அக்கா ஒருத்தி கணவனிடம் கோபித்துக் கொண்டு இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வந்து டேரா போட்டு வருடம் இரண்டு ஆகிவிட்டது. அவள் அப்படி ஏன் கோபித்துக் கொண்டு வந்தால் என்று இது வரை யாரிடமும் மூச்சு விடவில்லை. இந்த நிலையில் இவள் அப்பா பணத்திற்கு எங்குதான் போவார்? இது தான் சித்ராவின் இப்போதைய நிலை. இது சித்தார்த்துக்கும் அவன் அம்மாவிற்கும் தெரிந்த கதை தான்.

  “தோசை எல்லாம் அப்புறம் சுடலாம், இங்க வந்து நில்லுடிஎன்றதும் சித்ரா தன் கணவனின் அருகில் வந்து நின்றாள். அவளுக்கு தெரியும் இனி இங்கு என்ன நடக்குமென்று!

  “பப்பிம்மாவுக்கு மொட்டை போட்டு காது குத்தி இன்னியோட எத்தனை நாள் ஆச்சு?” என்றான் சித்தார்த்.

  “ஒரு வருசம் ஆயிடுச்சுங்க

  “ஆயிடுச்சுல்ல! உன் அப்பா என்ன சொன்னார்னு ஞாபகம் இருக்குதா?”

  “நீங்களே பண்ணுங்க, உண்டான தொகையை பின்னாடி தர்றேன்னு சொன்னாருங்

  “ஆசிரியரா இருந்தவரு தானே அவரு? சொன்ன வார்த்தையை காப்பாத்த வேண்டாமா? இல்ல பாதி தொகை தான் ஆச்சிங்க மாப்பிள்ளைன்னு கொண்டாந்து இந்த நேரம் குடுத்திருக்க வேண்டாமா? சொல்லுடி!”

  “அவரு வச்சிக்கிட்டு வஞ்சகம் பண்றவரு இல்லீங்க. அக்கா வீட்டுல வந்து உக்காந்துட்டா! அண்ணனுக்கும் வேலை இல்ல

  “நீயும் போயி உங்க அக்காவுக்கு துணையா உக்காந்துக்கறியா? இதுக்கு பதிலு உன்னோட வாயில இருந்து வரமாட்டீங்குது? பவுன் விலை என்னன்னு டிவில தெனமும் சொல்றான்ல! பாக்கறீல்ல! போயி அவுட் ஸ்பீக்கர் போட்டு உங்கொப்பாட்ட பணம் கேளுடி இப்ப!”

  “இப்ப வேண்டாமுங்க, மளிகை கடையில இருப்பாரு. மதியமா நான் பேசிடறேன்என்று சித்ரா சொன்னதும் அவள் கன்னத்தில் பளாரென ஒன்று விழுந்தது. அழுதபடியே ஹாலுக்கு வந்தவள் டேபிளில் இருந்த சித்தார்த்தின் அலைபேசியை எடுத்து அப்பாவுக்கு அழைத்தாள். அப்படியே சாப்பாட்டு அறைக்கு வந்தாள்.

  “ம்! சொல்லும்மா சித்ரா! பப்பிம்மா ஸ்கூலுக்கு கிளம்பியாச்சா? மாப்பிள்ளை நல்லா இருக்காரா? ஏம்மா அழறே? என்னாச்சு? கடையில நாலு பேரி நிக்காங்க, நான் பிறகு கூப்பிடவா?” என்றார்.

  “அப்பா! பப்பிம்மாவுக்கு மொட்டை போட்டு ஒரு வருஷம் ஆயிடுச்சுப்பா! நீங்க தந்துடறதா சொன்ன பணத்தை ஒரு வாரத்துல ஏற்பாடு பண்ணுங்கப்பாஅழுகையினூடே தகவலைச் சொல்லி முடித்தாள் சித்ரா.

  “வீட்டுல ரொம்பவும் சிரமம் சித்ரா. உன் அம்மாவை ஆஸ்பத்திரியில சேர்த்தி மூனு நாள் ஆச்சு. உன் அக்காதான் பக்கத்துல இருக்கா. உனக்கு தகவல் கூட சொல்லலை.” என்ற போது சித்தார்த்தின் அம்மா இவளிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கிக் கொண்டாள்.

  “சம்மந்தி! உங்க சொந்தக்கதை சோகக் கதை கேட்கவா உங்க பொண்ணு இப்ப போனு போட்டா? என் பையனுக்கு எதுல கொறைச்சல்? அப்படி என்ன கேட்கக் கூடாததை கேட்டுட்டான்? ஊர் உலகத்துல பேத்திக்கு எல்லாரும் செய்யுறது தானே? சொத்து அழிஞ்சாலும் சொன்ன சொல்லு அழியக்கூடாது. ஒரு வருஷம் போயிடுச்சுல்ல இப்ப. உங்க பெரிய பொண்ணு வீட்டுல வந்து உட்கார்ந்துட்ட மாதிரி இவளும் வந்து உங்க வீட்டுல உட்கார்ந்துட்டா உங்களுக்கு திருப்தி ஆயிடுமா? வாத்தியாரா இருந்து பிள்ளைகளுக்கு என்னத்த சொல்லிக் கொடுத்தீங்க போங்கஎன்றவள் போனை கட்செய்து டேபிளில் வைத்தாள்.

  “இது ஆவறதில்ல சித்தார்த்தா! என் தம்பி பிள்ளையை கட்டிக்கோன்னு சொன்னேன் அப்பவே! கேட்டியா நீயி? இந்த அழகு ரதியே தான் வேணூமுன்னு கட்டிக்கிட்டே! என்னமோ சாகுறப்ப நான் தலையில கட்டிக்கிட்டா போறேன் எல்லாத்தையும்? இவளுக்கு இது ஏன் புரிய மாட்டீங்குது?” என்றாள்.

  சித்தார்த்திற்கு உள்ளூர பயமாய் இருந்தது. ஒரு லட்ச ரூபாய் கேட்டு கட்டிய மனைவியை அடித்து அழ வைத்து விட்டு சாப்பிடாமல் கூட வந்து விட்டான் வங்கிக்கு. இப்போது தன் மகள் விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தாரே பெரியவர்! ஆனாம் சித்ரா ஒரு ஆசிரியை. அப்படி தவறான முடிவுக்கு போக மாட்டாள் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டான் சித்தார்த்.

  சித்ரா காலையிலேயே வீட்டில் பணப்பிரச்சனை என்று கிளம்பி விட்டதால் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு போன் செய்து விடுப்பு சொல்லி விட்டு வீட்டில் இருந்தாள். அவளுக்கு தலை வலியாய் இருந்தது. அதற்காகவும் மாமியார் ஒரு பாட்டம் கத்தி முடித்து விட்டு ஓய்ந்து படுத்து விட்டார்.

  அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதாமே! மருத்துவமனையில் வேறு சேர்த்தியிருப்பதாய் அப்பா சொன்னாரே! மனசு அடுத்து என்ன செய்வது என்று குழப்பத்தில் இருக்கவே எதிர் வீடு சென்றாள் சித்ரா. எதிர் வீட்டிலும் இரண்டு நாள் முன்பாக பெரும் சண்டை தான். என்ன சண்டை என்று இதுவரை கேட்காதது கூட இவளுக்கு வருத்தமாய் இருந்தது.

  உள்ளே மீனாள் டி.வி பார்த்தபடி ஷோபாவில் அமர்ந்திருந்தாள். “வாங்க டீச்சரம்மா! ஸ்கூலுக்கு இன்னிக்கு போகலையா? அரசாங்க விடுமுறை ஒன்னும் இன்னிக்கு இல்லையே! “ என்று கேட்டாள். மீனாளுக்கும் இவள் வயது தான். ஆனால் இவளை விடவும் நல்ல சிவப்பு. உள்ளே வந்த சித்ரா மீனாளின் கழுத்தைப் பார்த்து அதிர்ந்தாள். அது மஞ்சள் கயுறு இல்லாமல் இருந்தது. அதை கவனித்த மீனாள் அவளாகவே ஆரம்பித்தாள் விசயத்தை. டி.வியை ரிமோட்டால் அணைத்து விட்டாள்.

  “என்ன வெறும் கழுத்தா இருக்கேன்னு பாக்கீங்களா டீச்சரம்மா! தாலையை கழற்றி வீட்டுக்கார்ர் கையில குடுத்துட்டேன். இனிமேல் இந்தப்பக்கம் அந்த ஆள் வரமாட்டாப்ல! நான் லவ் பண்ணித்தான் அவரை கட்டிக்கிட்டேன். ஆனால் அவரு என்னை ஏமாத்திட்டது அப்புறம் தான் தெரிஞ்சுது. அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவி, கொழந்தைக இருக்காங்க. என்னை இந்த வீட்டுல தனியா குடித்தனம் வச்சாரு. வீட்டை என் பேருக்கு எழுதிட்டேன். எப்ப வந்தாலும் போதையில தான் வருவாரு. எப்ப வந்தாலும் அடி, உதை தான். சாமத்துல பைக்கை எடுத்துட்டு போயிடுவாரு. எனக்கு குழந்தையும் பிறக்கலை. இருந்திருந்தாலாச்சும் நல்லா இருந்திருக்கும். என்ன பிழைப்பு இது? வீட்டுல அப்பா அம்மாவை விட்டு வாழ ஓடி வந்தது அடியும், உதையும் வாங்கவான்னு நினைச்சு விரட்டி விட்டுட்டேன்.” என்றவளை சித்ரா அதிர்ச்சியாய் பார்த்தாள். எப்படி இவளால் சாதாரணமாக இதைச் சொல்ல முடிகிறது என்று குழம்பினாள் சித்ரா.

  அப்போது பார்த்து சித்ராவின் மாமியார் குரல் கேட்கவும், ‘என்னான்னு கேட்டுட்டு வந்திடறேன் மீனாஎன்று விரைவாய் கிளம்பினாள் சித்ரா.

  “அவ கிட்ட உனக்கென்ன பேச்சு? இல்லாத்தையும் பொல்லாத்தையும் உனக்கு அவ சொல்லிக் குடுத்துடுவா தெரியுமா? அவ வீட்டுக்காரனை அடிச்சு முடுக்கி விட்டுட்டா ரெண்டு நாள் முந்தி. போ உள்ளே!” என்று மாமியார் சொல்ல தன் அறைக்கு வந்து கட்டிலில் விழுந்தாள் சித்ரா. அவளுக்குள் பல யோசனைகள் உள்லுக்குள் ஓட ஆரம்பித்து விட்டது. இறுதியாக ஒரு முடிவுக்கு சித்ரா வந்தும் விட்டாள். அதாவது ப்ப்பிம்மா ஸ்கூல் விட்டு வந்ததும் மாலியில் அவளைக் கூட்டிக் கொண்டு அப்பாவிடம் போய் விடுவது தான் அது. மாதமானால் சித்ரா தன் சம்பளக்கவரை மாமியாரிடம் தான் கொடுப்பாள் சித்ரா. அதே போல் சித்தார்த்தும் அப்படித்தான். பணம் உள்ள பீரோ சாவி மாமியாரின் மடியில் தான் எப்போதும்.

  தொட்ட்தற்கெல்லாம் போய் மாமியாரிடம் நிற்க வேண்டும் இந்த வீட்டில். குடும்ப மானத்திற்கு பயந்து பயந்து இன்னும் எத்தனை நாள் இருப்பது பல்லைக் கடித்தபடி? பணம்! பணம்! எந்த நேரமும் கணவனும், மாமியாரும் பணம் பணம் என்றே கிடக்கிறார்கள். இதில் வாழ்க்கை எந்த இடத்தில் இருக்கிறது? பணம் தான் வாழ்க்கையா? அம்மாவை உடனே பார்த்தேயாக வேண்டுமென சித்ராவிற்கு இருந்தது. அப்பாவிடமும், அக்காவிடமும் தைரியமான பெண்ணாய்ப் போய் நிற்க வேண்டுமென இருந்தது. கொஞ்சமாய் இப்போது அழுகையும் வரும் போல் இருந்தது.

  பப்பிம்மாவிற்கு மாலையில் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்து குடிக்க வைத்தவள் அவளுக்கு வேறு உடை அணிவித்து மாமியாரிடம் கோவிலுக்கு போய் வருவதாய் சொல்லி விட்டு கிளம்பினாள். முடிவு எடுத்தபின் அதை உடனே செயல்படுத்துவது அவசியம் என்று தன்னை திடப்படுத்திக் கொண்டாள் சித்ரா. பப்பிம்மாவை பேருந்து நிறுத்தம் நோக்கி கூட்டிச் சென்றாள் சித்ரா. எப்போதும் இரவு ஏழு மணிக்கும் மேலாக வரும் சித்தார்த் அன்று தன் ஸ்கூட்டரில் ஐந்து மணிக்கே இவர்கள் எதிர்க்கே வந்தான். அவனைப் பார்த்த்தும் கொஞ்சம் குழம்பியவள் அப்படி ஏதாவது கேட்டால் கோவிலுக்கு செல்வதாக கூறிக் கொள்ளலாமென முடிவெடுத்தாள்.

  “ஹாய் பப்பிம்மா! ரெண்டு பேரும் எங்க கிளம்பிட்டீங்க?” என்றபடி சித்தார்த் இவர்கள் முன்பாக வண்டியை நிறுத்தினான். பப்பிம்மா தான் இவளுக்கு சிரமம் தராமல், ’கோவிலுக்கு! நீங்க தான் கோவில் பக்கமே வரமாட்டீங்களே டாடி!’ என்றாள்.

  “யார் சொன்னது? உன் மம்மியா? தப்புத் தப்பா தான் சொல்வாங்க! ஏறுங்க ஈஸ்வரன் கோவில் போகலாம்என்றான். இது அதிசயம் தான்! என்று நினைத்த சித்ராவும் வேறு வழியில்லாமல் பப்பிம்மாவோடு ஸ்கூட்டரில் அமர்ந்தாள். அவர்கள் பத்து நிமிடத்தில் ஈஸ்வரன் கோவிலில் இருந்தார்கள். சித்ராவுக்கு நிஜமா? என்றே இருந்தது. ஒருநாள் கூட கோவில் பக்கம் வராதவன் சித்தார்த். அவனே இன்று சாமி கும்பிட்டான். அவர்கள் பின் கோவில் மரத்தடியில் வந்து அமர்ந்தார்கள். அம்மாவாசை நாள் என்றால் கூட்டம் அதிகமிருக்கும். இன்று அப்படி எதுவும் இல்லாததால் கொஞ்சம் பேர் மட்டுமே கோவிலில் இருந்தார்கள்.

  “சாரி சித்ரா! காலையில உன்னை கைநீட்டி அடிச்சுட்டேன். உன் அப்பாவுக்கும் சிரமம் இருக்கும் தான். அதனால அவர் குடுக்கறப்ப குடுக்கட்டும் பணத்தை. நான் அம்மாட்டயும் சொல்லிடறேன். இனிமே அந்த விசயத்தை அம்மாவும் பேசாதபடி பாத்துக்கறேன். உன் அம்மாவை ஹாஸ்பிடல்ல சேர்த்தியிருக்கிறதா சொன்னாருல்ல! நாம நாளைக்கு போய் பார்த்துட்டு வருவோம்!” என்று சித்தார்த் பேசப் பேச முத்தமிடலாமா அவன் கன்னத்தில்? என்று கூட சித்ரா யோசித்து வெட்கப்பட்டாள். இருந்தும் வட்டியும் முதலுமாக இரவில் கொடுத்து விடலாம் என்ற தீர்மானத்தில் பப்பிம்மாவுக்கு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள் சித்ரா.


                     0000000000000000

Post Comment

கருத்துகள் இல்லை: