வியாழன், அக்டோபர் 30, 2014

முகநூல் பதிவுகள் சில!


அப்புச்சி வழி- வாஞ்சையான மனிதர்களின் நெகிழ்வான வாழ்வியல்கள்.

எழுத்தால் வாசகனை வயிறு குலுங்க சிரிக்க வைக்க முடியுமானால், எழுத்தாளனுக்கு அதுவொரு வரம். வா.மு.கோமுவுக்கு அது அநாயசமாக வாய்த்திருக்கிறது.அப்புச்சிவழி புத்தகத்தை எடுத்து வாசிக்க உட்காருகையில், ஏதோ பாட்டன் முப்பாட்டன்களின் தொன்மங்களையும், வாழ்வியல்களையும் பிரித்து வேய்ந்து,தொகுத்திருப்பாரென, ஊகிக்கத்தான் என் சிற்றறிவுக்கு முடிந்தது. ஆனால் தன் தாய்வழித் தாத்தனுக்கு ஏற்பட்ட காம இதழ்களின் வாசிப்புக் காதலையும்,அதன் தொடர்ச்சியாக மூப்பெய்திய
அக்கிழவனுக்கு,கோமுக்குஞ்சு செய்து கொடுத்த நிறைவேற்றலையும் 
படிக்கும்போது எழுத்தாளரின் எதார்த்தம் நம் மனதை இடைமறித்து  எக்காளமிடுகிறது.

எல்லோருக்கும் அவரவர் சுற்றத்துடன் இணக்கமான உறவு உண்டு.அது
அவர்களது மனநிலைகளைப் பொறுத்தது.அதில் சில சுவாரசியங்களும்,
சில பிணக்குகளும்கூட நடந்தேறியிருக்கும்.ஆனால் நாமதில் பிணக்குகளையே நம் மூளைப்பெட்டியில் பூட்டிப் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். சுற்றங்கள் நம்மை அணுகும் நேரங்களில், அப்பிணக்குகளையே நினைவிலிருந்து, மெல்லத் திறந்து பார்க்கிறோம்.அவர்கள்மீது அம்புகளை தொடுக்கிறோம். எதிர்வரும் அம்புகளால் புண்பட்டு நோகிறோம்.சுற்றத்திற்கும் நமக்குமிருக்கும் ஏராள சுவாரசிய நிகழ்வுகள் பெரும்பாலும் நம்மில் நுழைவதே இல்லை.

சண்டை போட்ட பக்கத்துவீட்டு பங்காளியிடம், முற்பொழுதுகளில், கூடிப்பேசிக் களித்திருப்போம்.ஒரே தட்டில் உணவருந்தியிருப்போம். கம்மாய்க்கரடுகளில் விளையாடி மகிழ்ந்திருப்போம். அந்த ஹாய்ஸ்யங்களை, நம் மூளை அழுந்தப் பிடித்திருக்குமேயானால், சாலையில் எதிர்வரும் பங்காளியிடம், ஒரு சிறு புன்முறுவல் சமாதானம் விடுத்து,  உடனே பிணக்கைத் தீர்த்திருக்கலாம்.கோமு அத்தகைய காரியவாதி. சுற்றங்களை அவ்வளவு கொண்டாடியிருக்கிறார். பிணக்கற்ற ஓர் இனிய பயணத்தில் அவர்  பயணப் படுகிறாரென அவதானிக்கிறேன்.

அவரது எள்ளல் பொதிந்த எழுத்து, இந்நூலுக்கு ஆகப்பெரும் பலம். தான்சார்ந்த உறவுகள் மற்றும் நண்பர்களிடம் காண்கின்ற, வெள்ளந்தித் தனங்களை முடிந்தவரை, உண்மையாய் பதிவு செய்திருக்கிறார். சில புனைவுகளும் கண்களுக்கு புலப்படுகின்றன.அது சுகர்கோட்டட் சுவாரஸியத்துக்காக தேவைப்பட்டிருக்கலாம். அது கோமு அவர்களுக்கே வெளிச்சம்.

புத்தகத்தை எடுத்து, முதல் அத்தியாயத்தைப் புரட்டுகையில்,கோமுவின்
மனதை நீங்கள் ஓரளவு கற்று விடலாம்.புத்தகத்திலுள்ள ஒவ்வொரு அத்தியாயமும், ஒரு சிறுகதைக்குப் பஞ்சமில்லாத கருப்பொருளைத்  தன்னகத்தே கொண்டுள்ளது.நான் இந்தப் புத்தகத்திலுள்ள இழவுவீடு செல்லும் நண்பன் மற்றும் அட்டக்கத்தி அரவிந்த்சாமியையெல்லாம்  படிக்கும்போது,என்னையறியாமல் குபீரென சிரித்தேன். நல்லவேளை, நான் புத்தகம்  படிக்கையில், வீட்டில் யாருமில்லை. இருந்திருந்தால்,நான் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு,சிரித்த சிரிப்புக்கு என் குடும்பம்என்னை கோடங்கியிடம் அழைத்துச் சென்றிருக்கும்.

புத்தகத்தில் அச்சுமை வாசனையோடு,டாஸ்மாக் பாரின் முடை வாசனையும் அதிகளவில் நம் மூக்கைத் துளைப்பது சிறு நெருடல். ஓர் ஆகச்சிறந்த காமெடிப் படம் பார்த்த திருப்தி, இப்புத்தகத்தின்  வாயிலாக, அனைவருக்கும் நிச்சயம் கிடைக்கும.

-சபரிமயில்வாகனன்.
  7708754280.

தூங்கப்போகையில் அம்முவிற்கு
நான் சொல்லும் கதைகள் எல்லாம்
அப்பாரு சொன்ன பழங்கதைகள் அல்ல!
அம்முவிற்கு நான் சொல்லும் கதைகள்
அனைத்திலும் அம்முவே நாயகி!
உசிதப்பட்டணம் அப்படின்னு ஒரு ஊரு
என்று ஆரம்பித்தால் அம்மு ஊரின் பெயரை
சிறுவலூர் என்றே மாற்றிச் சொல்ல சொல்வாள்.
சிறுவலூரில் அம்மு என்றொரு குட்டி பாப்பா
இருந்துச்சாம்! அது எல்லா நாளும் தயிர்
சோறே தான் சாப்பிடுமாம்! அதுக்கு பல்லு
விளக்க, குளிக்க, பவுடர் பூச, பொட்டு வைக்க,
ஜடை போட எப்பவுமே ஒரு ஆளு வேணுமாம்!
-போப்பா நீ வேற கதை சொல்லு!
சிறுவலூர்ங்கற ஊர்ல ரெண்டு அம்மு இருந்தாங்களாம்!
ஒரு அம்மு உம்முனா மூஞ்சியாம்! தூங்கிட்டியா?

000000000

திருட்டு உறவுக்கு ஏங்கி நிற்கும் இந்த
கவிதையை நீங்கள் வாசித்து
வயிற்றுப்போக்கில் சிரமப்பட வேண்டாம்!
அவன் பெயரை கண்ணன் என்று இப்போதைக்கு
வைத்துக் கொள்வோம். –கண்ணன்
சீதாலட்சுமி வீட்டின் மதில் சுவறோரம்
அர்த்த ஜாமத்தில் குந்த வைத்திருந்தான்.
சீதாலட்சுமி கையில் பிடித்தாலே வழுக்கி நழுவும்
உடல் வாகு பெற்றவளாக இப்போதைக்கு வர்ணிப்போம்!
அவள் கணவனுக்கு ஆஸ்துமா தொந்தரவு
இருந்ததாக வைத்துக் கொண்டால் சரிப்படும்!
மருந்துகளின் வீரியம் கூட அவனை அன்று
தூங்க விடாமல் சதா லொக்கிக் கொண்டிருந்தான்.
சிதாலட்சுமிக்கு காமம் கடலளவு இருந்தது அன்று பார்த்து!
கண்ணனை அன்பொழுக அழைத்தவள் அவள் தான்!
இதற்கும் முன்பாக பலமுறை அவர்கள்
திருட்டு உறவு குஜாலாக கழிந்திருக்கிறது! –ஊர்
முழுக்கவும் இவர்கள் தொடர்பைப் பற்றி பேசி
வாய் ஓய்ந்து இப்போது புதிதாய் வேறு விசயம்
பேசிக் கொண்டிருக்கிறார்கள்! நேரம் செல்லச் செல்ல
சீதாலட்சுமி வருவதற்கான அறிகுறி கொஞ்சமும்
இல்லாததால் கண்ணன் தன்னையே
நொந்து கொண்டு எழுந்து கிழக்கு வீதியில்
நடை போட்டான் ஒன்றிரண்டு நாய்கள் குரைக்க!
ஒரு வழியாய் கணவன் அமைதியான தருணத்தில்
சீதாலட்சுமி கதவு நீக்கி வெளிவந்து சந்தைப் பார்த்து
மெலிதாக சீட்டி அடித்தாள்! அவளின் மணி தான்
சாப்பாடு கிட்டுமோ என்று வாலை ஆட்டியவண்ணம்
ஓடோடி வந்தது! ’சித்தே குக்கியிருக்க மாட்டானா?’
காறித்துப்பி விட்டு சீதாலட்சுமி கதவை தாழிட்டு விட்டு
படுக்கப் போனாள்! –அடுத்த நாள் கண்ணன் கூப்பிட்டான்.
நேற்றைய வயித்தெரிச்சலில் சீதாலட்சுமி
இன்னிக்கி வேலை இருக்குஎன்றாள்!
சீதலட்சுமி ஆசை மிகுதியில் அழைக்கையில்
கண்ணன் ஜோலி இருக்கு! என்றான்! இந்த
இரவு விளையாட்டை இருவருமே ஒரு
கட்டத்தில் முடித்துக் கொண்டார்கள்! – ஊர்
அடுத்த விசயத்தை பேசிக்கொண்டிருந்தது!
இந்தக்கண்ணன் பயல் லட்சுமியப் புடுச்சுட்டானாம்!
அந்த சீதா இப்ப சும்மா தான் காட்டை
வெதைக்காம போட்டிருக்கா”!

0000000000

திருவிழா காலத்துக்கென ஆத்தாவுக்கு
வளர்க்கப்படும் கிடாய்கள் ஊட்டச்சத்து
ஊட்டப்பட்டு வளர்க்கப்படுகின்றன
நமக்காக கொஞ்சலுடன்!

0000000

-காளான் தேடிப்போனா விரியன் பாம்பு கிடக்கு பூட்டுக்குள்ளன்னு பக்கத்து வீட்டு பெரியப்பன் சொல்லுதுப்பா!

-அவன் சரியான புளுகன்டா! அந்தக்காலத்துலயே அஞ்சுதலை நாகனை கருப்பராயன் கோயல்ல பார்த்ததா ஊரையே நம்ப வச்சவன்!

-எங்கண்ணுக்கு ஏம்ப்பா மசக்காளான் மட்டும் சிக்குது? உனக்கென்னடான்னா பைக்குல போவப் போவ பார்த்து கண்டு புடிச்சு வண்டிய நிறுத்திடறே?

-கண்ணை நெத்திக்கி கொண்டாந்து தேடணும்! புரட்டாசி போயிடுச்சு! அதனால காளான் சரியா பொடைக்கலை! பாப்பம் வெயில் வரட்டும்!

-சரி நாலு கேளானை வச்சு கொழம்பு பண்ண முடியாதா?

-எப்பிடியும் இந்த வாரத்துல வச்சிடுவோம்!

-கொழம்பு எப்படிப்பா செய்யுறது?

-எப்பவும் போலத்தான் கறி ஆக்க மொளகாட்டி செய்யுறாப்ல தான். ஆனா கடைசில கொதி வந்து இறக்குறப்ப உங்கோயா கையை கத்தில அறுத்து ரத்தம் ஊத்துவா கொழம்புக்குள்ள!

-போப்பா! கொழம்பும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்!

0000000000000

இந்தக் கவிதைக்குள் ரேஷ்மா தான்
முண்டு கட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும்!
கடவுளின் பிரார்த்தனையும் அது தான்.
ஆனால் ஷகீலா தான் குட்டேட்டன்களின்
கரகோசங்களுக்கிடையில் சிற்றோடை
நோக்கி வந்தாள்! கையோடு கொண்டு வந்திருந்த
மஞ்சள் துள் பொடியை ஆற்றில் நனைய விட்டு
அக்குள்களில் பூசிக்கொண்டு திரையை வெறித்தாள்!
குட்டேட்டன்களின் போதாமையை நிறைவு
செய்ய இயக்குனர் உண்ணி யங் பாய் ஒருவனை
ஷகீலா அமர்ந்திருந்த ஸ்பாட்டுக்கு அனுப்பி
அவளுக்கு முதுகு தேய்த்து விட அனுமதித்தார்.
இந்த தியேட்டர்கார சண்டாளப்பாவிகள் அடுத்தகணமே
சண்டைக்காட்சிக்கு தாவி விட்டார்கள் என்று
குட்டேட்டன்கள் கொந்தளித்து பெஞ்சுகளை தூக்கி
வீசி எறிந்து விட்டு கிளம்பிய காலம் மலையேறி
வைகுந்தம் போய் விட்டது சகோதரா!

00000000000


Post Comment

கருத்துகள் இல்லை: