ஞாயிறு, அக்டோபர் 19, 2014

ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி- நாவலில் ஒரு துளி! நண்பர் சிபிச்செல்வன் தன் மலைகள் பதிப்பகம்

      வழியாக வெளியிட்ட நாவலில்!


 ’மணி ஆறு ஆவப்போவுது தாயலிங்களுக்கு தூக்கத்தைப்பாரு! குடிகாரனுக கதவைத்தட்டீட்டே இருக்கானுகடா! எந்திரிச்சுப்போயி எழவை எடுங்க! இதொரு பொழப்பு நாயிப்பொழப்புபாண்டியன் குரல் தள்ளிக் கேட்டுக்கொண்டே போயிற்று!

  டாம் ஏற்கனவே எழுந்து உட்கார்ந்திருந்தான். முதுகை வளைத்து சடவு எடுத்தான். ஜெர்ரி தன் டவுசரைப் பார்த்தான். அது ஈரமாய் இருந்தது!. தகரக்கதவை டேய் பொடியானுகளா வாங்கடா சாமிகளா!” என்று வெளிப்புறத்தில் சிலர் தட்டிக் கொண்டிருந்தார்கள். உள்ளே நீக்கப்படவில்லை என்றால் கதவை இன்னும் சற்று நேரத்தில் உடைக்க முடிவெடுத்து விடுவார்கள் போலிருந்தது.

  டாம் தான் எழுந்து பின்கட்டுக்குச் சென்றான். டேபிள்களும் சேர்களும் ஒழுங்கின்றி எல்லாப்புறமும் நிறைந்திருந்தன. டேபிள்களில் தன்ணீர் பாக்கெட்டுகள் டம்ளர்கள் மிச்சமான தீம்பண்டங்கள் அப்படியப்படியே கிடந்தன. அவைகளைத் தாண்டி கம்பிகேட் கதவொன்று இருந்தது. அதில் சந்தைக்கடை பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. 
டாம் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து அதைத் திறந்து நீக்கி வெளியேறினான்.

  மறுபுறத்தில் ஒரு சின்ன தங்கும் அறையும், குளியல் அறையும், தண்ணீர்த் தொட்டி ஒன்றும் இருந்தது. அது இவர்கள் குளிக்க உடுத்த பயன்படுத்திக் கொள்ளும் அறை. இங்கு இவனைப்போல பலர் வந்து தங்கிவிட்டு பின் ஓடிப்போயிருக்கிறார்கள். டாம் இந்த சாக்னா கடைக்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்களாகி விட்டது. ஜெர்ரி இவனுக்கும் முன்பிருந்தே இருப்பதாகச் சொன்னான். இவர்களின் முதலாளிக்கு இதே போல் பத்து சாக்னா கடைகள் இருப்பதாக பாண்டியன் சொல்லியிருக்கிறார்.

  முதலாளிக்கு சொந்த ஊர் மேட்டுப்பாளையம் என்றும் அவருக்கு இரண்டு மனைவிகள் என்றும் கூடுதலாக தெரிந்திருந்தது. அவரை இந்த ஆறு மாதத்தில் ஆறுமுறை தான் இவன் பார்த்திருக்கிறான். ஒவ்வொருமுறை அவர் வரும்போதும் இவன் கையிலும் ஜெர்ரி கையிலும் அவர் நூறு ரூபாய்த் தாள் ஒன்றை கிளம்பிப் போகையில் கொடுத்துப் போவார். இவன் பல சாக்னா கடைகளில் வேலை பார்த்திருக்கிறான் என்றாலும் கண்ணில் காங்க முடியாத முதலாளி இவர் ஒருவர் தான்.

  ஏனைய கடைகளில் முதலாளி என்பவர் கண்கொத்திப் பாம்பு போல பார்த்தபடி கல்லாவின் முன் நின்றிருப்பார்கள். அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கின்றன. தொப்பிக்கார்களுக்கு மாமூல் தொகையை கைப்பற்ற வேண்டும், கடை வாடகையை சம்பாதிக்க வேண்டும், வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டும், கரண்ட் பில் எகிறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், சம்சாரம் கையில் லம்ப்ப நோட்டுகள் கொண்டு சென்று கொடுக்க வேண்டும், கூத்தியா கேட்ட தொகையை கொடுக்க வேண்டும், வட்டி குட்டி போடும் முன்பாக அந்தத் தொகையை கந்துவட்டிக்காரனிடம் கொடுத்து பைசல் செய்ய வேண்டும் என்று இப்படிப்பல!

  டாம் தண்ணீர் தொட்டி மீது இருந்த போசியை எடுத்து தண்ணீர் மோர்ந்து முகம் கழுவினான். தன் பச்சை வர்ண ப்ரஸ்சை எடுத்து பேஸ்ட் பிதுக்கி பல்லைத் துலக்கினான். சுவற்றுக்கும் வெளியே பெரியநாயக்கன்பாளையம் விடிந்து கொண்டிருந்தது. டாம் திரும்ப வந்த போது ஜெர்ரி வெளிக்கதவின் அருகில் சாக்குப்பையில் பாட்டில்களை வைத்து ஒவ்வொன்றாய் ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டிருந்தான். டாஸ்மார்க விற்பனை பத்துமணிக்குத்தான் துவங்குமென்பது குடிகாரர்கள் அல்லாதவர்களுக்கும் தெரியும். இப்போது விற்பனை ஆகும் சரக்கு ஒரே சரக்குதான். எழுபது ரூபாய் பாட்டில் ஒன்றுதான்.

  அது ஒரு முழு நோட்டுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. காலையில் நேரமே வரும் குடிகாரர்கள் ஒன்று இரவு அதிகம் அடித்து தலைபாரம் உள்ளவர்களும், கை நடுக்கம் உள்ளவர்களும் தான். போக காலைக்குடி பழகியவர்கள் அதை தேவாமிர்தம் என்பார்கள். அது ஒன்றுமில்லை. வெறும் வயிற்றில் ஆல்கஹால் போய் உடனே வேலையைத் துவங்கி விடுகிறது. தேவலோகத்தில் காலைக் குடிகாரர்கள் மிதப்பதாக நம்புகிறார்கள். ஒவ்வொரு ஊர் டாஸ்மார்க்கிலும் காலைக்குடிக்கு என்று ரெகுலர் பார்ட்டிகள் இருக்கிறார்கள்.

  அவர்களுக்கு காலை நேரம் மட்டுமே பழக்கமாகி இருக்கும். காலையில் குடி என்பது வழக்கமான விசயம் தான் என்றாலும் எழுபது ரூபாய் கொடுத்து இரவில் வாங்கிப்போக மாட்டார்கள். காலையில் நேரமே எழுந்து வாக்கிங் போவது போல் ஒரு நடை போட்டு கதவைத்தட்டி முப்பது ரூபாய் அதிகம் கொடுத்து குடித்தால் தான் அது குடி. தவிர அப்படி இரவிலேயே வாங்கிப்போய் வீட்டில் வைத்துக் கொண்டாலும் அவர்களால் தூங்க முடியாது.

  வச்சுட்டே குடிக்காம இருந்தால் நல்லாவா இருக்கும்? இதெல்லாம் ஒரு குடிகாரனுக்கு அழகா? என்று தங்களையே கேட்டு குழப்பிக் கொண்டு எப்படியும் இரவு பனிரெண்டு மணிக்கு உடைத்து குடித்துவிட்டு நிம்மதியாக படுத்து விடுவார்கள். அவர்களுக்கு அது தான் நிம்மதியான தூக்கத்தையும் தரும். இல்லையெனில் யாரேனும் திருட்டுப்பயல் இவன் வாங்கி வைத்திருந்த பாட்டிலை அப்படியே அன்னாந்து ஊற்றி விட்டு இவனை தட்டி எழுப்பி, ’ஊறுகா இருக்கா மாப்ளே!’ என்று கேட்பதாக கனவும் வேறு வந்து விடும்!

  “சீக்கிரம் குடுடா பையா! கையி காலெல்லாம் நடுங்குது!” என்று வாங்கிப்போனவர் நேரே பொட்டிக்கடைக்குத்தான் செல்வார். டம்ளர் வாங்க காசில்லாதவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் யாரிடமாவது, ’கசக்கி வீசீறாதீங்கஎன்று கேட்டு வாங்கி கழுவாமல் அப்படியே ஊற்றி தண்ணீர் கூட கலக்காமல் வாயிற்குள் கவிழ்த்துக் கொண்டு யாரேனும் புதிய தலைகள் பச்சைப்பட்டாணி கொறித்துக் கொண்டிருந்தால் போய் கை நீட்டி அவர்கள் தரும் நான்கு கடலைகளை வாயில் போட்டுக்கொண்டு பொழப்புக்கு கிளம்பி விடுவது வாடிக்கை தான். இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கைநடுக்கப் பார்ட்டிகள். டம்ளரில் சரக்கை ஊற்றி அதை கை நடுக்கத்துடனேயே இரண்டு கைகளாலும் எடுத்து வாயிற்கு கொண்டு சென்று கவிழ்த்துக் கொள்வதற்குள் பாதி டம்ளர் சரக்கை கீழே சிந்தியிருப்பார். சரக்கு உள்ளே சென்றதும் கைநடுக்கம் நின்று விடும். ஆல்கஹாலின் சிறப்பான வேலை அது. மிச்ச சரக்கை ஜம்மென்று ஊற்றி நடுக்கமில்லாமல் வாயில் கவிழ்த்துக் கொள்வார். நாயம் பேச ஆள் இல்லை என்றால் ஜெர்ரியோ, டாமோ மாட்டிக் கொள்வார்கள்.

  “உங்களுக்கு இருக்குதுடா இன்னிக்கி! நேரா நானு போலீஸ் ஸ்டேசன் போறேன். நியாயமுங்களா சார் இதுன்னு கேப்பேன். அவிங்க எதுன்னு என்னியக் கேப்பாங்க! நாஞ் சொல்லுவேன். எழுவது ரூவா கோட்டரை அநியாயத்துக்கு முப்பது ரூவா சேத்தி காத்தால ஒரு கொள்ளைக்கூட்டம் சுடுகாட்டுல இருக்குது போயி நாலு தட்டு தட்டு இழுத்தாந்து உள்ளார போடுங்க சார் அப்படிம்பேன். எந்தக் கோர்ட்டுல வேணாலும் சாட்சிக்கி நான் வர்றேன் சார்னு சொல்லுவேன். இன்னிக்கி உங்க ஆட்டம் குளோஸ்டா பசகளா!”

  “யோவ்! மருவாதியா எடத்தக் காலி பண்ணிட்டு ஓடீரு. ஏத்தீட்டீல்ல? இங்க என்ன வேலை உனக்கு? நாளைக்கி காத்தால வந்து கை நடுங்குதுடா பையான்னு நின்னீன்னா உனக்கு மட்டும் நூத்தம்பது ஞாவகம் வெச்சிக்க! ஏவாரத்தக் கெடுத்தீன்னா ஆவாது பாத்துக்க!” டாம் திமுறாய்ப் பேசும் யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டான். ஜெர்ரிக்கு அது இன்னமும் பழக்கம் ஆகவில்லை. இவன் யாரையாவது திட்டினால் வாயைப் பிளந்து கொண்டு பார்ப்பான். ஜெர்ரிக்கு இதுதான் முதல் என்பதால் சாக்னா கடை தொழிலோடு இன்னமும் ஒட்டாமல் இருந்தான்.

  இந்த காலை நேர வியாபாரமெல்லாம் ஒரு எட்டு மணிவரை தான். அப்படியும் கூட்டமாய் வந்து குவிந்து விடுவதும் கிடையாது. எல்லாருமே காலை நேர வியாதியஸ்தர்கள் மட்டுமே! எட்டு மணிக்கும் மேல் காலியான மருத்துவமனை போன்று ஒரு குஞ்சும் அங்கு இருக்காது. மீண்டும் ஒன்பதரைக்கும் மேலாக டாஸ்மார்க் சட்டர் உயர்த்தப்படுவதற்காக ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்கள் பத்துமணிக் குடிகாரர்கள்.

  எட்டு மணிக்கும் மேலாக டாமுக்கும் ஜெர்ரிக்கும் சாக்னா கடையினுள் கூட்டிப்பெருக்கி டேபிள்களை ஒழுக்கமாக அமர்த்தி வைக்கும் வேலை ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும். அப்போது பத்து ரூபாய் ஐம்பது ரூபாய்த் தாள்கள் அவர்களுக்கு குப்பை கூலங்களுக்குள் போனசாக்க் கிடைக்கும். சில சமயம் ஏ.டி.எம் கார்டுகளும், செல்போன்களும் கிடைத்திருக்கின்றன.

  ‘நாம இங்க இவனுக கலர் கலரா வாந்தி எடுத்ததை தண்ணி ஊத்தி சுத்தம் பண்டி பினாயில் ஊத்தீட்டு மூக்கப்புடிச்சுட்டு நிக்கிறோம். குடிகாரப்பயலுக்கு ஏ.டி.எம் கார்டு ஒரு கேடு!’ என்று தீக்குச்சியெடுத்து பற்ற வைத்து சிரிப்பான் டாம். செல்போன் என்றால் பதுக்கி விடுவார்கள். அவை பாண்டியனுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும். பாண்டியனுக்குத் தெரிந்தால் நரி தின்ற கோழி தான் அது. அவைகளை விற்று காசாக்கிக் கொள்ளும் வழிகளை டாம் கற்றிருந்தான்.

  அது ஜெர்ரிக்கும் தெரியாது. ஜெர்ரி கையில் சிக்கும் செல்போனையும் டாமிடமே கொடுத்து விடுவான். டாம் அவனுக்கு நூறோ இரநூறோ கொடுப்பான். டாம் அவைகளை தினமும் வந்து போகும் பழக்கமான குடிகாரர்களிடம் விற்று விடுகிறானோ என்று கவனித்தும் பார்த்திருக்கிறான் ஜெர்ரி. ஆனால் டாம் அப்படி செய்வதில்லை. அது எல்லா நாளும் சிறப்பான வழியல்ல என்பதை வேறு ஊரில் இருக்கையிலேயே கண்டு கொண்டான் டாம். அது இவன் சேலத்தில் இருந்த போது அப்படித்தான் நடந்து விட்டது.
  தினமும் வந்து போய்க் கொண்டிருந்த நல்ல குடிகாரர் தான் அவர். அவருக்கு கேமரா செட் ஒன்றைக் கொடுத்து ஆயிரம் ரூபாயை சம்பாதித்தான். ஒருவாரம் கழிந்த போது, ’வேறு செட் இருக்கா இவருக்கு வேணும் ஒன்னு!’ என்று எதிரே அமர்ந்திருந்த மற்றொரு நல்ல குடிகாரரைக் காட்டிப் பேசினார். அவருக்கும் ஆயிரம் ரூபாய்க்கு ஒன்று கொடுத்தான். அடுத்தவாரம் போதை அதிகமான போது அவர்கள் இருவரும், ’செல்போன் ஒன்னு குடுடா பன்னிப்பயலே!’ என்று ஆரம்பித்து கந்தரகோலமாகி விட்டது.

  வழக்கம் போல கடை முதலாளியால் அடித்துத் துரத்தப்பட்டான் டாம். இருந்தும் செல்போன்களால் வரும் வருமானத்தை இழக்க அவன் தயாரில்லை. அவனது தம்பிகள் இருவர் ஊரில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மா கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. இப்படியான தகவல்களை இரவு நடுச்சாமத்தில் படுக்கையில் கிடக்கையில் ஜெர்ரிக்கு சொல்லிக் கொண்டிருப்பான்.

  “டாக்ஸி ஓட்டி நேத்து மத்தியானம் ஓடின படத்துல ரஜினிகாந்த் அவனோட தம்பிகளை படிக்க வச்சான்ல அது மாதிரி தான் நான் சாக்னாகடையில வேலை செஞ்சு தம்பிகளை படிக்க வெக்கிறேன். இப்பிடியே இருந்துருவேன்னு நெனச்சுக்காத ஜெர்ரி. நானும் ஒருநாள் சொந்தமா சாக்னா கடை போட்டு முதலாளி சீட்டுல உக்காந்துருவேன். அப்ப நீ என் கடையை பாத்துக்கலாம்.” என்று இவன் சொல்கையில் ஜெர்ரி இரவில் புன்னகைப்பான். பாண்டியண்ணனிடம் தலையில் வாங்கும் கொட்டுக்காய்காய்கள் டாமிடம் வேலை செய்கையில் இருக்காது என்பதே அவன் புன்னகைக்குக் காரணம். டாம் இவன் நெருங்கிய தோழன் அல்லவா!

  டாம் சுடுகாட்டுக்கடையில் செல்போன்களை கொடுத்து பணமாக்க டாஸ்மார்க் சேல்ஸ்மேன் கணேசமூர்த்தியைப் பிடித்துக் கொண்டான். அவருக்கு எந்த கெட்ட வழக்கமும் இல்லாதது டாமுக்கு அதிசயமாயிருந்தது. கேட்பவர்களுக்கு பாட்டில்களை அதற்கான தொகையை வாங்கிக் கொண்டு கொடுப்பது தன் வேலை என்பார். ஆனால் அவர் நண்பர் வீரபாண்டி பிரிவில் செல்போன் கடை வைத்திருந்ததால் இவனிடம் செல்போன்களை வாங்கி அவனுக்கு கொடுத்து இடையில் சின்ன கமிசன் அடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருந்தார்.

  நல்ல குடிகாரர் என்றால் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செல்போனை தவறவிடுவது தான் சரியான வழக்கம் என்பார். சாராயத்தை மோந்து கூடப்பார்க்காத ஆளை அரசாங்கம் இப்படி கடையில் உட்கார்த்தி வைத்தால் அரசாங்கம் கல்லா கட்ட முடியாது எந்த நாளிலும்! என்பது இவன் பேச்சாக இருக்கும்.

  நேரம் எட்டுமணியை நெருங்கிக் கொண்டிருக்கையில் காலைக் குடிகாரர்களின் வரவு குறைந்து போயிற்று. சாக்கில் நான்கைந்து கோட்டர் பாட்டில்களே மிச்சம் கிடந்தன. சாக்கில் அறுபது பாட்டில்கள் வழக்கமாக இரவு டாஸ்மார்க் கடையிலிருந்து சாக்னா கடைக்கு எடுத்து வைப்பது வழக்கம். காலையில் குறைந்தது நாற்பது பாட்டில்கள் விற்பனையாகிவிடும். ஜெர்ரி சாக்கை தூக்கிக் கொண்டு போய் வழக்கமான இடத்தில் போட்டுவிட்டு முகம் கழுவச் சென்றான். டாம் சீமாற்றை எடுத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான் கடையை. உண்பதற்கான பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் விற்பனை இடம் சுற்றிலும் கம்பிவளைக்குள் இருந்தது. உள்ளே பாண்டியண்ணனின் குறட்டைச் சப்தம் கேட்டபடி இருந்தது.

  சாமிசெட்டிபாளையத்திலிருந்து கடைக்கு இருவர் வேலைக்காக வந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் அடுப்பு வேலையை பார்த்துக் கொள்வார். அவருக்கு இரவு பத்துமணி வரை அடுப்பில் வேலை இருந்து கொண்டே இருக்கும். கடையினுள் பெரிய ஸ்கிரீனில் ஏதாவது ஒரு சேனல் ஓடியபடியே இருக்கும். பத்து மணிக்கு ஆரம்பித்தால் மின்சாரம் இல்லாத சமயங்களில் மட்டும் ஸ்கிரீன் வெள்ளையாகவும் அமைதியாகவும் இருக்கும். குடிகாரர்கள் யாரும் திரையைக் கவனிப்பதே இல்லை என்றாலும் படம் காட்டுவது தன் கடமை என்பது போல பிம்பங்கள் அதில் நகர்ந்தவண்ணமே இருக்கும்.

  ஐபிஎல் கிரிக்கெட் சமயங்களில் இளைஞர்களின் வரவு அதிகம் இருக்கும். டேபிளுக்கு டேபிள் திரையைப் பார்த்தவண்ணமே அமர்ந்திருப்பார்கள். சென்னை அணி பேட்ஸ்மேன்களை ஓட்றா ஓட்றா ரெண்டு ரன்னு ஓட்றா! தாயிலி உட்டாண்டா சிக்ஸு’ ’அந்தப்பன்னாடைத் தலையன் பாரு யார்க்கர் பாலாவே போடறான்என்று கத்திக் கொண்டே பார்த்துக் கொண்டிருப்பார்கள். ரன் அடிக்காத பேட்ஸ்மேனை இவர்களே எழுந்து போய் பாட்டிலில் அடிக்க தலைப்படுவார்கள். தினமும் கூத்தாகத்தான் இருக்கும். டாமுக்கும் ஜெர்ரிக்கும் அது என்ன விளையாட்டு என்று ஆரம்பத்தில் தெரியாமல் இருந்தது. போகப்போக கொஞ்சம் புரிந்தது.

  பத்துமணி போல டாஸ்மார்க் ஷட்டர் உயர்த்தப்படும் போது சாக்னாகடை பளிச்சென சுத்தமாய் தரையெங்கும் ஈரமாய் இருக்கும். விற்பனை அறையில் ஒரு டஜன் ஊதுபத்தி புகைந்து கொண்டிருக்கும். இப்படி ஒரு சுத்தமான கோவில் இந்த ஏரியாவிலேயே இருக்காது என்பது போல காட்சி தரும். டாமும் ஜெர்ரியும் புத்தாடை அணிந்து நெற்றியில் விபூதியை பட்டையாய் அடித்திருப்பார்கள். அதை பாண்டியண்ணன் தான் இவர்களுக்கு பூசி விட்டிருப்பார். சுவற்றுக்கு அந்தப்புறமாக காத்தாட இருக்குமாறு பத்து டேபிள்கள் வெளியே அலங்கோலமாக கிடந்தனவெல்லாம் ஒழுக்கமாய் நூல் பிடித்தமாதிரி வரிசையாக இருக்கும். பகல்நேரத்தில் காத்தாட யாரும் வெய்யிலில் அங்கு போய் அமர மாட்டார்கள். மாலையானதும் கூட்டம் வரவு அதிகமாகும் சமயம் எல்லா இருக்கைகளும் குடிமக்களால் நிரம்பியிருக்கும்.


  டாம் சிவப்பு நிற சந்தைக்கடை கைபனியன் அணிந்திருந்தான். ஜெர்ரி மஞ்சள் வர்ணத்தில் கைபனியன் அணிந்திருந்தான். ‘டேய் பொடியா!’ என்று அழைப்பவர்கள் கூட டே செவப்பு பனியன்காரா! டே மஞ்சள் பனியன்காரா என்று போதையில் சரியாக அழைக்க அவர்கள் அவ்விதம் கலர் மாற்றி அணிந்திருந்தார்கள். அவர்கள் சுத்தமாய் இருந்த டேபிளை பனியன் துணியால் மேலும் தேய்த்து சுத்தமாக்கியபடி குடிகார கஸ்டமர்களை எதிர்நோக்கி நின்றிருந்தார்கள். டாஸ்மார்க் ஷட்டர் உயர்த்தப்படும் சப்தம் கேட்டது வெளியே!

000000000000

Post Comment

கருத்துகள் இல்லை: