திங்கள், டிசம்பர் 08, 2014

முகநூல் பதிவு தாம்பா!
அன்புச் செல்வன் சயனம் - வா.மு.கோமுவின் நாவலை முன்வைத்து...!

எப்பவுமே திட்டமிடாமல் தனது கதைகளை எழுதும் வா.மு.கோமு தனது சயனம் (சயனம் என்றால் சகுனமாம் கொங்கு வட்டாரத்தில்) நாவலையும் அவ்வாறே எழுதத் தொடங்கியுள்ளார். எழுதி முடித்தும்விட்டார். முற்றிலும் கிராமம் சார்ந்த நாவல் இது. எதற்கெனவும் மெனக்கெடாததே அவரது எழுத்தின் பலம் என்று நான் நினைக்கிறேன். இந்நாவலுக்கு கிராமம் என்று பெயர் வைக்க யோசித்து முகநூலில் நண்பர்களின் கருத்துகளை அறிந்த போது சயனம் என்ற பெயர் தேர்வானதாம். அதனால் சயனம் என்று வைத்துவிட்டார்... சற்றும் யோசிக்காமலே... ஆக எழுதுவது தவிர பிற வேலைகள் எதுவும் என்னுடையதில்லை என்பதில் கருத்தாயிருக்கிறார்.

ஒரு நாவல் உருவாக்கம் என்பது இவரைப் பொருத்தமட்டில் வெறுமனே அவர் மட்டுமே யோசிக்கக் கூடிய விசயமில்லை என்பதில்தான் தொடங்குகிறது வா.மு.கோமுவின் நாவல். அவர் தன் நாவலின் நாயகனை இதுகாறும் இல்லாதவாறு சிகரெட் தண்ணி போன்ற பழக்கங்கள் அற்றவராய் காட்ட நினைக்கிறார்... தன் ஓட்ட வாயை வைத்துக் கொண்டு பகிர்ந்த போது அது எப்படிங்க.. ஒரு ஏற்பாட்டை பண்டி விடுங்க என்கிறார்கள் நண்பர்கள்... இவரும் உடன்பட்டு சாப்பாட்டுக்காரம்மா பொன்னம்மா என்ற மஞ்சுளாவினை ஏற்பாடு செய்து சாரி பண்டி விடுகிறார்.

மிகவும் தெளிவாகத்தாகத்தான் உள்ளார் தனது படைப்புருவாக்கத்தில்... இன்றைய வாசகர்கள் யார் அவர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்ற உரையாடலில் தொடங்கி தனது வேகப் பிரயோகத்திற்கான நியாயத்தை எடுத்துரைக்கிறார். நாவலின் முன்னுரையில் ஓர் இரண்டு பக்கங்கள் குமரேசன் வாத்தியாரை கலியனும் சாப்பாட்டுக்காரம்மாவும் அழைத்துச் செல்லும வழி குறித்து வழமையான நாவல்களின் பதிவுகள் போன்று சொல்லிச் சென்று பின்னர் அதையே நாவலில் படிக்கையில் இந்தத் தேவையற்ற உவமைகள் உவமானங்கள் எல்லாம் கழிக்கப்பட வேண்டியவை என்பது மிகைக் கூற்றல்ல.

தலித் பாத்திர அமைப்புகள், பெண் பாத்திர அமைப்புகள் குறித்து கோமு நிறையவே அனுபவித்து உணர்ந்திருப்பார் போல..! அதன் தொடர்ச்சியாக முன்னுரையில் வெகு சாக்கிரதையாகக் குறிப்பிட்டு விட்டார். கொங்கு வாழ்வினைப் பேசும் நாவல் என்பதற்கு முன்னுரையில் ஆசிரியர் தரும் ....'இதே கதையை அக்கரையம்பாளையம் என்று மாற்றிவிட்டால் அது அந்த ஊர்க்கதை! கொங்கு மண்ணில் பாளையங்கள் ஜாஸ்தி.!' என்பது மிகப்பெரிய உண்மைதான்.

குமரேசன் என்ற வாத்தியார் தம்மடிக்கவும் தண்ணியடிக்கவும் மாட்டார். ஆனால், அதற்கான குஞ்சுமா விரைக்காது... விரைக்காவிட்டாலும் கூட விரைக்க வைக்கும் முயற்சியில்தான் நாவல் உள்ளது.

வேலுச்சாமிக்கவுண்டரும் பொன்னுச்சாமிக் கவுண்டரும் பங்காளிகளாய் இருந்து சின்னச்சாமியை சேர்த்துக்கொண்டு பண்ணும் அட்டூழியம்தான் நாவல் என்றால் மிகையாகாது. கலியனும் வள்ளியும் பொடுசாளும் சாதி வர்க்க ஆதிக்கத்திற்குப் பலியாகின்றனர். மஞ்சுளா என்ற பொன்னம்மாளுடன் குமரேசனின் சதுரங்க ஆட்டம் அதிலும் குறிப்பாக ஒவ்வோர் தோல்விக்கும் ஓர் ஆடை அவிழ்க்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை சுவாரசியமானது. திருமண மண்டபத்தில் சின்னச்சாமி மற்றும் வேலுச்சாமியின் இரவு நேர சமையற்பெண்களின் ஊடான கூடல் தனிக் கதை. ஜெயந்தி குமரேசனை மடியில் கிடத்தி முத்தம் பெற்று முக்தியடைந்ததுதான் நாவலில் இறுதித்தீர்ப்பு என்றால் அது உண்மையில்லை. குமரேசன்களும் ஜெயந்திகளும் ஆண்களையும் பெண்களையும் முறையே உத்தமர்களாக நினைத்திருப்பது தவறு என்று உண்ர்ந்தது மட்டுமே நாவலின் வெற்றியென நம்பும்படியாக உள்ளது சகுனம்.... என்ற சயனம்...!

000000000000Post Comment

கருத்துகள் இல்லை: