வெள்ளி, அக்டோபர் 31, 2014

பின்நவீன டயர் கதைபின்நவீன டயர் கதை

தனராஜ் சிறுவயதில் இருந்தே இப்படியான பழக்கம் தனக்கிருப்பதாக தனக்கெதிரே யாரும் இல்லாதிருந்த ஒரு மாலை நேரத்தில் யாருக்கோ சொல்லிக் கொண்டிருந்தான். அதாவது பெற்றோர்கள் திருவிழா காலங்களில் பொம்மைகள் வாங்கிப் பரிசளிக்க முன்வந்த போது தனராஜ் நான்கு சக்கரங்கள் அமைந்த லாரி மற்றும் கார் இவைகளை அதிகம் விரும்பினான். ஊருக்கு வரும் உறவினர்களிடமும் அடிக்கடி எனக்கு கார் பொம்மை வாங்கிட்டு வந்தீங்களா அங்க்கிள்? என்றும், எனக்கு கடைசிக்கி ஒரு பைக்காச்சும் வாங்கிட்டு வந்திங்களா அத்தை? என்றும் கேட்கத் துவங்கினான்.

பொம்மைகளின் மீது விருப்பமாய் இருக்கும் குழந்தைகள் அவற்றை திருவிழாக்காலங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெரிந்தே வைத்திருக்கின்றனர். தனராஜுக்கு திருவிழா என்பது அவசியமே இல்லை. எல்லா நாளும் அவனுக்கு புதிய வாகனங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருந்தன. அவனது இல்லத்திற்கு காதுகுத்து அழைப்பிற்கோ அல்லது திருமண அழைப்பு கொண்டு வருபவர்கள் தனராஜுக்காக வரும் வழியில் பேன்ஸி கடையில் சாவி கொடுத்தால் ஓடும் காரோ அல்லது பேட்டரியில் இயங்கும் காரோ வாங்கி வந்து பத்திரிக்கையோடு காரையும் கொடுத்துச் சென்றார்கள்.
இப்படியாக தனராஜ் புகழ் சொந்த பந்தங்கள் அனைத்திற்கும் விரிந்திருந்தது.

தனராஜின் தந்தை முருகவேல் சிறுவனான தனராஜுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுத்து சோர்ந்து போனார். ஆகவே அவன் சோர்ந்து போன தந்தையை விட்டு விட்டு தாய் மீனாட்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

தனராஜ் தான் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு வாகனத்தையும் ரொம்ப பதனமாக வைத்திருப்பதில்லை என்பது தான் அவனது பெற்றோர்களின் ஒரே கவலை. வாங்கிய மறு நிமிடமே காரின் டயர்கள் நான்கையும் கழற்றி பிய்த்தெடுத்து விடுவான். பின் காரை அட்டாறியிலோ, அல்லது குப்பையிலோ வீசி விடுவான். அவனுக்கு தேவையெல்லாம் பொம்மைகளின் டயர்கள் மட்டும் தான். அவைகளே அவனின் விருப்பமாக இருந்தன. அப்படி அவன் தனது பத்தாவது வயதில் வீட்டில் பத்துக்கு பத்து அளவுள்ள இரண்டு அறைகளில் டயர்களை சேமித்திருந்தான்.

பத்து வயதை தாண்டும் சமயத்தில் அவனுக்கு பரிசாக வாகனங்கள் கொடுப்போரின் எண்ணிக்கை குறைந்து போனது. அவனது தந்தை ஒருநாள் அறைக்குள் கிடக்கும் டயர்களை ஒன்றாக காட்டுப்புறத்திற்கு கொண்டு சென்று தீ மூட்டி எரித்து விடுவதாக எச்சரித்துக் கொண்டிருந்தார். அதை தனராஜ் கண்டுகொள்ளவில்லை.

தனராஜ் தன் சேகரிப்பை நிறுத்திக் கொள்ளும் எண்ணத்திலும் இல்லை! அடுத்ததாக அவன் திருவிழா நாட்களில் பொம்மைக் கடைக்கார்களின் அருகில் அமர்ந்து கார்களை பறக்க வைக்க தன்னால் முடியுமென சபதம் போட்டுக் கொண்டிருந்தான். திரும்பத் திரும்ப நம்பிக்கையாய் சொல்லும் தனராஜை நம்பி ‘செய்து காட்டு’ என்று கடைக்காரர் சொன்ன மறு நிமிடமே பத்து கார்களின் டயர்களை கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொண்டான் தனராஜ். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டவருக்கு ‘பறக்கையில் டயர் தேவையில்லை’ என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடித்தவனை கடைக்காரரால் கடையை விட்டு விட்டு துரத்தி ஓடி வந்து பிடிக்க முடியவில்லை.

தனராஜ் தன் இருபதாவது வயதில் நேசனல் ஹைவேசில் சிறந்த லாரி டயர் திருடனாக மாறியிருந்தான். இரவு நேரங்களில் ஓரம் பாரமாக நின்றிருக்கும் லாரிகளின் டயர்களை ஜாக்கி வைத்து ஏற்றி டயரை உருவிக் கொள்வான். இப்போது அவன் தந்தை அவனுக்காக விட்டுச் சென்ற ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அவன் எதுவும் பயிரிடுவதில்லை. மூன்று ஏக்கர் நிலப்பரப்பு முழுதும் லாரி டயர்களில் இருந்து இரு சக்கர வாகனங்களின் டயர்களை விதைத்திருந்தான்.

கணவனே அறியா வண்ணம் டயர் விற்பனையில் அவன் மனைவி செண்பகம் சிறந்து விளங்கினாள். நாலாவது ஏக்கரா காடு சீக்கிரம் நிரம்ப வேண்டுமே! ஏன் தாமதமாகிறது? என்ற குழப்பத்தில் நேசனல் ஹைவேசில் காலில் சக்கரம் மாட்டிய தனராஜ் சுற்றிக் கொண்டிருந்தான்.

00000000000000


Post Comment

கருத்துகள் இல்லை: