திங்கள், ஜனவரி 12, 2015

நண்பரின் சிறுகதை தொகுப்பு!பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்கு உண்டு
சிறுகதை தொகுப்புபுலியூர் முருகேசன்
ஆம்பிரம் பதிப்பகம் கரூர் – 9865908983 – விலை -150.

புலியூர் முருகேசன் முதலாக எல்லோரையும் நம்பும் அப்பாவி மனிதராக முதலாக எனக்கு அறிமுகமானார். பலரிடம் நம்பிக்கை வைத்து ஏமார்ந்த கதைகள் பலவற்றை என்னிடம் சொன்னார். நல்ல வாசகர் என்பது எனது கள்ளி நாவலை ஒரு இடம் விடாமல் புட்டுப்புட்டு வைத்து விமர்சனம் செய்த போது உணர்ந்தேன். கள்ளி இவர் பேசுமளவுக்கு கொஞ்சம் கடுசான நாவல் தான். ஆனால் நான் எதிர்பார்த்த சமயத்தில் அதற்கு விமர்சனமே கிட்டவில்லை! உண்டு முடித்து விட்டு படுக்கையில் விழுகையில் இந்தா சில்லி சிக்கன் என்று கொண்டு வந்து நீட்டியது மாதிரி இருந்தது!

கரூரிலிருந்து ஒருவர் புறப்பட்டு எழுத்து என்று தமாஸ் செய்து கொண்டிருக்கும் என்னை வந்து சந்தித்து இரண்டு செவன் அப் பாட்டில்களை காலி செய்து விட்டு மீண்டும் கரூர் கிளம்பும் புலியூராரின் செயல் வேடிக்கையாகவும் அதே சமயம் கண்டிக்கத்தக்கதாயும் எனக்கு இருந்தது. அவரது தொகுதியை வாசிக்கையில் ஒன்று புரிபடுகிறது! நிகரற்ற போதையில் ஒரு மனிதன் இரவு நேரத்தில் வாழ்கிறான்! என்பதே அது!

புலியூராரின் வாசிப்பு பரந்துபட்டு இருந்திருக்கிறது என்பது இத்தொகுதியை வாசிக்கையில் நான் உணர்ந்தேன். நான் யோசித்திருந்தபடி அப்பாவி இனக்குழுவைச் சேர்ந்த ஒரு அப்பாவி மனிதர் அல்ல புலியூரார். அவருக்குள் ஒரு தீ எரிந்து கொண்டேயிருக்கிறது. அது இப்போது தான் சுழன்று ஜ்வாலையாக வெளிக்கிளம்புகிறது! இந்த நேரத்திலும் அவர் வாழ்க்கைச் சூழலின் கோரப்பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு குழந்தையின் அழுகையோடு தேம்பித் தேம்பி அழுதபடி கரூரின் தெருவெங்கும் இரவில் ஊளையிட்டு சுற்றுகிறார். கண்ணில் படும் நாய்களின் கழுத்தை கடித்து இரு துண்டங்களாகி விடும் வெறி அவர் கண்களில் இருப்பதைக்கண்டு வீதியில் திரியும் நாய்கள் பம்மிப் பதுங்கி விடுகின்றன! கலைஞர்களின் வாழ்வு சிக்கல் நிறைந்தது தான் என்பது கால காலமாக கண்ணால் நாம் பார்த்து வரும் அமைவு தான்.
கலைஞர்களை அவ்வளவு சீக்கிரம் இந்த உலகிலிருந்து நழுவிப்போய் விட இந்த உலகமும் விடுவதில்லை! ஸ்வர்ணலதாக்கள் அவர்களின் இருப்பை தீர்மானிக்கிறார்கள். இளையராசாக்கள் தீர்மானிக்கிறார்கள். மதுவின் போதை தீர்மானிக்கிறது. சுடுகாட்டுப் பிணங்கள் தீர்மானிக்கின்றன! விடிகாலையில் குடும்ப அமைப்பு அவர்களை பீதிக்குள்ளாக்குகிறது! “அப்பா .. ஸ்கூல்ல இன்னிக்கி எல்லோரும் அவங்கவங்க பேரண்ட்சை கூட்டி வரச் சொன்னாங்கரத்தத்தின் குரல் வாழவேண்டுமென நிர்பந்திக்கிறது! வாழ வேண்டும்! வாழ ஒரு வீடு வேண்டும்! எல்லோரும் வாய் பிளந்து பார்க்கும் படி வாழ வேண்டும்! வேண்டும் வேண்டும்! வாழ்ந்தால் உள்ளுக்குள் இருக்கும் கலைஞன் சாக வேண்டும்! கலைஞன் செத்து வாழ்க்கையா? அது வாழ்வா?

இந்த உலகம் மிக கோரமாய் இருக்கிறது! நம்பிக்கை மோசம் செய்வதை பிடிவாதமாய் வைத்திருக்கிறது! தூங்குகையில் கல்லை போட எந்த நேரமும் தயாராய் இருக்கிறது! இதையெல்லாம் கலைத்துறையில் இருப்பவர்களால் எந்த நேரத்திலும் வெற்றி கொள்ளவே முடியாது! கலைக்காக பிறந்த பிறப்பு கலைக்கு மட்டும் தான்! ஒவ்வொரு தோல்வியிலிருந்தும் ஒரு பாடம் மட்டுமே கலைஞர்களால் கற்றுக் கொள்ள முடியும்! அவர்கள் கற்றுக் கொண்டே இருக்க வேண்டியது தான்! உலகில் அவ்வளவு துரோகங்கள் இருக்கின்றன!

தெரியாத்தனமாய் வந்த வாழ்க்கைக்குள் தெரியாத்தனமாகவே வாழ்ந்து விட்டு போக கலைஞன் வரவில்லை! எல்லா துரோகங்களும் அவனை எழுச்சி கொள்ள வைக்கின்றன! எல்லா சங்கர்களும் காரியத்தில் குறியாய் இருந்து கொண்டே வாழ்வை கொண்டாடுகிறார்கள்! முருகேசன் மாதிரியான அப்பாவி கலைஞர்கள் ஒரு சின்ன பிடிக்குள் தன்னை சிக்க வைத்துக் கொண்டு எடுபிகளாய் மாறிப் போகிறார்கள்! சுயம் வேலை செய்வதேயில்லை! இந்த தொகுப்பிற்குள் சுயம் வேலை செய்யாத ஏராளமான கதைகள் காணக்கிடைக்கின்றன!

சிங்கம் புராஜெக்ட் -தொகுப்பில் வார்த்து எடுக்கப்பட்ட சிறந்த கதை! பள்ளிகள் குழந்தை வளர்ப்பை பெற்றோர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நிலையில் இன்று இருக்கிறது! பள்ளிகளில் குழந்தைகளுக்கு கற்றுத்தராதது என்று எதுவுமே இருக்கக் கூடாதென ஒவ்வொரு பள்ளியும் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன! விசயத்தை இந்த அளவு எள்ளலும் கிண்டலுமாய் சொன்ன ஒரு கதையை சமீப காலத்தில் நான் வாசித்ததில்லை! இம்மாதிரி கதைகளை அரசியல் சாயம் பூசி கட்டுரைத்தனமாய் எழுதி நோகடிக்கும் எழுத்தாளர்களைத் தான் எனக்குத் தெரியும்! மிக நிதானமாகவும் எழுதப்பட்ட கதை முடியும் சமயத்தில் எல்லா விசயங்களையும் கேலிப்பொருளாக்கி விட்டு ஓய்கிறது!

நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்?, செவப்புக்காய் வாயூறும், வட்டாரத்துக் கோடி, ஐசிஐசிஐ வங்கிக்கு தினமும் வந்து திரும்புபவள் போன்ற கதைகள் தொகுப்பில் நிம்மதியான வாசிப்பு அனுபவத்தை தருகின்றன! கால காலமாக வரும் இலக்கியப் படைப்புகளின் வழி வந்த வாழ்க்கைக் கதைகள் இவைகள்! தொடர்ந்து வாசிப்பு அனுபவத்தில் இருக்கும் வாசகர்களால் மட்டுமே வாசிக்க இயலும் படியான கதைகள் இவை! புலியூராரின் வாழ்வியல் அனுபவங்கள் பல இத்தொகுப்பில் வார்த்தெடுக்கப்பட்டிருக்கின்றன!

வாழ்த்துக்கள் முருகேசன்! உங்களிடமிருந்து நான் அடுத்ததாக கரூர் வாழ்வியலை மையப்படுத்தி நீள்கதை ஒன்றை எதிர்பார்க்கிறேன்!
Post Comment

கருத்துகள் இல்லை: