வியாழன், அக்டோபர் 09, 2014

முகநூல் கூட்டம்


பகலில் பேருந்து நிறுத்தத்தில் படுத்துக் கிடந்தவனுக்கு
போதை என்று சொல்லி சிலர் கடந்தார்கள்!
எதோ சீக்கு போல என்று சொல்லி சிலர்!
படுத்துக் கிடந்தவன் சிலநேரம் உருண்டு உயிர்
இருப்பதாக காட்டிக் கொண்டான். –அவனைச்
சுற்றிலும் சில பல ஈக்கள் மொய்த்துப் பறந்தன!
வாயிலிருந்து அவ்வப்போது கொஞ்சம்
சிவந்த நிறத்தில் கக்கினான்! –பார்ப்பதற்கு
எப்படியும் பொழுதுவரை தாங்காது என்று தான்
தெரிந்தது! –இப்படிக் கிடப்பதற்கு அவன் பாவம் செய்தவனாய்
இருக்கலாமென சிலர் சொல்லிக் கடந்தார்கள்!
என் பேருந்து வர நான் கிளம்பினேன் என்று
இந்த கவிதையை முடிக்கலாம்! எதற்காக இது
சொல்லப்பட்டது என்பது உங்களுக்கு
புரிபடாமலிருக்கலாம்! இருந்தும் வாழ்வை
ஒவ்வொருவரும் அவரவர் பாணியில்
வாழ்ந்து கடக்க வேண்டித்தான் உள்ளது! –போக
தலையெழுத்தை மாற்றி அமைப்பதெல்லாம்
சினிமா நாயகர்களால் தான் ஒரு பாடலில் முடிகிறது!
பேருந்து நிறுத்தத்தில் தன்னை தொந்தரவுக்கு
உட்படுத்திய ஈக்களைப் பிடித்து மென்ற
பைத்தியகாரனைப் பற்றியான கவிதையை அப்புறம்

உனக்கு மட்டும் தனியே சொல்வேன் குணசீலா!

0000000000000000

-டம்ளரும் தண்ணி பாக்கெட்டும் பச்சை பட்டாணியும் குடுங்க!

-காசு?

-தருவம்ல! குடிக்கத்தான வந்திருக்கோம்! ஓடியா போயிடறேன்?

-அது சரி! கோட்டர் பாட்டலை காசு குடுத்து தான வாங்கி வந்திருக்கே? குடிச்சுட்டு வந்து தர்றேன்னு சொல்லிட்டு வாங்கிட்டு வரலியே! காச குடு வாங்கிட்டு போ! மேட்டர் முடிஞ்சுதுல்லோ!

-சரி எவ்ளோ?

-அப்ப இன்னிக்கி தான் நீ குடிக்கவே வந்திருக்கியா? 15 ரூவா! நெறையப்பேரு குடிச்சுட்டு கிளம்புறப்ப போதையில அப்பலையாவே குடுத்தாச்சுன்னு சொல்லிட்டு போயிடறாங்க! சிலபேரு கூட்டமா அதக்குடு இதக்குடுன்னு சனம் நிக்கிறப்ப சன்னமா கிளம்பிடறாங்க! அதான். 5 ரூவா சில்லறை குடு! இல்லின்னா பத்து ரூவாய்க்கி சுண்டல் வாங்கிக்க! 

00000000000000000

-ஏம்மா வெறிக்க கேமராவையே தின்னுடறாப்ல பாத்துட்டு ஆடறே? என்ன ஆட்டம் இது? மத்த டிவில பாக்கிறதில்லியா? இடுப்பை எட்டால பெருக்கி மூனால வகுத்து ஆடறாங்க பிள்ளைக! உண்மையா இல்லியா?

-ஆமாங்க மாஸ்டர்!

-நீ ஒன்னால பெருக்கி ஒன்னால கூட வகுத்து ஆடலியே! யாரு ஒனக்கு கோச்சர்?

-ஜேம்ஸ் ஹார்லி சேஸ் மாஸ்டர்!

-இங்க வந்திருக்காரா? எதோ நேத்து இடுப்ப ஆட்டி கட்டாயிடுச்சுனு சொன்னாங்க! தாதையின்னு வீட்டுல குதிக்கிற மாதிரி குதிக்கிறியேம்மா! அடுத்த ரவுண்டுலயாச்சிம் நல்ல சோகப்பாட்டா செலக்சன் பண்ணி வந்து ஆடணும்! இப்ப உன்னட மார்க்…. சொய்ங்!

-தேங்ஸ் மாஸ்டர்!

00000000000000000000

-இல்ல இத நான் கொல்ல முடியாது! பார்க்கவே அசிங்கமா இருக்குது!
-இங்க பாரு! நாம அமேசான் நதிக்கரை ஓரம் இருக்கோம். உயிர் வாழ்றதுக்கு இந்த தவக்காய நாம் பிடிச்சு சுட்டு சாப்பிடணும்! ரொம்ப நேம்பா உன் கத்தியால குத்தணும்!

-என் கணவர் ரொம்ப பெரிய கல்ட்டி ராணுவத்துல! அவரு கல்ட்டாத பொருள்களே இல்ல தெரியுமா! அவரோடு காடுகல்ல சுத்தி நானு கண்ட கருமத்தையும் திங்க ஆரம்பிச்சுட்டேன்

(என்ன எழவ எடுக்க அங்க போயி தவக்காய, எட்டுக்கா பூச்சிய, நண்டை பாம்பை திங்கோணும்டி?)

00000000000000000

புரியலன்னா பிரச்சனையில்லீங்! இன்னிக்கி நோம்பி நாளுதான்!
நாவிதனின் சவரக் கண்ணாடிகள் ஊரெங்கிலும் சிதறிக் கிடந்த பொழுதில். கழுதைகளின் வரிசை ஒன்று தேரைகளை நசுக்கிச் சென்று கொண்டிருந்தன. தவளைகள் அழும் மாலையில் உள்ளூர் வன்னானின் பொதிமூட்டையை வன்னாத்திப்பூச்சிகள் கவ்வி இழுத்தோடின தம் புற்றுக்கு. பொதிகளில் திரிந்த சீலைப்பேன்கள் ஒவ்வா இடமென தம் இருப்பிடம் தேடி கண்னாடித் துணுக்குகளில் தம் முகம் கண்டு மருண்டு மாண்டன. செவ்வரளிப்பூவை கவ்வும் நோக்கமாய் வரிப்புலியொன்று பம்மித் திரிந்தது சுடுகாட்டு கொட்டகையில். ஊரெங்கிலும் கிடக்கும் கண்ணாடித்துணுக்குகளை கூட்டிப் பெருக்க முத்தாயிக் கிழவி துடைப்பத்தோடு அலைந்தாள் ஒற்றைப் பனையோரம்!

பூனைகளின் அழுகுரல் ஓசை ஊரெங்கும் சிலருக்கு பேதியை கிளப்பிற்று! கழுதைகளின் வரிசை கிராமத்தின் கடைசிக் குடிசையோடு முடிந்து போகையில் வானம் இடறி மழைக்கான வேளை துவங்கிற்று! இருட்டுப் பொந்தினுள்ளிருந்து எட்டிப்பார்த்த பெருக்கான் ஒன்று கண்ணாடிப் பிசிறொன்றைக் கவ்வி இழுத்தோடிப் போனது பொந்தினுள். மழை கொட்டப் போகிறதென எறும்புகள் வரிசையொன்று ஊருக்குள் நுழைந்த சமயம் நாவிதன் போதையில் மல்லாக்க கிடந்தான் கருப்பசாமி கோவிலருகில். கோவிலினுள் சிம்னி விளக்கொளி யார் பற்ற வைத்ததென தெரியாமல் எரிந்து கொண்டிருந்தது. இன்னும் கொடாப்புகளுக்குள் நுழையாத கோழிகள் தங்கள் சிறகுகளை உதிர்த்து விளையாடிக் கொண்டிருந்தன. ஒற்றைக்கண் காகமொன்று வேப்பை உச்சியில் அமர்ந்து கரைந்தது!

00000000000000000

அரங்கு நிறைந்த நேற்றைய அமர்வில் விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்வு காணப்பட்ட விசயங்களின் தொகுப்பு இது!

1. இனிமேட்டு டாஸ்மார்க் பக்கம் பெண்களோ ஆண்களோ உள்ளாடைகள் இன்றி போதையில் கிடக்க கூடாது. மீறினால் அவர்கள் நசுக்கப்படுவார்கள்.

2. சாப்புட்டு வந்துட்டேன்! சாப்புட்டு வந்துட்டேன்! என்று சும்ம்மாங்காட்டியும் டாஸ்மார்க் பக்கம் யாரும் வருதல் கூடாது!

3. போதையில் இருக்கையில் அவருதான் பேசுங்கஎன்று போனை நீட்டுதல் கூடாது. கொஞ்சம் ஏமார்ந்திருந்தால் சுப்ரபாரதி மணியனுக்கு ல்வ் யூ சொல்லியிருப்பேன். பெண்குரலாக ஆண்குரல் கேட்டதே!

4. மங்கலத்து தேவதைகளிடம் பேசும் முறையில் ஒன்றாகஅக்கா சொல்லுங்க்க்கா! போங்க்கா! எத்தனாவது படிச்சிருக்கீங்கக்கா!” என்று அக்கா போட்டு பேசுமும் முறை இன்றிலிருந்து அமுலுக்கு வருகிறது.

5. அரங்குக்கு வராத நண்பர்களின் கருத்துக்களை போன் மூலமாகவே பேசி தீர்ப்பது அல்லது கடுப்பேத்துவது! காடைக்குஞ்சு கறி சாப்டுட்டே ஓட்டீட்டு இருக்கு என்று!

6. அமர்வில் ஒரு பாடகர் நிச்சயம் இனிமேட்டு வேண்டும்! (பக்கத்து டேபிள்கள் காலியாவதில்லை)

7. நாங்குடிக்கறதில்லீங்! என்று புன்னகையோடு அரங்கைற்கு வருபவர்களை கபாலென சாய்த்து ஒரு கட்டிங் ஊற்றி விடுவது! (இது ரொம்ப முக்கியம் போல் இருக்கிறது! எப்பிடி இவரு மட்டும் தெளிவா இருக்காரு? என்ற சந்தேகம் கூட்டத்தாருக்கே வந்து விடுகிறது)

8. கூலிங் பீர் கிடைக்காத ஏரியாவில் யாரும் நடமாடவே அனுமதிக்க கூடாது! அதற்கு ஆறிய கஞ்சித் தண்ணியை குடித்து விடலாம்! வருத்தம் மேலோங்க திட்டங்களை கூர் தீட்ட முடிவதில்லை!

9. ஒரு கட்டு காக்கி வில்ஸ் என்னாச்சுமழை ஏன் ஏமாத்துச்சு? போன்ற கேள்விகளோடு அமர்வு முடிந்ததா?

10. விவாதிக்கப்பட்ட விசயங்கள் ஏன் அத்தனை கனமாக இருந்தது?

000000000000000000

சகுந்தலா வந்தாள் நாவல் பற்றி அக்டோபர் 2014 அந்திமழை மாத இதழில்!

உருக்கும் வாழ்க்கை!

எழுத்தாளர் வா.மு.கோமு மனதில் பட்டதை பாசாங்கின்றி அப்படியே எழுத்தில் வடித்து விடக்கூடியவர். அவரது புதிய நாவலான சகுந்தலா வந்தாள் அவரது பாணியிலேயே சுறுசுறு வென்று வந்திருக்கிறது. கல்பனா, கமலக்கண்ணன், ஜான், சகுந்தலா என்கிற நான்கே நான்கு பாத்திரப்படைப்புகளால் நகரும் இந்நாவல் ஆரம்பத்தில் எங்கு நோக்கிச் செல்லும் கதை இது என்ற பெரிய கேள்வியை ஏற்படுத்துகிறது. கமலக்கண்ணன் கதைக்குள் வந்தபிறகு இக்கதைக்குள் காதலையும் காமத்தையும் தாண்டிய உணர்வுகள் இடம்பெறுகின்றன.
சகுந்தலாவுக்கு உதவி செய்யப்போய் இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் வேலையையும் இழந்து நடுத்தெருவில் எந்த குற்றமுமே செய்யாத கமலக்கண்ணன் நிற்கிறான். அப்போது கூட செருப்பால் தான் தன்னை அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது அவனுக்கு.

சபலங்களும் ஆசாபாசங்களும் அச்சமும், சுயரக்கமும் கொண்ட சாதாரண மனிதன் அவன். சகுந்தலாவின் பாத்திரமோ பெரும் அச்சத்தை வாசிப்பவர்கள் மனதில் ஏற்படுத்துவது. பெற் இரு குழந்தைகளையும் எந்த சலனமும் இன்றி விற்றுவிடும் கோரம். அடிப்படையில் மனிதகுலத்தின் எல்லா செயல்பாடுகளுக்கும் பின்னர் சுயநலம் இருப்பதாகச் சொல்வார்கள்.

சகுந்தலாவுக்கு அது எக்கச்சக்கமாய் தூக்கி நிற்கிறது. அவள் மீது பாலியல் ஆசை இருப்பினும் கமலக்கண்ணன் அதை வெளிக்காட்ட முடியாமல் சமூகச் கட்டுப்பாடுகளால் கட்டப்பட்ட ஒரு புழுவாக நிற்கிறான். கல்பனாவின் கதையோ இன்னும் மோசம். தன்னைக் காதலித்த ஜான் முன்னால் பாலியல் தொழிலாளியாக நின்று அவனை சுகப்படுத்தி, பின்னர் தான் ஒருபோதும் அவனைக் காதலித்தது இல்லை என விளக்கி விலகுகிறாள்.

வா.மு.கோமுவின் எழுத்தில் கிளுகிளுப்பூட்டும் பாலியல் வர்ணனைகள் வந்து விழுவது சாதாரணம். ஆனால் அவற்றின் பின்னால் இருப்பது அபலையான பெண்களின் இரக்கத்துக்குரிய வாழ்க்கை.

0000000000000000000000

Post Comment

கருத்துகள் இல்லை: