வெள்ளி, அக்டோபர் 17, 2014

கவிதைகள் என்றிருக்கட்டும்!

கவிதைகளாக இருக்கட்டும்


குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து
நடத்திக் கூட்டிச்சென்ற அந்த வாலிபனுக்கு
இரவிலும் கண்கள் கூர்மை மிக்கதாய்
இருந்ததென கவிஞன் எழுதினான்!
அரண்மனைக் கோட்டைக்கதவுகள் இரவு
கவிழும் நேரத்தில் விரிந்து கிடந்தன!
அந்தப்புறத்திற்குள் நுழைந்து விட்டால்
இந்த நேரத்தில் இளவரசி மணிமேகலையின்
அங்க லாவண்யங்களை வர்ணித்து வர்ணித்து
மடியில் சாய்த்துக் கொள்ளலாமென
அந்த வாலிபன் மனது கணக்கிட்டது! ஆனால்
இளவரசியோ வாலிபனின் வரவை எதிர்நோக்கி
அங்கு தாபத்தில் அமர்ந்திருக்கவில்லை!
மனதிற்கு பிடித்தமானவன் பெளர்ணமி இரவில்
அந்தப்புரத்தில் பாம்பு கடித்து சாவான்! என்று
அரண்மனை சோதிடர் சொன்ன நாளான
இன்று பற்றியான கவலையில் கண்ணீர் மல்க
தோழிகளை அனுப்பி விட்டு அமர்ந்திருந்தாள்.
கோட்டைக்காவலனான தன் மனதிற்கினியவனை
காரிய நிமித்தமாக துறவிகள் மடத்திற்கு அனுப்பி
இரண்டு நாட்களாகி விட்டது! அவனை இல்லத்தில்
பெளர்ணமி முடியும் வரை பாதுகாத்து வைக்க
ஒரு ஓலை ஒன்றையும் தலைமை குருவுக்கு
எழுதியிருந்தாள். இந்தத் திருட்டுப்பயல் அந்தப்புரத்தில்
நுழைய கவிதை பாடிக்கொண்டு மரமேறினான்!
இரவிலும் அவ்வாலிபனின் கண்கள் கூர்மையாக

இருந்ததென நானும் சொல்லி முடிக்கிறேன்!

000000000000000

இந்தப்புயலுக்கு ஒரு பெயர் வை!

கோவை நகரின் பேருந்து நிலையத்தில்
சாவுக்குத் தப்பிய கிழவன் ஒருவனின்
கதையை சின்ரெல்லாவுக்கு முழுமையாகச் சொல்ல
அவன் முதுகில் ஒரு கிரிக்கெட் பந்தைப்போல் புருடு
இருந்தது என்று துவங்கினான் எபி. -பலமுறை
கேட்டுப்புளித்த என் தாத்தனின் கதையிது
என்று சிணுங்கட்டம் போட்டாள் மகள்!
போத்தனூர் ரயில் நிலையத்தில் பற்கள்
இழந்த கிழவியொருத்தி எலந்தைப்பழம்
சப்பிய கதையை கூறுகிறேன் கேளடி
என்றதற்கும் சின்ரெல்லா சிணுங்கட்டமே போட்டாள்
பாட்டியின் கதையை எத்தனைமுறை கேட்பதென?
கோவை கண் மருத்துவமனை பேருந்து
நிழற்குடையில் கிடக்கும் குருட்டுத் தந்தையும்
வலது கால் சூப்பையுமான மகளும்
பெயர் தெரியா புயல் மழையில் சாரல் வீசும்
இவ்விரவில் தூங்காமல் விழித்திருப்பர்
மொசைக் கல்லின் குளிர்ச்சியில்!
பரலோகத்திலிருந்து பிதா இன்று
சின்ரெல்லாவுக்கான ஐஸ்கிரீம் கனவை
அனுப்பப்போவதில்லை தான்!
விட்டு விட்டு எரியும் மின்விளக்கின்
ஒளியை ஆறு கண்கள் இமைத்தவண்ணம்
பார்த்தபடி குறுக்கி அமர்ந்திருந்தன!
இரண்டு கண்களுக்கு சொந்தமானது ஒரு நாய்
என்று மழையில் குளித்துப்போன லாரியின்
விளக்கொளியில் சின்ரெல்லா பார்த்து
ப்பா! பூச்சி! என்றாள்!
விடியறதுக்கு எப்படியும் ஆறு மணி
நேரமிருக்கு! என்றான் எபி.

0000000000000000

நடத்தை சரியானவர்கள்


சொற்கள் சிலவற்றை அவள் எல்லோர் மீதும்
அடிக்கடி வீசுவதால் எல்லோரும் அவளை
நடத்தை சரியில்லாதவள் என்றார்கள்!
அவள் வீட்டில் புனுகுப்பூனைகள் இரண்டும்
குட்டிகளை ஈன்றிருப்பதாகவும் அவற்றில்
இரண்டை அவைகள் உயிருடனே சாப்பிட்டதாகவும்
அவள் வீடு போய் வந்தவர்கள் சிலர்
காலையில் டீக்கடையில் பேசினார்கள்! –தவிர
பொம்மி என்ற பெட்டை நாய் அவள் வீட்டு
வாசலில் காவலுக்கு இருப்பதாகவும் அதற்கு
குலைக்கத் தெம்பில்லாத வயதாகி விட்டதாகவும்
திண்ணையில் ஆதிமனிதன் போல ஒருவன்
கட்டிலில் கிடப்பதாகவும் அவனே அவள் கணவனாகவும்
இருக்கலாமென்று வறுக்கி கடித்தபடி பேசினார்கள்!
தலையில் பூச்சூடி குடை பிடித்து அவர்களை அவள்
கடந்து செல்கையில் பின்புறம் பார்த்து பெருமூச்சு
விட்டவர்கள் அவள் குழந்தை ஈன்று கொள்ளாததற்கு
காரணம் கர்ப்பப்பையில் ஓட்டை என்றார்கள்!
நடத்தை சரியில்லாதவளைப் பற்றி காலையில்
பேசினால் பொழுது விளங்கினாப்புல தான் என்று கூறி
பின் அவரவர் பாட்டுக்கு கிளம்பினார்கள்

 00000000000000

ஓவியங்கள் பேசும் கவிதை


நம் பிரபு வரைந்த ஓவியத்தை
நீங்கள் எக்காலத்திலும் ரசித்துப் பார்த்ததில்லையா?
நம் பிரபு அழகாக ஓவியம் வரைவான்
என்று நமக்கெல்லாம் தெரியும் தான்!
அவனது தூரிகை மயில் தோகையால் ஆனது
என்று அவன் சொல்லியிருக்கிறான்.
அவனது வர்ணங்களில் அதிகம் பயன்பாட்டில்
வருவது மஞ்சள் நிறம் தான்.
மலைகளும் ஓடைகளும் பறவைகளும் சூரியனும்
அவனுக்கு விருப்பமானவைகள்! ஒரு நாளில்
ஒன்பது முறையேனும் மலைகளின் இடையே
ஓடும் சிற்றாறுகளை காகிதத்தில் வரைந்து விடுவான்!
தண்ணீரும் மலையும் அவனுக்கு என்றுமே மஞ்சள்
வர்ணத்தில் தான் இருக்க வேண்டும்!
இருந்தும் நம் பிரபு வீட்டுப்பாடம் செய்து
வராமைக்காக இப்போது தன் வகுப்பின் முன்
முட்டிங்காலிட்டு வெய்யிலில் அமர்ந்திருக்கிறான்.
அவனது ஓவியத்திலிருந்து உயிர்த்தெழுந்த மயில்
அவனை கொத்திக் கொண்டு மலைப்பிரதேசம்
சென்றது பின்னர் பதிவாகவேயில்லை
எந்த ஓவியத்திலும்!

00000000000000000000
Post Comment

கருத்துகள் இல்லை: