வெள்ளி, அக்டோபர் 17, 2014

ஐந்து ஒரு பக்க கதைகள் -வெளிவந்தவை


செல்போன் காதல்-1

அலைபேசியில் தவறான அழைப்பு வழியாக எனக்கொரு காதலி அமைந்தாள் என்று நான் சொன்னால் கொடுத்த வச்ச மகராசன் என்று தான் சொல்வீர்கள். தினமும் என் செல்போனில் சுவேதாவின் குரல் இனிமையை கேட்கவில்லை என்றால் எனக்கு பைத்தியம் பிடித்து விடும்.

என் இதயம் எந்த நேரமும் இந்த ஒரு மாத காலமாக சுவேதா சுவேதா என்று தான் துடிக்கிறது. நான் டூவீலர் வொர்க்‌ஷாப்பில் நான்கு வருடங்களாக மெக்கானிக்காக இருக்கிறேன். சுவேதாவிடமும் உண்மையைத் தான் சொன்னேன்.

சுவேதாவும் இதே நகரில் ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள். நேரில் பார்க்கணும் என்று பல நாட்களாக கேட்டு இன்றுதான் மூன்று மணிக்கு வரச்சொல்லி கடை இருக்கும் வீதியையும் சொல்லி விட்டாள். தூரம் அதிகமில்லை தான். இதோ ட்ரெய்லர் பார்த்து வருகிறேன் என்று சொல்லி யமாஹாவை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன்.

வெறும் கையோடா செல்வது? என்று மல்லிகை ஐந்து முழத்தை வாங்கிக் கொண்டு சென்றவன் அந்த வீதியில் சென்று ஜெராக்ஸ் கடை முன்பாக இருந்த மளிகைக் கடைமுன் யமாஹாவை நிறுத்தி விட்டு ஸ்டைலாய் சாய்ந்து நின்று சுவேதாவை செல்லத்தை பார்த்தேன். ஹா! சும்மா சொல்லக்கூடாது! வானுலக தேவதை!

கொண்டு வந்திருந்த நண்பனின் செல்போனிலிருந்து சுவேதாவைக் கூப்பிட்டேன். புதிய எண்ணாக உள்ளதே என்று எடுத்தவள் என் குரல் கேட்டதும், மணி மூனு ஆச்சு! இன்னும் என்ன பண்றீங்க? ஓனர் சாப்பிடப் போனவரு நாலு மணிக்குள்ள வந்துடுவாரு! என்னது நண்பன் வந்துட்டானா? நான் பெருசா? இல உங்களுக்கு நண்பன் பெருசா? சீக்கிரம் வாங்க. எதிர்க்கே மளிகை கடை முன்னாடி பைக்குல சாய்ஞ்சுட்டு ஒரு கொரங்கு என்னை வெறிக்க பார்த்துட்டு இருக்குது. ஐய்யோடா! அது பண்ற பந்தா இருக்கே.. சகிக்கலை! அதும் கையில பூ வேற, அவனும் அவன் மூஞ்சியும்! எந்த பேக்குக்கு பூ குடுக்க நிக்கானோ! நீங்க சீக்கிரம் வாங்க ரவி!

செல்போன் காதல் -2

காதல் விசயத்தில் குணா, ரவி, சேகர் என்று என் வயதில் எல்லோருமே மாட்டிக் கொண்டவர்கள் தானாம். காதல் யாரையும் தன் வலையில் விழச்செய்யாமல் விடாது என்று தான் நேற்று மூர்த்தியும் சொன்னான்.

கடந்த ஒரு மாதத்தில் ராம் நகர் இரண்டாவது வீதிக்குள் நான்கைந்து முறை நான் நுழைந்து விட்டேன். யாரும் என்னை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, யார் நீ? என்றும், உனக்கு என்ன வேணும்? என்றும் கேட்கவில்லை இதுவரை.

சின்னு நீ எங்க இந்தப்பக்கம்? என்று முகம் தெரிந்தவர்கள் யாராவது பார்த்துக் கேட்டு விடுவார்களோ என்ற பயம் தான் ஒவ்வொரு முறையும். இதோ சாந்தியின் எதிர் வீடு எப்போதும் போல் பூட்டிக்கிடக்கவே  அதன் திண்ணையில் அமர்ந்து நோட்டமிட்டபடி இருந்தேன். இவள் என்ன எந்த நேரமும் டிவியே கதியாக கிடக்கிறாளா? வாயேண்டி வெளியே!

பால்காரன் டிவிஎஸ்ஸில் வந்தவன் சாந்தி வீட்டின் முன்பாக நின்று பொவ்வாத் அடித்தான். சாந்தி பால் செம்பை தூக்கிக் கொண்டு குதிரை மாதிரி கதவு நீக்கி ஓடி வந்து பால் வாங்கினாள். என்னை ஓரக்கண்ணால் வேறு பார்த்தவள் அவள் விழிகளிலேயே பேசினாள். நான் அவளை நோக்கி சாலையைக் கடந்து சென்றேன்.

பால்காரன் பக்கத்து வீடு சென்று நின்று பொவ்வாத் அடித்தான். நான் புது செல்போனை சாந்தியிடம் கொடுத்தேன்.

குமார் உன்கிட்ட குடுக்கச் சொன்னான். மத்த விசயமெல்லாம் போன்ல சொல்வானாம். எட்டு மணிக்கு டாண்ணு கூப்புடுவான்இதயம் துடி துடிக்க நான் கிளம்பி விட்டேன்.

செல்போன் காதல் -3

சுந்தருக்கு மனசே சரியில்லாமல் இருந்தது. அறை நண்பன் கார்த்தி கூட, ஏண்டா பொண்டாட்டியை முழுங்கினவன் போல உக்காந்து இருக்கே? என்று கேட்டு விட்டான். அவசரப்புத்தியால் தன் காதலை கெடுத்துக் கொண்டேனே, என்று தான் வருத்தம் மேலிட அமர்ந்திருந்தான்.

கார்த்தி, சாப்பிடப் போலாமா மெஸ்சுக்கு? என்று கேட்டதும் பசி இல்லை என்று சொல்ல வாய் வந்தும் கொஞ்சம் நேரம் போகட்டும் என்று சொன்னான்.

இன்று மதியக்காட்சிக்கு தேவயானியும் சுந்தரும் செண்ட்ரல் தியேட்டருக்குச் சென்றிருந்தார்கள். தேவயானி அரசாங்கப் பள்ளியில் பனிரெண்டாவதில் அறிவியல் குரூப் படிக்கிறாள். தியேட்டரில் சுந்தர் உரிமையாய் அவள் தோளில் கை போட்டு படம் பார்க்க முயற்சித்தான். கோபத்தில் இவன் கன்னத்தில் ஒன்று கொடுத்து விட்டு கிளம்பியவள் பின்னால் இவனும் வெளியேறி விட்டான்.

இரவு உனக்கு போன் போடுவேன். உன்னோட பரிசுப்பொருள் அத்தனையையும் வாங்கிக்கொ திருப்பி! போன்லயே இடம் சொல்வேன். மோசமான பையன் நீஎன்று சொல்லிப் போய் விட்டாள். இப்போது சுந்தரின் செல்போன் அலறியது. சுந்தர் அதை வெறுமனே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

உன்னோட ஆள் தான் கூப்பிடுது. எடுத்துப் பேசுடா! தினமும் குசுகுசுன்னு மணிக்கணக்கா பேசுவே?” என்ற கார்த்திக்கு, இனிமேல் அவளிடம் பேசலை என்றும், படிக்கிற பெண் நன்றாக படிக்கட்டுமென்றும், துன்பம் பண்ணக்கூடதென்றும் பேசினவனை ஆச்சரியமாய் பார்த்தான் கார்த்தி.

இவன் போன் எடுக்கவில்லை என்றானதும் குறுஞ்செய்திகள் வரிசையாக வர ஆரம்பித்தது! என்ன என்று ஒன்றை நீக்கிப் பார்த்தான். “சாரிடா செல்லம்’’ என்றிருக்க, சாப்பிடப் போலாம்டா! என்று எழுந்தான் சுந்தர்.

செலக்‌ஷன்

விஷ்ணுவிற்கு தன் நெற்றியில் இருந்த தலும்பை பார்க்க பார்க்க ஆத்திரமாய் இருந்தது. உதவி இயக்குனர்கள் அனைவரும் இவனது நடிப்பை பாராட்டினார்கள். ஆனால் படத்தின் இயக்குனரோ மற்ற ஐந்து நபர்களிடம் சொன்னது போலவே, தகவல் அனுப்புறேன்பா! என்று இவனிடமும் சொல்லி அனுப்பி வைத்து விட்டார். ச்சே! எல்லாம் இந்த தலும்பால் வந்தது. இது மட்டும் இல்லை என்றால் இந்தப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கலாம்.

நடிப்பு என்பது விஷ்ணுவிற்கு உயிர் போன்றது. இதுவரை ஏறாத படிகளே இல்லை என்று சொல்லலாம். இன்று தான் கூடி வந்தது போல் இருந்தது. எவ்வளவு செலவானாலும் சரி.. ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து விடுவது என்று நகரில் பிரபலமான மருத்துவமனையில் டாக்டர் முன் அமர்ந்திருந்தான் விஷ்ணு. ஒரு லட்சத்திலிருந்து ஒன்னரை லட்சம் வரை செலவாகும் என்றார் டாக்டர். கையிருப்பு அதற்கும் மேலாக இருக்கவே உடனடியாக அட்மிட் ஆகிவிட்டான் விஷ்ணு.

நகரின் பிரபலமான ஹோட்டல் ஒன்றின் அறையில் டைரக்டர் தண்டம் தன் தயாரிப்பாளருடனும் உதவி இயக்குனர்களுடனும் அமர்ந்திருந்தார். தயாரிப்பாளர் விஷ்ணுவின் நடிப்பாற்றலை வியந்து பாராட்டிப் பேச தயக்கமாய் அமர்ந்திருந்தார். விஷ்ணுவை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்குமென்று மனதில் நினைத்திருந்தார்.

அந்தப்பையன் விஷ்ணுவிடம் நடிப்பாற்றல் ரொம்ப இருக்கு சார். ஆனால் நெற்றியில இருக்கிற தலும்பு தான் அவன் முகத்தை கோரமா காட்டுதுஎன்றார் உதவி இயக்குனர் சிவா.

இல்லப்பா, நம்ம கதைக்கு அவன் தான் பொருத்தமா இருப்பான். இது வில்லன் ரோல் கலந்த ஹீரோ வேஷம். அந்த தலும்பு தான் அவனுக்கு ப்ளஸ் பாய்ண்ட். பையனுக்கு காலையில செலக்சனான செய்தியை சொல்லிடுங்கஎன்றார் தண்டம்.

அவள் தானே பார்த்தாகணும்!

சுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை, காலும் தான். எல்லாமே அவள் தானே பார்த்தாகணும்! இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாய் தகவல் சொல்லி விடுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை தான்.

வீட்டை பூட்டிக் கொண்டு தன் ஸ்கூட்டியை கிளப்பினாள். மனது படபடப்பாய் இருந்தது. மாப்பிள்ளை பெங்களூரில் சாப்ட்வே இஞ்சினியர். சரியான் ஜோடிப் பொருத்தம் வேறு. நகரின் பிரபலமான பியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் அவசரமாய் உள்ளே நுழைந்தாள்.

அரைமணி நேரத்தில் முகத்தை பளபளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள். எல்லாமே அவள் தானே பார்த்தாகணும். இன்னும் அரைமணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள். நீலவர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள் சுப்புலட்சுமி. மல்லிகை மணம் வீசும் செண்ட்டை துளி அளவு பீய்ச்சிக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள். உதட்டில் லைட்டாக லிப்ஸ்டிக் பூசியபோது முன்வாசல் காலிங் பெல் அடித்தது.

சுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களை வரவேற்று ஹாலில் ஷோபாவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்சில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள். மாப்பிள்ளையின் அப்பா, ‘பெண்ணை வரச்சொல்லுங்க! பார்த்துட்டு நாங்க அவசரமா ஹாஸ்பிடல் வரை போகணும். நண்பர் ஒருவருக்கு சின்ன ஏக்ஸிடெண்ட்டாம்என்றார்.

பேத்தி காலேஜ் போயிருக்கா! இப்ப வர்ற நேரம் தான்என்றாள் சுப்புலட்சுமி.


0000000000

Post Comment

கருத்துகள் இல்லை: