திங்கள், நவம்பர் 10, 2014

சயனம் நாவலில் இருந்து ஒரு அத்தியாயம்


கொளத்துப்பாளைய குளம் ஒரு காலத்தில் வருட மழையின் போது  எப்படியும் ஓரளவு நிரம்பி மூன்று நான்கு மாதங்களுக்காவது வற்றாது தண்ணீர் கிடக்கும். அச்சமயத்தில் வெய்யில் காலமும் வந்து விடுவதால் வெள்ளரிச் செடிகளை குத்தகைக்கு எடுத்து விதை தூவியிருப்பர். தண்ணீர் வற்றிக்கொண்டு வரும் சமயம் வெள்ளரிக் கொடிகள் எங்கும் படர்ந்து காய்களோடு கிடக்கும். வியாபாரிகள்  மரப்பெட்டி வைத்த சைக்கிள்களில் காலையில் நேரமே வந்து விற்பனைக்கு வாங்கிச் செல்வர். அவர்களுக்கு ஒரு மாதம் போல அந்த விற்பனை நீடித்திருக்கும்.

  இப்போது வெள்ளரி விதைகளை தூவி விடக்கூட அந்தக் குளத்தில் தண்ணீர் கிடையாது. எங்கும் கருவேல மரங்களின் ஆதிக்கத்தில் குளமிருந்த இடமே காடாய் காட்சியளித்தது.  மழை பெய்த நாளில் மட்டும் செம்மண் நனைந்து களிமண்ணாகிக் கிடக்கும். அதுவும் குழியான இடங்களில். போக ஆவாரஞ்செடிகள் அங்கங்கே காலவேளையின்றி பூத்துக்கிடக்கும். பொங்கல் சமயத்தில் தேவை என்கிறபோது செடிகள் காய்ந்து நின்றிருக்கும்.

  குளத்தினுள்  பெரிய கருவேல மரத்தினடியில் உள்ளூர் வெளியூர் ஆட்கள் அமர்ந்திருந்தார்கள்.  சற்று தள்ளி கரம் கிழித்து கரத்தின் மீது சுண்ணாம்புப் பொடியை சிலர் தூவிக் கொண்டிருந்தார்கள்.  குச்சியால் போட்ட கரம் பளிச்சென வெள்ளை நிறத்தில் தெரிந்தது. சிறுக்களஞ்சி கருணாகரன் முதல் ஆளாய் குளத்துக்கு வந்த போது மணி மதியம் பனிரெண்டு தான் ஆகியிருந்தது. அவன் தன் சோட்டாளுகள் இருவருடன் வந்திருந்தான். அவன் தன் கொக்கு வெள்ளை சேவலை தூரத்தில் ஆவாரஞ்செடியில் கட்டி வைத்திருந்தான். கையோடு கொண்டுவந்திருந்த தேங்காய் தொட்டியில் தண்ணீர் ஊற்றி பேருக்கு கம்பு சேவலருகே தூவியிருந்தான்.

  நேரமாக நேரமாக ஒவ்வொருவராய் குளத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்கள் வல்லூறு, ஆந்தை, காகம், செஞ்சித்திரன் என்று வகை வகையான சேவல்களை தங்கள் குழந்தைகளை தாவி வருவது போல் தாவி வந்து ஆவாரஞ்செடிகளில் கட்டி வைத்து காத்திருந்தார்கள். நேரமும் மணி மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.

  எண்ணிப்பார்த்தால் பத்து உருப்படிகள் தான் வந்திருந்தன. அவ்வளவு தான் இந்த இடத்திற்கு வந்து சேரும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். யாரோ வேலுச்சாமிக் கவுண்டருக்கு போன் போட்டு தகவலை சொன்னார்கள். மணியாச்சுங்க கவுண்டரே! என்று பேசியவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவர் பத்து நிமிடத்தில் பொன்னுச்சாமிக் கவுண்டருடன் அவரது டிவியெஸ்சிலேயே வந்திறங்கினார்.

  எல்லோரும் மரியாதைக்காக அவருக்கு வணக்கம் வைத்தார்கள். வழக்கம் போலத்தானா பறவைகள்  வந்திருக்கு? என்று பேச்சுக்கு கேட்டபடி களத்திற்கு சென்றார். பொன்னுச்சாமிக் கவுண்டர் சிறுக்களஞ்சி கருணாகரனிடம் போய் நின்றார்.

  “என்ன மாப்ளே அந்த கொக்கு வெள்ளைய மூனு வருசமா வச்சிக்கிட்டே இருக்கியா? போனவருசம் விஷக்கத்தி அத்தன எடத்தில பட்டபோதே ஊடு போறக்குள்ள சாஞ்சுடுமுன்னு நெனச்சேன்.”

  “அதை அவ்ளோ சீக்கிரம் சாக உட்டுடுவனுங்களா மாமா! நாலெடத்துல கத்திக் காயம் ஆழமா உழுந்திருச்சு. பொழைக்காதுன்னு தான் நெனச்சேன். ஆனா  மருந்தெண்ணை போட்டு புண்ணை ஆத்தியே போட்டேன். புருடு ரெண்டு பக்கம் வந்திருச்சு. அதையும் கத்தில அறுத்து காயத்தை ஆத்தீட்டேன்”

  “ம்! சோக்கா நிக்கிதுடா மாப்ளே! ஒரு சத்தம் போடுதான்னு பாரு. இந்த வருசம் வந்த சேவலுகளைப் பார்த்தா உன்னுது தான் பட்டு பட்டுன்னு வீசிடுமாட்ட இருக்கே! சேரி கொண்டு போயி கோழிக்கு கோழி நடவு உடு. பாக்கலாம் இதோட வீரத்தை இந்த வருசமும்.” என்றார்.

  வேலுச்சாமிக்கவுண்டரிடம் சேவல்காரர்கள் செலுத்து தொகை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கருணாகரனின் சோட்டாள் பூமணி கொக்கு வெள்ளைக்கான பணத்தை வேலுச்சாமிக் கவுண்டரிடம் கொடுத்தான். எல்லோரும் வருடம் ஒரு முறை கூடும் ஆட்கள் தான். புதிதாய் யாருக்கும் தகவலை கொடுக்க மாட்டார்கள். புது ஆள் வந்தால் சண்டை சச்சரவு ஆகிவிடும் என்பது கவுண்டர் கருத்து.

  எல்லாரும் பக்கத்து ஊர்க்காரர்கள் தான். எல்லா காடுகளிலும் தட்டறுப்பு முடிந்த கையோடு ஞாயிறு நாள் பார்த்து  வருடத்தில் ஒருநாள் சாவக்கட்டை வைத்துக் கொள்வார்கள். அதுவும் கொளத்துக்குள் மட்டும் தான். மூன்று மணிக்கு சரியாக கட்டு ஆரம்பித்து விட்டதென்றால் சூரியன் மேற்கே சாயும் போது  முடித்துக் கொள்வார்கள்.

  கருணாகரன் எப்போதும் இரண்டு மூன்று சேவல்கள் மோதிக்கொண்ட பிறகுதான் தன் கொக்கு வெள்ளையை களம் இறக்குவான். அவன் தன் சேவலை தூக்கிக் கொண்டு வந்து கட்டு நடக்குமிடத்தில் இறக்கி விட்டான்.

  “இன்னிக்கி என் சேவலை சேவலுக்கு சேவல் நடவு நட்டறேன்.  யாரு வேணாலும் அவங்க சேவலை என்னோட கொக்கு வெள்ளையோட மோத விடலாம்.” என்றான். அவன் இப்படி தைரியமாக வந்து முதலிலேயே விட வந்திருக்கும் சேவல்கள் ஒன்று கூட முன் அனுபவமே இல்லாதவை என்பதால் தான். கொக்கு வெள்ளையைப்பற்றி நன்றாக அறிந்தவர்கள் இதுக்கூட நம்ம சேவல் நிக்காதே! ஒரே அடியில போட்டுடுமே! என்று கவலைப்பட்டு நின்றார்கள். எல்லோரும் தசுங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்த பொன்னுச்சாமிக் கவுண்டர், ’அவந்தான்  எறக்கி நிக்க வெச்சுட்டானே யாராச்சிம் எறக்குங்கப்பா’ என்றார்.

  வேலுச்சாமிக்கவுண்டருக்கு  கருணாகரனின் தைரியம் பிடித்திருந்தது. சேவல்காரர்களின் விளையாட்டு ஆர்வத்தை முதலிலேயே புஸ்வானமாக்கி விட்டான் அவன். அவரே பங்காளி சின்னச்சாமியை பார்த்து சைகை செய்தார். சைகையை புரிந்து கொண்டவன் போல சின்னச்சாமி தன் சேவல் மயில்கருப்பை கொண்டு வந்து நிறுத்தினான். கூட்டம் ஆர்பரித்தது. தங்கள் சேவல் தப்பித்தது என்று நினைத்தார்கள். கருணாகரனுக்கு பட்சி சாஸ்த்திரமெல்லாம் தெரியாது. அவனாக நினைத்தால் இறக்கி விட்டு வேடிக்கை பார்ப்பான். சேவலை அடித்ததும் தூக்கிக் கொள்ள, கத்தி கட்ட என்று அவன் சோட்டாள்  பூமணி இருக்கிறான்.

  சின்னச்சாமி தன் சேவலை இறக்கியதும் பூமணி கொக்கு வெள்ளையை தூக்கிக் கொண்டு களத்துக்கு வெளியில் வந்தான். அவனிடமிருந்த கருங்கத்தி வேப்பை இலை மாதிரி இருந்தது. வெள்லைத்துணியை ஈரத்தில் நனைத்து கொக்கு வெள்ளையின் காலில் இறுக்கிக் கட்டினான். அதே நேரத்தில் சின்னச்சாமியும் மயில்கருப்புக்கு அந்த வேலையை சட்டென முடித்திருந்தான். அதன் காலிலும் கருப்புக் கத்தியே இருந்தது. ஆக இரண்டுமே விஷக்கத்திகள் தான். விஷக்கத்தி ஊமத்தை இலைகளை வைத்து தீட்டுவதால் அப்படி மாறிவிடுகிறது.

  இரண்டும் தயாரானதும் சின்னச்சாமியும், பூமணியும் ஆட்டகளத்தின் நடுக்கோட்டுக்கு வந்தார்கள். கொஞ்சம் இருவருமே நான்கடி பின்வாங்கி  இரு சேவல்களும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்ளும்படி நிற்க வைத்து முகையவிட்டார்கள். பின்னர் அவர்கள் இருவருமே மீண்டும் பின்னால் கடைசிக் கோட்டுக்கு வந்தார்கள்.

  பின், அடிடா ஒரே அடியில  என் ராசா! என்று இருவருமே சத்தமெழுப்பி பறவை விட்டார்கள். பிடி இல்லை என்றதும் கொக்கு வெள்ளை மயில்கருப்பை நோக்கி பாய்ந்தது. அது சாத்திவிடும் என்றுணர்ந்த மயில்கருப்பு பின்வாங்கியது. கூட்டம் கரகோசம் போட்டது! ஓ! சின்னச்சாமிது ஓடிப்போயிரும்டோய்! என்றார்கள். இரண்டாவது அடிக்கும் மயில்கருப்பு பின்வாங்கியது. கோட்டுக்கு வெளியே மயில்கருப்பு பின்வாங்கி விட்டால் தோற்றுப்போனதாக அர்த்தம். சின்னச்சாமி பொறவுக்கு வரக்கூடாது போ! போய் முன்னால பாஞ்சு அடி! என்று தன் சேவலுக்கு தமிழ் மொழி தெரியுமென நினைத்து கத்தினான்.

   சேவல் அவனின் பாஷையை புரிந்து கொண்டது போல ஓரமெடுத்து சும்மா நின்றிருந்த கொக்கொவெள்ளையை ஒரு அடி போட்டு விட்டது. சின்னச்சாமி பாய்ந்து தன் சேவலை தூக்கிக் கொண்டான். அதே நொடியில் பூமணியும் தன் சேவலை துக்கும் போது கொக்கு வெள்ளையின் தலை சாய்ந்து விட்டது. பூமணி ஓரம்போய் அதன் வாயில் ஒன்னுக்கு அடித்தான். ஒன்னுமில்ல ஒன்னுமில்ல! என்ற போது அவன் கை ரத்தத்தில் நனைந்தது. கொக்குவெள்ளையின் நெஞ்சுக் கூட்டிலிருந்து கொரக்கொரவென ரத்தம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.

  “உன் ஜாதிப்பேரை காப்பாத்தியே போட்டீடா ராசா!” என்று சின்னச்சாமி தன் மயில்கருப்பை தூக்கி கொஞ்சிக் கொண்டிருந்தான். கவுண்டர் சந்தோசமிகுதியில் கோயிலாட்டம் ஆடினார்.  மயில்கருப்பு தன் முதல் ஆட்டத்திலேயே கோச்சையை வென்று விட்டது. சின்னச்சாமி அதை கட்டி வைத்திருந்த பழைய ஆவாரஞ்செடியிலேயே போய் கட்டி வைத்தான். அதற்கு தலையில் தண்ணீர் ஊற்றினான். தீனி மட்டும் கொடுக்காமல் வந்தான் அடுத்த ஆட்டம் பார்க்க!

  கருணாகரன் வீரமரணமடைந்த கொக்குவெள்ளைக்கருகே கைகட்டி நின்றிருந்தான். பூமணி அதை கொண்டு வந்து சின்னச்சாமி கையில் கொடுத்தான். அவனுக்கும் வருத்தம் தான். மூன்று வருடமாக ஜெயித்தே வந்த பறவை அது. முதல் அடியிலேயே போய் விட்டது. சின்னச்சாமி, ’வேக்காடு அதிகம் வாங்கும் போல இந்தக் கோச்சை!’ என்றான் கையில் தூக்கிப் பார்த்து. கவுண்டரோடு போய் நின்று இறந்த கோழியை கையில் பிடித்துக் கொண்டு சின்னதாய் ஒரு ஆட்டம் போட்டான். அடிப்பாக்கெட்டிலிருந்து கோட்டர் பாட்டிலை எடுத்து மூடி திறந்து அரைப்பாட்டில் அளவு குடித்து கும்மளம் போட்டான்.

  அடுத்து காகம் ஒன்றை களத்தில் இறக்கினான் சுள்ளிமேட்டு கருப்பன். ’சேவலுக்கு சேவல் தான்’ என்றான். ஆட்டத்தை நிறுத்தி விட்டு கவுண்டரும் சின்னச்சாமியும் ரசிக்க வந்தார்கள். சென்ற ஆட்டத்தில் யாரும் பந்தயம் கட்டும் முன்னரே ஆட்டம் முடிந்து விட்டதால் இந்தமுறை முதலிலேயே கட்ட தயாராய் இருந்தார்கள். பொன்னுச்சாமிக் கவுண்டர் சின்னச்சாமியை கூப்பிட்டார். அவன் கண்டு கொண்டான். நேராக அவரின் செஞ்சித்திரனை கட்டவிழ்த்து தூக்கி வந்தான். கூட்டம் ஆராவாரம் செய்தது. பொன்னுச்சாமிக் கவுண்டர் தன்னிடமிருந்த கத்தியை அவனுக்கு வெள்ளைத் துணியோடு கொடுத்தார்.

  “கருப்பன் தன் சேவலுக்கு கத்தி கட்டி விட்டு அதனோடு பேசிக் கொண்டிருந்தான். ‘ஒரே அடி தான் அடிக்கோணும்! ஆமா வெளையாடீட்டு லேட்டு பண்டீட்டு இருந்தீன்னா ஆவாது’ என்றவன் சேவலை மொகைய விட தயாராய் நின்றான். சின்னச்சாமியும் கிடு கிடுவென களத்தில் இறங்கி விட்டான் செஞ்சித்திரனோடு. ஆட்டம் துவங்கியதும் இரண்டும் பறந்து பறந்து அந்தரத்திலேயே அடித்துக் கொண்டன. ஆனால் பொங்குகள் மட்டுமே பறந்தன. இரண்டுமே சங்காமல் பறந்து அடித்துக் கொண்டன. இரண்டுமே சலைத்தது போல் காணோம். செஞ்சித்திரனுக்கு பூவில் காயம் விழுந்ததை கவனித்தான் சின்னச்சாமி. இருந்தும் தூக்காமல் விளையாட விட்டான். இந்த முறை பறந்து அடிக்கையில் சத்தென்ற சத்தம் விழுந்தது.

  காகம் ஒருமுறை களத்தில் புரண்டெழுந்து நிற்கத் தடுமாறியது. அந்த நேரத்தில் செஞ்சித்திரன் பாய்ந்திருந்தால் காகத்தின் சோலி முடிந்திருக்கும். ஆனால் கருப்பன் காகத்தை தூக்கிவிட்டான். கத்திக்காயம் நான்கைந்து இடங்களில் விழுந்திருந்தது காகத்திற்கு. அது நிற்கையிலேயே கருப்பன் கண்டுகொண்டான். செஞ்சித்திரனின் கத்தி விஷம் இதற்கு வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது என்று. புரண்டெழுந்ததும் தாக்காமல் அது நின்றது கண் மங்கலாகி விட்டது தான்.

  கருப்பன் பாக்கெட்டிலிருந்து  கோவைக்கொடித் தலையை எடுத்து வாயில் போட்டு மென்றான். சாறு வாயில் நிரம்பியதும் காகத்தின் வாயைப் பிளந்து அதனுள் சாறை துப்பினான். காகம் இரண்டு மூன்று மடக்கு கோவைத்தலை சாறை குடித்து பிதுக்கா பிதுக்கா என முழித்தது. இனி அதற்கு பார்வை தெளிவு வந்து விடும். கருப்பன் அதற்கு தலையிலிருந்து கேன் தண்ணியை உடலெங்கும் உற்றினான். அது சிலுப்பிக் கொண்டதும் அடுத்த பறவை விட களத்திற்கு வந்து விட்டான்.

  “அடிக்கோணும் பாத்துக்க ராஜா பூட்டி நரம்பு அந்து போறப்புல ஒரு அடி” என்று சொல்லி விட்டான். செஞ்சித்திரனும் நனைந்து தான் சிலுப்பிக்கொண்டு வந்திருந்தது.

  “செஞ்சித்திரனை பொங்கூட இனி காகம் செவுட்ட முடியாது இப்பப் பாத்துக்க” என்று சொல்லி சின்னச்சாமி விட்டான் களத்தில். எல்லோரும் செஞ்சித்திரன் ஜெயிக்குது நூறு ஜெயிக்குது இரநூறு என்றர்கள். காகம் ஜெயிக்குது என்று கட்ட ஆள் இல்லை. கருப்பனே காகம் ஜெயிக்குது பந்தயம் வெச்சுக்கலாங்களா நூறு? என்று  சின்னச்சாமியிடம் கேட்டான். இரண்டும் பழையபடியே பறந்து அடித்துக் கொண்டிருந்தன. ‘நூறென்னடா நூறு இரநூறு வைடா’ என்றான் சின்னச்சாமி. ’சரிங்கோ இரநூறு’ என்றான் கருப்பன். இந்தமுறை கம்பு பொதபொதவென காகத்திடமிருந்து கொட்டியது. இரைப்பையில் வெட்டு விழுந்திருக்கிறது.

  காகம் திடீரென பின் வாங்கி கருப்பனைத் தாண்டிக்கொண்டு கோட்டுக்கு வெளியே முட்டி ஓடியது. கூட்டம் ஆர்பரித்தது. காகம் பேண்டு போட்டு ஓடுதுடா கருப்பா! அது ஓடுன தடத்துல புல்லு கூட மொளைக்காது பாத்துக்க! என்றார்கள். சின்னச்சாமி கையில் பந்தயப்பணம் இரநூறை கொடுத்து விட்டு சேவலைத் தேடி ஓடினான் கருப்பன். அவன் திரும்ப வரும் போது அவன் கையில் சேவல் இருந்தது. அது மிரட்சியோடு கூட்டத்தைப் பார்த்தது. சின்னச்சாமி மிச்ச பாட்டிலையும் குடித்தான். கருப்பா! கொண்டா கொண்டா சாவலக் கொண்டா! கொண்டா கொண்டா சாவலக் கொண்டா! என்று பாட்டாய்ப் பாடி ஆடினான். கருப்பன்  காகத்தை கொண்டு வந்து சின்னச்சாமி கையில் கொடுத்தான்.

  சின்னச்சாமி அன்று நான்கு கோச்சை அடித்தான். பொன்னுச்சாமிக் கவுண்டரின் செஞ்சித்திரன் இரண்டாவது நடவில் காட்டுப்பாளையம் பெரியசாமியின் ஆந்தையிடம் அடிபட்டு களத்திலேயே சுருண்டு விட்டது. அதோடு அவர் கட்டை விட்டு போய் விட்டார். கோச்சைகளை சின்னச்சாமி வேலுச்சாமிக்கவுண்டர் வீட்டில் தான் வறுத்தான். ஊரில் இருந்த எல்லா பங்காளி உறவுகளுக்கும் அவனே கறி கொண்டு போய்க் கொடுத்தான். வேலுச்சாமிக் கவுண்டர் அதிக போதையில் நினைவு தப்பி கட்டிலில் கிடந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னச்சாமியும் பூரணியும் நடுச்சாமத்தில் கூடினார்கள். பூரணிக்கு கோட்டரை அன்று முதலாய் ருசிக்க கொடுத்து கறியை ஊட்டி விட்டிருந்தான் சின்னச்சாமி. மயிலாத்தா ஊட்டுக்குள்ளேயே காறித் துப்பிக் கொண்டிருந்தாள்.

000000000000Post Comment

1 கருத்து:

-'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லாயிருக்கு...