திங்கள், அக்டோபர் 20, 2014

பேச்சு வழக்கில் கவிதை இரண்டு


புரிந்து கொள்ளல்!!

உனது ப்ரியத்துக்குரியவர்கள் என்கிற
பட்டியலில் இருந்து எப்போதோ
விலக்கப்பட்டவன் தான் நான்! –அதற்கு
உன் காரணங்கள் கூட சரியாக இருந்தன!
நிலையாய் ஒரு வேலை இல்லை!
நிலையாய் ஒரு மனதில்லை!
ஊனமுற்றோருக்கு இருக்கை தர மனதில்லை!
பிறந்த நாளுக்கு பரிசில்லை!
சாப்பிடுகிறாயா? என்ற கேள்வியே இல்லை!
உன் ப்ரியத்திற்குரிய பட்டியலில் இருந்து
இரண்டு வருட காலம் கழிந்து விலக்கப்பட்ட
தாடிக்காரன் ஒருவனை மதுவிடுதி ஒன்றின்
மூலை இருக்கையில் கண்டேன்! –உன்
புகைப்படம் ஒன்றை வைத்துக்கொண்டு
டேபிளை ஓங்கி தட்டியபடி
குடித்துக் கொண்டிருந்தான்! நிஜமாகவே
அவன் நிலை எனக்கு கவலையாய் இருந்தது!
நீ அவனை விலக்கி விட சொன்ன காரணங்கள்
பிறந்த நாளுக்கு மோதிரம் தருகிறாய், கழுத்தில்
செயின் போடுகிறாய்! பார்த்தவுடன் சாப்பிடலாமா?
சாப்பிடலாமா? என்கிறாய்! சாலையை கடக்கும்
கிழவனுக்கு உதவுகிறாய்! பிச்சைக்காரர்களுக்கு
எடுத்து நீட்டுகிறாய்! நீ என்ன செய்கிறாய்? என்பதை
சொல்வதேயில்லை! எப்போதும் சிரித்து மழுப்புகிறாய்!
உன்னை இப்போது தான் புரிந்து கொண்டேன்!


000000000


கெழவி பேச்சு!

அதா அந்தக் குழிமேடு தான்
உன் அப்பாரு குழிமேடு பாத்துக்கோ!
பக்கத்துல இருக்குதே இன்னொன்னு..
சப்பாத்திக்கள்ளியெல்லாம் காஞ்சி கெடக்குதே
அது உன்னோட பெரியப்பாரு குழிமேடு!
பெரியப்பாருக்கு ஒரு காலு கட்டக்காலுன்னு
உனக்கு தெரியமா? கட்டக்காலோடயே
பொதச்சாங்க கொண்டாந்து! –நீ மயரே
போச்சுன்னு படிச்சதீம் வேலை கெடச்சு
டவுனுப்பக்கம் போயிட்டே! ஆடிக்கொருக்கா
அம்மாவாசைக்கொருக்கா ஆத்தாளயும்
அப்பனையும் இந்த பொக்கவாய் கெழவியையும்
பாக்க வர்றே! ஆடுக அவத்திக்கி நின்னுச்சுகளே
சித்த பாரு சாமி! இந்த ஒரு கண்ணுல பொறை உழுந்துட்டு
தவுளிக்க வேண்டிதா இருக்குது! –அந்த
மாகாளியாத்தாவுக்கு நேந்து உட்ட கெடா தான்
வேலி தாண்டறதுலியே குறியா நிக்கும்! ஒடப்புடிச்சி
உடறா பழனான்னா அதுக்கொரு மொடை அவனுக்கு!
உச்சு வாரனிரு இப்ப! பேராண்டி கிட்ட ரெண்டு
பழமெ பேசலாம்னா உடறீங்களா ஒன்னா?
ஒன்னான சாமியே ஒதுங்கி கெடக்குதாம்
நடு ஊட்டு சாமி நானும் வர்றேன்னுதாம்!”
ஏஞ்சாமி! நானு புலுக்கதீசிட்டேன்னா நீ
டவுனுல இருந்து வந்து சேந்துடுவியா ஒரு
பொழுதுக்குள்ள? பழனான் ஒரு அவசரத்துக்கு
பொறந்தவஞ்சாமி! அவன் வந்து அஞ்சாறு புடுங்கறான்னு
நீ வந்து சேர்றதுக்குள்ள எரிச்சாலும் எரிச்சி போடுவான்!
சொல்லிப்போடு இப்பவே! உங்கோயா இருக்காளே உங்கோயா!
நின்னது நிக்க காரியமாவோனுமின்னு பழனான்
சூத்துலயே கோலேத்திட்டு நிப்பா! கொண்டாலம்பட்டில
இருந்து பழனான் கட்டீட்டு வந்த நாள்ல இருந்து
பாக்கேன்ல அவளையும் அவ பவுசையும்!
உங்கொப்பாருக்கு பக்கத்துலயே குழி தோண்டி
என்னை பெதைச்சுப்போடுடா! நீ மவராசனா இருப்ப!

00000000000

நோம்பி!

மாவிளக்கு எடுக்க வேணும் மாரியாயிக்கு!
மஞ்சள் சுடிதார் அணிய வேணும் காத்தாலிக்கி!
மதியமாய் பொங்க வெய்க்க பழையதில்
நல்ல சேலை போதும்! சாயந்திரமாய்
மாமன் கரகமெடுத்து ஆடும்போது
செவப்பு பட்டுச்சேலை கட்டி கூட்டத்தில்
முட்டி முன்னால நின்னு பாக்கோணும்!
வெளியூருல இருந்து பஞ்சு மில்லுக்கு
வந்த பசகள்ல ஒருத்தன் பார்வெ மட்டும்
பயங்கரமா இருக்குன்னு பாப்பா சொல்லுவா!
அந்தப் பையனோட கண்ணை நோண்டி
காக்காயிக்கு வீசிடுவேன்னு வெல்லு நீட்டி
மெரட்டோணும்! ஆமா அதான் சரி!
பாப்பா ஆருன்னா எம்பட கூடப் பொறந்து பொறப்பல்லோ!
பாப்பா இன்னிக்கி ஆடோட்டீட்டு காட்டுக்கு
போவ மாட்டா! ஐஸ்பொட்டிக்காரன் கிட்ட்தான்
எந்த நேரமும் நிப்பா! ஒருநா இல்லாட்டி
ஒருநா ஐஸ்பொட்டிக்காரன் தான் உனுக்கு
புருசனா வருவான்னு கேலி பேசினா
கண்ணை வேற கசக்குவா சும்மாநாச்சிக்கிம்!
இந்த வவுறு வேற!
மாரியாயி கோயில்ல கொடை ரேடியோல
மூர்த்தியண்ணன் குரலு கேக்குது!
மாவிளக்கு எடுத்துவர மம்மானியா கூப்புடுறாரு!
பொழுதோடத்திக்கி விசயகாந்து நடிச்ச
வானத்தப்போல திரையில காட்டுறாங்களாம்
உள்ளூரு கேப்டன் ரசிகரு பட்டாளம்!
இந்த வவுறு வேற யாத்தா
நேரங்காலம் தெரியாம வலிச்சுத் தொலைக்குதே!
நோம்பி நாளும் அதுவுமாய் வீட்டுக்கு
தூரமாச்சின்னு மூலையில ஒக்காந்து
சங்கட்டப்பட வேண்டிது தான்!
நெலமைய பாத்துட்டு மத்தாளச்சத்தம்
கேட்டு பாப்பா மாவிளக்கு தட்டை எடுத்துட்டா!
உங்கொக்கா எங்க கோயிலுக்கு வரலியா?”ன்னு
பந்தம் புடிச்சுட்டு வந்த உள்ளூரு வன்னான்
சத்தம் பட்டிக்கே கேக்குது! –இந்த வருசம்
மாமனையும் பாக்க முடியாது ஒரு
மசுரண்டியையும் பாக்க முடியாது யாத்தா!!!

00000000000000

எல்லோரும் ஒன்றையே திரும்பத்
திரும்பச் சொல்கிறார்கள்!
இந்த வயிறு மட்டும் இல்லின்னா
ஒரு தேவையும் இல்ல! என்று!

000000000000 
Post Comment

கருத்துகள் இல்லை: