ஞாயிறு, அக்டோபர் 19, 2014

ஐசாலக்கடி கவிதைகள்

ஐசாலக்கடி

 கவிதைகள் சில


இன்னமும் கண்விழிக்காமல் பசியோடு
தாயின் முலை தேடி சாலையோரத்தில்
தவிக்கும் இந்த பெட்டை நாய்க்குட்டிகள்
மூன்றையும் அரவணைக்க

எந்த தேவதைகளும் கைநீட்டப் போவதில்லை!

00000

ஒருத்தியின் பாசத்திற்குரியவனாகவும்
ஒருத்தியின் கோபத்திற்குரியவனாகவும்
ஒருத்தியின் காதலுக்குரியவனாகவும்
ஒருத்தியின் தேவைகளுக்குரியவனாகவும்
ஒருத்தியின் போற்றுதலுக்குரியவனாகவும்
ஒருத்தியின் புணர்ச்சிக்குரியவனாகவும்
ஒருத்தியின் கொலைமுயற்சிக்குரியவனாகவும்
வாழ்வதென்பது எல்லோருக்குமான
பொதுவில் இருக்கும் ஒன்றுதான் சோதரா!

0000000000

இப்பெருநகர வீதியில் கையிலிருக்கும்
வலப்பையுடன் நான் நகர்ந்து கொண்டிருக்கையில்
சூரியன் என்னை சுட்டெரிக்கும் நோக்கமுடன்
பின் தொடர்ந்து கொண்டிருந்தான்!000000000

உலகின் அதீத நேசம் கொண்ட யுவதி
ஒருவள் என் நிலத்தில் சோளம் பயிரிட
வந்த போது நான் இருமிக்கொண்டிருந்தேன்!

00000000000

சிறுவர் மலர் வாசித்துக் கொண்டிருந்த
.கமலி அதன் பக்கங்களில் இருந்து
உயிருடன் புறப்பட்ட பறவைகளை
என்னவென அழைப்பதெனத் தெரியாமல்
ரேசன் அரிசியை வாசலில் வீசி காத்திருந்தாள்!

000000000000

நெடுஞ்சாலை ஒன்றில் முப்பது டைனோசர்கள்
கடந்து செல்லும் வரை வாகனங்கள்
ட்ராபிக் ஜாமில் ஒரு நாள் முழுக்க
காத்திருக்காத பொய்யான கவிதை இது!
எஜமானின் கல்லறை முன்பாக
தனக்கு உணவு கிட்டாத கதையைச் சொல்ல
எழுந்து வருவார் மூன்றாம் நாளில்
என்று நம்பி அமர்ந்திருந்த நாயின்
கவிதையும் அதற்கு ஒப்பானது தான்!

0000000000000000

பிணம் விழுந்த வீட்டில் எல்லோரும்
செத்துப்போன பிணத்தின் வாழ்நாள்
பெருமைகளைச் சொல்லி அழுது கொண்டிருக்க
மைத்திரேயி காட்பரீஸ் வேணுமென
பிடிவாதம் பிடிக்கிறாளே என்று அவள்
அம்மா அழுதாள் ஒரு பாட்டம்!

000000000000

பெண்களோடு சண்டையிட்டு
கருத்தரிக்க வைப்பது சுலபம்!
மனம் பிறந்தவனின் முக்கியக் குறிப்பு
எந்தப் பாடப்புத்தகத்திலும் இல்லை!
சில காதல் கவிதை தொகுப்புகளில்
கண்டதாக அடிக்கோலேச்சி பிட்டர் பர்க்லி
தன் புத்தகத்தில் நிறுவுகிறார் அடிக்குறிப்புகளுடன்!

0000000000

தன் ஐந்தாவது காதலைப்பற்றியும்
அவளின் அழகு பற்றியும் சாக்னா கடை
ஒன்றில் நண்பனுக்கு ஊற்றிக் கொடுத்து
சொல்லிக் கொண்டிருந்தான் !
சற்று நேரத்திலெல்லாம் கடவுளாகிவிட்ட
நண்பன்சீக்கிரமே அவள் வாந்தியெடுக்கக் கடவது!”
என்று சொல்லி மலையேறினான்!
(குறிப்பு : பிரேத பரிசோதனை அறைகளுக்குள் செல்பவர்கள்
சுத்தி மற்றும் வெட்டுக்கத்தியுடன் செல்வார்கள்)

0000000000

ஒரு கொலையைச் செய்வதொன்றும்
பிரமாதமான காரியமில்லை சோதரா!
துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த
பரத்-சுசீலாவோ, கணேஷ்-வசந்தோ,
விவேக்-ரூபலாவோ நரேன் வைஜெயந்தியோ முகர்ந்து
கண்டறியாதபடி தடயங்களை அழித்து விட்டு
புறப்படுவதில் இருக்கிறது பிரமாதமான காரியம்!00000000000

அவன் பூர்வீக நிலம் பறந்து பட்டதாம்!
கொள்ளுத்தாத்தன் சாராயத்துக்காக
பலவற்றை எழுதிக் கொடுத்தானாம்!
செத்துப்போன அப்பாரு இடுப்பாட்டத்துக்கு
ஆட்டக்காரிகளுக்கு எழுதிக் கொடுத்தானாம்!
மிச்சமிருந்த துளியை மகளை கட்டிக் கொடுக்க
அப்பன் கொடுத்தானாம்! பழம்பெருமை பேசி
அவன் கோவில் கட்டில் பீடிக்கு வக்கின்றி
கிடக்கும் கதை வேண்டுமானால் பழசாக
இருக்கலாம் சோதரா ஆனால் கவிதை புதிது!

0000000000000

சொந்த வீடின்றி
சோத்துக்கு வழியின்றி
தெருவில் திரிவோரை
லட்சுமி, சரஸ்வதி, பார்வதி
என்று ஏனையோர்
பார்த்தபடிதான் இருக்கிறார்கள்
மற்ற ஏனையோரின்
வேண்டுதலின் பேரில்!

0000000000000

உண்மையான பழத்தை கண்டறிந்து
சாப்பிடுவதிலிருந்து ஒரு சொம்பு தண்ணீரில்
கால் சேற்றைக் கழுவி மிச்சமும் செம்பில்
தண்ணீர் இருக்க வேணுமென்ற போட்டிவரை
ஆக மொத்தம் மூன்று போட்டிகளில்
கிழவனார் வேடமிட்ட எம்.ஜி.ராமச்சந்திரன்
கலந்து வெற்றி பெற்று சரோஜாதேவியை
அடையும் காட்சிவரை பார்த்து விட்டு
கிளம்பியவனுக்கு மாலையில் அவன் மனைவி
சொன்னாள்அதுக்கும் மேல ஒரு பாட்டு பாடி
ரெண்டு பேரும் ஆடினாங்க! அப்புறமேட்டு தான்
கத்திச் சண்டையும் வந்துச்சு!’

0000000000000

பச்சை வாழைமரம் பாவம்
பற்றிக் கொண்டு திகு திகுவென எரிந்தது!
பத்தினி யாராச்சுக்கும் அவங்க
வீட்டுல பிரச்சனை போல! அதான்
நிறுபிக்க புருசன்கிட்ட சொல்லியிருப்பா!
யாரோ சொல்ல கூட்டம் கலைந்தது!

00000000000000

ஆதி மனிதனொருவன் ஈரோடு
வந்திருந்தபோது அவனுக்கு தீப்பெட்டியைத்
தெரிந்திருக்கவில்லை! சாக்கடையில்
பிடித்துக் கொன்ற பெருச்சாளியைச் சுட
சூரம்பட்டி நால்ரோட்டில்
வெங்கச்சாங்கல் இரண்டை
உரசிக் கொண்டிருந்தான்!

000000000000

அல்சேசனிலிருந்து எல்லா வகை
சாதி நாய்களுக்கும் கால்தூக்கி ஒன்றுக்கு
போக ஒரு குறியும் கழிவுகளை
வெளியேற்ற ஒரு துவாரமும்
எவனோ வைத்துத் தான் அனுப்புகிறான்!

0000000000Post Comment

கருத்துகள் இல்லை: